search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி ஆறு"

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • அமராவதி அணை மற்றும் ஆறு உள்ளிட்ட பகுதியில் முதலைகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது.
    • அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தியும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகின்றது. இந்த சூழலில் அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

    இதன் காரணமாக ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்ற பொதுமக்கள், தாகம் தீர்க்க வருகின்ற கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதுடன் கரையோர கிராமங்களில் அச்சம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அமராவதி அணை மற்றும் ஆறு உள்ளிட்ட பகுதியில் முதலைகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. அவை இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அணையின் கரையோரம், ஆற்றுக்கு நடுவே உள்ள பாறைகளில் அவ்வப்போது வந்து மேலே ஓய்வெடுத்து விட்டு பின்பு தண்ணீருக்குள் சென்று விடுகிறது. அந்த வகையில் கல்லாபுரம் அருகே அமராவதி ஆற்றில் உள்ள பாறையில் முதலை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதனால் ஆற்றுக்கு வருகை தந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    மேலும் கரையோர கிராமங்களில் முதலைகள் உலா வந்து பிடிபட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுவரையிலும் முதலைகளால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் முதலைகள் உலா வருவதை அலட்சியப்படுத்தக் கூடாது. அவற்றின் இயல்பு குணமே உணவை வேட்டையாடி உண்பதாகும். முதலைகள் தானாக இடம் பெயர்ந்து வர இயலாது. எனவே முதலைகள் எங்கிருந்து அமராவதி ஆற்றுக்கு வந்தது. அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். னவே அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது.
    • விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    உடுமலை ,மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
    • கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை.

    காங்கேயம் :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில், மூலனூர், காங்கேயத்தின் சில பகுதிகள் வரை பாய்ந்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கியது.

    இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகிறது. ஆற்றின் இருகரைகள் மற்றும் ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதனால் நீரோட்டம் தடைப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை. ஆகவே கடைமடை பகுதியில் இருந்து தூர் வாரும் பணியினை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது.
    • தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:- அமராவதி ஆறு கேரள மாநிலம் மேற்குதொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதி மற்றும் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆனைமலைப் பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே அமராவதி நகரில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இது காவிரி ஆற்றின் முக்கிய உபநதிகளில் ஒன்று. அமராவதி ஆறு அமராவதி அணையிலிருந்து 227 கி.மீ., பாய்ந்தோடிய பின் கரூர் மாவட்டத்தை சார்ந்த குளித்தலை வட்டம் மாயனூருக்கு அருகே திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரியோடு இணைகிறது.

    இந்த அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமம், குமாரசாமி கோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் இத்தடுப்ப ணையானது அமராவதி ஆறு சரகம் 104.00 கி.மீ.,ல் கம்பிளியம்பட்டி கிராமம்அருகே அமைக்கப்படவுள்ளது.

    இத்தடுப்பணையானது 170 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் சுமார் 3.18மி.கன.அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க வசதியாக அமையும். இத்தடுப்பணைஅமைக்கப்படுவதால் 65 கிணறுகள் 542 ஏக்கர் விளை நிலங்கள், மற்றும் 110 ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக பாசன வசதி மேம்படுவதுடன், கம்பிளியம்பட்டி, சின்னம்மன்கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன்,மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கோபி, உதவிப் செயற்பொறியாளர் .சினீவாசன் மற்றும் இலக்கம நாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வெள்ளகோவில் தி.மு.க. நகர செயலாளர் சபரி எஸ், முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தண்ணீரின் அளவை குறைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    • விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி ஆறு பெரும் பங்கு வகித்து வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து உடுமலை, தாராபுரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி ஆறு பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த ஆறு கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் இணைகிறது.

    பழமை வாய்ந்த அமராவதி ஆற்றில் அலங்கியம் சாலையில் சீத்தக்காடு பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் தினசரி குளிப்பதும், பெண்கள் துணி துவைப்பதும் அத்துடன் குழந்தைகள் விடுமுறை நாட்களில் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி விளையாடி வருவதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக அமராவதி ஆற்றில் தாராபுரம் அடுத்த சீத்தக்காடு பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளதாக ஒரு சிலர் கூறி வந்தனர். அதன்படி திடீரென சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று அடிக்கடி பாறை மீது ஏறி ஓய்வெடுத்து வந்ததை சிலர் படம்பிடித்து வாட்ஸ்-அப்பிலும், சமூக வலை தளத்திலும் பதிவிறக்கம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்து உள்ளனர்.

    தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றில் துணி துவைக்க சென்றார்.அப்போது அமராவதி ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஒன்று தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தது. அந்த பெண் உடனே தனது கையில் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்தார். பிறகு அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது விஸ்வரூமமாக பரவியது.

    மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர் உந்தும் தடுப்பணை இடத்திலும் முதலை தென்பட்டதாக அப்பகுதிக்கு துணி துவைக்க சென்ற பெண் ஒருவர் ராட்சத முதலையை கண்ட காட்சியும் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினர் முதலைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தினர். இந்தநிலையில் அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

    • தாராபுரம் தாளக்கரை பகுதியில் உள்ள ஆற்றில் சில நாட்களாக முதலை தென்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
    • தற்போதுள்ள முதலை 15 வயதுடையது. 8 அடி நீளமுள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அமராவதி அணையில் 100க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அமராவதி அணையில் இருந்து வெளியேறும் நீர், தாராபுரம்-கரூர் வழித்தடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    தாராபுரம் தாளக்கரை பகுதியில் உள்ள ஆற்றில் சில நாட்களாக முதலை தென்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

    இதுகுறித்து காங்கேயம் வனத்துறை அதிகாரி தனபால் கூறியதாவது:-

    தாளக்கரை, அமராவதி ஆற்றின் நீர்வழித்தடம், இடையிடையே கட்டப்பட்டுள்ள நீர்தேக்கத்தில் முதலைகள் தென்படுவது வழக்கம். தண்ணீர் இருக்கும் இடத்தை தங்கள் வாழ்விடமாக மாற்றிக்கொள்வது இவற்றின் இயல்பு. தாளக்கரை ஆற்றில் இரு முதலைகள் இருந்தன. அதில் ஒரு முதலை, கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மணலூர் ஆற்றுப்பகுதிக்கு சென்று விட்டது.

