என் மலர்tooltip icon

    உலகம்

    • செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் அமைப்பு, ஹானஸ்ட்ரிபோர்டிங்
    • பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் இது என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தி 1400க்கும் மேல் இஸ்ரேலியர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இத்தாக்குதலின் போது நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் வலைதளங்களில் வெளிவந்தன.

    இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.

    ராய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிக்கையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது:

    அக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

    இதுவரை ராய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 63 வயதான தருண் குலாடி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
    • தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு குலாடி முன்னுரிமை அளிக்கிறார்

    அடுத்த வருடம் மே 2 அன்று, இங்கிலாந்து தலைநகரம் லண்டன் நகரில் அந்நகர மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இங்கிலாந்தின் லேபர் கட்சியின் சார்பில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாதிக் கான் தற்போது மேயர் பதவியில் உள்ளார்.

    அடுத்த வருட தேர்தலில் போட்டியிட விரும்புவதாக 20 வருடங்களுக்கு மேல் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 63 வயதாகும் தொழிலதிபர் தருண் குலாடி அறிவித்துள்ளார்.

    தனது விருப்பத்தை கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த போதே அறிவித்திருந்த குலாடி, லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், லண்டன் உலகின் முன்னணி நகரமாக தொடர்வதை உறுதி செய்யவும், அங்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேயர் தேர்தலில் வென்றால் தான் செயல்படுத்த விரும்புவதாக குலாடி பல திட்டங்களை அறிவித்தார்.

    அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    லண்டனில் வாழ்கின்ற குறைந்த வருமான வசதி மற்றும் நடுத்தர வசதி மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரப்படும். லண்டன் நகரில் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து வாழ்வதால் இங்கு வாழும் மக்களின் தாயக நாடுகளுக்கு இடையே ஒரு ஆக்கபூர்வமான இணைப்பு உருவாக்கப்படும். நகர வளர்ச்சிக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்படும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் "தூய்மை பகுதி கட்டுப்பாடுகள்", "குறைவான வாகன போக்குவரத்து பகுதி", வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகள் ஆகியவை நீக்கப்படும். குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் அதிகளவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சிக்கன விலையில் வீட்டுவசதி மக்களுக்கு கிடைக்க செய்வது முக்கியமாக பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு குலாடி அறிவித்துள்ளார்.

    குலாடியை தவிர சூசன் ஹில், ராப் ப்ளாக்கி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

    • கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.
    • ‘மெனு கார்டு’ 60 ஆயிரம் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.61 லட்சம்) ஏலம் விடப்படுகிறது.

    உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலத்திற்கு வர உள்ளது. இதுதொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் கூறுகையில், கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.

    இது அவரது குடும்பத்தினர் உள்பட யாருக்கும் தெரியாது. 2017-ம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்த்தனர். அப்போது தான் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் என்றார்.

    விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த மெனு கார்டில் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த 'மெனு கார்டு' 60 ஆயிரம் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.61 லட்சம்) ஏலம் விடப்படுகிறது.

    • மற்ற ஒலி அலைகளுடன் ஒப்பிடும் போது சூரியனின் உட்புறத்தை இயக்க ரீதியாக மிகவும் வலுவாக கண்டறிய பி-முறைகள் உதவுகின்றன.
    • எப்-முறைகள் பாரம்பரியமாக சூரியனின் நில அதிர்வு ஆரத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

    டோக்கியோ:

    நமது சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். இது மிகவும் வெப்பமான வாயுக்களை கொண்ட மிகப்பெரிய கோளாக உள்ளது.

    சூரியனை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்தநிலையில் சூரியன் நாம் நினைத்ததை விட பெரியது கிடையாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் ஆரம் (ரேடியஸ்) முந்தைய பகுப்பாய்வுகளை காட்டிலும் சில நூறு சதவிகிதம் மெலிதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

    டோக்கியோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியல் வல்லுநர் மசாவோ தகாடா, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டக்ளஸ் கோப் ஆகியோர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூரியனின் சூடான பிளாஸ்மா உட்புறத்தில் உருவாக்கப்படும் ஒலி அலைகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இது அழுத்தம் அல்லது பீ-முறைகள் என்று அழைக்கப்படுகிறது.

