என் மலர்
நீங்கள் தேடியது "முருகன் கோவில்"
- அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார்.
- வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது முருகப்பெருமான், வெற்றி வேலாயுதசுவாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்ட தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் என பல சிறப்புகளை இக்கோவில் பெற்றுள்ளது.
தல வரலாறு
முருகப்பெருமான் மீது அதிக பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி, ஒரு சமயம் அகத்தியர் முருகனை தரிசிக்க சென்றார். உடன் நாரதர் மற்றும் தேவர்கள் இருந்தனர். ஓரிடம் வந்ததும், அகத்தியர் முருகனுக்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு நைவேத்தியம் செய்ய நீர் கிடைக்கவில்லை. மேலும், அவருக்கும் மிகுந்த தாகம் எடுத்தது.
இதனால் அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார். இதையடுத்து, நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியரும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகளை முடித்து, தன் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். முருகனால் தோன்றுவிக்கப்பட்ட ஊற்று, இன்றுவரை வற்றாமல் நீரை கொடுத்து வருகிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் இப்பகுதி 'ஊத்துக்குளி' என அழைக்கப்பட்டது. பின்னர், இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.
கோவில் அமைப்பு
கோவில், மலைமீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரு அழகிய மண்டபத்தில் முருகப் பெருமான் தனியாக அருள்பாலிக்கிறார். வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர். இதற்கு காரணமும் கூறப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் தனிமையில் இருந்தார். அப்போது முருகப்பெருமானை மணம் முடிக்க விரும்பிய இரு பெண்கள், இம்மலைக்கு வந்து தங்களை ஆட்கொள்ளும்படி வேண்டினர். இதையடுத்து, முருகப் பெருமானும் அருளாசி வழங்கினார். அதன்படி, இந்திரனின் மகளாக தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இங்குள்ள முருகப்பெருமான், திருமணத்துக்கு முந்தைய நிலையில் எழுந்தருளி இருப்பதால் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர்.
மற்றொரு காரணமாக, வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது. இவை மூன்றும் ஆசை, செயல், அறிவு ஆகிய மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரபிரம்மாவாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே பெரும்பாலான கோவில்களில் இச்சாசக்தியும், கிரியா சக்தியும் முருகனுக்கு இருபுறமும் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படுகிறது. இம்மூன்றில் மிக முக்கியமான ஞான சக்தியை, இச்சையும், கிரியையும் இருந்தால் தான் பெற முடியும். இருப்பினும் இவ்வாலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், இவ்விரண்டும் இல்லாமலேயே ஞான சக்தி பெற்றவர் என்பதை இது குறிக்கிறது.
கோவிலில் இடும்பனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலுக்கு கீழே தென்கிழக்கில் சுப்பராயர் சன்னிதி எனும் பாம்பு புற்றுக்கு தனிக் கோவில் உள்ளது. வள்ளி, தெய்வானை சன்னிதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் சுக்குமலையான் சன்னிதி காணப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுக்குமலையானை வழிபட்டு செல்கிறார்கள்.

கோவில் தோற்றம்
வழிபாடு
திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச விழாவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் கதித்த மலை முருகன் கோவில் உள்ளது.
- பிரம்மதேவர், “நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார்.
- சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இத்தல மூலவரான முருகப்பெருமான் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி பாடியுள்ளார்.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயத்துக்கு வந்த பிரம்மதேவர், சிறுவனாக இருந்த முருகப்பெருமானை கவனிக்காமல் சென்றார். அப்போது பிரம்மாவை அழைத்த முருகப்பெருமான், "நீங்கள் யார்?" எனக் கேட்டார். அதற்கு பிரம்மதேவர், "நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார். பிரம்மதேவரின் அகந்தையை அழிக்க நினைத்த முருகப்பெருமான், படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். பிரம்மதேவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழிக்க, முருகப்பெருமான் அவரை சிறை வைத்தார்.
பிரம்மதேவரிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சி தந்தார். அதே அமைப்பில் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஒரு சமயம் முருக பக்தர் ஒருவர் தல யாத்திரையாக இத்தலம் வந்தார். அவர் இங்கு தீர்த்த நீராட எண்ணி, இங்கிருந்த ஆண்டிகளிடம், "இங்கே நீராடும் இடம் எங்கே உள்ளது?" என்று கேட்டார்.
அதற்கு ஆண்டிகள், "அப்படி இந்த ஆலயத்தில் தீர்த்தம் எதுவும் கிடையாது" என்று பதிலளித்தனர்.