    தற்போதுள்ள முதலை 15 வயதுடையது. 8 அடி நீளமுள்ளது. ஆற்றில் நீர் இருப்பு குறைவாக இருந்தால், முதலையை பிடித்து மாற்றிடத்தில் விட்டு விடுவோம். மாறாக ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகமாக உள்ளது. முதலையை கண்காணித்து வருகிறோம். ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதிகாரிகள் வருவதை அறிந்த கும்பல் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பியது.

    தாராபுரம் :

    தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வீரராகவபெருமாள் கோவில் அருகே அமராவதி ஆற்றையொட்டி உள்ள தனியார், அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த, அவர்கள் மண்ணை கொட்டி விட்டு மண் எடுக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டு விட்டு கும்பல் தப்பியது.சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 டிப்பர் லாரி, 2 பொக்லைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக காவிரியில் தண்ணீர் கலந்து வருகிறது. இந்த ஆற்றில், காங்கயம், கம்புலியாம்பட்டி, கோவில்பாளையம், மயில்ரங்கம், மணலூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. கடந்த சில வாரங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் , ஆற்றில் மணல் குவியலாக ஆங்காங்கு பரவியிருந்தது.தற்போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதை மணல் திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைவரிசை காட்ட துவங்கியுள்ளனர். வேலப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மயில்ரங்கத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மணல் திருட்டு நடந்துள்ளது. எனவே உடனடியாக, மாவட்ட நிர்வாகம், போலீசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.
    • தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் :

    தாளவாடி பகுதிைய சேர்ந்த லிங்கராஜ் மகன் மணிகண்டன் (வயது 24). இவர் கோவையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஒட்டன்சத்திரம் அப்பியம்பாளையம் சென்று விட்டு தாளவாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் வந்ததும் அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.

    பின்னர் மணிகண்டன் உள்பட 3 ேபர் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஆழமான பகுதிக்குச் சென்ற வாலிபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
    • குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டம், மூலனூரைச் சோ்ந்தவா் எஸ்.தினேஷ்குமாா் ( வயது 24). கட்டடத் தொழிலாளியான இவா் தனது தம்பி கவின்குமாா், நண்பா் அமீருடன் தாராபுரம் அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ்குமாா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவருடன் குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

    ஆனால் மீட்க முடியவில்லை. இந்த நிலையில், அமராவதி பழைய பாலத்தின் அருகில் ஒருவரது சடலம் மிதந்து வருவதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.இதன் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    • நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந்தேதி காலை அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உச்ச அளவாகஆற்றில் வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை துவங்கியதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.உடனடியாக, அணைக்குள் வரும் நீர் அனைத்தும் உபரியாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    அணை நீர்மட்டம் 88.65 அடியாகவும், நீர் இருப்பு, 3,924.72 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த, 15ந் தேதி, அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்படுவதால், ஆயக்கட்டு நிலங்களில், சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. வரும் நீர் அனைத்தும், வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனர்.

    அமராவதி அணையிலிருந்து மழைக்காலத்தில், வெளியேற்றப்படும் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்த, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால், முப்போக நெல் சாகுபடிக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    கோடை காலத்திலும் பற்றாக்குறை தவிர்க்கப்படும்.இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு மழை சீசனிலும், அணையிலிருந்து பல டி.எம்.சி., தண்ணீர் ஆற்றில் உபரியாக திறக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.இதே போல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மண் கால்வாய் வழியாகவே பாசன நீர் செல்கிறது.

    இந்த கால்வாய்களை தூர்வாரி கரைகளை உயரப்படுத்தினால், அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சீராக செல்லும்.அனைத்து வகை சாகுபடியும் செழிக்கும். இது குறித்தும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் தொடர் கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

    • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • நீர் திருட்டு காரணமாக வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையில் துவங்கும் ஆறு 148 கி.மீ., தூரம் பயணம் செய்து காவிரி ஆற்றில் திருமுக்கூடலூர் பகுதியில் கலக்கிறது. அமராவதி ஆறு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையாக உள்ளதோடு கரூர் மாவட்டத்திற்கும் பயன் அளிக்கிறது.

    பாசன பரப்பு மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நிலையில் ஆற்றில் பாசன பகுதி இல்லாத நிலங்களுக்கும், வணிக ரீதியாகவும், தொழிற்சாலை பயன்பாடு என எந்த விதமான அனுமதியின்றி, முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.வழியோரத்தில், ஆற்றின் இரு புறமும், நூற்றுக்கணக்கான மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் திருடப்படுகிறது. நீர் திருட்டு காரணமாக, கோடை காலங்களில் கடும் வறட்சியும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.அணை துவங்கி, கரூர் வரை, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில் 3 போகம் நெல் சாகுபடி செய்து வந்த நிலையில், நீர் திருட்டு பிரதானமாக மாறியுள்ளதால் ஒரு போக சாகுபடியாக குறைந்ததோடு, கடை மடை பகுதிகளில், ஒரு போக சாகுபடி கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

    நீர் திருட்டை தடுக்க, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என அமராவதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×