என் மலர்
வழிபாடு
- சுப பலன்களால் மனம் மகிழும் வாரம்.
- திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
மேஷம்
தன வரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு ஆறாம் அதிபதி புதன் வார இறுதியில் அஷ்டம ஸ்தானத்தில் மறைய போகிறார். இது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.
அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் சற்று நெருடல் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 23.10.2025 இரவு 10.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும்.தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. குல, இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.
ரிஷபம்
எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சனி பார்வையில் உள்ளார். இந்த கிரக சம்பந்தம்தன வரவை அதிகரிக்கும். திருமணத்தடையை அகற்றும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை தீபாவளி ஆபரில் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். பிறவிக்கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். அமாவாசையன்று முன்னோர்களுக்கு உரிய வழிபாடு செய்வதன் மூலம் பாக்கிய பலம் அதிகரிக்கும்.
மிதுனம்
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதியில் ருண, ரோக சத்ரு ஸ்தானம் செல்கிறார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க வேலையில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்ப
பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கைகூடும். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். தீபாவளி போனசில் முக்கிய குடும்பத் தேவைகளை நிறைவு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும். தீபாவளி விடுமுறையில் ஆன்மீக யாத்திரை சென்று வருவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டில் மனநிறைவு கூடும்.
கடகம்
சுப பலன்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் உள்ள அதிசார உச்ச குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சிரமமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய குடும்பத் தேவைகள் செய்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் சஞ்சலங்கள் குறைய துவங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அடுத்த 48 நாட்களுக்குள் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகம் சார்ந்த செல்களில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். ஞாபக மறதி பிரச்சினை குறையும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் ஆதாயம் உணடாகும். ஜென்ம குருவின் காலம் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆன்மீகப் பெரியோர்களை வழிபடவும்.
சிம்மம்
மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். நல்ல மாற்றங்களை தரக்கூடிய 3ம் இடத்திற்கு சூரியன் செல்வதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் கவலையைத் தரும். வரவும், செலவும் சீராக இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். புத்திர பிராப்த்தம் சித்திக்கும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்.
வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். விரய ஸ்தானத்தில் அதிசார குரு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
கன்னி
சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டா கும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பணப்புழக்கமும் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியை துவங்குவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப விசேஷங்களில் இருந்த தடைகள் விலகும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கண்டகச் சனியின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. மனதிற்கு பிடித்த வரன் அமையும். தீபாவளிக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.மன அமைதிக்கு தீபாவளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். கணவன், மனைவி உறவு மேம்படும். தீபாவளி அன்று இனிப்பு தானம் வழங்கவும்.
துலாம்
புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.தடைகள் தகறும். நிறைய நன்மைகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி நிறைந்து இருக்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், குலத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். நீண்டநாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவார்கள்.
தீபாவளி ஆபரில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். திருமணத் தடை அகலும். புதிய எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அமாவாசை அன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும் வாரம்.ராசியில் உள்ள புதனுக்கு குரு பார்வை உள்ளது. முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
மறு திருமண முயற்சி சாதகமாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தம்பதிக ளிடையே இணக்கமான சூழல் நிலவும். தீபாவளி யன்று உணவு உடை தானம் வழங்கவும்.
தனுசு
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். இதனால் பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.
மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட தன லாபம் கிடைத்து அதன் மூலம் சட்ட நெருக்கடியும் ஏற்படலாம். வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியும் போனசும் கைக்கு வரும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். தீபாவளி அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.
மகரம்
புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசிக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது.தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய காரியங்கள் தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். வீண் செலவுகள் கட்டுப்படும். கடன்பட்டு சொத்து வாங்குவீர்கள். கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.
திருமண விஷயங்கள் சித்திக்கும். தந்தையின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வீட்டிற்கு அடங்காமல் இருந்த பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதி தரும். வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். புத்திர பிராப்தம், திருமணம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழங்குவது நல்லது.
கும்பம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் நிற்கிறார்கள். வேற்று மத இன நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குறுக்கு வழியில் முன்னேறும் எண்ணம் மிகுதியாகும். ராசிக்கு தற்போது குரு பார்வை இல்லாததால் திருமண விசயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளால் மன சஞ்சலம் அதிகமாகும்.குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.
தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வாகன வசதிகள் மேம்படும். வாரிசு உருவாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். தீபாவளி ஆபரில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 21.10.2025 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பாக சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. 9ல்சூரியன் நீச்சமாக இருப்பதால் அமாவாசையன்று பித்ருக்கள் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும்.
மீனம்
கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. இது தர்மகர்மாதிபதி யோகம். அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் கடன் தொல்லையை கட்டுப்படுத்த கூடிய அளவிற்கு நல்ல சந்தர்ப்பங்களில் கூடிவரும். வரா கடன்கள் வசூலாகும். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும். ஜென்ம சனியை மீறிய சில நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.
படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். 21.10.2025 அன்று காலை 9.36 முதல் 23.10.2025 இரவு 10.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை இருக்கும். ஐப்பசி மாசம் நீர் நிலைகளில் நீராடுவதால் ஆன்ம பலம் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
- தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
- உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம்.
இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் மிகவும் பிரமாண்டமாக, ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. 'தீப ஒளி திருநாள்' எனப்படும் தீபாவளி, உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பட்டாசு, புத்தாடை, இனிப்பு, வழிபாடு என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆனந்தப்படுத்தும் நாளாக தீபாவளி திருநாள் உள்ளது.
'தீபம்' என்றால் 'விளக்கு' என்றும், 'ஆவளி' என்றால் 'வரிசை' என்றும் பொருள். விளக்குகளை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடும் நாளே தீபாவளி எனப்படும். வாழ்வில் இருள் எனும் தீமை நீங்கி, நன்மை எனும் ஒளியை பரவச் செய்யும் தினமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. ராமாயணத்தில் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த ராமன், ராவணனை அழித்துவிட்டு வனவாசம் முடிந்து, மனைவி சீதா தேவி, தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார். ராமன் திரும்பி வருவதை வரவேற்கும் வகையில் அயோத்தி மக்கள் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுவதாக சிலர் கூறுகிறார்கள்.

இருப்பினும், நரகாசுரன் எனும் அரக்கனை அழித்த தினமே தீபாவளி என பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. ஒரு முறை இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை தூக்கிச் சென்று கடலுக்குள் மறைத்து வைத்தான். பூமியை மீட்பதற்காக மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார். அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே பவுமன் எனும் இயற்பெயர் கொண்ட 'நரகாசுரன்'.
வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் என்றாலும், அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் இயல்பாகவே அசுர சுபாவத்துடன் இருந்தான். நரன் என்றால் மனிதன் என்று பொருள். மனிதனாக இருந்தாலும் அசுர குணங்கள் கொண்டவன் என்பதால் 'நரகஅசுரன்' எனப்பட்டான். அப்பெயரே 'நரகாசுரன்' என்றானது.
நரகாசுரன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். இவன் மக்களையும், முனிவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். மிகவும் சக்தி படைத்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகை தாண்டி விண்ணுலகையும் ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான். தேவர்களை அழிக்க வேண்டும் என்றால் சாகா வரம் பெற வேண்டும் என்று எண்ணிய நரகாசுரன், பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த பிரம்ம தேவர், அவன்முன் தோன்றினார். நரகாசுரன் பிரம்ம தேவரிடம், ''சாகா வரம் வேண்டும்'' என்று கேட்டான்.
பிரம்ம தேவர், ''உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது உண்டு. அதனால் வேறு ஏதேனும் வரம் கேள்'' என்றார். உடனே, ''நான் என் தாயின் கையாலே இறக்க வேண்டும்'' என்ற வரத்தை கேட்டான். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது அவனின் எண்ணம். பிரம்ம தேவரும் அவ்வாறே வரத்தை வழங்கினார். இதையடுத்து, தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் மேலும் பல கொடுமைகளை செய்தான், நரகாசுரன். மக்கள், முனிவர்கள், தேவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். இதனால் மனம் வருந்திய தேவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
கிருஷ்ணரும் நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். கிருஷ்ணர், நரகாசுரனை அழிக்க அவன் ஆட்சி செய்த இடத்துக்கு புறப்பட்டார். கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமாவும் உடன் சென்றாள். நரகாசுரனின் ராஜ்ஜியத்துக்கு காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்துவிட்டு நகருக்குள் நுழைந்தார், கிருஷ்ணர்.
பின்பு நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணர், நரகாசுரன் எய்த அம்பினால் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்தது போல் நடித்தார். கிருஷ்ணர் தேரில் சாய்ந்து விழுந்ததை கண்ட சத்தியபாமா, மிகவும் கோபம் கொண்டாள். தன் கணவருக்காக நரகாசுரனுடன் போர் புரிந்து, அவனை வதம் செய்தாள். நரகாசுரன், தான் பெற்ற வரத்தின்படியே தன் தாயின் கையாலேயே மரணத்தை பெற்றான். நரகாசுரன், இறக்கும் தருவாயில்தான், தன் தாயான பூமாதேவியின் அவதாரம் தான் சத்தியபாமா என்பதை அறிந்தான்.
நரகாசுரனை வதம் செய்த பின்புதான், சத்தியபாமாவுக்கும் தன் மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. இருப்பினும், தன் மகனின் இறப்பு மக்களுக்கான மகிழ்ச்சி என்பதை புரிந்த கொண்டாள். சத்தியபாமா கிருஷ்ணரிடம், ''இன்றைய தினம், மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'' என்று வேண்டினாள். அவ்வாறே கிருஷ்ணரும் அருள்புரிந்தார். அதன்படி, நரகாசுரன் எனும் அரக்கன் அழிந்து மகிழ்ச்சி பொங்கிய நாளாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். தீபாவளி புனித நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜை அறையை சுத்தம் செய்து, புத்தாடை உடுத்தி இறைவனின் படத்துக்கு முன்பாக விளக்கேற்றி, இனிப்புகள், பலகாரங்கள் செய்து படைத்து வழிபட வேண்டும். உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம். தொழில் செய்வோர் தங்களிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு புத்தாடை, இனிப்பு, பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள்.
தீபாவளி என்பது வாழ்வின் புது தொடக்கமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரிடமும் சகோதர உணர்வுடன் மகிழ்ச்சியை பகிர்வோம். தீபாவளியையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் குடும்பத்தோடு கலந்துகொண்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் கிருஷ்ணரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
தீபாவளி நன்னாளில் இல்லங்களில் விதவிதமான வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் வெடித்து சிதறி இன்பம் பரவட்டும்.
- ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
- சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் செய்யலாம். குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம்.
புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். புரசு இலையும் பலாச மலரும் கிடைக்காதவர்கள் சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.
சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின்போது, கட்டாயமாக 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த வழிபாட்டை தீபாவளியில் தொடங்கி தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்துவர கோடி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 72 நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் குபேர யந்திரத்தையும், லட்சுமி குபேரர் படத்தையும் வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம். இப்படி செய்துவர செல்வப் பெருக்கம் அதிகரிக்கும். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
வடக்கு முகம் நோக்கி அமரந்து பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சவுபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்யலாம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாகனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.
- சுபமுகூர்த்த தினம்.
- ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி பிற்பகல் 3.04 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : உத்திரம் இரவு 7.37 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று மாத சிவராத்திரி, காஞ்சி காமாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்
இன்று மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். நரக சதுர்த்தசி ஸ்நானம். உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சலில் சேவை, மாட வீதி புறப்பாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-அன்பு
கடகம்-புகழ்
சிம்மம்-மாற்றம்
கன்னி-தனம்
துலாம்- தெளிவு
விருச்சிகம்-நிறைவு
தனுசு- பரிசு
மகரம்-நன்மை
கும்பம்-ஆக்கம்
மீனம்-வரவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்துசேரும் நாள். வியாபார முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வேலைப்பளு கூடும். உறவினர்களால் தொல்லை உண்டு. புதியவர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம்.
மிதுனம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
கடகம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.
விருச்சிகம்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வர்.
தனுசு
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பயணம் பலன் தரும்.
மகரம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். வருமானம் உயரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வர்.
கும்பம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும்.
மீனம்
அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி. க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும்.
- தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
- கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.
தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது.
பொதுவாக அக்ஷய திருதியை மற்றும் தீபாவளி போன்ற நன்னாளில் அவரவர் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது.
