என் மலர்tooltip icon

    உலகம்

    • அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
    • பரிசு தொகையை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், இப்ராஹிம் ஹைதேரி மீன்பிடி கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்து வரும் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.

    கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

    சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

    பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    • இந்த தீபாவளி விருந்தில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
    • இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.

    இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

    • சிங்கங்கள் கூட்டமாக நடந்து சென்ற போது ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் குடிப்பதை பார்க்கிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.

    சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பயனர்கள் அதிகம் ரசிக்கிறார்கள். குறிப்பாக விலங்குகளின் சண்டை காட்சிகள் பயனர்களிடம் அதிக லைக்குகளை பெறுகிறது. அந்த வகையில் 20 சிங்கங்களுக்கு எதிராக ஒரு ஒட்டகச்சிவிங்கி கடுமையாக சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டேவிட் ஷெர் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ காட்சியில், சிங்கங்கள் கூட்டமாக நடந்து சென்ற போது ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் குடிப்பதை பார்க்கிறது. பின்னர் அந்த சிங்கங்கள் கூட்டமாக ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடும் நோக்கில் மறைவிடத்தில் இருந்து வெளியே குதிக்கின்றன. சிங்கங்களின் சத்தம் கேட்டு திடுக்கிட்ட ஒட்டகச்சிவிங்கி பயத்தில் தலையை உயர்த்தி கொண்டே ஓடுகிறது. அதனை சிங்கங்கள் பயங்கரமாக துரத்துகின்றன. பின்னர் சிங்கங்கள் ஒட்டகச்சிவிங்கியை நெருங்கிய போது ஒட்டகச்சிவிங்கி அந்த சிங்கங்களுடன் கடுமையாக சண்டை போடும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.

    • தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
    • இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் ஸ்வீட் கடைகளில் பல்வேறு புதிய ரகங்களில் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை களை கட்டி உள்ளது.

    இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கனடாவில் உள்ள பிரபல காபி ஹவுசான டிம் ஹார்டன்சில் தீபாவளியையொட்டி புதிய வகை டோனட்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இதில் தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ரூ.185 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இந்த புதிய மெனுவின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், பயனர்கள் பலரும் அதன் சுவை குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இதனால் இந்த இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    • இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
    • வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்
    • முழு கண்ணையும் மாற்றி பொருத்துவது இதுவரை நடைபெற்றதில்லை

    கடந்த 2021ல், அமெரிக்காவில் வசித்து வந்த 46 வயதான மின்சார துறை தொழிலாளி ஆரோன் ஜேம்ஸ் ஒரு விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக அவர் முகம் ஒரு மின்சாரம் பாயும் வயரில் படும்படி ஆனதால், 7,200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்.

    இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முழு இடது கண்ணுமே பறி போனது. இது மட்டுமின்றி இடது முழங்கை, மூக்கு, உதடு, முன்பற்கள், இடது கன்னம், தாடை ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது.

    இதையடுத்து, மே 27 அன்று நியூயார்க் லேன்கோன் ஹெல்த் எனும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு புகழ் பெற்ற மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஆரோனுக்கு பலனளிக்காது என்பதால் "முழு கண் மாற்று அறுவை சிகிச்சை" அவருக்கு தேவைப்பட்டது. ஆனால், ஒருவர் இழந்த முழு கண்ணையும் மீண்டும் வேறொரு கொடையாளியிடம் பெற்றாலும் அதனை பொருத்துவது மருத்துவ உலகில் இதுவரை ஒரு மிக பெரிய சவாலாக இருந்து வந்தது.

    டாக்டர். எடுவர்டோ ரோட்ரிகஸ் (Dr. Eduardo Rodriguez) தலைமையில் ஒரு மருத்துவர் குழு இந்த சவாலான முயற்சியில் இறங்கியது. அவரது மேற்பார்வையில் சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் ஆரோனுக்கு முழு கண்ணும் வேறொரு கொடையாளியிடம் இருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சையில் முப்பரிமாண அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.

