என் மலர்tooltip icon

    உலகம்

    • காசாவின் முக்கிய மருத்துவமனைகள் அருகே துப்பாக்கிச்சண்டை.
    • மருத்துவமனைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், செயல்படாத நிலையில் உள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்திய இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வந்த இடத்தை சுற்றி வளைத்தது.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அல்-ஷிபா உள்ளிட்ட மிகப்பெரிய மருத்துவமனைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. காசாவின் மிகப்பெரிய மருத்துவமயைான அல்-ஷிபாவின் வெளிப்புறத்தில் சண்டை நடைபெற்று வருகிறது.

    இதனால் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே இந்த மருத்துவமனையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

    இந்த நிலையில் "காசாவில் ஹமாஸ் அமைப்பு தங்களது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அவர்கள் தெற்கு பகுதியை நோக்கி ஓடுகின்றனர். ஹமாஸ் தளத்தை மக்கள் சூறையாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசு மீது நம்பிக்கை இல்லை" என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 1,400 பேர் பலியானார்கள். 240 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதற்கிடையே ஹமாஸ் முனையில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பின் சுகாதார மந்திரி, காசாவின் வடக்கு பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செயலிழந்துள்ளன.

    சிகிச்சை பெற்று வந்த குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் ஏழு பேர், 27 நோயாளிகள் கடந்த சில தினங்களில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா 2020ல் இந்த செயலியை தடை செய்து விட்டது
    • வெறுப்பு உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்

    சீனாவின் "பைட்டேன்ஸ்" (ByteDance) எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது "டிக்டாக்" (TikTok) எனும் மென்பொருள் செயலி. 3 நொடிகளில் இருந்து 10 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய வீடியோக்ளை பயனர்கள் பதிவேற்றம் செய்யவும், கண்டு ரசிக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இச்செயலியின் செயல்பாடுகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த 4 வருடங்களில் இதன் காரணமாக 1647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதை குறித்து ஆலோசிக்க நேபாள காவல்துறையின் சைபர் குற்ற பிரிவு, உள்துறை மற்றும் சீன செயலி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று நேபாளம், சமூக கட்டமைப்பை குலைக்கும் ஆபத்து உள்ளதால் டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்தது.

    தொழில்நுட்ப வழிமுறைகள் நிறைவடைந்ததும் தடை முழுவதுமாக செயலாக்கப்படும் என்றும் எந்த தேதியிலிருந்து தடை அமலுக்கு வரும் எனும் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரேகா ஷர்மா அறிவித்தார்.

    இந்நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதற்கு பதிலாக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதித்து அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா கூறியுள்ளார்.

    இந்தியா, டிக்டாக் செயலியை 2020-ஆம் ஆண்டே தடை செய்து விட்டது. அப்போது அச்செயலிக்கு 10 கோடிக்கும் மேல் பயனர்கள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மேலை நாட்டு நிறுவனங்கள் நேபாளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக கட்டாயம் அலுவலகங்கள் அமைத்தாக வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டிருந்தது.

    • காவல்துறை நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்த உள்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கம்.
    • டேவிட் கேமரூன் கடந்த 2016-ம் ஆண்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் உலகின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீனர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக யூதர்கள் உள்ளிட்ட மக்கள் எதிர்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இங்கிலாந்தில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை உள்துறை மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இவர் கருத்திற்கு கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது.

    இதனால் பிரதமர் ரிஷி சுனக், அவரை கேபினட் மந்திரிசபையில் இருந்து நீக்க முடிவு செய்தார். மந்திரி பதவியில் இருந்து விலக கேட்டுக் கொண்ட நிலையில், அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதனால் உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுயெல்லா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஜேம்ஸ் கிளேவெர்லியை உள்துறை மந்திரியாக நியமித்துள்ளார். அதேவேளையில் முன்னாள் பிரதமர் டுவிட் கேமரூனை வெளியுறவுத்துறை மந்திரியாக நியமித்துள்ளார்.

    57 வயதாகும் டேவிட் கேமரூன், பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக 2016-ல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வருடம் எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பின் தற்போது முதன்முறையாக உயர் மந்திரிகளை மாற்றியமைத்துள்ளார்.

    • இரு கட்சி ஜனநாயக முறையை கடைபிடித்து வரும் நாடு, அமெரிக்கா
    • 'இப்போது வேண்டாம் டிம்' என மக்கள் கூறுவதாக டிம் தெரிவித்தார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக மாறி மாறி பதவி வகிப்பது வழக்கம்.

    தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.

    அந்நாட்டு வழக்கப்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியின் சார்பில் களமிறங்க விரும்புபவர்கள், நாட்டின் பல இடங்களில் அக்கட்சியின் சார்பாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை கையாள தங்கள் முன்வசம் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் விளக்க வேண்டும். அது குறித்து வரும் கேள்விகளையும் திறமையாக கையாண்டு சிறப்பான முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு பிறகே யாரை கட்சிகள் அதிபராக களம் இறக்க போகின்றன என்பது தெரிய வரும்.

    குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருந்தாலும், அவர் மீது அந்நாட்டின் பல மாநிலங்களில் கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.

    டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார்.

    இவர்களை தவிர, இப்போட்டியில் பங்கு பெற்று பிரச்சாரம் செய்து வந்தவர்களில் ஒருவர், அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott). தொடக்கத்தில் பல இடங்களில் அவருக்கு இருந்து வந்த ஆதரவு, நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது.

    டிம் தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு குடியரசு கட்சி போட்டியாளரான நிக்கி அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "பூமியிலேயே அற்புதமான மனிதர்களான வாக்காளர்கள் என்னிடம் 'இப்போது வேண்டாம் டிம்' என கூறுவதாக தெரிகிறது" என தனது முடிவு குறித்து டிம் தெரிவித்தார்.

    மே மாதம் முதல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த டிம், "டொனால்ட் டிரம்ப்பை விட தான் எந்த வகையில் சிறப்பானவர்" என்பதை விவாதங்களில் விளக்க தவறியதால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், டிம் ஸ்காட்டை இதுவரை ஆதரித்து பிரச்சாரங்களுக்கு நிதியுதவி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் மற்றொரு போட்டியாளாரான நிக்கிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • அல் ஷிபாவில் சுமார் 1500 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்
    • தாக்குதல்களிலிருந்து தப்பிக்க புகலிடம் தேடி 15 ஆயிரத்திற்கும் மேல் அங்கு சென்றுள்ளனர்

    வடக்கு காசாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 மருத்துவமனைகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்த மருத்துவமனைகள் புதிய நோயாளிகளுக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளன.

    எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    அல் ஷிபா மருத்துவமனையில் 1500 நோயாளிகள் மற்றும் 1500 மருத்துவ பணியாளர்களும் உள்ளனர்.

    இது மட்டுமின்றி, ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகளால், சுமார் 15 ஆயிரம் பேர் அங்கு புகலிடம் தேடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மருத்துவமனை வாசலிலேயே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் சண்டை நடப்பதாகவும் மக்கள் வெளியேற உதவுவதாக இஸ்ரேல் கூறுவது உண்மையில்லை என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறுகின்றனர்.

    காசா மருத்துவமனைகளை ஹமாஸ் மறைவிடங்களாக பயன்படுத்துவதால் அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், மருத்துவமனைகளை அவ்வாறு பயன்படுத்தவில்லை என ஹமாஸ் மறுக்கிறது.

    இந்நிலையில், புகலிடம் தேடி அங்கு சென்றுள்ள 15,000 பேர் கதி குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.

    • இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
    • மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை.

    காசா:

    இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 37-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    வான்வழி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-ஹமாஸ் அமைப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டி ஆகிய மூன்று பெரிய ஆஸ்பத்திரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அங்கு காயம் அடைந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அல்-ஷிபா ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு துப்பாக்கி சண்டை நடந்தது. ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருவதால் நோயாளிகள், தஞ்சம் அடைந்தவர்கள் தவிப்புக் குள்ளாகி இருக்கிறார்கள்.

