search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெஜ்ரிவால்"

    • ஜெயிலுக்குள் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி.
    • அவரது உடலில் 26 முறை சர்க்கரை அளவு குறைந்துள்ளது.

    டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவால் உடல்நிலை மோசமடைந்துள்ளதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி இந்தியா கூட்டணி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்துகிறது.

    ஜெயிலில் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது. ஜெயிலில் ஜூலை 3-ந்தேதியில் இருந்து ஜூலை 7-ந்தேதி வரை 26 முறை அவரது சர்க்கரை அளவு 26 முறை குறைந்ததாக மெடிக்கல் ரிப்போர்ட் சொல்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கெஜ்ரிவால் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கும் என்பது பாஜகவுக்கு தெரியும். இதனால் அவர்கள் சிபிஐ மூலம் கைது செய்தனர். கெஜ்ரிவால் கடந்த 30 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

    காவலில் இருக்கும்போது அவருடைய உடல் எடை 8.5 கிலோ குறைந்தது. அவரது சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுடன் பகிரப்பட்டது. கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளது அவர்களுக்குத் தெரியும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    • நாடு முழுவதும் கெஜ்ரிவாலுக்கு எதிராக 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • நியாயமான விசாரணைக்காக மேலும் இரண்டு முறை வழக்கறிஞரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நாடு முழுவதும் கெஜ்ரிவாலுக்கு எதிராக 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் நியாயமான விசாரணைக்காக வழக்கறிஞரிடம் வாரத்திற்கு மேலும் இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் மேலும் இரண்டு முறை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்த அனுமதி அளித்தார்.

    அமலாக்கத்துறை மற்றும் திகார் ஜெயில் அதிகாரிகள் இந்த மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தினர். இருந்தபோதிலும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ந்தேதி ஜாமின் வழங்கியது. உயர்நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இதற்கிடையே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை சிபிஐ இதே வழக்கில் ஜூன் 26-ந்தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமின் பெற்றால் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.

    2022-ம் ஆண்டு டெல்லி மாநில மதுபான கொள்கையை அம்மாநில துணைநிலை ஆளுநர் ரத்து செய்தார். இந்த கொள்கை உருவாக்கப்பட்டு, செயல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    • சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல்.
    • இடைக்கால ஜாமின் கேட்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.

    சிபிஐ கைது செய்ததுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. தன்னை சிபிஐ கைது செய்தது, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதையும் எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது. அதேபோல் இடைக்கால ஜாமின் கேட்க மனு மீதான உத்தரவையும் ஒத்திவைத்துள்ளது.

    இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி சிங் "மக்களவை தேர்தலுக்காக மட்டும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 21 நாள் இடைக்கால ஜாமினை அவருடைய வசதிக்காக பயன்படுத்த முடியாது. அது தேர்தலுக்காக மட்டுமே வழங்கப்பட்டது.

    பணமோசடி வழக்கில் ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், டெல்லி உயர்நீதிமன்றம் அந்த ஜாமினுக்கு தடை வழங்கியதுடன், அதற்கான 30 பக்க அளவிலான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    வெறுமென சந்தேகம் இருந்தால் கூட தனி நபரை கைது செய்ய சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது. முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அந்த நேரத்தில் சிபிஐ-யிடம் போதுமான காரணம் இருந்தது. சிஆர்பிசி (CrPC) விசாரணைக்கான கைது செய்ய அனுமதி வழங்குகிறது.

    கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானதால் அவரைக் கைது செய்வது அவசியமானது. சிபிஐ விசாரணையை முடிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் மீது முதல்வர் செல்வாக்கு செலுத்துவார் என்ற நியாயமான அச்சம் உள்ளது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்" என வாதிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி "டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏன் கேட்கக் கூடாது என்பதற்கான காரணத்தை சிபிஐ கொடுக்கவில்லை. சிபிஐ-யின் நிலை தாமதப்படுத்தும் தந்திரம்.

    கெஜ்ரிவால் மீதான சமீபத்திய புதிய ஆதாரம் ஜனவரி 2024 ஆகும். ஜனவரி 2024-க்குப் பிறகு சிபிஐ புதிய ஆதாரத்தை பெறவில்லை. தற்போது சிபிஐ ஜூன் 13-ந்தேதி புதிய ஆவணங்களுடன் வந்துள்ளது. இது எங்கும் பயன்படாது. கைதுக்கு பிந்தைய ஆவணங்கள் கொடுக்க முடியுமா?.

