என் மலர்tooltip icon

    வழிபாடு

    • அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
    • ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

    அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.

    இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

    மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

    • ஏரிவாடி பக்கத்தில் நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.
    • இயற்கை வளம் நிறைந்தது திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி.

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ளது. சிறுமளஞ்சி. இது நாங்குநேரி தாலுகாவில் உள்ள ஏரிவாடி பக்கத்தில் உள்ள நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது இந்த ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.

    இயற்கை வளம் நிறைந்த திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி. இந்த ஊரில் பல தலைமுறைகளுக்கு முன்பு இருளப்பன் என்பவர் வசித்து வந்தார். அவரது பக்கத்து கிராமமான அணைக்கரையை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் பனைமரங்களை குத்தகை எடுப்பதில் ஒரு சில பிரச்சினைகள் இருந்துகொண்டு வந்தது.

    ஒரு சமயம் வெள்ளையம் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோல்போர் தீப்பற்றி எரிந்தது. தன்னுடைய களத்துமேட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போர் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் இருளப்பன் தான் என்று சொல்லி குற்றம்சாட்டினார். அதன்பிறகு இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஊர் பெரியர்வர்களிடம் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு செய்யப்பட்டது.

    அது என்னவென்றால் விஜயநாராயணத்தில் இருக்கக்கூடிய சுடலைமாட சுவாமி கோவிலுக்கு இரு ஊரில் உள்ள மக்களும் செல்ல வேண்டும். அங்கு சென்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். சத்தியம் செய்தபிறகு சொந்த ஊருக்கு 3 நாட்கள் கழித்து தான் வர வேண்டும். எனவே இரண்டு ஊர் பொதுமக்களும் விஜயநாராயண புரத்துக்கு சென்றனர். அங்கு கோவிலில் சத்தியமும் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களுக்குள் ஊருக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவை மீறி சிறுமளஞ்சிக்காரர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். உடனே சுடலைமாட சுவாமி கோபத்துடன் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்தார்.

    சிறுமளஞ்சி தெருவில் வசிக்கக்கூடிய ஒரு பெண்ணின் கனவில் பேச்சியின் மகனாகிய மாயாண்டி சுடலைமாட சுவாமி ஓங்கி உயர்ந்த உருவம் கொண்டு விரிசடை கூந்தலோடும், விரிந்த தோள்கள் இரண்டில் இரண்டு பனைமரங்களை வைத்துக்கொண்டு, ஒரு கையில் மாண்டுபோன பிணங்களின் மிட்டங்கால்களை முருக்குபோல் கடித்துக்கொண்டு ஆங்கார உருவம் கொண்டு ஆதாளி போட்டபடி இடுப்பில் கருப்புநிறத்தில் சல்லடை அணிந்து, காலிலே வெள்ளிமணி தண்டையும் அணிந்து, ஒருகையில் 5 மணிவல்லையமும் கொண்டு வருவதுபோல் தோன்றினார்.

    பயந்துபோன அந்த பெண், தான் கண்ட கனவை பற்றி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினாள். அந்த பெண்ணின் அப்பா-அம்மா இருவரும் ஊர் பெரியவர்களிடம் சொன்னார்கள். ஊர் பெரியவர்களில் ஒருவர் நாளைக்கு கடைசி செவ்வாய். எனவே நம்ம ஊர் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று கணக்கு கேட்டு வரலாம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம் என்று கூறினார்.

    கடைசி செவ்வாய் இரவு 8 மணிக்கு பூஜைகள் எல்லாம் நடந்தது. ஊர் பெரியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடந்தவற்றை எடுத்துக்கூறி இனி நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர்.

    அப்போது அம்மன் அருள்வாக்கு சொன்னார். என் மகன் மாயாண்டி சுடலைக்கு கோபம் தீரவில்லை. எனவே அவனுக்கு ஊரில் நிலையம் கொடுத்து கோவில் கட்டி சுடலைமாடனை கைகூப்பி வணங்கி வர வேண்டும். சிவசுடலை அவன் கோபம் தணிவான். கையிலையில் பிறந்த மகன் காவலாய் காத்து நிற்பான். இன்று இரவே சுடலைமாடன் வருவான். நள்ளிரவில் ஊருக்கு கிழக்கே ஒத்தபனை மரத்தின் மீது சுடரொளியில் அவதரித்தவன் போரொளியாய் தெரிவான் என்று அம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.

