என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் டுபோலேவ்-95 என்ற ரஷிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக அந்த குண்டுவீச்சு விமானங்கள் வானில் வட்டமிட்டன.

    ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் ரஷிய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.
    • 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது.

    டோக்கியோ:

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

    ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பிளாட்டை வாடகைக்கு விட்டு சுமார் ரூ.2 லட்சம் வரை சம்பாதித்த பிறகு ரூ.24 லட்சத்துக்கு விற்றுள்ளார்.
    • சுமார் 200 வீடுகளை வாங்கி விற்று லாபத்தை கண்டுள்ளார்.

    எத்தனை காலம் ஒருவரிடம், கடின உழைப்பை கொடுத்து குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தும் பதவி உயர்வு இல்லை.. பணி அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கையை தொலைப்பது என முடிவு எடுத்த ஒருவர் தற்போது ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். அது குறித்து பார்ப்போம்....

    ஜப்பானின் ஒசாகாவை சேர்ந்த 38 வயதான ஹயாடோ கவாமுரா. இவர் சிறு வயதில் இருந்தே பலவகையான வீடுகளின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கல்லூரி பருவத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த நேரத்தில் அவருக்கு ரியல் எஸ்டேட் கை கொடுக்கவில்லை.

    அதன்பின், படிப்பை முடித்து வாடகைக்கு வீடு பிடித்து கொடுக்கும் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அங்கேயும் அவரால் நீண்ட காலம் பணிபுரிய முடியவில்லை. நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து வேறொருக்கு வேலை செய்வதில் உள்ள ஆபத்தையும், பதவி உயர்வு என்பது திறனைப் பற்றியது அல்ல, மேலதிகாரி உங்களை விரும்புகிறாரா என்பதைப் பற்றியது என்பதை உணர்ந்துள்ளார் கவாமுரா.

    இதை தொடர்ந்து ரூ.10 லட்சத்துக்கு ஒரு பிளாட்டை வாங்கியுள்ளார். இதன்பின் அந்த பிளாட்டை வாடகைக்கு விட்டு சுமார் ரூ.2 லட்சம் வரை சம்பாதித்த பிறகு ரூ.24 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

    இதையடுத்து தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாழடைந்த வீடுகளை குறிவைத்து குறைவான விலைக்கு வாங்கி சீரமைத்து அதன்பின் விற்று லாபத்தை கண்டுள்ளார். அதன்பின் சொந்த ரியஸ் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி தற்போது வரை சேதமடைந்த சுமார் 200 வீடுகளை வாங்கி விற்று லாபத்தை கண்டுள்ளார். இதன் மூலம் அவர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.7.72 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    நான் ஒரே இரவில் பணக்காரர் ஆகணும் என்று எதிர்பார்க்கவில்லை. ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பொறுமை மற்றும் கவனம் மற்றும் ஒரு நீண்ட கால விளையாட்டு என்று கவாமுரா கூறினார்.

    இதுதொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயனர்கள் பாராட்டி வருகின்றனர். பயனர் ஒருவர் கூறுகையில், அவர் மிகவும் அற்புதமானவர்! என்றும் தனித்துவமான முதலீட்டு நுண்ணறிவு, துல்லியமான நிதி கட்டுப்பாடு, வலுவான தொடர்புகள் மற்றும் சரியான அதிர்ஷ்டம் அனைத்தும் அவசியம்" என்று மற்றொருவர் கூறினார்.

    • ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள கைஷூ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 37 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இதனை ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தென் மேற்கு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    • அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
    • தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    டோக்கியோ:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2023-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன. அதேபோல் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.

    அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷியாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    • உலகின் மிக வயதான மூதாட்டியாக அறியப்பட்டவர் டூமிகோ இடூகா.
    • ஜப்பானைச் சேர்ந்த இடூகா 116-வது வயதில் காலமானார்.

    டோக்கியோ:

    உலகின் வயதான பெண் என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அங்கீகரிக்கப்பட்டார்.

    இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டூமிகோ இடூகா தற்போது உயிரிழந்துள்ளார் என ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரியோசுகே வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகிலுள்ள அஷியாவில் இடூகா வசித்து வந்தார். அவருக்கு 4 வாரிசுகள் மற்றும் 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2019 முதல் நர்சிங் ஹோமில் தங்கி இருந்த அவர், கடந்த மாதம் 29-ம் தேதி மரணமடைந்தார்.

    ஆஷியாவிற்கு அருகிலுள்ள ஒசாகா வணிக மையத்தில், அமெரிக்காவில் போர்டு மாடல் டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் 1908, மே 23-ல் பிறந்தார்.

    உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் இடூகா வாழ்ந்தார். அதற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். தனது வயதான காலத்தில் வாழைப்பழங்கள், பால் போன்ற குளிர்பானமான கால்பிஸை ரசித்து குடித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
    • மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.

    தனியார் நிறுவனத்தின் ராக்கெட் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், ஸ்பேஸ் ஒன் நிறுவனம் உருவாக்கியுள்ள கெய்ரோஸ்-2 ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா மலைப்பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது.

    அந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் சிறிது நேரத்தில் கைவிடப்பட்டது.

    ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பாதுகாப்பு கருதி அந்த ராக்கெட்டை வெடிக்கச் செய்தோம் என ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் 13-ம் தேதி ஏவப்பட்ட ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கெய்ரோஸ்-1 ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
    • ஜப்பான் மக்கள் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருகின்றனர்.

    உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.

    ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.

    குறிப்பாக ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஜப்பானில் 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது.

    ஆகவே ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

    2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.

    • ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
    • சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால், இல்லை.

    இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வாஷிங் மெஷின்.

    ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வாஷிங் மெஷினை கண்டுபிடித்து 'மிராய் நிங்கன் சென்டகுகி' என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு எதிர்காலத்தின் மனித வாஷிங் மெஷின் என்பது பொருளாகும்.

     

    இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.

    இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.

    இதில் பிளாஸ்டிக் 'மசாஜ் பந்துகள்' அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

     

    மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.

    இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.

    • 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
    • 1995 ஆம் ஆண்டு லவ் லெட்டர் திரைப்படம் அவருக்கு புகழை தேடித் தந்தது

    ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

    ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார்.

    அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது.

     

    யார் இந்த மிஹோ நகயாமா?

    ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு 'மைடோ ஒசவாகசே ஷிமாசு' என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.

    அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.

    1995 ஆம் ஆண்டு அவர் நடித்த 'லவ் லெட்டர்' திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார்.

     

    1997 ஆம் ஆண்டு 'டோக்கியோ வெதர்' படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார். 

    • 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
    • யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.

    ஜப்பானில் சுமார் 1000 வீடுகள் வரை அத்துமீறி நுழைந்த குற்றவாளி ஒருவர் அதற்காகக் கூறியுள்ள காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.

    விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

     

    "மற்றவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது என்னுடைய ஒரு பொழுதுபோக்காகும், நான் அதை 1,000 தடவைகளுக்கு மேல் செய்துள்ளேன், யாராவது என்னைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.

    அந்த உணர்வினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், இது என் மன அழுத்தத்தைக் குறைக்கிறது" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அந்நாட்டின் மைனிச்சி ஷிம்பன் [Mainichi Shimbun] செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இணையத்திலும் இது பேசுபொருளாகி வருகிறது.

    • சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

    டோக்கியோ:

    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் இந்த பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பாதிப்பில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ×