என் மலர்
அமெரிக்கா
- உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள்- ஹாரிஸ்
- இஸ்ரேலை கமலா ஹாரிஸ் வெறுக்கிறார். அதேபோல் அந்த பிராந்தியத்தில் உள்ள அரபு மக்களையும் வெறுக்கிறார்- டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் குறித்து பேசும்போது டொனால்டு டிரம்ப் "நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் இந்த நிலையை எட்டிருக்காது. கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் அழிந்துவிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்த போது கூட கமலா அவரை சந்திக்கவில்லை." என்றார்.
அதற்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் சொல்வது உண்மையல்லை. இஸ்ரேலுக்கு தனது ஆதரவு" என வலியுறுத்தினார்.
மேலும் கமலா ஹாரிஸ் "அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள். நீங்கள் அவமானம் என அவர்கள் சொல்கிறார்கள்" என நேரடி தாக்குதலை முன்வைத்தார்.
டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் நிர்வாகத் தோல்வியை தொடர்ந்து முன்வைத்து கமலா ஹாரிஸை தாக்குதல் நடத்த தொடங்கினார். இதற்கு "நீங்கள் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை" என கமலா ஹாரிஸ் பதில் அளித்தார்.
உக்ரைன்- ரஷியா போர் குறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் "ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நன்றாகத் தெரியும். அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் பிரச்சனையை தீர்த்து வைப்பேன். போர் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு ஜோ பைடன் அரசு சமாதானத்துக்கு அழைப்பு விடுத்தது. நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். கமலா ஹாரிஸ்தான் மோசமான துணை அதிபர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை ஜோ பைடனைவிட வேகமாக வெளியேற்றி இருப்போம். இதனால் பல அமெரிக்கர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கமாட்டார்கள். கமலா ஹாரிஸ் எந்த நாட்டின் பாரம்பரியத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை" என்றார்.
அதற்கு கமலா ஹாரிஸ் "இவர் எப்போதுமே நிறைய பொய்கள் சொல்வார். உலகில் சர்வாதிகாரிகளை போற்றுகிறவர். ரஷிய அதிபர் புதினை ஆதரிப்பவர். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் நம் அனைவருக்குமே தெரியும்.
டிரம்ப் தான் அதிபரானால் ரஷ்யா- உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறுகிறார். டிரம்ப் அதிபராக இருந்தால், தற்போது புதின் உக்ரைன் தலைநகர் கீவிலேயே குடியேறி இருப்பார். டிரம்ப் இன்னும் பதவியில் இருந்திருந்தால், புதின் போலந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவத்தையும் தாக்க திட்டம் தீட்டி இருப்பார். புதினிடம் டிரம்ப் அடிபணிந்து விடுவார். உங்களை மதிய உணவிற்கு உண்ணும் ஒரு சர்வாதிகாரி என்று அறியப்பட்டவருடன் நட்பாக நீங்கள் நினைக்கிறீர்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஜோபைடனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். தலிபான் என்ற பயங்கரவாத அமைப்போடு டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சித்த ஒருவர். அதிபராக இருக்க விரும்பும் ஒருவர் நம்மிடம் இருப்பது ஒரு சோகம் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் அதிபரையே மக்கள் விரும்புகிறார்கள்" என பதிலடி கொடுத்தார்.
- டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது.
- சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார்- கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது இருவருக்கும் இடையில் பொருளாதாரம், கருக்கலைப்பு மற்றும் குடியேற்றம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
பொருளாதாரம் குறித்த கேள்விக்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளோம். நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. டிரம்பின் தவறான கொள்கைகளால் சீனா ராணுவம் பலமடைந்துள்ளது. சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார். டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்.
அத்துடன் டொனால்டு டிரம்ப் கோடீஸ்வரர்களுக்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவார். ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றியபோது, டிரம்ப் பொருளாதாரத்தை விட்டுவிட்டுச் சென்றார். பொருளாதாரம் குறித்து அவருக்கு எந்த திட்டமும் இல்லை" என்றார்.
பின்னர் குடியேற்றம் குறித்து டொனால்டு டிரம்ப் டார்கெட் செய்தார். அதற்கு கமலா ஹாரிஸ் "நீங்கள் ஏராளமான பொய்கள் மற்றும் குறைகள் போன்ற பழைய கதையை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.
மேலும், "டொனால்டு டிரம்ப் மிகவும் மோசமான வேலைவாய்ப்பின்மையை விட்டுச் சென்றார். நூற்றாண்டின் மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார். சிவில் போருக்குப்பின் நமது ஜனநாயகத்தில் மோசமான தாக்குதலை விட்டுச் சென்றார். டொனால்டு டிரம்பின் குழபத்தை நாங்கள் சுத்தம் செய்தோம்" என்றார்.
ஒரு கட்டத்தில் டொனால் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கமலா ஹாரிஸை தாக்கி பேசினார். "கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட். அவரது தந்தை மார்க்சிஸ்ட்" என்றார். அதற்கு கமலா ஹாரிஸ் தலையை அசைத்து சிரித்துக் கொண்டிருந்தார்.
"கொரோனா தொற்றின்போது சிறந்த வகையில் பணியாற்ற போதுமான கடன் கிடைக்கவில்லை. கொரோனா தொற்றின்போது மிகச் சிறந்த வகையில் பணியாற்றினோம்" என்றார்.
கருக்கலைப்பு தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு தடையை அமல்படுத்துவார்" என்றார். உடனே டிரம்ப் "கமலா ஹாரிஸ் பொய் சொல்கிறார்" என்றார்.
நாடு தழுவிய கருக்கலைப்பு தடைக்கு வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, அத்தகைய சட்டத்தை பாராளுமன்றம நிறைவேற்றாது என்றார்.
குடியேற்றம் தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "இந்த விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார். டொனால்டு டிரம்ப் பேரணிக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஏனென்றால். இந்த பேரணியில் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக விசயங்கள் இருக்கும். "Hannibal Lecter" போன்ற கற்பனை கதாபாத்திரம் பற்றி டொனால்டு டிரம்ப் பேசத் தொடங்கினால், மக்கள் அவரது பேரணியில் இருந்து வெளியேற தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்" என்றார்.
அதற்கு டொனால்டு டிரம்ப் "கமலா ஹாரிஸ் பேரணிக்கு யாரும் வரமாட்டார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய Haitian immigrants ஒகியோவில் நாய்களை சாப்பிட்டது குறித்து பேசத் தொடங்கினார்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு பேசிய அவர், என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயகத்தில் பொதுவாக வேலை செய்யும் அனைத்துக் கருவிகளும் வேலை செய்யாததால், அரசியல் ரீதியாக யாத்திரையை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.
மக்களுடன் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என கட்சி உணர்ந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஆழமாக எதிரொலித்தது.
இந்திய வாக்காளர் உறுதியானவர் மற்றும் அறிவாற்றல் கொண்டவர் என கூறுவது போதுமானதாக இல்லை. ஏனெனில் இந்திய வாக்காளர் முழு கட்டமைப்புகளின் மூலம் அறியப்படுகிறார். எனவே, நம்மிடம் சம நிலை இல்லை என்றால், வாக்காளர் நன்கு அறிந்தவராகவும், நெகிழ்ச்சியுடனும் இருக்கலாம்.
எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். இப்போது அது எங்கே நடந்தது என்று எனக்கு எந்த ஜனநாயகமும் தெரியவில்லை.
நீங்கள் ஒரு உறுதியான வாக்காளரைப் பெறலாம். நீங்கள் இன்னும் பிரசாரங்களை இயக்கவேண்டும். நீங்கள் இன்னும் உரையாடல்களை நடத்த வேண்டும். நீங்கள் இன்னும் கூட்டங்களை நடத்த வேண்டும்.
என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்திய வரலாற்றில் அவதூறு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஒரே நபர் நான்தான்.
தற்போது சிறையில் இருக்கும் ஒரு முதல் மந்திரி நமக்கு இருக்கிறார். எனவே நான் சொல்வது ஒரு வழி. ஆம், இந்திய வாக்காளர் மிக உறுதியானவர், அவர்கள் ஒரு பாறை போல் நிற்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் செய்கிறார்கள். இருப்பினும், இந்திய வாக்காளர் வேலை செய்ய ஒரு கட்டிடக்கலை தேவை, அது இல்லை.
கடந்த 10 ஆண்டாக இந்திய ஜனநாயகம் உடைந்துவிட்டது என என்னால் சொல்ல முடியும். ஆனால் அது ஒரு மேல்நோக்கிய போக்கில் உள்ளது. அது மீண்டும் போராடுகிறது, ஆனால் அது உடைந்தது.
மகாராஷ்டிரா அரசு நம்மிடமிருந்து பறிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே நான் அதை என் கண்களால் பார்த்தேன். நமது சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொக்கி போட்டுவிட்டு திடீரென பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்களாக மாறியதை நான் பார்த்தேன்.
எனவே இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது, மிகவும் மோசமாக பலவீனமடைந்துள்ளது, இப்போது அது மீண்டும் போராடுகிறது, அது மீண்டும் போராடும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
- இருவரும் ஆப்பிள் நிறுவனத் தலைவரான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.
