என் மலர்
உலகம்
- மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் காரணமாக காசா பகுதியில் அமைந்து இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் கண்கலங்க செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போர் காரணமாக கடந்த 72 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எந்த விதமான அத்தியாவசிய சேவையும் கிடைக்காமல் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தால், அல் ஷிஃபா மருத்துவமனையின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழந்த சடலங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக 179 சடலங்கள் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மொத்தமாக புதைக்கப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் முகமது அபு சல்மியா அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார். வேறு வழியில்லாமல் சடலங்களை மொத்தமாக புதைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனை வளாகம் முழுக்க சடலங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செய்தியாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், இங்குள்ள சூழல் மனிதாபிமானமற்றதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதோடு மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எதுவுமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்த காரணத்தால், வெளியுலகத்துடனான தொடர்பை இழந்துள்ளது. மருத்துவமனைகளின் அடிதளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களையும் சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹமாஸ் மற்றும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.
இது குறித்து ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி, அல் ஷிஃபா மருத்துவமனையினுள் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடிமக்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. கடுமையான மோதல் காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
- சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
- இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக இஸ்ரேல் உறுதி எடுத்து, அவர்கள் ஒளிந்திருக்கும் காசா பகுதி மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்திற்காக சில உலக நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது. "போர் நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் என்கிற பேச்சிற்கே இடமில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக அறிவித்தார்.
நாளுக்கு நாள் இஸ்ரேல் கை ஓங்கி வரும் இப்போரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, பணயக்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி ஹமாஸ் தரப்பினருடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார், பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தங்கள் தரப்பு நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் ப்ரிகேட்ஸ் (Alqassam Brigades) பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா (Abu Ubaida), டெலிகிராம் (Telegram) கருத்து பரிமாற்ற செயலியின் ஹமாஸ் அமைப்பின் அதிகாரபூர்வ கணக்கில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்..
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
காசாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்பு கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பணய கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்பு கொள்கிறோம். ஆனால் அந்த போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும். காசா முனை பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பு அளித்து விட்டோம்; ஆனால் இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து, முடிவு எடுப்பதை தள்ளி போடுகிறது.
இவ்வாறு உபைதா செய்தி வெளியிட்டுள்ளார்.
- இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது
- சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படுவதாக இருந்தது
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய பாலஸ்தீன காசாவின் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் தாக்குதல், தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பின்னணியில் அரபு நாடுகள் பங்கேற்ற இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (Organization of Islamic Cooperation) சந்திப்பு, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.
இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் வழியாக இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பது, அமெரிக்காவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தி வைப்பது, இஸ்ரேலுடன் அனைத்துவிதமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்து கொள்வது, வளைகுடா நாடுகளின் வான்வெளி மீது இஸ்ரேல் விமானங்கள் பறப்பதை தடை செய்வது, போர்நிறுத்தத்திற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஒரு குழுவை அனுப்புவது உள்ளிட்ட 5 நடவடிக்கைகளை எடுக்க ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தை சவுதி அரேபியா ஆதரவு அளிக்கவில்லை. சவுதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், சூடான், மொரோக்கோ, எகிப்து, ஜோர்டான், மவுரிடானியா மற்றும் ஜிபவுடி ஆகிய நாடுகளும் இத்தீர்மானத்தை எதிர்த்தன.
அக்டோபர் 7-க்கு முன்பாக இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் உடன்படிக்கைகள் ஏற்பட இருந்தன. ஆனால், அக்டோபர் 7 துவங்கிய போரின் காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது இஸ்ரேலுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையில் சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி, இஸ்ரேலிய ராணுவ படையை பயங்கரவாதிகள் அமைப்பாக பிரகடனப்படுத்துமாறு ஈரான் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
- இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
- மக்கள் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை இழந்தனர்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதுதொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பக்சே சகோதரர்கள் கையாண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.
- இதில் பேசிய இந்திய தூதர், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை கனடா தடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஜெனீவா:
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்து கொண்டு பல்வேறு பரிந்துரைகளை வழங்கின.
அப்போது பேசிய இந்திய தூதர் முகமது ஹுசைன், கனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு அரசியலமைப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
- கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி ஓட தொடங்கியது
- இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது
அமெரிக்காவின் தென்மத்திய பகுதியில் உள்ள மாநிலம் டெக்ஸாஸ் (Texas).
டெக்ஸாஸ் மாநில டல்லாஸ் (Dallas) நகருக்கு 531 கிலோமீட்டர் மேற்கே உள்ள மிட்லேண்டு எனும் நகரிலிருந்து ஒரு சிறு ரக புரொபெல்லர் விமானம் (propeller plane) புறப்பட்டது. அந்த விமானத்தை, விமானி, புறநகரான மெக்கின்னி (McKinney) பகுதியை சேர்ந்த ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் (Aero Country Airport) தரையிறக்க முயன்றார். அவ்விமானத்தில் விமானியுடன் மேலும் ஒரு பயணி இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
அதை தொடர்ந்து அந்த விமானம், விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வேகமாக விலகி சென்று அங்குள்ள சிறு தடுப்பு ஒன்றில் மோதியது. அதன் பிறகும் நிற்காமல் அங்கிருந்து அருகில் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது அதன் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது.