    உடனே அவர்கள் அருகில் இருந்தவர்களில் ஒரு பெண் கேட்டார். இந்த பனங்காட்டில் இருக்கக்கூடிய எந்த பனை மரத்தில் அவர் தெரிவார் என்று கேட்டார். அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்டார். உடனே அருள்வாக்கு கூறும் அம்மன், சுடலை பேரொளியாய் தெரியும் அந்த பனைமரத்துக்கு அடியில் கத்தரிக்காய் செடி ஒன்று இருக்கும். அதில் ஒரேஒரு காய் மட்டும் காய்த்திருக்கும். அந்த இடம் தான் சுடலைமாடசுவாமி குடியேறக்கூடிய இடம்.

    சுடலைமாட சுவாமியை கண்டு யாரும் பயப்படத்தேவை இல்லை. அவன் என் கண் பார்வையில், என் கட்டுப்பாட்டில் இருப்பான் என்று முத்தாரம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.

    முத்தாரம்மன் சொன்னபடியே நள்ளிரவில் ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி நின்னாங்க. மாயாண்டி சுடலைமாட சுவாமி விஜயநாராயணம் விட்டு பரப்பாடி, புதுக்குளம், ராப்பாடி பாதைவிட்டு, நாங்குநேரி தாண்டி வாகைகுளம் வழியாக சிறுமளஞ்சி வந்தார்.

    வேம்புடையார் சாஸ்தா கூடி, ஐந்துடையான் பாலம் கடந்து சிறுமளஞ்சி ஊருக்கு ஓடி வந்தார். ஒத்தப்பனை உயரத்துக்கு ஒளியாக காட்சி தந்தார் சுடலைமாடன் சுவாமி. அடுத்த நாள் காலையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் விஜயநாராயணம் சென்றனர். விஜயநாராயணத்துக்கு சென்று பிடிமண் எடுத்து வந்தனர். கத்தரிக்காய் செடி முளைத்திருந்த அந்த ஒத்தை பனைமரத்தடியில் சுடலைமாட சுவாமிக்கு மண் பீடம் அமைத்தனர்.

    பனை ஓலையால் கொட்டகை அமைத்து கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர். அப்போது சுடலைமாட சுவாமி அருள்வாக்கு சொன்னார். முதல்வாக்கு என்னவென்றால், நான் இந்த சிறுமளஞ்சியை சிறு மதுரையாக்கி தருகிறேன் என்று கூறினார். சுடலைமாட சுவாமி கூறிய அருள்வாக்கின்படி சிறுமளஞ்சி விவசாயத்திலும், தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் சிறந்து விளங்கியது.

    அதன்பிறகு சிலவருடங்கள் கழித்து கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பனைக்கம்புகள் கொண்டு ஓடு வேயப்பட்டது. காலப்போக்கில் ஓட்டுக்கூரையை நீக்கிவிட்டு கல் மண்டபம் கட்டினர். இந்த கோவில் வள்ளியூரில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது ஆவணி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை சிறப்பாக கொடை விழா நடந்து வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், தமிழ் மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விஷேச வழிபாடும் நடக்கிறது.

    இந்த விஷேச நாட்களில் வள்ளியூரில் இருந்து சிறப்பு பஸ்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை நடை திறந்து இருக்கும். நுழைவு வாயிலுக்கு அருகில் ஒற்றை பனைமரமும், பக்கத்துலேயே கொம்புமாடசாமியின் பீடமும் இருக்கும். அதற்கு எதிரில் சுடலைமாட சுவாமியின் கோவில் உள்ளது.

    அங்கு சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், முண்டன் சுவாமி ஆகிய தெய்வங்கள் நின்ற நிலையில் கிழக்கு பகுதி நோக்கி அருள்பாலித்து வருகிறார்கள். ஒத்தபனை சுடமாடசுவாமியின் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் இருக்கும் மூலவர் சுடலை ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார்.

    உண்மையாகவே நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் பக்தர்களுக்கு உயர்வான வாழ்வை தருகிறார் இந்த ஒத்தப்பனை சுடலைமாடசுவாமி. நாமும் அவரை வழிபடுவோம் அவர் அருள் பெறுவோம்.

    • 2-வது நாளான இன்று காலை பவித்திர மாலைகளுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவ யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 2-வது நாளான இன்று காலை பவித்திர மாலைகளுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அந்த பவித்திர மாலைகள் மூலவர் மற்றும் உற்சவருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. நாளை யாகசாலை பூஜையுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதனையொட்டி கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை இன்று ஏழுமலையான் கோவிலில் ரத்து செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நேற்று 79 ஆயிரத்து 152 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,329 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி வருகிறது.
    • 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) வருகிறது. 30-ந் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பவுர்ணமியையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • சிவன் கோவில்களில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-11 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி பிற்பகல் 3.29 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். மதுரை சுந்தரேசுவரர் விறகு விற்றருளிய காட்சி. விருதுநகர் சொக்கநாதர் ரதோற்சவம், ஏகாந்த சேவை. குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி, திருவொற்றியூர் தியாகராஜர் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-இன்பம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பிரீதி

    கன்னி-விவேகம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- அனுகூலம்

    மகரம்-பெருமை

    கும்பம்-தேர்ச்சி

    மீனம்-பாசம்

    • 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் மு.கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா வருகிற 4-ந்தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.

    மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    9-ந்தேதி 6-ம் திருவிழா அன்று காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் சேர்கிறார்.

    அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    11-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    ஆவணித்திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் மற்றும் 7-ம் திருவிழாவன்று அதிகாலை 1 மணிக்கும், மற்ற நாட்களில் கோவில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது.
    • நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமை வலிய அம்மாவிற்கு மட்டும் உண்டு.

    குழந்தைப்பேறு வேண்டுபவர்களின் மனக்குறையைப் போக்கிக் குழந்தைப்பேறு அளிக்கும் நாகராஜர் கோயில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகில் மன்னார்சாலை என்ற அமைந்திருக்கிறது.

    தல வரலாறு

    மன்னார்சாலையில் வசித்து வந்த அந்தணர் குடும்பத்துப பெண்ணிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் கவலையடைந்த அந்த பெண் பரசுராமரை வேண்டி தனக்கு குழந்தைவரம் அளிக்குமாறு வேண்டினாள். மகாவிஷ்ணுவின் தோற்றமாக கருதப்படும் பரசுராமர் அந்த பெண்ணிடம், "பெண்ணே, சிவபெருமான் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி வந்தால் உனக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்" என்று அருளினார்.

    அந்த பெண்ணும் பரசுராமர் சொன்னபடி பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி தனக்கு குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வந்தார். அவரின் தொடர் வேண்டுதலின் பலனாக வாசுகி அவர் முன்பு தோன்றி, "பெண்ணே, உன் தொடர் வேண்டுதலால் மகிழ்ந்தேன். உனக்கு முதல் குழந்தையாக ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று பிறக்கும்.

    அதன் பிறகு, இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கும். முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது. இந்த உலகம் இருக்கும்வரை அந்த பாம்பும் உயிருடன் இருந்து உன்னையும், உன் மரபு வழியினரையும் பாதுகாக்கும்" என்று அருளினார்.

    வாசுகி அருளியபடி அந்த பெண்ணிற்கு முதலில் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பும், அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. அந்த பெண் இரு குழந்தைகளையும் ஒன்று போல் கவனித்து வளர்த்து வந்தார். இரு குழந்தைகளும் பெரியவர்களாகினர். அந்த பெண் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை முதலாவது மகனான நாகராஜனிடம் கூறினார்.

    அதைகேட்ட நாகராஜன், "தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை, எனவே இந்த வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பப்படி தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    "மகனே, நீ என்னைவிட்டு தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நான் இருக்கும் வரை என் கண் முன்பாகவே இருக்க வேண்டும். நீ இந்த வீட்டின் நிலவறையில் இருந்து கொள். நான் அவ்வப்போது வந்து உன்னை பார்த்துக் கொள்கிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் தாய்.

    நாகராஜன் தாயிடம், "அம்மா, நான் தங்கள் விருப்பப்படி இந்த வீட்டின் நிலவறையில் போய் இருந்து கொள்கிறேன். நான் இந்த குடும்பத்தினரையும், அவர்களை தொடர்ந்து வரும் மரபு வழியினரையும் இந்த உலகம் இருக்கும் வரை காப்பாற்றுவேன். தாங்கள் விரும்பும் நேரத்தில் நிலவறைக்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

    நாகராஜன் தன் தம்பியிடம், "தம்பி, நான் நிலவறைக்கு சென்ற பின்பு, அதற்கு அருகில் ஒரு கோயில் அமைத்து, கோயிலின் உள்ளே எனது உருவச்சிலை ஒன்றை அமைத்து, எல்லோரும் என்னை வணங்கி வாருங்கள். என்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்குவேன்" என்று சொல்லி வழிபாட்டு முறைகளையும் சொன்னார்.

    அதன் பிறகு அவர் நிலவறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார். நாகராஜனின் தம்பி நிலவறையின் அருகில் கோவில் அமைத்து, அதில் நாகராஜர் சிலையினையும் நிறுவினார். அன்றில் இருந்து இன்று வரை நாகராஜர் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு அருகில் உள்ள நிலவறையில் நாகராஜர் இருந்து அருள்வதாக பக்தர்களிடம் நம்புகிறார்கள்.

