என் மலர்
உலகம்
- இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
- பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம்.
கொழும்பு:
அண்டை நாடான இலங்கை, சுதந்திரத்துக்குப் பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அன்னியச் செலாவணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில், விலைவாசி விண்ணைத் தாண்டிச் சென்றது. உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்து கொந்தளித்த பொதுமக்கள், தெருவில் இறங்கிப் போராடினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழிறங்கிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
பின்னர் அவர் நாடு திரும்பிவிட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப் பெரிய கடன் மலையில் இலங்கை உட்கார்ந்திருக்கிறது. அதில் சுமார் பாதி அளவு, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன் ஆகும்.
இந்த நிலையில், இலங்கை சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் (டிரான்பரன்சி இன்டர்நேசனல்) மற்றும் 4 செயல்பாட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள், இலங்கையில் 2019-2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினர். மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால், லக்ஷ்மண், கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா, அட்டிகலே உள்ளிட்ட உயர்பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.
- இது இகுனாடோன்ஷியன் வகையை சேர்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
- கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன
இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிரவுன்சீ தீவு (Brownsea Island).
இங்குள்ள இயற்கை வனாந்திர பகுதியில் ஒரு டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருக்கும் போது கண்டுபிடித்திருக்கிறார்.
- சில நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டிருக்கின்றன
- 2.67 கோடி பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது
2020 கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் உலகெங்கும் பல நாடுகளில் தங்கள் பணியாளர்களை "வர்க் ஃப்ரம் ஹோம்" (Work From Home) எனும் முறையில் வீட்டிலிருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதித்தன. இது பெருமளவில் மென்பொருள் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களில் கடைபிடிக்கபட்டது.
ஆனால், சுமார் 2.5 வருட காலம் கடந்து, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முழுவதுமாக அலுவலக முறைக்கு மாற்றி விட்டன; ஒரு சில நிறுவனங்கள் படிப்படியாக மாறி வருகின்றன.
இரண்டு மாறுபட்ட வழிமுறைகளினாலும் நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் குறித்து ஸ்கூப் டெக்னாலஜிஸ் மற்றும் பாஸ்டன் கன்சல்டின் குழுமம் ஆகிய நிறுவனங்கள் எடுத்த ஒரு ஆய்வில் சில ஆச்சரியம் அளிக்கும் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.
இந்த ஆய்வில் 554 பெரு நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் 2.67 கோடி பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிறுவனங்கள் முழுவதும் பணியாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டிலிருந்தும் அல்லது அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவும் அனுமதிக்கும் நிறுவனங்களில் அவற்றின் வருமானமும், வளர்ச்சியும் 21 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் தொழில்நுட்பத்தில் இருந்து காப்பீடு உள்ளிட்ட பல துறை நிறுவனங்களும் அடங்கும்.
புதிய பணியிடங்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்கப்படும் நிறுவனங்களில், தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்கள் சுலபமாக பணிபுரிய முடியும். இதனால், காலியிடங்களை நிரப்ப தேவைக்கு அதிகமாகவே திறமையான பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பது அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர இலக்குகளை சுலபமாக எட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.
- மருத்துவமனை முழுவதுமாக ராணுவம் வசம் வந்து விட்டது
- பணயக்கைதிகளையும், பயங்கரவாதிகளையும் தேடி வருகிறது ராணுவம்
காசாவில் மறைந்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க, இஸ்ரேல் தொடர்ந்திருக்கும் போர், 35 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளை இஸ்ரேலிய ராணுவ படை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டது.
அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் குண்டு வீச்சிற்கு பயந்து அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு எரிபொருள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் உயிரிழப்புகளை தடுக்க இஸ்ரேலுக்கு போர்நிறுத்த கோரிக்கைகள் பல நாடுகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளது.
ஆனால், இதனை புறக்கணித்த இஸ்ரேல், அந்த மிக பெரிய மருத்துவமனை முழுவதும் கண்காணிப்பை அதிகப்படுத்தி வருகிறது. அல் ஷிபா மருத்துவமனை, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக உள்ளதாகவும், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக்கைதிகள் அங்கு மறைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் கூறி வருகிறது.
தொலைத்தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில் அங்குள்ளவர்களின் உண்மை நிலை குறித்து விவரங்கள் ஏதும் இல்லை.