    மற்ற ஒலி அலைகளுடன் ஒப்பிடும் போது சூரியனின் உட்புறத்தை இயக்க ரீதியாக மிகவும் வலுவாக கண்டறிய பி-முறைகள் உதவுகின்றன. எப்-முறைகள் பாரம்பரியமாக சூரியனின் நில அதிர்வு ஆரத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அலை சூரியனின் ஒளிக்கோளத்தின் விளம்புவுக்கு வலதுபுறம் நீட்டிக்கப்படாததால் அலை முற்றிலும் நம்பகமானவை அல்ல. அதற்கு பதிலாக பி-முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தும் அலை காந்தப்புலங்கள் மற்றும் சூரிய வெப்பச்சலன மண்டலத்தின் மேல் எல்லை அடுக்கில் உள்ள வெப்பம் ஆகியவற்றால் எளிதில் உள் வாங்கப்படுகிறது.

    இதனால் சூரியனின் ஆரத்தை அளவிட பி-முறைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் நாம் முன்பு கணித்ததை விட சூரியன் அளவு பெரியதாக இருக்காது. அதைவிட சிறியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 70 வருடங்களில் பிக்காசோ பல அரிய படைப்புகளை உருவாக்கினார்
    • சந்திரயான்-3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானது

    மேற்கத்திய நாடுகளில் கலைப்பிரியர்கள் அதிகம். அதிலும், ஓவியங்களை தேடித்தேடி வாங்கும் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குறைவே இருக்காது.

    புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வாங்கி வைத்து கொள்வதை பெருமையாக நினைக்கும் கோடீசுவரர்கள் அதிகம் உள்ளதால், விற்க விரும்புபவர்களிடம் அவற்றை வாங்கி ஏலமுறை மூலம் விற்றுத்தரும் ஏல நிறுவனங்களும் மேலை நாடுகளில் அதிகம்.

    1881ல் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் பிறந்து அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் உள்ள பார்சிலோனா நகரில் வளர்ந்தவர் ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso).

    1904ல் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்து, தனது படைப்புகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார்.

    1973ல் தனது 92-வது வயதில் மறையும் வரை சுமார் 70 வருடங்கள் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

    இந்நிலையில், 1968ல், எமிலி ஃபிஷ்ஷர் லாண்டவ் (Emily Fisher Landau) என்பவர் வாங்கி வைத்திருந்த பிக்காஸோ வரைந்த "ஃபெம் அ லா மான்ட்ரே" (Femme a la Montre) எனும் அரிய ஓவியத்தை வேறு ஒருவர் வாங்கியிருந்தார். அது சில தினங்களுக்கு முன் சாத்பீஸ் (Sotheby's) எனும் ஏல நிறுவனத்தின் மூலமாக விற்பனைக்கு வந்தது.

    1932ல் பிக்காஸோ வரைந்த இந்த ஓவியத்திற்கு மேரி தெரேஸ்-வால்டர் (Marie Therese-Walter) எனும் பெண், மாடலாக இருந்தார். மேரி, பிக்காசோவின் நெருக்கமான தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நீல நிற பின்னணியில் மிக பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் மேரி அமர்ந்திருப்பதை சித்தரிக்கும் இந்த ஓவியம், ஏலத்திற்கு வரும் முன் சுமார் ரூ.1000 கோடி ($120 மில்லியன்) மதிப்பிடப்பட்டிருந்தது.

    எதிர்பார்த்ததை விட ஏலத்தில், இந்த ஓவியம் சுமார் ரூ.1157 கோடி ($139 மில்லியன்) தொகைக்கு விலை போனது.

    2015ல் கிறிஸ்டீஸ் (Christie's) ஏல நிறுவனம் மூலமாக விற்கப்பட்ட பிக்காசோவின் "லே ஃபெம் டி அல்ஜெர்" (Les Femmes d'Alger) எனும் மற்றொரு ஓவியத்திற்கு ரூ.1500 கோடி ($179 மில்லியன்) தொகை கிடைத்திருந்தது.

    தற்போது அவரது இந்த ஓவியத்திற்கு கிடைத்துள்ளது இரண்டாவது அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் மேற்பரப்பினை ஆராய்ச்சி செய்ய இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பிய சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலன் திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானதை ஒப்பிட்டு, ஒரு ஓவியத்திற்கு இத்தனை பெரும் தொகையா என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

    • பீகாரில் கருத்தரிப்பு சதவீதம் குறைவு குறித்து மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கருத்து.
    • நிதிஷ்குமார் கருத்து மிகவும் இழிவானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    வாஷிங்டன்:

    பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி அவையில் பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என்றார். இதனை விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    அவரது பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ்குமார் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியது.