    நீங்கள் 41A நோட்டீஸ் கொடுத்தபோது அதை நீங்கள் சமர்பிக்கவில்லை. அது எங்கே இருக்கிறது?  வாய்மொழியாக மட்டும் சொல்ல முடியாது. முழு விசயத்தின் அடிப்படையில், கெஜ்ரிவாலின் கைதுக்கு நியாயப்படுத்த புதிதாக எதுவும் இல்லை" என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளன.
    • மூன்று நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஜாமின் கேட்டு போராடி வந்த நிலையில் ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. இந்த நிலையில் சிபிஐ கைது செய்துள்ளது.

    தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுவேன். ஏற்கனவே உத்தவ் தாக்கரேயிடம் பேசியுள்ளேன். காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவேன். பாஜக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது தொடர்பாக குரல் எழுப்ப வேண்டுகோள் விடுக்கப்படும்.

    மாநிலத்தை பொறுத்த வரையில் எங்களுக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துதல் போன்ற தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிராக எதிராக கட்சிகள்" என்றார்.

    • சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளது.

    டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இம்மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்தது.

    இந்த நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 5 நாள் காவல் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அம்மனுவில், இந்த வழக்கில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை காவலில் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சிபிஐ வாதங்களை கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடைபெற்ற நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அப்போது, சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
    • பாகிஸ்தானில் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறது என்றார் இம்ரான் கான்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதம மந்திரியான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று இம்ரான்கான் ஆஜரானார்.

    அப்போது ஒரு நீதிபதி, லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சித்தலைவராக உள்ள இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியது என்றார்.

    இந்நிலையில், நீதிபதிகள் முன் இம்ரான்கான் பேசுகையில், இந்தியாவில் பொதுத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சிறையில் இருந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இந்திய சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தேர்தல் நடந்த பிப்ரவரி 8-ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மோடி பச்சை நிறத்திலான ஆடை அணிந்திருந்தார்.
    • 75 வயதை கடந்தால் அத்வானி அரசியலில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    வருகிற 8-ந்தேதி இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒரு புறம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மோடி பச்சை நிறத்திலான ஆடை அணிந்திருந்தார். அதே நிறத்திலான ஆடையை அத்வானி அணிந்திருந்த பொழுது மோடி அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    75 வயதை கடந்தால் அத்வானி அரசியலில் இருந்து விலகினார். அதே போல் 73 வயதான மோடியும் விரைவில் ஓய்வு பெற போகிறார், அதற்கான நிறம் தான் இந்த பச்சை நிறம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    இதற்கு முன்னதாக, பாஜகவில் ஓய்வு பெரும் வயது 75 என்பதால் இன்னும் 2 ஆண்டுகளில் மோடி ஓய்வு பெற்று விடுவார் என்பதால் பாஜகவில் அடுத்த பிரதமர் யார்? அமித்ஷாவா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • இடைக்கால ஜாமின் முடிந்து கெஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த ஜாமின் முடிந்து கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.

    இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால 7 நாட்கள் ஜாமின் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரியும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது. 

    இதில், கெஜ்ரிவாலின் மனுக்களுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசரணையின்போது, கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இல்லை, அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "பஞ்சாப்பில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அவரது உடல் நலம் பரப்புரைக்கு தடையாக இல்லை.

    அமலாக்கத்துறை பதில் அளிக்காத வகையில் ஜாமின் கோரி இறுதி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்" என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • நேற்று நள்ளிரவில் மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது.
    • இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.

    நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    தீ விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல் மந்திரி கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லி குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
    • உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.

    கடந்த 2 நாட்களில் அந்த மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பிறந்தன. மருத்துவமனையின் 2-வது மற்றும் 3-வது மாடிகளில் அந்த குழந்தை கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். 3 குழந்தைகளை நேற்று மாலை அவர்களது பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் 12 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் இருந்தனர்.

    நேற்று இரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் 11.40 மணிக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் விவேக் விகார் பகுதிக்கு விரைந்து வந்தன.

    அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவியது. தீயணைப்பு படை வீரர்கள் 2 கட்டிடங்களிலும் பரவிய தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். இதற்கிடையே குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

    12 குழந்தைகளும் ஆம்புலன்ஸ் மூலம் கிழக்கு டெல்லியில் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    மற்ற 5 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினாலும் அவர்களது நிலையும் மோசமாக இருந்தது. அதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவமனை கட்டிடம் முழுமையாக எரிந்து போனது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைகள் மருத்துவமனையின் கீழ்தளத்தில் ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. அங்கிருந்துதான் தீ விபத்து ஏற்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில், "டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த நம்பமுடியாத இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அதே போல் இந்த தீ விபத்து தொடர்பாக டெல்லி முதலவர் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம். சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    ×