இந்நிலையில் தற்போது அங்குள்ள நிலைமை குறித்து, "அல் ஷிபா மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், ஒரு குறிப்பிட்ட இலக்குடன், துல்லிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் போர், ஹமாஸ் அமைப்பினருடன் தான்; பொதுமக்களுடன் அல்ல" என இஸ்ரேல் ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஹாஸ்கெல் வீடு முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்
- கண்டெடுக்கப்பட்டது ஹாஸ்கெல் மனைவியின் உடலா என நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்
அமெரிக்காவின் புகழ் பெற்ற திரைப்பட நகரம், ஹாலிவுட்.
நூற்றுக்கணக்கான முன்னணி அமெரிக்க ஆங்கில திரைப்படங்கள் இங்கு உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நடிப்பு துறையில் ஈடுபட விரும்புபவர்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்த அங்கு பல ஏஜெண்ட்கள் செயல்படுவதுண்டு.
ஹாலிவுட்டின் முன்னணி ஏஜெண்ட்களில் ஒருவர் சாம் ஹாஸ்கெல்.
இவரது மகன் சாமுவெல் ஹாஸ்கெல் ஜூனியர். இவரது மனைவி காணாமல் போயிருந்தார். அவரது உடல் பாகம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் என்சினோ பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்த கண்காணிப்பு கேமிரா வீடியோ காட்சிகள் மூலமாக ஹாஸ்கெல் வீட்டுடன் குற்றம் செய்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹாஸ்கெல்லின் வீடு முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டில் அவரது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் எங்கும் காணப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ரத்த கறை இருந்தது.
தடயவியல் நிபுணர்கள் கொலை செய்யப்பட்டது ஹாஸ்கெல்லின் மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஹாஸ்கெல் ஜூனியர் மனைவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை பல பிளாஸ்டிக் பைகளில் போட்டு 4 கூலி தொழிலாளிகளிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து ஹாஸ்கெல் ஜூனியர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காணாமல் போன அவரது மனைவியின் பெற்றோர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
- 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
- இரு தலைவர்கள் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சென்றார். சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்கா- சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இரு தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவர்களின் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம், வர்த்தகம், பொருளாதாரம், ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- சுயெல்லா பிராவர்மேன் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பி வைத்தார்.
- வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு இல்லை.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் நடவடிக்கை குறித்து உள்துறை மந்திரியாக இருந்த சுயெல்லா பிராவர்மேன் விமர்சித்தார். இதையடுத்து அவரை மந்திரி பதவியில் இருந்து விலகுமாறு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வற்புறுத்தினார்.
இந்த நிலையில் சுயெல்லா பிராவர்மேன் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பி வைத்தார். அதில் ரிஷி சுனக் மீது பல்வேறு குற்றச்சாட்டை கூறி அவரை பலவீனமான தலைவர் என்று விமர்சனம் செய்துள்ளார்.
முக்கியமான கொள்கைகளில் நீங்கள் எனக்கு அளித்த உறுதியான உத்தரவாதத்தால் உங்களுக்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டேன். இந்த உத்தரவாதத்தை நிராகரித்தது, நமது உடன் படிக்கைக்கு மட்டும் துரோகம் அல்ல. தேசத்திற்கு நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு துரோகம் ஆகும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு இல்லை. கடினமான முடிவுகளை தவிர்ப்பதற்காக உங்களுக்கு விருப்பான சிந்தனையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இந்த பொறுப்பின்மை, நாட்டை சாத்தியமற்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சுமார் 3.5 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்
- புயூட்கெடெக், உணவை அதிகம் உமிழ்ந்து விடும் பழக்கம் கொண்டவை
நியூசிலாந்து நாட்டில் சுற்றுச்சூழலை காப்பதில் முன்னணியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்களின் ஃபாரஸ்ட் அண்ட் பர்ட் (Forest and Bird) அமைப்பு, பர்ட் ஆஃப் தி செஞ்சுரி (Bird of the Century) என்ற பெயரில், "நூற்றாண்டிற்கான பறவை" எது என்பதை தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பொதுமக்களில் பலரும், பறவைகள் ஆர்வலர்களும் இதில் பங்கு பெறுவது வழக்கம்.