    தற்போது மாற்றப்பட்ட இடது கண்ணில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், விரைவில் ஆரோனுக்கு கண் பார்வை கிட்டும் என நம்புவதாகவும் டாக்டர். ரோட்ரிகஸ் தெரிவித்தார்.

    விபத்து மற்றும் பல்வேறு இதர காரணங்களால் கண் பார்வை இழந்தவர்களுக்கு இது ஒரு நற்செய்தி என பல்வேறு பிரபல கண் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்தால், அது சரணடைவதாகும்.
    • ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவை இரண்டு பகுதிகளாக பிரித்து, வடக்கு காசாவில் தரைவழி தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.

    காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

    ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து வரும்நிலையில், போர்நிறுத்தம் அவசியம் என உலகளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கிடைக்கும் வகையிலும், காசாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையிலும் போர் இடைநிறுத்தம் தேவை என ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் இதை ஏற்கவில்லை.

    நெருக்கடி அதிகமாக நேதன்யாகுவிடம் ஜோ பைடன் போனில் பேசினார். அப்போது நேதன்யாகு தினசரி நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று கூறியதாவது:-

    நாங்கள் காசாவில் அரசு அமைக்க முற்படவில்லை. மீண்டும் ஆக்கிரமிக்க முற்படவில்லை. யாரையும் இடமாற்றம் செய்ய முற்படவில்லை. காசாவில் பொதுமக்கள் அரசாங்கம் ஒன்றை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அங்கும், எங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த முற்படுவோம்.

    இஸ்ரேல் ராணுவம் மிகவும் சிறந்த வகையில் செயலாற்றி வருகிறது. ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் என்பது சரண் அடைவது போன்ற அர்த்தமாகும். ராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு காலவரையறை இல்லை. எவ்வளவு நாட்கள் நீண்டாலும், அதை நாங்கள் செய்து முடிப்போம்.

    காசாவுக்குள் மீண்டும் நுழைந்து கொலையாளிகளை கொல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது போன்றதை தடுக்க முடியும்.

    • லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார்.
    • இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்து சதி வேலையில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர்.

    ஆனால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்று வருகிறார்கள்.

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் அக்ரம் கான். இவர் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பஜீர் மாவட்டத்தில் அக்ரம் கான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை.

    தீவிரவாதத்திற்கு எதிராக இவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்தார். லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார். இவரை அந்த அமைப்பில் தெரியாதவரே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்துக்கு அக்ரம் கான் தீவிர ஆட் சேர்ப்பு பணியில் ஈடுபட்டார். பல இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை சேர்த்தார்.

    அந்த படையின் தளபதியாகவும் இருந்தார். பல்வேறு தீவிரவாத இயக்கத்துடன் இவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. இவர் சுட்டுக் கொல்லப்பட்டது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதன்கோட் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாகித் லத்தீப் என்பவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரை தொடர்ந்து நேற்று அக்ரம்கான் மர்ம நபர்களால் கொல்லப்பட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பேரணிகளில் சில இடங்களில் காவல் கண்காணிப்பை மீறி வன்முறை நடந்தது
    • காசா மக்களுக்கு உதவி கேட்பதாக தெரியவில்லை என சுயெல்லா குற்றம் சாட்டினார்

    இங்கிலாந்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மக்களில் பலர் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பை ஆதரித்து இங்கிலாந்தில் பேரணிகள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன. தொடர்ந்து, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஹமாஸ் ஆதரவினர் காவல்துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    யூதர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு பேரணிகள் காவல்துறைக்கு சவாலாக இல்லை. சமூக ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வது சிக்கலை உண்டாக்குகிறது. தொடக்கம் முதலே இந்த போராட்டங்கள் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளால் மட்டும் அல்ல; அவர்கள் கையில் கொண்டு செல்லும் பதாகைகள் மற்றும் ஆங்காங்கு அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளிலும், அவர்கள் எழுப்பும் கோஷங்களிலும், தகாத வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் விட முடியாது. இது காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கேட்கும் கோஷங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சிலர், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எழுப்பும் கோஷங்கள். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கருத்து நிலவ தொடங்கியுள்ளது. தேச பற்றுடன் போராடுபவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறையினர் சட்டத்தை மீறுபவர்களிடம் ஏன் அந்த கண்டிப்பு காட்டவில்லை? இது ஒரு இரட்டை நிலைப்பாடு. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

    இவ்வாறு சுயெல்லா தெரிவித்தார்.