    நாகராஜர் இருப்பதாகக் கருதப்படும் நிலவறைக்கு செல்லவும், நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமையும் அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணியாக கருதப்படும் "வலிய அம்மா" என்பவருக்கு மட்டுமே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்கு சென்று நாகராஜனை வழிபடுவதாக சொல்கின்றனர்.

    பக்தர்களின் வழிபாடு, சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கான மேற்பார்வை போன்றவைகளையும் இவரே கவனித்துக்கொள்கிறார். இக்கோயிலில் நாகராஜனுக்கு அடுத்து முக்கியத்துவம் உடையவராக "வலிய அம்மா" இருக்கிறார். "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணியாக இருப்பவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

    அந்த பெண் திருமண வாழ்க்கையில் இருந்தால், அவர் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி, "வலிய அம்மா" வாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    உறுளி கவிழ்த்தல்

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் உறுளி என்கிற நல்ல கனமுள்ள வட்ட வடிவிலான வெண்கலப் பாத்திரத்தினை இக்கோயிலின் பூஜைப்பணிகளை செய்யும் "வலிய அம்மா"விடம் கொடுத்து வேண்டிக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த உறுளிப் பாத்திரத்தை பூஜை செய்து அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் கவிழ்த்து வைத்து விடுகிறார்.

    அந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு, தங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து வலிய அம்மாவை பார்த்து, வெள்ளியில் செய்யப்பட்ட ஒரு பாம்பு உருவத்தினைக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த வெள்ளிப் பாம்பு உருவத்திற்கு பூஜை செய்து, தம்பதியர் முன்பு கொடுத்து கவிழ்த்து வைத்திருந்த உறுளி பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து வேண்டுதலை நிறைவு செய்து தம்பதியர்களுடன், குழந்தையையும் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

    ஆயில்யம் நாள் வழிபாடுகள்

    நாகராஜா கோயில்கள் அனைத்திலும் புரட்டாசி மாதத்தில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். மன்னார்சாலை நாகராஜா கோயிலிலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    இந்த வழிபாட்டில் திருவிதாங்கூர் மன்னர் கலந்து கொண்டு நாகராஜரை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது. ஒரு முறை மன்னர் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே, அவர் அடுத்து வந்த ஐப்பசி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வருகை தந்து, புரட்டாசி மாத ஆயில்ய நாள் சிறப்பு கொண்டாட்டங்களை போன்றே சிறப்பு வழிபாடுகளை செய்து வழிபட்டார். அதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார், இனி ஆண்டுதோறும் இரு ஆயில்ய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தும்படி வேண்டிக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி என இரண்டு மாதங்களில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுகிறது.

    சிறப்புகள்

    இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நாக வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கோயில்களில் மன்னார்சாலை நாகராஜா கோவில்தான் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது.

    கோயில் வளாகத்தில் முப்பது ஆயிரத்துக்கும் அதிகமான நாகதேவதைகளின் சிலைகள் இருக்கின்றன. இக்கோயிலில் குழந்தைப்பேறு வேண்டி செய்யப்படும் உறுளி வேண்டுதல் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமானதாக இருக்கிறது.

    அமைவிடம்

    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஹரிப்பாடு எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்சாலை எனுமிடத்தில் கோயில் அமைந்திருக்கிறது.

    • மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர்.

    சுமார் 500 ஆண்டுகளுக்குமுன்னாள் கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாதபுரத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவிலில் அர்ச்சகராக ஒருவரை பணியமர்த்தினர். அந்த அர்ச்சகருக்கு நாளடைவில் திருமணமும் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த அர்ச்சகர் தன்னுடைய பெண்குழந்தைக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டினார். அதுமட்டுமில்லாமல் இனி அடுத்து பிறக்கும் குழந்தைக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் பெயரை சூட்ட வேண்டும் என்று மனதில் நின்னைத்துக்கொண்டார்.

    அடுத்த வருடமே மீண்டும் ஒரு பெண்குழந்தை அர்ச்சகருக்கு பிறந்தது. பெண்குழந்தை என்பதால் சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை நீலா என்றும், மகள் சக்தியின் ரூபமாக திகழவேண்டும் என்று உணர்ந்த அந்த அர்ச்சகர் தன்னுடை மகளுக்கு நீலாதேவி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர். மகள்கள் இருவரும் பருவம் அடைந்தனர். அவர்கள் விரும்பும் நகைகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வளர்த்து வந்தார் அர்ச்சகர். மகள்களை தனியே வெளியே செல்ல அனுமதிக்காகல் தாய் அல்லது தந்தையுடன் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வளர்த்து வந்தார் அர்ச்சகர்.

    இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாதபுரம் இருந்தது. பதமநாதபுரம் கோட்டைக்கு அருகில் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவிற்கு தனி தளபதியாக இருந்தவர் தான் பத்மநாபன். இவர் சுருள்வாள்வீசுவதில் வல்லவராகவும், சிறந்த வீரராகவும் இருந்தார்.

    பத்மநாபனின் பணி என்னவென்றால் படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது. இந்த பணியைதான் பத்மநாபன் கவனித்து வந்தார். ஒரு நாள் காலையில் புலியூர் குறிச்சியில் இருந்து பத்மநாதபுரம் அரண்மணை நோக்கி குதிரையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார் பத்மநாபன். அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு அக்காவும் தங்கையுமான செண்பகவல்லியும், நீலாதேவியும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    குதிரையில் வந்த பத்மநாபன் அக்கா தங்கையான செண்பகவல்லியையும், நீலாதேவியையும் பார்த்தார். ஆஹா... என்ன அழகு என்று வியந்து பார்த்துவிட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற பத்மநாபன் மறுபடியும் அந்த இரு பெண்களின் மீது ஆசை கொண்டு கோட்டைக்கு செல்லாமல் பெண்களை பின்தொடர்ந்து சென்றார்.

    குதிரையின் சத்தம் அருகில் வரவர அக்காவும் தங்கையும் வேகமாக நடந்து சென்றனர். தங்களுடைய வீட்டிற்கு போய் பயத்தில் திரும்பி பார்த்தனர். அப்போது பத்மநாபன் தெருவின் முனையில் நின்றுகொண்டு கையசைத்துவிட்டு சென்றார்.

    கோட்டைக்கு சென்றதும் பத்மநாபன் நடந்த அனைத்தையும் தன்னுடைய ஆலோசகரிடம் விளக்கி கூறினார். ஆலோசகரிடம் பத்மநாபன் அந்த பெண்கள் இருவரும் யார்? அவர்களது தந்தை யார் என்பதை அறிய வேண்டும் என்று கூறினார். உடனே அந்த ஆலோசகரும் அந்த தெருவில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார்.

    அந்த இளைஞர், அந்த பெண்கள் இருவரும் அர்ச்சகரின் மகள்கள் என்றும், பெரியவள் பெயர் செண்பகவல்லி, இளையவள் நீலாதேவி என்றும் கூறினார். உடனே பத்மநாபன் மறுநாள் காலை சிவன் கோவில் அர்ச்சகரிடம் மகள்கள் பற்றி பேசலாம் என்று ஆலோசகரிடம் கூறினார்.

    இதை கேட்டதும் பத்மநாபனின் ஆலோசகர் இன்றைக்கு வேண்டாம். அடுத்தவாரம் சிவன் கோவிலில் கொடியேறுகிறது. எனவே அப்போது அங்கு செல்லலாம் என்று கூறினார். இப்படி சில நாட்கள் நகர்ந்தது. பங்குனி தேரோட்டத்துக்கு கொடியேறியதும் கோவில் அர்ச்சகரை பத்மநாபன் தன்னுடைய கோட்டைக்கு அழைத்துள்ளார்.

    கோட்டைக்கு வந்த அர்ச்சகரை அந்த ஆலோசகர் வழிமறித்து உன்னுடைய பெண்களை பத்மநாபன் பார்த்துள்ளார். உன்னுடைய இரு மகள்களையும் அவருக்கு பிடித்துள்ளது. திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார் என்று ஆலோசகர் கூறினார். அதனால் நீங்களே ஒரு நல்ல நாளாக பார்த்து சீக்கிரம் சொல்லுங்கள் என்றார் ஆலோசகர். அதற்கு அர்ச்சகர் பதில் சொல்லாமல் துக்கம் தொண்டையை அடைக்க, கை கால்கள் நடுநடுங்க வீட்டுக்கு வேகமாக நடந்து வந்தார். நடந்ததை பற்றி தன்னுடைய மனைவியிடம் கூறி வருத்தப்பட்டார் அர்ச்சகர்.

    படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பத்மநாபன் நம்முடைய குழந்தைகளை பெண் கேட்கிறான். அவன் குலத்தால் வேறுபட்டவன். திருமணம் செய்துகொடுப்பதற்கு மறுத்தால் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டான். பத்மநாபன் மன்னருக்கு பக்கபலமாக இருப்பவன். என்ன செய்வது என்று தன் மனைவியிடம் ஆதங்கத்துடன் கூறினார் அர்ச்சகர்.