இவ்வருடம் சுமார் 200 நாடுகளில் இருந்து பலர் பங்கு பெற்று 3.5 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அதிகம் பேர் பங்கேற்றதால் வாக்களிப்பும், அதன் தொடர்ச்சியாக முடிவுகளும் தாமதமானது.
பங்கேற்றவர்களின் முடிவுகளில், இறுதியாக புயூட்கெடெக் (puteketeke) எனும் பறவை இந்த நூற்றாண்டிற்கான பறவை என தேர்வானது.

முதலிடம் பெற்ற இப்பறவை, ஆஸ்திரலேசியன் க்ரெஸ்டட் க்ரீப் (Australasian crested grebe) என்றும் கிரேட் க்ரெஸ்டட் க்ரீப் என்றும் அழைக்கப்படுகிறது.
"வாக்களிப்பில் ஆரம்பத்தில் இந்த பறவை பட்டியலில் பின் தங்கியிருந்தது. ஆனால், அதன் பிரத்யேக தோற்றமும், வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற குணாதிசயங்களும் வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி, இதனை தேர்வு பட்டியலில் மெல்ல மெல்ல முன்னேற்றி இறுதியில் அதற்கே முதலிடம் கிடைத்தது. இப்போட்டியின் மூலமாக இப்பறவை மட்டுமின்றி, அரிதாகி வரும் பல பறவைகள் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது" என இந்த போட்டியை நடத்தும் ஃபாரஸ்ட் அண்ட் பர்ட் அமைப்பை சேர்ந்த நிகோலா டோகி தெரிவித்தார்.

புயூட்கெடெக், உணவை அதிகம் உமிழ்ந்து விடும் பழக்கம் கொண்டவை.
ஏரிகளில் காணப்படும் பறவை வகைகளை சேர்ந்த புயூட்கெடெக், உலகில் தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழே உள்ளது. இப்பறவை, பதிவான வாக்குகளில் 2,90,374 வாக்குகளை பெற்று, பிரவுன் கீவி (brown kiwi) பறவையை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.
அரிதாகி வரும் இவ்வகை பறவைகளை காக்க பல தன்னார்வலர்கள் நியூசிலாந்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.
லாகூர்:
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, அண்டை நாடான இலங்கையில் நேற்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்றார்.
- இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றார்.
வாஷிங்டன்:
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் சென்று பார்வையிட்டார்.
இதுதொடர்பாக பியூஷ் கோயல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முக்கிய பதவிகளில் இந்தியர்கள் பதவி வகிப்பது மற்றும் டெஸ்லாவின் விநியோக சங்கிலியில் வளர்ந்து வரும் இந்திய தானியங்கி பொருட்களின் விநியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி சுட்டிக் காட்டினார்.
மேலும், இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது. எலான் மஸ்க் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டார்.
இந்நிலையில், பியூஷ் கோயலுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட செய்தியில், டெஸ்லாவுக்கு நீங்கள் வருகை தந்தது கவுரவம் அளிக்கிறது. கலிபோர்னியாவுக்கு என்னால் வர முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். வரும் காலத்தில் உங்களை சந்திக்கும் ஒரு நாளை எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் தீபாவளி விழா நடந்தது.
- இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
லண்டன்:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
சமீபத்தில் தீபாவளி பண்டிகை இங்கிலாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இந்நிலையில், தீபாவளி விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ உடன் கலந்துகொண்டார்.
இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.
- மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் காரணமாக காசா பகுதியில் அமைந்து இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் கண்கலங்க செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போர் காரணமாக கடந்த 72 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எந்த விதமான அத்தியாவசிய சேவையும் கிடைக்காமல் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தால், அல் ஷிஃபா மருத்துவமனையின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழந்த சடலங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக 179 சடலங்கள் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மொத்தமாக புதைக்கப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் முகமது அபு சல்மியா அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார். வேறு வழியில்லாமல் சடலங்களை மொத்தமாக புதைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனை வளாகம் முழுக்க சடலங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செய்தியாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், இங்குள்ள சூழல் மனிதாபிமானமற்றதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதோடு மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எதுவுமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்த காரணத்தால், வெளியுலகத்துடனான தொடர்பை இழந்துள்ளது. மருத்துவமனைகளின் அடிதளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களையும் சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹமாஸ் மற்றும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.
இது குறித்து ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி, அல் ஷிஃபா மருத்துவமனையினுள் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடிமக்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. கடுமையான மோதல் காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.






