என் மலர்
உலகம்
- போரை தொடங்கியது நாங்கள் அல்ல, ஆனால் முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
- நான்கு முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார்
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது.
இந்த போர் நேரத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
- சனிக்கிழமை நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
+3
- காசா எல்லையில் அமைந்துள்ளதால் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாக்கப்பட்டது
- பொதுமக்கள் வீடுகளிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.
காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.
கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன.
இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.
இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் ரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது
- காசா பகுதியில் 900 பேர் உயிரிழந்துள்ளனர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 4-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
- 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.
- 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் ஏற்பட்டு வரும் தொடர் சண்டையில் 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.
இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என ராணுவம் அனுமதித்து உள்ளது.
இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
- காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
ஜெருசலேம்:
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
இந்தநிலையில், காசா மருத்துவமனைகளில் 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதம் என தகவல் வெளியாகி உள்ளது.
- பிக் பாப்'ஸ் அங்காடியில் மதுபானம் விற்பனையாகிறது
- கரன் விசாரிக்க தொடங்கியதும் அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சுமார் 30 கிலொமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கொவினா (West Covina) பகுதி.
இதன் மேற்கு ப்யுன்டே நிழற்சாலையில் (West Puente Avenue) "பிக் பாப்'ஸ் லிக்கர்ஸ் அண்ட் மார்கெட்" எனும் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பலவிதமான மக்களுக்கு தேவையான பொருட்களுடன் பல மதுபானங்களும் விற்பனையாகிறது.
இங்கு இரு தினங்களுக்கு முன் மாலை 09:00 மணியளவில் 25 வயதிற்கு உட்பட்ட 2 ஆண்கள் பொருட்களை வாங்குவது போல் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை பிறர் கவனிக்காத வகையில் திருட தொடங்கினர்.
அங்கு மேற்பார்வையில் இருந்த கரன் சிங் (Karan Singh) எனும் 34 வயதான இந்தியர், இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கினார். அவர்கள் திருடுவதை உறுதி செய்து கொண்ட கரன், அவர்களை இடைமறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.
இதில் அந்த இருவரும் கரனை திடீரென துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதும் அந்த இருவரும் ஒரு காரில் தப்பி சென்றனர்.
அதிர்ச்சியடைந்த அந்த அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அந்நாட்டு அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தனர். விரைந்து வந்த சேவை பணியாளர்கள் கரனை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த அங்காடியின் உரிமையாளரின் உறவினரான கரன், கடந்த ஒரு வருடம் முன்பு அமெரிக்கா வந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயது மகனும் இந்தியாவில் உள்ளனர். மனைவியையும் மகனையும் அமெரிக்காவிற்கு அழைத்து வர பணம் சேமிக்க கரன் தீவிரமாக முயன்று வந்தார்.
கரனை கொன்றவர்களை பிடிக்க மேற்கு கொவினா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- இஸ்ரேல் ஹமாஸ் போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது
- காசா டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் மட்டுமே இருக்கும்
"ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்" (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவியும், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் மூலமாகவும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக சிறை பிடித்தது.
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதி காசா (Gaza). ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா, இந்திய தலைநகர் டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் இருக்கும். இங்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
காசாவில் இரண்டு இடங்களில் மட்டுமே எல்லையை கடக்கும் இடங்கள் உள்ளன. இரண்டு திசைகளில் இஸ்ரேலும், ஒரு திசையில் எகிப்தும், மற்றொரு திசையில் மத்திய தரைகடலும் காசாவை சூழ்ந்துள்ளது. அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்வதை இஸ்ரேல் தீவிரமாக கண்காணிக்கிறது.
ஆனால் நிலம், நீர் மற்றும் வான்வழியை மட்டுமே இஸ்ரேல் கண்காணிப்பதால், அதை தாண்டி பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து அவ்வழியில் ராணுவ ஆயுதங்களும், தளவாடங்களும் காசாவிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆயுத கடத்தலில் ஈடுபடுபவர்கள் மத்திய தரை கடல் பகுதியின் கரையோரங்களில் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேல் கண்காணிப்பை தாண்டி காசாவிற்கு உள்ளே கொண்டு சென்றுள்ளனர். ஈரான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபாஹர்-3 (Fajr-3) ஃபாஹர்-5 (Fajr-5) ராக்கெட்டுகள் மற்றும் எம்-302 ராக்கெட்டுகள், ஈரானிலிருந்தும் சிரியாவிலிருந்தும் இந்த சுரங்க பாதைகள் வழியே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் போது அமெரிக்கா தான் பயன்படுத்திய ஆயுதங்களை அங்கேயே விட்டுச்சென்றது. அவை அந்நாட்டின் தலிபான் அமைப்பினரின் உதவியுடன் ஹமாஸிற்கு இதே வழியாக வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
- தன்னாட்சி கோரி 1960களில் இருந்தே போராட்டங்கள் நடைபெறுகின்றன
- தாக்குதலில் 11 குழந்தைகளும் உயிரிழந்தனர்; 56 பேர் காயமடைந்தனர்
கடந்த 2021ல் மியான்மரில் நடைபெற்ற ராணுவ புரட்சியின் விளைவாக அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது.