    உடனே அர்ச்சகரின் மனைவி, எல்லாவற்றையும் அம்மையப்பன் பார்த்துக்கொள்வான். இப்போது நீங்கள் உறங்குங்கள் என்று ஆறுதல் கூறினார். இப்படி ஒரு வாரம் சென்றபிறகு, ஆவணி தேரோட்டம் 10-ம் நாள் திருவிழாவிற்கு வந்த சிறப்பு அர்ச்சகர்கள் எல்லோரும் கோவிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அர்ச்சகர் தனது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவருடைய மனைவியும், மகள்களும் தேரோட்டத்தை காண கிளம்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அர்ச்சகர் இப்போது கோவிலுக்கு செல்ல வேண்டாம். மகள்கள் இருவருக்கும் தோஷம் கழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே இன்றைக்கு 6 வகை கூட்டு வச்சி, பாயசம் தயார் செய்து அப்பளத்துடன் சாப்பாட்டை தயார் செய்து வைக்குமாறு கூறினார்.

    இதை பிள்ளைகள் கையினால் 7 பேருக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும் என்றார் அர்ச்சகர். பின்னர் தன்னுடைய இரு மகள்களையும் கோட்டைக்கு அருகில் பாழடைந்த ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அந்த பாழடைந்த ஆழ்கிணற்றுக்கு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு சென்றார் அர்ச்சகர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் ஒரேநேரத்தில் கிணற்றில் உள்ள 21 படிகளை தாண்டி இறங்கி காலை கழுவுங்கள் என்று சொன்னார் அர்ச்சகர். உடனே செண்பகவல்லி அப்பா... இந்த பாழடைந்த கிணற்றை காண்பதற்கே பயமாக உள்ளது என்றாள். உடனே நீலாதேவி அது ஒன்றும் இல்லை வா... என்று கூறி அக்காவின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு சென்றார்.

    முதலில் அவர்கள் இருவரும் நடந்து செல்ல அவர்களது பின்னால் நடந்து சென்றார் அர்ச்சகர். கடைசி படிக்கடில் இறங்கி இருபெண்களும் கால்களை கழுவிக்கொண்டு இருக்கும் போது அர்ச்சகர் அவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு விடுகிறார் அர்ச்சகர். என்ன செய்வதென்று அறியாத இரு பெண்களும் கிணற்றுக்குள் தத்தளித்தனர். உடனே செண்பகவல்லி மூச்சுத்திணறி இறந்துவிடுகிறாள்.

    உடனே நீலாதேவிமட்டும் கிணற்றில் தத்தளித்தபடி ஏன் அப்பா எங்களை இப்படி தள்ளிவிட்டீங்க... பத்மநாபனுக்கு பயந்து எங்களை இப்படி கொல்ல துணிந்துவிட்டீர்களே என்று சொல்லிக்கொண்டே நீலாதேவியும் உயிரை விட்டாள். இருமகள்களை பறிகொடுத்த அர்ச்சகர் வீட்டிற்கு திரும்பினார். அவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அர்ச்சகரின் மனைவியும் கணவனின் மார்பில் சாய்ந்து உயிரைவிட்டாள்.

    இப்படி தன்னுடைய அப்பாவால் உயிரிழந்த அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி கோட்டையை சுற்றி ஆதாளிபோட்டு வருவோரையும், போவோரையும் அடித்து துன்புறுத்தி வந்தனர். அதுமட்டுமில்லாமல் நீலாதேவி பத்மநாபனை கொன்று அவனது குடலை உறுவி மாலையாக போட்டு சந்தோசமாக ஆரவாரம் செய்து வந்தாள். அதுமட்டுமல்லாமல் பத்மநாபனை சார்ந்தவர்களும், கோட்டையை சுற்றி இருந்த ஊர்மக்களும் நோய்வாய்பட்டு இறந்து வந்தனர். சிலர் அகால மரணம் அடைந்தனர்.

    இதையெல்லாம் அறிந்த மகாராஜா, மலையாள நம்பூதிரிகளை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தனர். இதற்கெல்லாம் காரணம் அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் தான் என்பது தெரியவந்தது. உடனே இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் மகாராஜா.

    நல்ல மந்திரவாதியை வைத்து பலிகொடுத்து படையல் பூஜை செய்து அவர்களை சாந்தப்படுத்துங்கள் என்று கூறினார்கள் நம்பூதிரிகள். நம்பூதிரிகள் சொன்னபடியே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பூஜை செய்யலாம் என்று முடிவு செய்தனர். உடனே மகாராஜா மலையாள மந்திரவாதிகள் 3 பேரை வரவழைத்தார். கோட்டைக்கு கிழக்கு பக்கத்தில் மண்ணால் ஆன இரண்டு பெண் உருவத்தை பிடித்து வைத்தனர்.

