search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த இலக்கு கர்நாடகா, சத்தீஸ்கர்- 4ம் தேதி முதல் களமிறங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    அடுத்த இலக்கு கர்நாடகா, சத்தீஸ்கர்- 4ம் தேதி முதல் களமிறங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

    • பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, அந்த மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு முறையே மார்ச் 5, 13ம் தேதிகளில் கெஜ்ரிவால் செல்ல விருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்துக்கு அவர் 14ம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த 3 மாநிலங்களிலும் நடப்பாண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018ல் நடைபெற்ற இந்த மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும், அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

    கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 28ல் ஆம் ஆத்மி களமிறங்கி இருந்தது. சத்தீஸ்கரில் 90ல் 85 இடங்களிலும், ராஜஸ்தானில் 200-ல் 142 தொகுதிகளிலும் மத்திய பிரதேசத்தில் 230-ல் 208 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்டிருந்தது.

    அண்மைக் காலங்களில் கிடைக்கப் பெற்ற தேர்தல் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ள ஆம் ஆத்மி, மேற்கண்ட 4 மாநில தேர்தல்களிலும் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைத்தன.

    குஜராத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், 5 தொகுதிகளைக் கைப்பற்றி, 13 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. இந்த வெற்றிகள், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படுத்தின.

    Next Story
    ×