    ஏற்கனவே காசாவில் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் தற்போதைய இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் இரண்டு பெரிய ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மிகப்பெரிய மற்றும் முக்கிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவில் எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது.

    ஜெனரேட்டர்கள் இயங்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த 45 குழந்தைகள் உள்ளன. அதேபோல் அல்-குத்ஸ் ஆஸ்பத்திரியும் முடங்கி உள்ளது.

    இது தொடர்பாக அல்-ஷிபா மருத்துவமனை இயக்குனர் கூறும்போது, மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை. காயம் அடைந்து வருபவர்களுக்கு முதல் உதவி தவிர வேறு எந்த சிகச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சையும் தேவைப்படுவோர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றார்.

    இன்குபேட்டரில் இருந்து குழந்தைகள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிபாவில் ஒரு மோசமான ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது. மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள், ஏற்கனவே சிக்கலான சூழ்நிலைகளை மோசமாக்கியுள்ளன. அல்-ஷிபா மருத்துவமனை முற்றிலும் செயல்படவில்லை.

    இது வருத்தம் அளிக்கிறது. அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம், தண்ணீர், இணைய தளம் இல்லை. இதனால் அத்தியாவசிய உதவியை வழங்குவதற்கான எங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்கு 300 லிட்டர் எரிபொருள் வழங்கியதாகவும், ஆனால் அதை ஹமாஸ் அமைப்பு தடுத்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    அல்-ஷிபா மருத்துவமனை கீழே ஹமாசின் நிலத்தடி கட்டமைப்பு செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே அல்-ஷிபா மருத்துவ மனையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். 17 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

    • ஏற்கெனவே 2 முறை அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தியது
    • பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடந்தது

    பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் மறைமுகமாக உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

    சில தினங்களுக்கு முன், சிரியாவிலும், அமெரிக்காவிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தொடர்புடைய குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக கடந்த அக்டோபர் 26 அன்றும் கடந்த புதன்கிழமையன்றும் என 2 தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

    இந்நிலையில், அமெரிக்கா நேற்று மீண்டும் 3-வது முறையாக தெற்கு சிரியாவில் ஈரானுக்கு தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் விதமாக அங்குள்ள பல நாடுகளுக்கு ஆயுத உதவியை ஈரான் மறைமுகமாக செய்து வருவதை தடுக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே அந்த குழுக்கள் சிரியா நாட்டில் செயல்படும் இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கியது.

    இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) தெரிவித்ததாவது:

    கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (Islamic Revolutionary Guard Corps) தளங்களின் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இது ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி. இத்தாக்குதல்களில் அல்பு கமால் மற்றும் மாயாதீன் ஆகிய இரு இடங்களில் உள்ள பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவை குறி வைக்கப்பட்டன.

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்தார்.

    • குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • காசா பகுதியில் இஸ்ரேல் குடியமர்வு நிகழ்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது
    • அமெரிக்கா, கனடா உட்பட 7 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி கூறியுள்ள இஸ்ரேல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா பகுதியில் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

    காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆக்ரமித்து குடியமர்வை செயல்படுத்த முயல்வதாக சில உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதை தொடர்ந்து ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவின் கோலன் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இந்த தீர்மானம் கண்டனம் செய்தது.

    தீர்மானத்தை ஆதரித்த 145 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

    அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா மற்றும் நவ்ரு உட்பட 7 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். 18 உறுப்பினர் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்பாக ஐ.நா. சபையில் ஜோர்டான் கொண்டு வந்திருந்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஏற்று கொள்ளாததால் கலந்து கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரவாத செயல்களை அத்தீர்மானம் கண்டிக்கவில்லை என இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    • போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப்
    • கடவுள் தந்த அடையாளங்களை சிதைக்கப்படுவதாக ஜோசப் குற்றம் சாட்டினார்

    சமீப காலமாக, கிறித்துவ மதத்தில் தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல சட்ட திட்டங்களை மாற்ற போப் பிரான்சிஸ் தீவிரமாக உள்ளார்.

