என் மலர்
வழிபாடு

பொன், பொருள் அருளும் கனகாசல குமரன்
- ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
- தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.
இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.
ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.
ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.






