என் மலர்tooltip icon

    ஈரான்

    • போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த செவ்வாயன்று குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

    டெஹ்ரான்:

    ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த போராட்டத்தின்போது துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை செய்தி ஏஜென்சி உறுதி செய்துள்ளது.

    இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் டிசம்பர் மாதம் குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. கடந்த செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

    • ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.
    • ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

    இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

    நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

    தரானே அலிதூஸ்தி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு தரானே அலிதூஸ்தி விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு பூங்கொத்து ஆதரவாளர்கள் கொடுத்து வரவேற்றனர்.

    • ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.
    • அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

    அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

    இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது.

    நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
    • போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக புகார்.

    டெஹ்ரான்:

    ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 23 வயதான மொஹ்சென் ஷெகாரி மற்றும் மஜித்ரேசா ரஹ்னாவார்ட் ஆகியோருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    மேலும் போராட்ட வழக்கில் சிக்கிய ஒரு மருத்துவர், ராப் இசை கலைஞர் மற்றும் ஒரு கால்பந்து வீரர் உட்பட இருபது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பவும், நாடு தழுவிய போராட்டங்களை கட்டுப்படுத்தவும் ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக ஈரான் மனித உரிமை குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி குற்றம் சாட்டியுள்ளார்.

    • தனிநபர்களை கடத்தி விசாரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    தெக்ரான்:

    இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    • ஹிஜாப் போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.
    • போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்.

    இசே:

    ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.

    இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின. முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூறிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.காவல்துறையினர் மீது அவர்களை கற்களை வீசினர்.

    போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மாதம் ஒரு புனித ஸ்தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 9 மாதங்கள் ஆகின்றன.
    • ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

    டெஹ்ரான்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 9 மாதங்களாகின்றன. கடந்த சில வாரங்களாக ரஷியா வெடிகுண்டு டிரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்களில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய மின்நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    ரஷியா தாக்குதலுக்கு பயன்படுத்தி வரும் டிரோன்கள் ஈரானால் ரஷியாவுக்கு வழங்கப்பட்டவை என அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் ஈரான், ரஷியாவுக்கு தொடர்ந்து டிரோன்களை வழங்கி வருவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தது.

    இந்நிலையில், ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் கூறுகையில், ரஷியாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிரோன்களை வழங்கினோம். ஆனால் உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே அவற்றை வழங்கினோம். ரஷியா உக்ரைனில் ஈரான் டிரோன்களை பயன்படுத்தியதற்கான ஏதேனும் ஆவணங்கள் அவர்களிடம் (உக்ரைன்) இருந்தால், அவர்கள் அவற்றை எங்களிடம் வழங்க வேண்டும். உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரான் டிரோன்களை ரஷியா பயன்படுத்தியது என்பது நிரூபிக்கப்பட்டால் இந்த விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.

    • ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
    • கடந்த மாதம் 16-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி மர்மமாக இறந்தார்.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி மர்மமாக இறந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. அதன்பிறகு ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது.

    இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், மாஷா அமினி இறந்து 40 நாள் ஆனதையொட்டி அவரது சொந்த ஊரில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் இறந்துவிட்டனர்.

    இச்சம்பவத்துக்கு அந்நாட்டு மனித உரிமை துறை கடும் கண்டனம் தெரிவித்தது. சட்டவிரோதமாக பொறுப்பற்ற முறையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

    • துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • துப்பாக்கி சூடு நடத்திய இருவர் கைது, ஒருவன் தப்பியோட்டம்.

    தெக்ரான்:

    ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று, ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் பதிலடியை திரும்ப பெறுவார்கள் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமவாசிகள் சிலர் ஹாஜியை அழைத்துச் சென்று குளிக்க வைத்தனர்.
    • "தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமவு ஹாஜி" என்ற தலைப்பில் சிறு ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது.

    உலகின் அழுக்கு மனிதராக கருதப்பட்ட ஈரானைச் சேர்ந்த அமவு ஹாஜி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்தார். 94 வயதான அவர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல், தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் உலகின் அழுக்கு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

    ஈரான் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் வசித்து வந்த ஹாஜி, உடல் நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தால் பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமவாசிகள் சிலர் ஹாஜியை அழைத்துச் சென்று குளிக்க வைத்தனர். இந்நிலையில், ஹாஜி காலமானார்.

    கடந்த 2013ம் ஆண்டில் "தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமவு ஹாஜி" என்ற தலைப்பில் சிறு ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் சிறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • இதில் சிக்கி 4 பேர் பலியாகினர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    டெஹ்ரான்:

    ஈரான் தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்கிற இடத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறையில் அரசு எதிர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

    இந்த சிறையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது அங்குள்ள துணி கிடங்கில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

    கைதிகள் இடையிலான மோதல், அதை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தால் சிறையில் பெரும் பதற்றம் உருவானது. சிறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்நிலையில், இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

    • ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது.

    தெக்ரான்:

    ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 17-ந்தேதி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்து உள்ளது.

    பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார்-போரட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இது வரை 185 பேர் பலியாகி விட்டதாகவும். இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. ஆனால் இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

    ×