என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் தோவல்"

    • சிஎஸ்சி மாநாடு கடைசியாக 2023-ல் நடைபெற்றது.
    • சிஎஸ்சி மாநாட்டில் வங்கதேச என்எஸ்ஏ கலீலுர் ரஹ்மான் கலந்துகொண்டார்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் 7வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்துகொண்டன.

    இந்த மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "இந்தியப் பெருங்கடல் நம்மால் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாரம்பரியமாகும். கடல்சார் புவியியலால் இணைக்கப்பட்ட நாம்தான் அதன் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். அது நம் கடமையாகும்" எனப் பேசினார். 

    இந்தியாவின் ஒன்பது எல்லை நாடுகளைத் தாண்டி இப்பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சீஷெல்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் பங்கேற்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், உறுப்பு நாடுகளிடையே கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் சிஸ்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 6வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு கடந்த 2023 டிசம்பரில் மொரிசியஸில் நடைபெற்றது. இந்நிலையில் இம்முறை இந்தியாவில் நடைபெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடுபோல துணை பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநாடு கடந்தாண்டு காணொலி வாயிலாக நடைபெற்றது. 

    இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ள நிலையில், வங்கசேத பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் இந்தியா வந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றது கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக நேற்று அஜித் தோவலும், ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • தோவல் தற்போது மாஸ்கோவில் உள்ளார்.
    • ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார் என்பது தெரிந்ததே.

    ரஷியாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை எப்படியாவது தடுக்க டிரம்ப் முயற்சித்தபோதும் இந்தியா-ரஷியா நட்புறவைப் பாதிக்கவில்லை.

    ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார். இதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தோவல் தற்போது மாஸ்கோவில் உள்ளார்.

    புதினின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவரது இந்திய வருகை இந்த வருட இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் நேற்று இந்தியாவின் மீதான வரிகளை மேலும் 25 சதவீதம் அதிகரித்தது உத்தரவிட்டார். இதற்கு ஒரு நாளுக்குள், புதினின் இந்திய வருகை பற்றிய செய்தி சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியது.

    இதற்கிடையே ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். அவரின் இந்தப் பயணம் இந்தியா-ரஷியா உறவை வலுப்படுத்துவதற்கானது என கூறப்படுகிறது.

    அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளால் இந்தப் பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்ல உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள்.
    • இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

    சென்னை ஐஐடி-யில் 62-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் கூறியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏதும் தவறவில்லை.

    எல்லைத் தாண்டிய மிரட்டலை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. தொழில்நுட்ப வசதி திறனும் உள்ளது.

    அதன் பிறகு, பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள். இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

    இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், சீனா சென்றுள்ள அஜித் தோவல் இன்று அந்நாட்டு துணை அதிபர் ஹன் யங்கை சந்தித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு பிராந்திய அமைதிக்கு நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    • போர் இந்தியாவின் தேர்வு அல்ல என்ற உங்கள் கூற்றை சீனா பாராட்டுகிறது.
    • விரிவான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தை அடைய வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது.

    சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவில் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டியது அவசியமாயிற்று என்றும் அஜித் தோவல் கூறினார்.

    போர் இந்தியாவின் விருப்பம் அல்ல, எந்தவொரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்ததல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உறுதிபூண்டு, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க எதிர்நோக்குகின்றன" என்று அஜித் தோவல் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் விலகிச் செல்ல முடியாத அண்டை நாடுகள், இரண்டும் சீனாவின் அண்டை நாடுகள்.

    போர் இந்தியாவின் தேர்வு அல்ல என்ற உங்கள் கூற்றை சீனா பாராட்டுகிறது. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் வேறுபாடுகளை முறையாகக் கையாளும், நிலைமை மோசமாவதைத் தவிர்க்கும் என்று சீனா மனதார நம்புகிறது.

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஆலோசனைகள் மூலம் விரிவான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தை அடைய வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்காகவும், சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பமாகவும் உள்ளது" என வாங் யி, அஜித் தோவலிடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாகிஸ்தான் நடத்திய ஷெல் குண்டுவீச்சு தாக்குதலில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
    • பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் சந்தித்தார்.

    பாகிஸ்தானின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    • நிலைமையை மேலும் தீவிரமாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை
    • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டுள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் இந்த நடவடிக்கை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    அதன்படி அமெரிக்க NSA மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, UK NSA ஜோனாதன் பவல், சவுதி அரேபியா NSA முசைத் அல் ஐபன், ஐக்கிய அரபு அமீரக NSA ஷேக் தஹ்னூன் மற்றும் ஜப்பானின் NSA மசடகா ஒகானோ உள்ளிட்ட பல நாடுகளின் NSA-க்களுடன் அஜித் தோவல் பேசினார்.

    மேலும் சீன வெளியுறவு மந்திரி வாங் இ, பிரான்ஸ் அதிபரின் ஆலோசகர் மற்றும் ரஷிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்குவுடனும் தொடர்பு கொண்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டுள்ளார்.

    நிலைமையை மேலும் தீவிரமாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்றும், பாகிஸ்தான் தீவிரமடைய முடிவு செய்தால் உறுதியாக பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அஜித் தோவல் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பேச்சில் வலியறுத்தியதாக கூறப்படுகிறது.  

    • இரு நாட்டு உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் பேசினர்.
    • நாடுகடத்தல் மற்றும் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.

    இந்நிலையில் துளசி கப்பார்ட் இந்தியா வருகை தந்துள்ளார். நேற்று காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவர் டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பயங்கரவாதம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கும், இரு நாட்டு உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது.

     

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய எதிர்ப்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடியை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பு மற்றும் நாடுகடத்தல் மற்றும் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள துளசி கப்பார்ட், டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நாளைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதை முடித்துவிட்டு அடுத்து ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணப்படுகிறார் துளசி கப்பார்ட்.

    • ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார்.
    • அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி ஓடியது தவறு. அப்போதிருந்து அங்கு நிலைமை முன்னேறவில்லை. அல்-கொய்தா உள்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை அங்கு முடுக்கி விட்டுள்ளன. 40 லட்சம் மக்கள், அவசரமான மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கிடைக்கும் அபினில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து செல்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள சில நாடுகள் முயற்சிக்கலாம். இவற்றுக்கெல்லாம் நாம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரத்துக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
    • அஜித் தோவல் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் அவர் இப்பதவிக்கு நியனம் செய்யப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 3-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார்.

    அஜித் தோவல் 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நீடிப்பார். அவரது பதவிக்காலம் பிரதமரின் பதவிக் காலத்துடன் இணைந்ததாக இருக்கும்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது.

    1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார்.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார்.
    • இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.

    கொழும்பு:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

    அஜித் தோவல் இன்று காலை கொழும்பு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அஜித் தோவல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாடியதாக தெரிகிறது.

    இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக ஆகியோரையும் சந்தித்தார்.

    இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தற்போது விரிவிடைந்துள்ளது. இதில் மொரிசியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது.

    ×