இந்த சூழலில் தங்கத்திற்கு பதிலாக கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தீபாவளியன்று துடைப்பம் வாங்குவது மிகவும் நல்லது. நல்ல நாளில் போய் துடைப்பம் வாங்குவதா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதனால் துடைப்பத்தை வாங்கி வீட்டில் ஏதேனும் ஓர் ஓரத்தில் வைத்தாலே மகாலட்சுமியின் அருள் நிறைந்து பண வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.
வாழ்வில் எப்போதும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்பவர்கள் தீபாவளியன்று துடைப்பத்தை வாங்கி அதை யாருக்கேனும் தானமாக கொடுக்கலாம். இப்படி செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.
தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
- ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது.
- தினசரி காலை, மாலையில் பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது.
அந்த வகையில், சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மகா கந்த சஷ்டி விழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை, மாலையில் பல்வேறு பூஜைகள் நடைபெறும். விழாவின் பிரதான நாளான 27-ந் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
- தீபாவளியின் பிரதான அம்சமே எண்ணெய்க் குளியல்தான். ஏனென்றால் எண்ணெயில் லட்சுமி தேவியும், சீயக்காயில் ஓஷாதி தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.
- தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் குறையும் என்பது ஐதீகம்.
இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும், அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கங்கை. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை, பரமசிவனின் திருமுடியில் தங்கி பின்னர் வேகம் தணிந்து தீபாவளியன்று தான் பூலோகத்தில் பாய்ந்தது. அதனால் தான் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் என்பது மிகவும் முக்கியமானது. கங்கா ஸ்நானத்திற்கு கங்கைக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. தீபாவளியன்று தண்ணீரில் கங்கை வாசம் செய்து வருவதாக ஐதீகம். அதனால், அன்று சாதாரணமாக வீட்டில் குளித்தாலே அது கங்கா ஸ்நானம் தான்.
தீபாவளி அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினம் நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே மாறி புனிதத் தன்மை நிறைந்திருக்குமாம்.
தீபாவளியின் பிரதான அம்சமே எண்ணெய்க் குளியல்தான். ஏனென்றால் எண்ணெயில் லட்சுமி தேவியும், சீயக்காயில் ஓஷாதி தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.
தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் தான் எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்து வந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணிக்கும், 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி.
தீபாவளியன்று பிரம்ம முகூர்த்தத்தில் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். முடிந்தவர்கள் குளிர்ந்த நீரிலும் குளிக்கலாம். நம் முன்னோர்கள் ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு என்பார்கள். முடிந்தவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.
எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புத்தாடை அணிந்து, பலகாரங்களை படைத்து இறைவனை வணங்கிய பின் நம் வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி ஆசி பெறவேண்டும். அன்று மாலை உங்கள் வீட்டிலும், வீட்டிற்கு அருகிலுள்ள சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் குறையும் என்பது ஐதீகம்.
- தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும்.
- பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது.
தீபாவளி என்றால் அதற்கு விளக்குகளின் வரிசை என்று பொருளாகும். தமிழகத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அதிகாலையில் பூஜை அறையில் 5, 9, 11 ஆகிய எண்ணிக்கைகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபடுவது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.
அன்று மாலை வீட்டின் முன்னால் குறைந்தபட்சம் இரு அகல் விளக்குகளாவது ஏற்றி வைப்பதும் ஐதீகமாகும். மற்ற நாட்களை விட தீபாவளி நாளில் தான் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, வைத்திய கடவுளான தன்வந்திரி, மனித ஆயுளுடன் தொடர்பு கொண்ட எமதர்மன் ஆகியோர் ஆசிகளை வழிபாட்டின் மூலம் பெற முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.