அப்போது அங்கு ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்த முருகப்பெருமான், தீர்த்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு, குறிப்பிட்ட இடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார், முருகப்பெருமான். உடனே, அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடி குளமாக மாறியது. அதுவே இத்தலத்தில் 'வேலாயுத தீர்த்தம்' என்ற பெயரில் உள்ளது. அந்த பக்தர் ஆச்சரியத்தில் திகைத்தவாறே தீர்த்தத்தில் நீராடினார். பின்பு முருகப்பெருமான், பக்தருக்கு தன் சுயரூப காட்சியை கொடுத்து அருளினார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமான், ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ஆண்டியார்குப்பம்' என்று அழைக்கப்பட்டது. பின்பு அதுவே மருவி, 'ஆண்டார்குப்பம்' என்றானது.
கோவில் அமைப்பு
கோவிலில் மூலவரான முருகப் பெருமான், தன்னுடைய கரங்களில் வேல், வஜ்ரம், சக்தி என எந்தவித ஆயுதமும் இன்றி, இடுப்பில் கரங் களை வைத்தபடி காட்சி தருகிறார். இறைவன் அதிகார தோரணையில் இருப்பதால் 'அதிகார முருகன்' என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
மூலவர் சன்னிதிக்கு எதிரில் பிரம்மதேவர், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மாவுக்கு உரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை போன்றவை மட்டும் காணப்படுகிறது. கோவில் முன்மண்டபத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி, நடராஜர் சன்னிதிகளும் உள்ளன. இங் குள்ள விநாயகர், 'வரசித்தி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாடு
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பொறுப்பான பதவிகள் கிடைக்கவும், அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்கவும், புத்திசாலித்தனமான பிள்ளைகள் பிறக்கவும் வழிபாடு செய்கிறார்கள்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருமணமாகாதவர்கள் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
- அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
- இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் அலவாய்ப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
ஒரு காலத்தில் முருகப்பெருமான் மீது அதீத பக்தி கொண்ட பக்தர் ஒருவர், குழந்தை வரம் வேண்டி பழனி முருகனை தரிசிக்க சென்றார். அந்த பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அலவாய்மலையில் தான் எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கும்படியும், இந்த பணியை செய்து முடிக்கும் தருவாயில் உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் அருளினார்.
இதையடுத்து மகழ்ச்சி அடைந்த அந்த பக்தர், இத்தலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு, முருகப்பெருமான் கனவில் கூறியபடியே பக்தர்களுக்கு வசதியாக படிக்கட்டுகளை அமைத்து கொடுத்தார். இந்த திருப்பணி முடியும் வேளையில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மலை 'கொங்கண மலை' என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலில் முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தியபடி அழகுற காட்சி தருகிறார். இவர் சன்னிதிக்கு எதிரில் மயிலும், நந்தியும் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இங்கு வற்றாத சுனை ஒன்றும் உள்ளது.
கார்த்திகை மாதம் வரும் சோம வாரத்தில் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. கர்ப்பப்பையில் கோளாறு உள்ள பெண்கள் இத்தலம் வந்து முருகனை வழிபட்டு, பின்பு இங்குள்ள சுனை நீரை பருகினால் அவர்களின் குறை சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
- நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.
- இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
- கந்தன் மலை படத்தில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்துத்துவ அமைப்பினர் அண்மையில் பிரச்சனை கிளப்பினர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கந்தன்மலை திரைப்படம் நாளை (டிசம்பர் 19) தாமரை யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
- தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.
இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.
ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.
ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்கிறார்.
- இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில், 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு ‘தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை எனும் ஊரில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது, தபசுமலை பால தண்டாயுதபாணி கோவில்.
சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு 'தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பால தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவர் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர்.
ஒரு காலத்தில் இங்கு முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த இடத்திலேயே முருகப்பெருமானுக்கு விக்ரகம் அமைத்து பிரதிஷ்டை செய்து, பின்பு கோவில் எழுப்பி மக்கள் வழிபட தொடங்கினர். மலை அடிவாரத்தில் சப்த ரிஷிகளின் சிலைகளும், பீடமும் அமைந்துள்ளன. இந்த பீடங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவிலை அடைய, 75 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய் போன்றவை குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது.
கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
மனவேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர், இங்குள்ள முருகப்பெருமானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் ஒன்றுசேர்வார்கள் என்பது நம்பிக்கை. புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- ஒரே ஒரு சன்னிதியை கொண்ட கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
- இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு வந்தாலே மன அமைதி கிடைக்கும்.