மியான்மரில் தன்னாட்சி கோரி பல வருடங்களாக போராடி வரும் அமைப்பு, கசின் சுதந்திர குழு (Kachin Independence Organization). இது மியான்மர் (முன்னர் பர்மா) அரசை எதிர்த்து 1960களில் இருந்தே போராடி வருகிறது. போராடங்கள் 2011க்கு பிறகு தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு மியான்மரில் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள லைசா (Laiza) நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் (Mong Lai Khet) முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தது. இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்; 56 பேர் காயமடந்தனர். காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என கசின் சுதந்திர குழு அறிவித்துள்ளது. கசின் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுதந்திர குழுவிற்கு அளித்து வரும் ஆதரவை விரும்பாத மியான்மர் ராணுவம் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"இத்தாக்குதல் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான ஒரு போர் குற்றம்", என முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலின் பின்னணியில் ராணுவம் இருப்பதை திட்டவட்டமாக மறுத்த ஆட்சியில் இருக்கும் "ஜன்தா" ராணுவ அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜா மின் டுன் (Zaw Min Tun), "அப்பகுதியில் ராணுவத்தினருக்கு எந்த செயல்பாடும் எப்போதும் இருந்ததில்லை. போராடும் அமைப்பினர் வெடிப்பொருட்களை தேக்கி வைத்ததால் அதில் விபத்து ஏற்பட்டு இது நிகழ்ந்திருக்கலாம்," என தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகளின் சபை தனது ஆழ்ந்த கவலையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளது.
- சீன தூதரகத்துக்குள் காருடன் புகுந்த நபர் யார்? இது தாக்குதலா? விபத்தா? என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
- சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சான்பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சீன துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சீன தூதரகத்தின் நுழைவாயிலில் வாலிபர் ஒருவர் காரில் வேகமாக மோதினார்.
இதில் அந்த கார், சீன தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சீன தூதரகத்துக்குள் சென்று காருடன் மோதிய நபரை பிடிக்க முயன்றனர்.
அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் அந்த நபர் காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சீன தூதரகத்துக்குள் காருடன் புகுந்த நபர் யார்? இது தாக்குதலா? விபத்தா? என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கேத்ரின் விண்டர்ஸ் கூறும்போது, "சீன தூதரக விசா அலுவலகத்துக்குள் காருடன் மோதிய நபரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த போது, தூதரக நுழைவாயிலில் கார் ஒன்று மோதி இருந்தது. அங்கு சந்தேக நபருடன் தொடர்பு கொள்ள முயன்ற போது துப்பாக்கி சூடு நடந்தது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரில் தூதரகத்தின் ஆவண மண்டபத்திற்குள் நுழைந்தார். இது அங்கிருந்த ஊழியர்கள், மக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்று தெரிவித்தது.
- சுமார் 1000 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
- இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன
கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் நடத்தியது.
சுமார் 1000 இஸ்ரேலிய உயிர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடி தாக்குதலை உடனடியாக துவங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஈரான், கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன.
போராடும் இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த 34 மாணவ அமைப்புகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அறிக்கை வெளியிட்டன. "பல வருடங்களாக இஸ்ரேல் கடைபிடிக்கும் நிறவெறி கொள்கையே தற்போதைய போருக்கு காரணம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழக தலைமை பொறுப்பில் உள்ள க்ளாடின் கே (Claudine Gay) மற்றும் டீன் பொறுப்பில் உள்ள 15 பேருக்கும் மேற்பட்டவர்கள், நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கேட்டு எங்கள் இதயம் நொறுங்குகிறது" என தெரிவித்திருந்தனர். ஆனால், மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து எந்த வாக்கியமும் அதில் இடம் பெறாதது விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.