மேலும், தீபாவளி அன்று எல்லா தேவதைகளும் பண்டிகை பொருட்களில் வாசம் செய்வதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தலைக்கு தேய்த்துக் குளிக்கும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், அரப்பு அல்லது சிகைக்காய் தூளில் சரஸ்வதி தேவியும், நெற்றியில் இடும் சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், பூக்களில் மோகினி, தண்ணீரில் கங்கையும், நாம் அணியும் புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பலகாரங்களில் அமிர்தமும், தீபச்சுடரில் பரமாத்மாவும் இருப்பதாகவும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது வழக்கம். அதன் மூலம் நம்மிடம் உள்ள தீமைகள் அழிந்து, நல்லவை வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும். அவ்வாறு குளிக்கும் தண்ணீரில் அன்று ஒரு நாள் காலையில் மட்டும் கங்கை இருப்பதாக ஐதீகம். எனவே, அதில் சிறிது பசும்பால் கலந்து குளிப்பதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும். அந்த பூஜையில் ஐந்து விதமான பழ வகைகள் மற்றும் மூன்று விதமான பூக்களை படைப்பது விசேஷம். பழ வகைகளில் மாதுளை, செவ்வாழை, நெல்லிக்கனி ஆகியவை முக்கியம். பூ வகைகளில் தாமரை, மல்லிகை, செவ்வந்தி ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வாறு லட்சுமி குபேர பூஜை செய்த பிறகு வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் சகல மங்களமும் நிலைக்கும் என்ற ஐதீகம் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி நாளன்று வீட்டில் கரும்பு வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்வதும் வட இந்திய மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் அவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக நம்புகிறார்கள். அத்துடன் வீட்டின் தலைவாசல், கதவு நிலைகள் ஆகியவற்றுக்கு சாமந்திப்பூக்களை கொண்டு வித விதமாக அலங்காரங்கள் செய்கிறார்கள்.
அத்துடன், அன்று மாலை நேரம் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் முறையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது இருள் விலகி ஒளி பெருகுவது, தீமை விலகி நன்மையின் வெளிச்சம் ஏற்படுவது என்ற அர்த்தத்தில் மக்கள் விளக்கேற்றுவதுடன், பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள்.
அத்துடன் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இனிப்புகளை வழங்கியும், புத்தாடைகளை அணிந்தும், அவற்றை பரிசுகளாக வழங்கியும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தீபாவளி நன்னாள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும், இன்னொரு முக்கியமான சடங்கும் அதன் கொண்டாட்டத்தில் அடங்கியிருக்கிறது. அதாவது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருந்தால் தீபாவளி நாளை முன்னிட்டு அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறவினர்கள் முயற்சிப்பார்கள்.
அந்த வகையில், பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது. அவ்வாறு இணைந்த குடும்பங்களில் இரவு முழுவதும் சுடர் விடும்படி மாணிக்க தீபம் என்ற அகண்ட தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதன் மூலம் அவரவர் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக பொதுமக்களிடையே ஒரு பாரம்பரியம் உள்ளது.
- உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார்.
- விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அனைத்திற்கும் ஆதியாகவும் கருதப்படுபவர், சிவபெருமான். பல கோவில்களில் சிவபெருமானை லிங்க வடிவிலும், நடராஜர் ரூபத்திலும் தரிசித்திருப்போம். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவபெருமான் காட்சி தரும் அரிதான கோவில் ஆந்திராவில் உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது, சுருட்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குதான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார்.
தல வரலாறு
புராணத்தின்படி, இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, பெருமாளின் உதவியுடன் பாற்கடலை கடைய முற்பட்டான். ஒருபுறம் தேவர்கள், மறுபுறம் அசுரர்கள் என வாசுகி பாம்பை கயிறாக திரித்தும், மந்திர மலையை மத்தாக மாற்றியும் பாற்கடலை கடைந்தனர். அப்போது, வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. அதனால், தேவர்களும், அசுரர்களும் அஞ்சினர். இந்த விஷத்தால் அனைத்து உலக உயிர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டது. எனவே அனைவரும் சிவபெருமானிடம் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.
உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார். மிகக்கொடிய விஷம் என்பதால் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை அழுத்தி பிடித்தார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்று விட்டது. இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன்' என்ற பெயர் உண்டானது.
அதன்பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது, விஷம் அருந்தியதால் சிவபெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து படுத்து (சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளி எனும் இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவபெருமான் இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் சயன கோலத்தில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். பார்வதி தேவி, பக்தர்களால் 'சர்வமங்களாம்பிகை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோவிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு நந்திகேஷ்வரரை தரிசிக்கலாம்.
பிரதோஷ வழிபாடு
இக்கோவிலில் பிரதோஷக்கால வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில்தான் முதல்முதலில் பிரதோஷம் நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகே மற்ற சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் திருவாதிரை, மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
சனிப்பிரதோஷத்தில் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமை பலப்படும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
இத்தல சிவபெருமானிடம் வேண்டியது நிறைவேறியதும், பிரதோஷம் அன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வந்து வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 59 கி.மீ. தொலைவில் சுருட்டப்பள்ளி எனும் இடத்தில் கோவில் உள்ளது.
- தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
- தைப்பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் பயணிக்கும்போது சற்று மேற்கு நோக்கி பார்த்தால், வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தோரணமலையில் உள்ள முருகன் கோவில், பல்வேறு சிறப்புகளை தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.
தல வரலாறு
சிவன் - பார்வதி திருமணத்தின்போது வடக்குப் பகுதி தாழ்ந்து, தெற்குப் பகுதி உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமானின் உத்தரவின்பேரில், தென்திசை நோக்கி பயணித்தார், அகத்தியர். இங்குள்ள மலை வளத்தை கண்டு வியந்த அகத்தியர், சித்தர்களுக்கான பாடசாலை ஒன்றை அமைத்தார். அதில் மருத்துவம் உள்பட அனைத்துவிதமான பாடங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அங்கு பயின்ற சித்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிறருக்கும் பயிற்றுவித்தனர். அப்போது அவர்கள் வழிபட்ட முருகன்தான், தற்போது தோரண மலையில் குடிகொண்டு அருள்புரிகிறார்.
அகத்தியர் இந்த மலையில் இருக்கும்போது, காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி ஏற்பட, குணம்பெற வேண்டி அகத்தியரிடம் வந்தார். அகத்தியர், மன்னனின் நாடி பார்த்தபோது, மன்னனின் தலையில் தேரை இருப்பது தெரியவந்தது. மன்னன் குளிக்கும்போது தவளையின் குஞ்சு நாசி வழியே தலைக்குச் சென்று வளர்ந்துள்ளதாக அகத்தியர் விளக்கினார். இதையடுத்து கபால அறுவை சிகிச்சை மேற்கொண்ட அகத்தியர், தலைக்குள் இருந்த தேரையை எப்படி வெளியே எடுப்பது என்று சிந்தித்தார்.
அப்போது, அவரது சீடராக இருந்த வாய்பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன், ஒரு கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்பினான். தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை துள்ளிக் குதித்து வெளியே வந்தது. இதனால் அந்த சிறுவனுக்கு 'தேரையர்' என பெயர் சூட்டி, அவனை தோரணமலையில் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்யும்படி பணித்தார், அகத்தியர். அதன்படி தேரையர் இங்கேயே தங்கி இறுதியில் முக்தியும் அடைந்தார். காலப்போக்கில் இங்கு வழிபாடு நின்றதோடு, முருகன் சிலையும் காணாமல் போனது.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், ஆதிநாராயணன் என்பவரின் மூதாதையர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், தான் தோரணமலையில் இருப்பதாகவும், அங்குள்ள சுனையில் மறைந்து இருக்கும் தன்னுடைய சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி சுனையில் மறைந்து இருந்த முருகன் சிலையை மீட்டு, குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.
இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கூறும்போது, "எங்கள் மூதாதையர் வழியில் நாங்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறோம். எனது தந்தை ஆதிநாராயணன், பள்ளி ஆசிரியராக இருந்தபடியே மீதி நேரங்களில் இந்த மலையில் முருகனுக்கு தொண்டு செய்துவந்தார். கடையம் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டுமே தெரிந்த தோரணமலை ஆலயத்தை, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர் மக்களும் அறியும்படி செய்ய நினைத்தார்.
அந்த காலத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே, அவர் தான் வைத்திருந்த சைக்கிளில் ஒவ்வொரு சினிமா தியேட்டராக சென்று, தோரணமலை பற்றிய பட காட்சியை தியேட்டரில் போடும்படி கேட்பார். இறைப் பணி என்பதால், அவர்களும் மனமகிழ்ச்சியோடு பணம் ஏதும் பெறாமல், படத்தின் இடைவேளையின்போது தோரணமலையை காட்டினார்கள். இப்படிதான் பல்வேறு மாவட்டங்களுக்கும் தோரணமலையின் புகழ் பரவியது.

கிரிவலம் செல்லும் பக்தர்கள்
மேலும், வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாட எண்ணிய ஆதிநாராயணன், சிறப்பு பூஜையோடு நின்றுவிடாமல் விடிய விடிய பக்தர்களை அங்கேயே இருக்கவைக்க யோசித்தார். அதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் உதவியோடு கலையரங்கம் கட்டி, அதில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் வைகாசி விசாகத் திருவிழா மக்கள் வெள்ளத்தில் களை கட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக தோரணமலையின் புகழ் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
இதனால் பலரிடம் உதவி கேட்டு, அவர்களே திருப்பணி செய்தனர். அப்படிதான் மலைமீது ஏற படிக்கட்டுகள், மலை அடிவாரத்தில் தார் சாலை, கிணறு, தங்குவதற்கு தாழ்வாரங்கள், அகன்ற மலைப்பாதை, ஆங்காங்கே இளைப்பாற ஆறு மண்டபங்களும் அமைக்கப்பட்டன. தந்தையின் வழியில் நானும் ஆன்மிகப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். தற்போது தோரணமலை ஆலயத்தில் தினமும் மதியம் அன்னதானம், ஞாயிறு மற்றும் கடைசி வெள்ளிக்கிழமை, பவுர்ணமி கிரிவல நாட்களில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
தோரணமலை முருகனின் பக்தர்களால், பல மாணவர்கள் தத்தெடுக்கப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள். தோரணமலையில் நூலகம் ஒன்றும் உள்ளது. அதில் ஆன்மிகம் மட்டுமின்றி பொதுஅறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தோரணமலை பக்தர்கள் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

தோரணமலையின் தோற்றம்
தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பத்ரகாளி அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையில் முருகப்பெருமானின் பாதச்சுவடு உள்ளது. அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கின்றனர். மலை அடிவாரத்தில் கன்னிமார்கள் சன்னிதி உள்ளது. மேலும் சிவபெருமான், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் சுதை சிற்பங்களும் காணப்படுகின்றன. மலையேறும் இடத்தில் பாலமுருகன் சிலை உள்ளது. மலையேற முடியாதவர்கள் இந்த முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இங்குள்ள விநாயகர், 'வல்லப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் தேவியுடன் காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. முகூர்த்த நாட்களில் இவரது சன்னிதியில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. தோரணமலை முருகனை வேண்டுபவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி, உடல் ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, விவசாயம் செழிக்க 'வருண கலச பூஜை' நடத்தப்படுகிறது. தைப் பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் விருட்சபூஜை நடைபெறுகிறது. இதுதவிர, சுனை நீர், கோவில் வளாகத்தில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரத்திற்குரிய செடிகள் ஆகியவற்றிற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். முருகன் கோவில் அமைந்திருக்கும் தோரணை மலையைச் சுற்றி தற்போது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் நிகழ்வும் நடக்கிறது. தற்போது கரடுமுரடாக இருக்கும் 6 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையை, புனரமைக்கும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
தோரணமலையை அலங்கரிக்கும் சுனைகள்
தோரணமலையில் மொத்தம் அறுபத்து நான்கு சுனைகள் இருப்பதாக இங்கே தங்கி பாடசாலை நடத்திய சித்தர்களின் பாடல் வாயிலாக அறிகிறோம். அவற்றில் சில மட்டுமே நம் கண்ணுக்கு புலப்படுகின்றன. மலை அடிவாரத்தில் இரண்டு சுனைகள், மலைக்கு போகும் வழியில் இடதுபுறம் 'லட்சுமி தீர்த்தம்' என்ற சுனை, மலையில் முருகப்பெருமானுக்கு இடதுபுறம் சற்று மேலே ஒரு பெரிய சுனை போன்றவை முக்கியமான சுனைகளாக இருக்கின்றன.
- சனிப் பிரதோஷம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-1 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி பிற்பகல் 2.24 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : பூரம் இரவு 6.16 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று சனிப் பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம். தேவக்கோட்டை மணிமுத்தாநதிக்கு அவ்வூர் சகல ஆலயமூர்த்திகளும் எழுந்தருளி விஷூ உற்சவ தீர்த்தவாரி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உண்மை
மிதுனம்-நலம்
கடகம்-ஜெயம்
சிம்மம்-முயற்சி
கன்னி-நலம்
துலாம்- தனம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- நிறைவு
மகரம்-போட்டி
கும்பம்-கடமை
மீனம்-வாழ்வு






