search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில்"

    • கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும்.
    • வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் முதல் மெட்ரோ ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும்.

    கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும். வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பார்க்கிங் அனுமதிக்க வேண்டியது இல்லை என்று எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
    • மழைக் காலத்தில் கடும் சிரமங்களை தாண்டித்தான் வாகனங்களில் பயணிகள் வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பயணிப்பார்கள். இதற்கு இரு சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.30-ம், கார்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மழையின் போது முட்டளவு வெள்ளம் வாகன நிறுத்துமிடத்தில் தேங்கியது. இதனால் பார்க்கிங் மூடப்பட்டது.

    இந்த முறை முன் கூட்டியே நிபந்தனைகளை விதித்துள்ளது. பார்க்கிங் அனுமதிக்க வேண்டியது இல்லை என்று எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதையும் மீறி வாகனங்களை நிறுத்த வரும் பயணிகளிடம் மழையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது என்பதை தெரிவித்து அதற்கு ஒத்துக்கொண்டால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கும் படியும் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களின் பதிவு எண், உரிமையாளரின் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    இந்த நடைமுறைப்படியே அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.

    ஏற்கனவே பார்க்கிங்கில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தினாலும் அதில் ஏற்படும் சேதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று தங்களுக்கு சாதகமாக நிரந்தர விதியை வகுத்து வைத்துள்ளார்கள்.

    மழைக் காலத்தில் கடும் சிரமங்களை தாண்டித்தான் வாகனங்களில் பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு பயணிக்கலாம் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள்.

    அவர்களிடம் இயற்கையான மழை பீதியை போல் இப்படி ஒரு செயற்கை பீதியையும் ஏற்படுத்துவது ஏன்? என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.

    • இன்று முதல் 14-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
    • கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்வதால், கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு இன்று முதல் 14-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    * கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    * போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை - பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று இலக்கை அடையலாம்.

    * மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு- சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.
    • இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    * காலை 5 முதல் 8 மணி மற்றும் காலை 11 முதல் மாலை 5 மணி, இரவு 8 முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    * இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
    • அனைவரையும் டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதித்தனர்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் வீடு திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தால் நேற்று காலை முதல் மாலை வரை ஸ்தம்பித்தது.

    சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப பல மணி நேரம் நீடித்தது. பறக்கும் ரெயில், புறநகர் மின்சார ரெயில்களில் நெரிசலில் மக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில் சேவை நேற்று மக்களுக்கு மிகுந்த கை கொடுத்தது.


    3½ நிமிட நேரத்திற்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., சென்ட்ரல், எழும்பூர் போன்ற மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    பயணிகள் கூட்டமாக வந்ததால் டிக்கெட் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. டிக்கெட் ஸ்கேனிங் எந்திரம் உடனுக்குடன் செயல்பட வில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாத ரெயில் நிலைய அதிகாரிகள், பணியாளர்கள் தடுமாறி னார்கள்.

    தொடர்ந்து அதிகரித்து வந்த கூட்டத்தை சமாளிக்க தடுப்பு கேட் அகற்றப்பட்டது. அனைவரையும் டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதித்தனர்.

    ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போது டிக்கெட் எடுக்க வேண்டும் என சிலர் கூறினார்கள். ஆனால் அங்கும் டிக்கெட் எடுக்காமல் பொதுமக்கள் வெளியே சென்றார்கள்.

    டிக்கெட் எடுக்க யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டதால் பொதுமக்கள் டிக்கெட் எடுக்காமல் சென்றனர். டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தால் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கும்.

    ஆனால் 5.45 மணி வரை சாகச நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களின் கூட்டம் இருந்ததாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக மெட்ரோ ரெயில்களில் கூட்டம் குறைவாக இருக்கும். சேவை குறைக்கப்படும்.

    ஆனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்திருக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னை:

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

    விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர். மேலும் பலர் அரசு பேருந்து மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் மீண்டும் வீடு திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வண்ணாரப்பேட்டை - DMS மெட்ரோ இடையே, 3.5 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விம்கோ நகர் - விமான நிலைய மெட்ரோ தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    • தமிழக அரசின் சொந்த நிதி ரூபாய் 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூபாய் 6802 கோடி.
    • ஒரு பைசா கூட தமிழகத்திற்கு ஒதுக்காத மத்திய பா.ஜ.க. அரசு வெறும் ரூபாய் 7425 கோடி தான் ஒதுக்கியிருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளன.

    சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தற்போது மத்திய அரசின் 12 சதவிகித பங்களிப்பான ரூபாய் 7425 கோடியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே சென்னை மாநகர மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு இதுவரை தமிழக அரசு ரூபாய் 18524 கோடி செலவு செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சொந்த நிதி ரூபாய் 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூபாய் 6802 கோடி.

    ஆனால், மெட்ரோ ரெயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவிகிதத்தை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத் தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

    கடந்த 2023-24 நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த தொகை ரூபாய் 19518 கோடி. 2024-25-ல் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 21,335 கோடி. இதில் ஒரு பைசா கூட தமிழகத்திற்கு ஒதுக்காத மத்திய பா.ஜ.க. அரசு வெறும் ரூபாய் 7425 கோடி தான் ஒதுக்கியிருக்கிறது.

    பொதுவாக பா.ஜ.க. ஆளும் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி, பாரபட்சமாக நடந்து கொள்கிற போக்கைத் தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இத்தகைய மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்கக் கூடியதாகும். இத்தகைய போக்கை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து மேற் கொள்ளுமேயானால் ஏற்கனவே தமிழக மக்களின் கடும் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை மக்கள் வெறுத்து ஒதுக்குகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது. பாராட்டுக்குரியது.
    • இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அமைச்சரவை சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ. 63,246 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்து, இதில் மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது. பாராட்டுக்குரியது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு சென்னையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பேரூதவியாக அமைகிறது.

    பிரதமர் தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தக்க நேரத்திலே மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு(Group Ticket) முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள், மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளது.

    • மெட்ரோ ரெயில் பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை ஏன்னு திமுக அரசு குற்றச்சாட்டு
    • மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை

    சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டத்திட்டம் என்பது மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில் 50:50 என்ற சமபங்கு நிதி பகிர்வு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

    மெட்ரோ ரெயில் முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசும், இந்த திட்டத்தை மாநில அரசின் திட்டமாக தமிழக அரசு மாற்றி விட்டதால் அதனை முழுக்க, முழுக்க மாநில அரசின் திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று திமுக அரசு தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "50:50 என்ற சமபங்கு வீதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மெட்ரோ பணிகளுக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

    • மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளது.

    அவ்வகையில் மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் சஹேலி ருத்ரா என்ற பெண் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் தமன்னா நடனமாடிய 'ஆஜ் கி ராத்' என்ற இந்தி பாடலுக்கு முகம் சிலுக்கும் படியான நடன அசைவுகளை பயன்படுத்தி அப்பெண் நடனமாடுகிறார். சிலர் அப்பெண்ணை பாராட்டினாலும் பொது இடங்களில் இப்படி நடனமாடுவது சரியில்லை என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

    • சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

    வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு பூமி அழுத்த சமநிலை (Earth Pressure Balancing - EPB) சுரங்கம் தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.

    இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை மற்றும் மேற்பகுதி மணல்போன்ற கலப்பு புவியியல் நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. மேலும், அடையாறு ஆற்றின் சிலபகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது.

    காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் சில பெட்ரோல் பங்குகள், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, ஆந்திர சபா மருத்துவமனை, துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் அடையார் பாலம் கீழேயும் கடந்து சென்றது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் நவம்பர் 2024-க்குள் அடையாறு நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பொதுமேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் ஜெயராம், திட்ட இயக்குநர் அஹ்மத், பொது ஆலோசகர் நிறுவனத்தின் அணித்தலைவர் டோனி புர்செல், பொது ஆலோசகர் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் மண்டல், சுரங்கப்பாதை நிபுணர் ஆலன் சார்லஸ்மே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

    ×