    இவரது கருத்து இடதுசாரிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டி சுயெல்லாவை, பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் இங்கிலாந்தில் பலமாக எழுந்துள்ளன.

    • ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.
    • பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். தரைப்படையினர் காசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.

    காசா நகர் மீது இஸ்ரேல் படையினர் மும்முனை தாக்குதல் நடத்தி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறி வைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதில் ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருவதால் போர் ஒரு மாதத்தையும் கடந்து தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் மனிதாபிமான உதவிகள் அளிக்கும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியது. ஆனாலும் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. ஹமாஸ் பிடியில் இருக்கும் 239 பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வருதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.


    அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜோபைடன் காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த பகுதியில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தினமும் 4 மணி நேரம் காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது.

    அதன்படி காசாவில் 4 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து போர் நடந்து வரும் வடக்கு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். நடந்தும், கழுதை வண்டிகள் மூலமாகவும் அவர்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் சில மணி நேரங்களில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நாங்கள் விரும்புகிறோம். மனிதாபிமான உதவிகளை நாங்கள் ஊக்குவித்து அதை செயல்படுத்தி வருகிறோம். இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் காசவை ஆள முயலவில்லை. பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை. சிறந்த எதிர்காலத்தை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் காசாவில் உள்ள 3 பெரிய ஆஸ்பத்திரிகள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    • படகு மூலம் வருபவர்கள் இனிமேல் அடைக்கலாம் கோர முடியாது.
    • விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இந்தியா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் பட்டியலில் சேர்க்க இருக்கிறது. "சட்டவிரோாத குடியேற்றம் சட்டம் 2023"-ன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

    சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைந்து, அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

    • வடக்கு காசாவில் மருத்துவமனை, ஐ.நா. முகாம்கள்தான் பாதுகாப்பு என பாலஸ்தீனர்கள் அங்கு சென்று தங்கியுள்ளனர்
    • மக்கள் வெளியேறுவதற்கான தினந்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் என அமெரிக்கா தகவல்.

    காசாவை இரண்டாக பிரித்து, வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதல் காரணமாக அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எப்படியாவது உலக நாடுகள் போர் நிறுத்தத்தை கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசாவிலேயே தங்கியுள்ளனர். ஆனால், தெற்கு காசாவிற்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என உணர்ந்த பெரும்பாலான பாலஸ்தீன மக்கள், தெற்கு காசாவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நடைபயணமாக தெற்கு காசாவை சென்றடைந்து வருகிறார்கள்.

    வடக்கு காசாவில் உள்ளவர்கள் இனிமேல் வீடுகளில் தங்கியிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கருதி மருத்துவமனைகள், ஐ.நா. அமைத்துள்ள முகாம்களுக்கு இடம்பெற முடிவு செய்துள்ளனர். அதன்படி காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    ஆனால் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதால் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக, அங்கிருந்து தெற்கு காசாவிற்கு சென்றுள்ள மூன்று பேர் தெரிவித்துள்ளனர்.

    இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும், மருத்துவமனை அறைகள், அறுவை சிகிச்சை செய்யும் ஆபரேசன் தியேட்டர்களில் கூட மக்கள் தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலர் மருத்துவமனை அமைந்துள்ள தெருவில் தூங்குகிறார்கள்.

    இவர்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவிலான உணவே கொடுக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த மூன்று பேரும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இஸ்ரேல் தினமும் நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் அதை ஏற்றுக்கொண்டதாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால் பாலஸ்தீன மக்கள் அஞ்சியபடியே வாழ்ந்து வரும் அவலை நிலை நீடித்து வருகிறது.

    காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்யவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×