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு பல புகழ்பெற்ற மலைக்கோவில்கள் உள்ளன. அந்த வகையில் மிகவும் பழமையும், வரலாற்று சிறப்பும் வாய்ந்த கோவில்தான் பதிமலை முருகன் கோவில். பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக திகழும் பதிமலை, கோவை மாவட்டம் குமிட்டிபதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு
கோவில், சிறிய மலைக் குன்றின் மீது சிறிய அளவில் அமைந்துள்ளது. குன்றின்மீது ஏறும் முன் சிறிய அலங்கார நுழைவுவாசல் ஒன்று அனைவரையும் வரவேற்கிறது. சுமார் 350 படிகள் கொண்ட இந்த சிறிய குன்றின் மீது முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். மலைக் கற்களைக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு சன்னிதியை கொண்ட கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவர் வலது கையில் வேல் ஏந்தி, பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே பலி பீடமும், மயில் வாகனமும் காட்சி தருகின்றன. கருவறை வாசலின் இடதுப்பக்கம் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள் வழங்குகின்றார்.
இக்கோவிலின் இடது பக்கத்தில் அன்னை சக்தி தேவி தனிச் சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே சிம்ம வாகனமும், நடப்பட்ட சூலங்களும், கொடி மரமும் காட்சி தருகின்றன. இக்குன்றின் மேற்பகுதியில் வற்றாத கிணறு ஒன்று அமையப்பெற்றுள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள நீரில் தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
குகை ஓவியம்
கோவில் இருக்கும் மலைக்குன்றின் மேல் இருந்து சற்று கீழே வந்தால் மிகவும் பழமைவாய்ந்த மலைக் குகைகள் காணப்படுகின்றன. இங்கு ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல சான்றுகள் உள்ளன. இங்குள்ள குகை ஓவியங்கள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த கோவிலும் மிகமிகப் பழமையானது என்றே கூறப்படுகிறது.
பழங்காலத்தில் இப்பகுதியில் யானை வளர்ப்பு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யானைச் சந்தையும் நடைபெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சேர- சோழ போர்களின் போது இம்மலை போர்வீரர்களுக்கு கண்காணிப்பு கோபுரம் போல் பயன்பட்டதாகவும், ஆதித் தமிழர்கள் வழிபட்ட முருகன் கோவில் இது என்றும் கூறப்படுகிறது.
வழிபாடு
இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு வந்தாலே மன அமைதி கிடைக்கும் என்கிறார்கள். திருமணத் தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இந்த முருகப்பெருமானை வழிபட்டால் பிடித்தமான வேலை, சொந்த வீடு யோகம் போன்றவை கிட்டும் என்று பலன் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.
கோவிலில் முருகனுக்கு உரிய கார்த்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
இக்கோவிலுக்குச் செல்ல இரண்டு படி வழிகள் உள்ளன. ஒன்று அந்தக் காலத்தில் இக்கோவிலுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட படிகள் போன்று மலையிலேயே செதுக்கப்பட்ட கரடு முரடான பாதை. மற்றொன்று தற்போது பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட எளிதாக ஏறிச் செல்லக்கூடிய படிப் பாதையாகும்.
கோவில், காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த குமிட்டிபதி மலைக்கோவில் அமைந்துள்ளது.
- திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.
- மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். படையெடுத்துச் செல்லும் வீரர்கள் தங்கும் இடம்தான் படைவீடாகும்.
முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது வீரர்கள் தங்கியிருந்த இடம்தான் தற்போதைய திருச்செந்தூர் கோவிலாகும்.
திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இவ்விடத்திற்கு 'வீரபாகு ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
முருகனின் அவதார நோக்கமே அசுரனை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, இத்தலம் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
முருகப்பெருமானின் வெற்றிவேல், மாமரமாக நின்ற சூரபத்மனை பிளவுப்படுத்திய இடம் திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, 'மாப்பாடு' என்னும் இடமாகும். இந்த இடம் தற்போது 'மனப்பாடு' என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகன் சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த வேலுடனும் சூரபத்மனை கொன்று வெற்றிக்கொடியுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்ற 2 மூலவரும் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அளவாய்பெருமான் என்ற 4 உத்சவர்களும் உள்ளனர்.
இக்கோவிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே முருகனை வணங்கச் செல்ல வேண்டும்.
திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று 2 லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், 'மணியடி' என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.
மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு 'பாம்பறை' என்ற பெயரும் உண்டு. மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் விசேஷம் வாய்ந்தது.
இரவு 9.45 மணிக்கு சுவாமிக்கு திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை காட்டுவர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியான முருகப்பெருமானுக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
மூலவர் யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதுண்டு.
தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர். இக்கோயிலில் தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.
பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. செந்தில் ஆண்டவர் கோயில் பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து லட்சணத்தோடு கட்டப்பட்டுள்ளது. கோவில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் 9-வது மாடத்தில் கடிகார மாளிகை உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தரப்படுவதே விபூதி பிரசாதமாகும்.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற கோரி இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.
- கந்தர் மலை அல்ல, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள படம் கந்தன் மலை.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கார்த்திகையையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.
தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