அங்கிருந்தும், நேராக சென்ற அந்த விமானம், செங்குத்தான திசையில் வந்து கொண்டிருந்த ஒரு செடான் ரக கார் மீது மோதியது.
இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்த ஜேக் ஸ்னைடர் என்பவர் வீடியோ படம் எடுத்துள்ளார். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவைக்கான மருத்துவ பணியாளர்கள், விமானத்தில் இருந்தவர்களையும், காரில் இருந்த ஓட்டுனரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் பயணித்தவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏதுமில்லை.
மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விபத்து குறித்து தீவிரமாக விசாரணை அறிவித்து வருகிறது.
- தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
- தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டு மாடிகளுக்கும் பரவியது.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த வீட்டில் சீமா ராத்ரா என்ற பெண் தனது மூன்று குழந்தைகளுடன் இறந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைகளின் தந்தை ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் அதிகளவில் பட்டாசு சத்தம் இருந்ததாகவும், அதனால் தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், " இது ஒரு பயங்கரமான சம்பவம். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்" என்று கூறினார்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.
- காசாவில் நடந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நியூயார்க்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுவரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
- இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
- ஒரே கட்சி ஆட்சி முறை காரணமாக எதிர்ப்புகளின்றி திட்டங்கள் நிறைவேறி வந்தன
- செப்டம்பர மாதம் வரை சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
சீனா, 1998 வரை கம்யூனிஸ சித்தாந்தத்தை கடைபிடித்து வந்ததால், உள்நாட்டு வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ளாமல் இருந்தது.
அதற்கு பிறகு மெல்ல மாற தொடங்கிய சீனாவின் பொருளாதார சித்தாந்தங்களின் காரணமாக, அந்நாடு தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியது. ஒரே கட்சி ஆட்சி முறை உள்ள நாடு என்பதால், சீனா, தன் நாட்டை முன்னேற்றும் திட்டங்களை உடனுக்குடன் எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தி, அதி வேகமாக தனது உற்பத்தி திறனை பெருக்கி கொண்டது.
இதன் காரணமாக சீன பொருட்களே உலக சந்தைகள் முழுவதும் குவிய தொடங்கின. இதனால், சீனாவில் பல உலக நாடுகள் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தன.
சமீப சில மாதங்களாக சீன பொருளாதாரம் இறங்குமுகமாக உள்ளது. சீனாவின் உள்நாட்டு வர்த்தகம் முன்பு இருந்ததை விட பல மடங்கு சரிவடைந்துள்ளது.
அங்கு தொடர்ந்து குறைந்து வரும் வட்டி விகிதத்தாலும், அமெரிக்காவுடன் (முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் இருந்தே) தொடங்கிய புவிசார் அரசியல் சர்ச்சைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும், வரும் காலங்களில் மேலும் பொருளாதாரம் மந்தமாக கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே முக்கியமான சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு நல்லுறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சமீப காலங்களாக சீனாவில் முதலீடு செய்து வந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக அங்கிருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்து செல்கின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை குறைவதால், சீனாவிற்கு மாற்றாக பிற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
கடந்த செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு அயல்நாட்டு முதலீடுகளில், சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சீன பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உலக நாடுகளுடன் இணைந்திருப்பதால், அதன் சரிவு உலகளாவிய அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- மருத்துவமனையின் அருகில் உள்ள கட்டடத்தில் சுரங்கபாதை வழி கண்டுபிடிப்பு.
- சுரங்கத்திற்குள் அமைந்துள்ள அறையில் மின்சார உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசு, மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள், ஹமாஸ் போன்றவை இந்த குற்றச்சாட்டை மறுத்தன.
ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து பதுங்கியுள்ள நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கூறி வந்த நிலையில், காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கபாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்ததற்கான ஆதாரமாக 6 நிமிட வீடியோ ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் ஒரு சுரங்கபாதையின் வழியை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து, அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். இந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது என அவர் விளக்குகிறார். இதுபோன்றுதான் அல்-ஷிபா மருத்துவமனையிலும் உள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகிறது.
EXCLUSIVE RAW FOOTAGE: Watch IDF Spokesperson RAdm. Daniel Hagari walk through one of Hamas' subterranean terrorist tunnels—only to exit in Gaza's Rantisi hospital on the other side. Inside these tunnels, Hamas terrorists hide, operate and hold Israeli hostages against their… pic.twitter.com/Nx4lVrvSXH
— Israel Defense Forces (@IDF) November 13, 2023
- அல்-ஷிபா மருத்துவமனை சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது.
- எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை அல்-ஷிபா. இந்த மருத்துவமனையில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது.
மருத்துவனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, "மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.