    அதன்பிறகு அங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு, ஒருகோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாக படைத்தனர். இந்த படையல்கள்படைத்த பிறகுதான் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் சாந்தம் அடைந்தனர். காலப்போக்கில் பூஜை நடைபெற்ற இடத்தில் ஒரு கோவிலை கட்டினர். அதுதான் மேலாங்கோட்டில் உள்ள அக்காள் தங்கை கோவில். கோவிலில் வீற்றிருக்கக்கூடிய அக்கா தங்கை இருவரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

    அக்கா செண்பகாதேவி கோவிலில் பலிகள் கிடையாது சைவ படையல் மட்டும் தான் படைக்கப்படுகிறது. தங்கை நீலாதேவி கோவிலில் தான் பலிகள் உண்டு. முதல் பூஜை அக்கா செண்பகாதேவிக்கு தான். பிறகு தங்கை நீலாதேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்பிறகு தங்கை கோவிலான நீலாதேவி என்ற இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

    ஒருதடவை இந்த திருவிழாவைக்காண திருவிதாங்கூர் மகாராணி வந்தார். கோவிலில் நடைபெறக்கூடிய உயிர்பலியை பார்த்துவிட்டு எதற்கு இப்படி உயிர்பலி கொடுக்குறீர்கள். அடுத்த திருவிழாவிற்கு பலி கொடுக்க கூடாது என்று கட்டளையிட்டு விட்டு சென்றார் மகாராணி.

    அன்று இரவு மகாராணிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டது நிற்கவே இல்லை. உடனே மகாராஜா நீலாதேவி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்ட மறுநிமிடமே உதிரப்போக்கு நின்றுவிட்டது. அன்று இரவு நீலாதேவி அம்மன் மகாராணியின் கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் அம்மன் காட்சி கொடுத்தாள். இதை பார்த்ததும் இருகரம் குவித்து வணங்கினார்.

    மறுநாள் காலையில் மகாராஜாவிடம், மகாராணி கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் நீலாதேவி அம்மன் வந்ததை கூறினார். இவ்வாறு காட்சி கொடுத்தது இசக்கி அம்மன் தான். எனவே அவரை இசக்கி அம்மன் என்று அழையுங்கள் என்று கூறுனார். அன்றுமுதல் நீலாதேவி அம்மனை இசக்கி அம்மன் என்று அழைக்கப்பட்டார்.

    ஒரு தடவை தனது குலதெய்வமான பத்மநாபரையும், குருவாயூரப்பனையும் வணங்கிவிட்டு வந்தார். தனது மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான உதிரப்போக்கு நின்றதால் தனது காவல் தெய்வமான அக்கா தங்கை கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்கு வந்தனர்.

    மகாராஜா அக்காள், தங்கை கோவிலில் இருவருக்கும் கையில் காப்பும், காலில் தண்டையும் அணிவித்துவிட்டு தன்னுடைய அரண்மனைக்கு புறப்பட்டார். அரண்மனைக்கு வந்த பிறகு அன்று இரவு மன்னனுடைய கனவில் தோன்றிய செண்பகவல்லி அம்மன் தனக்கு மோதிரம் வேண்டும் என்று கேட்டார். உடனே மகாராஜா மறுநாள் மாலை மோதிரத்தை செய்து கொண்டுவந்து அம்மனுக்கு அணிவித்தார்.

    அன்று இரவு அம்மன் கோவிலில் இசைக்கச்சேரி நடந்தது. இசை கச்சேரியை முடித்துக்கொண்டு மகாராஜாவிடம் பரிசுத்தொகையை வாங்கிக்கொண்டு பாடகர் வில்லு வண்டியில் தனது ஊரான குமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அந்த வில்லு வண்டி பத்மநாதபுரம் கிழக்கு பகுதியில் வரும்போது அங்குள்ள சுமைதாங்கி கல்லில் கேரள பெண்கள் போல இருவர் உடை அணிந்து தலையில் அழகிய கொண்டையிட்டு வந்தனர். அந்த இரு பெண்களும் வில்லு வண்டியை நிறுத்தினார்கள். பாடகரை பார்த்து அரண்மனையில தான் பாடுவீங்களா... இங்கேயும் பாடுங்க என்று கேட்டாங்க நீலாதேவி.

    இதை சற்றும் எதிர்பாராத பாடகர் அப்படியே மவுனமாகி நின்றார். ம்... பாடுங்கள் என்று சத்தமாக கத்தினார் நீலாதேவி. பாடகர் பயத்தி நடுநடுங்கி போனார். இதை பார்த்த செண்பகவல்லி, நீலா இங்கே வா... என்று கூறிக்கொண்டு பாடகர் அருகில் சென்றார்.

    நீலாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க பாடுங்க அப்டீன்னு சொல்ல அந்த பாடகர் அந்த இருவரையும் போற்றி பாடினார். பாடல் பாடி முடிந்தது செண்பகவல்லி அம்மன் விரலில் கிடந்த அழகிய மோதிரத்தை, அதாவது மன்னர் கொடுத்த அந்த மோதிரத்தை பாடகருக்கு கொடுத்தாள். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி அம்மன் கையில் கிடந்த மோதிர விரலில் கிடந்த மோதிரம் காணவில்லை என்று உடனே மன்னரிடம் சொன்னார்.

    மன்னர் கோவமுடன் நான் செய்து போட்ட மோதிரம் காணவில்லையா? மோதிரத்தை களவு செய்தவர்களை என்முன் கொண்டுவாருங்கள். அவனை மாறுகால், மாறு கை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உடனே அரசரின் கட்டளையை முரசுகொட்டி ஆங்காங்க ஊர்மக்களுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தான் பாடகர் அரண்மனைக்கு வந்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். உடனே மன்னர் என்னுடைய காவல் தெய்வம் உன் முன்னால் வந்தார்களா? நீ பாக்கியவான் தான் என்று சொல்லி பாடகருக்கு மேலும் பல பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    அதுமட்டுமில்லாமல் அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் அந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி இந்த கோவிலில் கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

    உண்மையிலேயே தன்னை நம்பி வரும் பக்தர்களை உயர்வாகி வைக்கிறார் மேலாங்கோட்டு அம்மன். இந்த கோவில் எங்க இருக்கு என்று நினைக்கிறீர்களா? நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய சாலையில் தக்கலைக்கு முன்னால் குமாரகோவில் செல்லக்கூடிய பாதையில் தான் மேலாங்கோட்டு அம்மன் கோவில் அமைந்துள்ளது.  நாமும் அந்த அம்மன் கோவிலுக்கு செல்வோம். வழிபடுவோம்.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
    • மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம்-சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் அடர் வனப்பகுதியில் உள்ளது.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் கத்தி போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
    • மதுரை சொக்கநாதர் புட்டுத் திருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-10 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி மாலை 5.38 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.39 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருடன் எழுந்தருளல். மதுரை சொக்கநாதர் புட்டுத் திருவிழா, சுவாமி-அம்பாள் விருஷபாரூடராய் தரிசனம். குறுக்குத்துறை முருகப் பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேைவ.

    நாளைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-நன்மை

    சிம்மம்-களிப்பு

    கன்னி-வெற்றி

    துலாம்- ஊக்கம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- நிறைவு

    மகரம்-சுகம்

    கும்பம்-சாந்தம்

    மீனம்-பயணம்

    • தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர்.
    • 9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் ஒரு சமயம், நெல்லையப்பர் கோவில் முன்பாக வந்து வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர் சாபமிட்டு மானூர் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடம் தாங்கி சித்தரை தடுத்து, பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் கோவில் எனப்படுகிறது.

    தொடர்ந்து சித்தர் மானூர் வந்து சேருகிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே, சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி மற்றும் சண்டி கேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் வைத்து ஜோதிமயமாய் காட்சியளித்து சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர். பின்னர் கருவூர் சித்தரையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வருகின்றனர்.

    இந்நிகழ்வுகள் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவாக மானூர் அம்பலவாணர் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மானூர் வந்து வழிபடுவோருக்கு, முக்தி கிடைக்கும், மூலநோய் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவானது, நெல்லையப்பர் கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து நேற்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதியுலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு இன்று அதிகாலை மானூர் சென்றனர். அங்கு இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சி அளித்தனர். தொடர்ந்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் பரமசிவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன.
    • சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பகவதி அம்மன் கோவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 35 கி.மீ தொலைவில் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கேரளாவில் அமைந்துள்ள கோயில்களில் இது ஒரு முக்கியமான கோவிலாகும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான் செய்கிறார்கள்.

    ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளார். அப்போதெல்லாம் இங்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன்பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபினியாக்கினார்.

    ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

    சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது சிறப்பாகும். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.

    அம்மை நோய் கண்டவர்கள், கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை. கோவில் திருவிழாக்கள்:

    தை மாதம் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை தாழப்புலி என்ற உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிய்ல் சுமங்கலி பெண்கள் எண்ணெய், குங்குமம், மஞ்சள், பூ, இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடிவெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    வெப்பநோய், கண்பார்வை கோளாறு, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல அம்மனை வழிபட்டால் அவை நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் துலாபரம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்களுக்கு குழந்தப்பேறு வேண்டும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

    ×