    இதையடுத்து, பீகார் சட்டசபை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் எனது பேச்சுகளைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    இந்நிலையில, நிதிஷ்குமார் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் எக்ஸ் சமூக வலைதளத்தில், பீகார் முதல் மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நான் நம்புகிறேன். நான் ஓர் இந்திய குடிமகளாக இருந்திருப்பேன் என்றால் பீகாருக்குச் சென்று முதல் மந்திரிக்கான தேர்தலில் போட்டியிடுவேன். பீகாரை வழிநடத்த பெண் ஒருவருக்கு பா.ஜ.க. அதிகாரமளிக்க வேண்டும். அதுவே பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உண்மையான உணர்வாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரிய வரும்.

    கொலம்பியா:

    கொலம்பியா கடற்படைக்கு சொந்தமான சான் ஜோஸ் என்ற கப்பல் கடந்த 1,708-ம் ஆண்டு இங்கிலாந்து படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது. கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 அடிக்கு கீழே ஆழ் கடலில் மூழ்கி கிடக்கும் இந்த கப்பலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலில் 200 டன் எடையுள்ள மரகதலிங்கம், வெள்ளி மற்றும் 11 பில்லியன் ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.91.51 ஆயிரம் கோடி) தங்க நாணயங்கள் அடங்கிய பெரிய அளவிலான புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் பாகத்தில் இருந்து சில தங்க நாணயங்கள், ஜாடிகள், குவளைகள் சிக்கியது. மூழ்கி கிடக்கும் கப்பலில் இன்னும் இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ( 20 பில்லியன்) மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்த கப்பலை 2026-ம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரிய வரும்.

    • டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
    • அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.

    வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.

    தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.

    இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.

    விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.

    நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

    அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.

    அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.

    இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.

    அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.

    மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது.
    • கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    காசா:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது.

    2-வது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது.

    காசா சிட்டியை இஸ்ரேல் ராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் ராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.

    அங்கு ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தகர்க்க தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    இதனால் காசா சிட்டியில் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அக்குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசா மற்றும் காசா சிட்டியில் கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து நடந்தபடியே தெற்கு காசா நோக்கி செல்கிறார்கள்.

    இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    அதே போல் மேற்கு காசாவில் உள்-அல்-நாஸ்ர் ஆஸ்பத்திரி அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமான தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும் அல்-ஷிபா மருத்துவ வளாகம் அருகே தாக்குதல் நடந்தது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,500யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் போரில் கடுமையாக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறும்போது இஸ்ரேல் ராணுவத்தினரை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அதன் டாங்கிகள் மற்றும் வாகனங்களை அழித்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவில் நடைபெற்று வரும் சண்டை, வெடிகுண்டு தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் ஓட்டம்.
    • காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் காசாவை வடக்கு, தெற்கு பகுதிகள் எனப் பிரித்தது. பின்னர் வடக்கு காசாவில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டது. தொடர்ந்து முன்னோக்கி சென்று வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்கள் வெடிப்பொருட்களை கைப்பற்றியதாக அறிவித்தது.

    நேற்று காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்தது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நெருக்கிப்பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சண்டை நடைபெற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவை அடையும் வகையில் ஓட்டம் பிடித்துள்ளனர். பல மைல் தூரம் நடந்து சென்று தெற்கு காசாவை அடைந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவர்களின் டாங்கிகள், வாகனங்களை அழித்தோம் என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜபாலியா நிவாரண முகாம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
    • தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.

    இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அப்போது இந்திய சமூகத்தினருடன் ரிஷி சுனக் கலந்துரையாடினார். தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறும்போது, "பிரதமர் ரிஷி சுனக், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில் இந்து சமூகத்தினருடன் இணைந்து கொண்டாடினார். இது இருளுக்கு எதிராக ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.

    இந்த வார இறுதியில் கொண்டாடும் தீபாவளியை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரிஷி சுனக், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

    அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதுபோன்று நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    அந்த வகையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரண்டு அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் எல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ×