என் மலர்
பாகிஸ்தான்
- கைபர் பக்துன்வாவில் உள்ள குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
- இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது.
- இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. துல்லியமான இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஆயுதச் சண்டை நடைபெற்றது. பின்னர் இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சண்டை நிறுத்தப்பட்டது.
இந்த சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. ஆனால் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியதாவது:-
சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, என்னுடைய கருத்தின்படி புதிய சண்டைக்கு வாய்ப்பு இல்லை. எனினும், இந்தியா ஆயுத சண்டையை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.
நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால், அதற்காக விருப்பப்படவில்லை. பயங்கரவாதி, சிந்து நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் தொடர்பாக கூட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நாடுகிறது. சிந்து நதி நீர் பிரச்சினையை சஸ்பெண்ட் செய்ய முடியாது.
இவ்வாறு இஷாக் தர் தெரிவித்தார்.
- ஐ.எஸ்.ஐ.- ரா இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.
- இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.
பாகிஸ்தான்- இந்தியா இடையிலான புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தெற்காசியாவில் குறிப்பிடத்தகுந்த வகையில் பயங்கரவாதத்தை குறைக்கும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிலாவல் கூறியதாவது:-
ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் புலனாய்வு). ரா (RAW- இந்திய புலனாய்வு) பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருந்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் போதுமான அளவு பயங்கரவாதம் குறைவதை நம்மால் பார்க்க முடியும. இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது. இந்த முதல்படியை நான் வரவேற்கிறேன். ஆனால், இது முதல்படி மட்டும்தான்.
200 மில்லியன் மக்களின் நீர் விநியோகத்தை துண்டிப்பதாக மிரட்டுவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். இந்த அச்சுறுத்தல், பாகிஸ்தானால் போர் நடவடிக்கையாக கருதப்படும்.
இவ்வாறு பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
- சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனாவை உறவினர்கள் எதிர்த்தனர்.
பாகிஸ்தானில் டிக்டாக் நட்சத்திரம் சனா யூசுப் (17) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ராலைச் சேர்ந்த சனாவுக்கு டிக்டோக்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது வீடியோக்கள் ஏராளமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனா தனது உறவினர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது ஒரு கௌரவக் கொலை என்றும் சந்தேகிக்கப்படுதுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, குவெட்டாவைச் சேர்ந்த ஹிரா என்ற 15 வயது சிறுமி டிக்டோக்கில் தீவிரமாக இருந்ததற்காக அவரது தந்தை மற்றும் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில், சமூக ஊடக நட்சத்திரம் கந்தீல் பலோச் அவரது சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
- கராச்சி சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர்.
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் குழப்பம் ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது கைதிகளில் ஒரு குழுவினர் திடீரென கதவைத் திறந்துகொண்டு தப்பிச்சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர்.
விசாரணையில், 216 கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சுமார் 80 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பியோடிய கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிந்து மாகாண அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கத்தால் சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தனர்.
- குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்கள் மீதான தாக்குதல் புரிந்துகொள்ள முடியாதது.
- போலியோ இன்னும் பரவலாகக் காணப்படும் உலகின் கடைசி இரண்டு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று, போலியோ தடுப்பூசி குழுவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த காவல்துறையினர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தில் தடுப்பூசி போட வந்த குழுவினர் காயமடையவில்லை. உயிரிழந்தவர் பலுசிஸ்தானின் நுஷ்கியில் வசிக்கும் போலீஸ்காரர் அப்துல் வாஹீத் என்றும் அடையாளம் காணப்பட்டது.
இந்த தாக்குதலை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கண்டித்துள்ளார். போலியோ அதிகாரிகளின் தைரியமும் தியாகமும் "நம் குழந்தைகளை இந்த ஊனமுற்ற நோயிலிருந்து காப்பாற்ற நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்கள் மீதான தாக்குதல் புரிந்துகொள்ள முடியாதது என்றும் அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் போலியோ திட்டத்தின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட 45 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி மற்றும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது ஆப்கானிஸ்தானைத் தவிர, போலியோ இன்னும் பரவலாகக் காணப்படும் உலகின் கடைசி இரண்டு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.
- பாகிஸ்தானில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
- இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அங்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது.
பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சார வினியோகம் தடைபட்டது. மோசமான வானிலையால் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின.
இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 2,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவை எச்சரித்துள்ளார்.
பஹலகாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாவதும் பாகிஸ்தான் மீது இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது.
அதன்படி பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை ஆறுகள் மூலம் செல்லும் நதிநீர் நிறுத்தப்படுவதால் அந்நாட்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.
எனவே நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதியில் தண்ணீர் ஓட வில்லை என்றால் ரத்தம் ஓடும் என அந்நாட்டு அரசியல் தலைவர் பிலாவல் பூட்டோ எச்சரிக்கை வைரலானது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அகமது ஷெரீப் சவுத்ரி, இந்தியாவைக் குறிப்பிட்டு, "நீங்கள் எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்" என்று பேசியிருக்கிறார்.
2008 மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார். அதே பாணியில் லெப்டினன்ட் ஜெனரல் பேசிய இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
- பாகிஸ்தானுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான்.
- போராட்டக்காரர்கள் AK-47 துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான். தற்போது இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தால் அங்கும் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிந்து மாகாணத்தில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டிற்கு AK-47 துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சரின் வீட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் ஒருவர் நெடுஞ்சாலையை மறித்ததால் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து மாகாணத்திலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு சிந்து நதியை திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கால்வாய் திட்டத்தை உள்ளூர்வாசிகள் எதிர்த்து வந்தனர். அமைச்சரின் வீட்டிற்கு வெளியே போராட்டக்காரர்கள் AK-47 துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.
- இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கியது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ.) விதிகளின் படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
- மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அமீர் ஹம்சா(வயது 66). அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் லாகூரில் வசித்து வந்த அமீர் ஹம்சா வீட்டில் இருந்தபோது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரது உடம்பில் காயங்கள் இருந்தன. அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைபுல்லா காலித் 3 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது.
அமீர் ஹம்சா, இந்தியாவில் நடந்த தாக்குதல் பின்னணியில் இருந்துள்ளார். இவரும் சைபுல்லாவும் 2005-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டனர்.
அமீர் ஹம்சா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் மற்றும் அப்துல் ரகுமான் மக்கி ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.
- சாலையோரத்தில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
- அந்த வாகனத்தை பள்ளி பஸ் நெருங்கியதும் தொலைவிலிருந்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஸ்தாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.
இந்த பஸ், ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் வந்தபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனத்தைப் பள்ளி பஸ் கடந்து சென்றபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் பள்ளி பஸ் சிக்கியது. இதில் பஸ்சில் இருந்த குழந்தைகள் படுகாயம் அடைந்து அலறினார்கள். உடனே சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர், மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 4 குழந்தைகள் பலியானார்கள். 38 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தில் வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை பள்ளி பஸ் நெருங்கியதும் தொலைவிலிருந்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இது ஒரு தற்கொலைத் தாக்குதல் ஆகும். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டு பிடிக்க தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது என்றார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, அப்பாவி குழந்தைகளை குறிவைக்கும் மிருகங்கள் எந்த கருணையும் பெறத் தகுதியற்றவர்கள் என்று தெரிவித்தார்.