    கருக்கலைப்பு, தன்பாலின திருமணம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஞானஸ்நானம் செய்விப்பது போன்றவை குறித்த கிறித்துவ மத சம்பிரதாயங்களில் போப் பிரான்சிஸ் பல மாறுதல்களை கொண்டு வர முயன்று வருகிறார். வாடிகனின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

    2012ல் போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு (65). அவர் போப் பிரான்சிஸ் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார்.

    கத்தோலிக்க சித்தாந்தம் பல எதிர்ப்புகளை சந்திப்பதை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

    ஆண்'மற்றும் பெண் ஆகிய இருவருக்கிடையே மட்டுமே ஏற்பட வேண்டிய திருமண பந்தத்தை சீர்குலைக்கும் விதமாகவும், கடவுள் கொடுக்கும் அடையாளங்களை சிதைக்கும் விதமாகவும், மாற்ற முடியாதவற்றை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஜோசப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து வாடிகன் விசாரணைகளை நடத்தி, அவரை பதவி விலக வலியுறுத்தியது. ஆனால், இதற்கு உடன்பட ஜோசப் மறுத்து விட்டார்.

    இதனை தொடர்ந்து, போப் பிரான்சிஸ், பிஷப் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டுவை பதவியிலிருந்து நீக்கி உள்ளார். அவரது நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, ஆற்றி வந்த பணிகளிலிருந்து முழுவதுமாக ஜோசப் விடுவிக்கப்பட்டுள்ளார் என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • 30 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது
    • 82 இஸ்ரேல் ஆதரவாளர்களை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது

    அக்டோபர் 7 தொடங்கி பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போர், 1 மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை தொடர்கின்றன. மேலும், அங்கெல்லாம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவாக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    1918ல் முதலாம் உலக போரை (World War I) நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையை துவங்கவும் நவம்பர் 11 அன்று ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் இந்த நாள், "ஆர்மிஸ்டைஸ் தினம்" (Armistice Day) என கொண்டாடப்பட்டு, 11-ஆம் மாதம் (நவம்பர்), 11-ஆம் தேதி, காலை 11:00 மணியளவில் இரண்டு நிமிட அமைதி கடைபிடிக்கப்படும்.

    நேற்று, ஆர்மிஸ்டிஸ் தினத்தின் போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் பங்கு பெற்ற ஒரு போராட்டம் லண்டனில் உள்ள ஹைட் பார்க் கார்னர் (Hyde Park Corner) பகுதியில் நடைபெற்றது.

    மிக பெரிய அளவில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஹமாஸ் அமைப்பினருக்கும், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். "பாலஸ்தீனத்தை விடுதலை செய்", "உடனடி போர்நிறுத்தம் தேவை", "நதியிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரம் பெற வேண்டும்" போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.

    அதில் பங்கு பெற்ற ஆதரவாளர்கள், "உக்ரைன் சுதந்திரத்திற்கு குரல் எழுப்பும் நாடுகள், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?" என கேள்வி எழுப்பினர்.

    இவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இஸ்ரேல் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை லண்டன் நகர் காவல்துறை தடுத்து விட்டது. அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் லண்டன் பெருநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் அத்துமீறலை காவல்துறை கண்டிக்கவில்லை என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் லண்டன் பெருநகர காவல்துறை, பாலஸ்தீன ஆதரவாளர்களின் வன்முறை செயலை கண்டுகொள்ளாமல் விடுவதாக குற்றம் சாட்டினார். இவர் கருத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது.

    • காசாவில் இஸ்ரேல் ராணுவம் மும்முனைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இருதரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் நீடித்து வருகிறது.

    காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இந்நிலையில், ஈரான் தலைமையிலான பயங்கரவாதத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஹமாஸ் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    மேலும், தங்கள் நாடுகளின் எதிர்காலம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், நீங்கள் ஹமாசுக்கு எதிராக நிற்க வேண்டும். எங்கள் போர் உங்கள் போர். இந்தப் போரில் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் நாங்கள் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.

    ×