- டிம் குக்குடன் எடுத்த புகைப்படத்தை சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
வாஷிங்டன்:
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருதரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
இதற்கிடையே, உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது நியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுக வெளியீட்டு விழா 'இட்ஸ் க்ளோடைம்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பங்கேற்று ஆப்பிள் நிறுவனத் தலைவரும், தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.
இந்நிலையில், டிம் குக்குடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மறக்கமுடியாத மேஜிகல் அனுபவத்தை கொடுத்த டிம் குக்கிற்கு நன்றி. வியப்பூட்டும் வகையில் எங்களைச் சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், சிறந்த படைப்பாற்றல்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து ராகுல் பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
- சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார்
காங்கிரஸ் எம்.பியும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அடுத்தடுத்து உரை நிகழ்த்தி வரும் ராகுல் காந்தி கூறி வரும் கருத்துக்கள் பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
விர்ஜினியா மாகாணத்தில் ஹெர்ன்டன் பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ராகுல் காந்தி தனது உரையில், இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் [தலைப்பாகை] அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கும் கதா [சீக்கியர்கள் அணியும் வளையம்] அணிந்து கொண்டு குருத்துவாராவிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதற்குமான போராட்டம் நடக்கிறது. இதுவே தற்போது இந்தியாவில் நடக்கும் போராட்டம், இது சீக்கியர்கள் பற்றியானது மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பற்றியது என்று கூறினார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் RP சிங், 1984 இல் டெல்லியில் வைத்து 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் டர்பன்கள் அவிழ்க்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் தாடியும் மழிக்கப்பட்டது. இது அனைத்தும் ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது நடந்தது. சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். ராகுலின் கருத்துக்கு அவர் மீது வழக்கு தொடர்வோம் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறிவிட்டது.
- பா.ஜ.க.வும், பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உள்பட பல பயத்தை பரப்பினர்.
வாஷிங்டன்:
காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் பேசிய போது, பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சித்து பேசினார்.
மேலும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிநாட்டு மண்ணில் ராகுல் காந்தி இந்தியாவை திட்டமிட்டு அவமதிப்பதாக குற்றம் சாட்டியது.
இந்நிலையில் அமெரிக்காவில் வர்ஜீனியாவின் ஹெர்ண்டன் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது, பிரதமர் மோடி, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை மீண்டும் கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறிவிட்டது. பா.ஜ.க.வும், பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உள்பட பல பயத்தை பரப்பினர். ஆனால் அனைத்தும் சில நொடிகளில் மறைந்து விட்டன. நிறைய திட்டமிடல் மற்றும் பணத்துடன் இந்த அச்சத்தை பரப்ப அவர்களுக்கு பல ஆண்டு ஆனது. ஆனால் அதை முடிவுக்கு கொண்டு வர ஒரு நொடி மட்டுமே ஆனது.
பாராளுமன்றத்தில் நான் பிரதமரை நேரில் பார்க்கிறேன். 56 அங்குல மார்பு கொண்ட பிரதமர் மோடியின் எண்ணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். அவர் கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதெல்லாம் போய்விட்டது. அது இப்போது வரலாறாகி விட்டது.
சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை, சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை, சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்ந்தவை, சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட தாழ்ந்தவை என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. நீங்கள் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தாலும் சரி உங்கள் அனைவருக்கும் வரலாறு, பாரம்பரியம், மொழி உள்ளது.
அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை போலவே முக்கியமானது. ஆனால் தமிழ், மணிப்பூரி, மராத்தி, பெங்காலி எல்லாமே தாழ்ந்த மொழிகள் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம்.
இந்தியாவை அவர்கள் புரிந்து கொள்ளாதது தான் இவர்களின் பிரச்சனை. இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள தவறிவிட்டது. இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை நமது அரசியலமைப்பில் தெளிவாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
இந்தியா அல்லது பாரதம் மாநிலங்களில் ஒன்றியம் என்று அது கூறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும்.
- கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும். ஒரு சராசரி அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் பைடன் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகக் கூறியது.
- பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.
- பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி டல்லாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியா ஒரே சிந்தனையை கொண்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. இந்தியா பல சிந்தனைகளை கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் சண்டை.
பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும், அவர்கள் அதிகம் பேசக்கூடாது என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
மக்களவை தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக மற்றும் பிரதமரைக் கண்டு இந்திய மக்கள் பயப்படவில்லை என்பது தெரிந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புரிந்து கொண்டனர்.
எங்கள் அரசியல் அமைப்புகளிலும், கட்சிகளிலும் அன்பு, மரியாதை மற்றும் பணிவு ஆகியவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு மதம், ஒரு சமூகம், ஒரு சாதி , ஒரு மாநிலம் அல்லது ஒரு மொழி பேசுபவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து மனிதர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
எல்லோரும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவர்களின் சாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. ஆனால் உலகில் பல நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. சீனாவில் நிச்சயமாக வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. வியட்நாமில் வேலை வாய்ப்பு பிரச்சனை இல்லை. எனவே வேலையின்மை இல்லாத நாடுகளும் பூமியில் உள்ளன. இன்று உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ராகுலின் பேச்சு பாரதத்திற்கு எதிரானது. இந்தியப் பெண்களுக்கு எதிரானது. அதனால்தான் இந்திய மக்கள் 2014 முதல் 2024 வரை ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் நிராகரித்தனர். 2029 ஆம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.
- முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
- கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்
திமுக ஒருங்கிணைப்புக்குழுவுடன் அமெரிக்காவில் இருந்தபடி காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்றது. அதில் கூறியிருப்பதாவது:-
திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்
திமுக பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கொடிகளைப் பறக்கவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்
அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர், அமெரிக்க வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
- கட்டிடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி முழுவதும் தூசி நிறைந்து காணப்பட்டது.
- கடந்த 4 ஆண்டுகளாக பயனற்றுக் கிடந்த 22 மாடி கட்டிடம் தகர்ப்பு.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் சூறாவளியால் சேதமடைந்து, கடந்த 4 ஆண்டுகளாக பயனற்றுக் கிடந்த 22 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
சில நொடிகளில் கட்டிடம் இடிந்து விழும் காட்சி வைரலாகி வருகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி முழுவதும் தூசி நிறைந்து காணப்பட்டது. மேலும், சுமார் ஐந்து மாடி உயரத்திற்கு இடிந்த குவியல்கள் இருந்தது.
இதற்கு முன்பு கேபிடல் ஒன் டவர் என்று அழைக்கப்பட்ட கட்டிடம், லாரா மற்றும் டெல்டா சூறாவளிகளில் மோசமாக சேதமடைந்தது.
கட்டிடத்தின் உரிமையாளர்கள், அதை சரிசெய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் அதை இடிக்க முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
- சிகாகோவில் நடந்த அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.
சிகாகோ:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
சிகாகோ நகரில் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் 'வேர்களைத் தேடி' திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டைப் பார்க்க நம்முடைய பண்பாட்டை இறுகப் பற்றிக் கொள்ள நம்முடைய சொந்தங்களை அடையாளம் காண வந்த இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது.
அதிலும் ராதிகா என்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நம் சகோதரி, பல ஆண்டுகளாக விட்டுப்போன உறவை மீண்டும் கண்டுபிடித்து நா தழுதழுக்கப் பேசியது என் நெஞ்சிலேயே இருக்கிறது.
தன்னுடைய வள்ளிப் பாட்டியைக் கண்டுபிடிக்க நினைத்த அவர், இப்போது தன் மாமா வீட்டோடு சேர்ந்திருக்கிறார். "அங்கு கலாச்சாரம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சொந்தக்காரர்கள் குறைவு" என சொல்லி அவர் கலங்கியது, உறவுகளைப் பிரிந்து ஏங்கும் அத்தனை அயலகத் தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தது.
ஊரைத் தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என எல்லோரையும் சொந்தமாகக் கருதி இலக்கியம் படைத்த புகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.
அதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்கிறேன்.
இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர் பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதை சாத்தியப்படுத்தியது, நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் சமூக நீதியும் அதற்காகப் பாடுபட்ட தலைவர்களும்தான்.
தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக 'அயலகத் தமிழர் நலவாரியம்' உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ம் நாளை அயலகத் தமிழர் நாளாகக் கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, 'தமிழால் இணைவோம்', 'உலகெங்கும் தமிழ்', 'தமிழ் வெல்லும்' ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம்.
மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், "நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது" என்ற உணர்வை, நம்பிக்கையை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் 'வேர்களைத் தேடி' என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன்: "இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு!"
சாதி-மத வேறுபாடுகளை வீழ்த்தும் வல்லமையும், எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தும் வலிமையும் தமிழுக்கு தான் இருக்கிறது. "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற உணர்வு கொண்டவர்கள் நாம். இந்த எண்ணத்தை விதைத்தது திராவிட இயக்கம். உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு.
மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்குமான வேறுபாட்டையும்-இனப்பற்றுக்கும் இனவெறிக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள் நாம்.
இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள் சூழ்நிலை காரணமாகவும், பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள்; வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள். திறமையால் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடை யாளம் நீங்கள்.
உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.
உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், "நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என சொல்லுங்கள்.
நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிகாகோ துணைத் தூதர் சோம்நாத் கோஷ், அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, ராம்பிரசாத் 37 தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்-ஜோர்டான் தாம்சன் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.






