என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Weekly Rasipalan 19.10.2025 to 25.10.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    Weekly Rasipalan 19.10.2025 to 25.10.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • சுப பலன்களால் மனம் மகிழும் வாரம்.
    • திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    மேஷம்

    தன வரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு ஆறாம் அதிபதி புதன் வார இறுதியில் அஷ்டம ஸ்தானத்தில் மறைய போகிறார். இது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.

    அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் சற்று நெருடல் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 23.10.2025 இரவு 10.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும்.தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. குல, இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

    ரிஷபம்

    எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சனி பார்வையில் உள்ளார். இந்த கிரக சம்பந்தம்தன வரவை அதிகரிக்கும். திருமணத்தடையை அகற்றும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை தீபாவளி ஆபரில் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும்.

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். பிறவிக்கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். அமாவாசையன்று முன்னோர்களுக்கு உரிய வழிபாடு செய்வதன் மூலம் பாக்கிய பலம் அதிகரிக்கும்.

    மிதுனம்

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதியில் ருண, ரோக சத்ரு ஸ்தானம் செல்கிறார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க வேலையில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்ப

    பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கைகூடும். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். தீபாவளி போனசில் முக்கிய குடும்பத் தேவைகளை நிறைவு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும். தீபாவளி விடுமுறையில் ஆன்மீக யாத்திரை சென்று வருவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டில் மனநிறைவு கூடும்.

    கடகம்

    சுப பலன்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் உள்ள அதிசார உச்ச குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சிரமமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய குடும்பத் தேவைகள் செய்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் சஞ்சலங்கள் குறைய துவங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அடுத்த 48 நாட்களுக்குள் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகம் சார்ந்த செல்களில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

    பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். ஞாபக மறதி பிரச்சினை குறையும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் ஆதாயம் உணடாகும். ஜென்ம குருவின் காலம் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆன்மீகப் பெரியோர்களை வழிபடவும்.

    சிம்மம்

    மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். நல்ல மாற்றங்களை தரக்கூடிய 3ம் இடத்திற்கு சூரியன் செல்வதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் கவலையைத் தரும். வரவும், செலவும் சீராக இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். புத்திர பிராப்த்தம் சித்திக்கும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்.

    வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். விரய ஸ்தானத்தில் அதிசார குரு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

    கன்னி

    சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டா கும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பணப்புழக்கமும் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியை துவங்குவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப விசேஷங்களில் இருந்த தடைகள் விலகும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கண்டகச் சனியின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. மனதிற்கு பிடித்த வரன் அமையும். தீபாவளிக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.மன அமைதிக்கு தீபாவளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். கணவன், மனைவி உறவு மேம்படும். தீபாவளி அன்று இனிப்பு தானம் வழங்கவும்.

    துலாம்

    புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.தடைகள் தகறும். நிறைய நன்மைகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி நிறைந்து இருக்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், குலத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். நீண்டநாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவார்கள்.

    தீபாவளி ஆபரில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். திருமணத் தடை அகலும். புதிய எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அமாவாசை அன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.

    விருச்சிகம்

    தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும் வாரம்.ராசியில் உள்ள புதனுக்கு குரு பார்வை உள்ளது. முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    மறு திருமண முயற்சி சாதகமாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தம்பதிக ளிடையே இணக்கமான சூழல் நிலவும். தீபாவளி யன்று உணவு உடை தானம் வழங்கவும்.

    தனுசு

    உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். இதனால் பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.

    மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட தன லாபம் கிடைத்து அதன் மூலம் சட்ட நெருக்கடியும் ஏற்படலாம். வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியும் போனசும் கைக்கு வரும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். தீபாவளி அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.

    மகரம்

    புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசிக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது.தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய காரியங்கள் தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். வீண் செலவுகள் கட்டுப்படும். கடன்பட்டு சொத்து வாங்குவீர்கள். கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.

    திருமண விஷயங்கள் சித்திக்கும். தந்தையின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வீட்டிற்கு அடங்காமல் இருந்த பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதி தரும். வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். புத்திர பிராப்தம், திருமணம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழங்குவது நல்லது.

    கும்பம்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் நிற்கிறார்கள். வேற்று மத இன நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குறுக்கு வழியில் முன்னேறும் எண்ணம் மிகுதியாகும். ராசிக்கு தற்போது குரு பார்வை இல்லாததால் திருமண விசயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளால் மன சஞ்சலம் அதிகமாகும்.குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.

    தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வாகன வசதிகள் மேம்படும். வாரிசு உருவாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். தீபாவளி ஆபரில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 21.10.2025 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பாக சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. 9ல்சூரியன் நீச்சமாக இருப்பதால் அமாவாசையன்று பித்ருக்கள் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும்.

    மீனம்

    கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. இது தர்மகர்மாதிபதி யோகம். அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் கடன் தொல்லையை கட்டுப்படுத்த கூடிய அளவிற்கு நல்ல சந்தர்ப்பங்களில் கூடிவரும். வரா கடன்கள் வசூலாகும். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும். ஜென்ம சனியை மீறிய சில நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.

    படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். 21.10.2025 அன்று காலை 9.36 முதல் 23.10.2025 இரவு 10.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை இருக்கும். ஐப்பசி மாசம் நீர் நிலைகளில் நீராடுவதால் ஆன்ம பலம் பெருகும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    Next Story
    ×