என் மலர்
உலகம்
- இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கட்டடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன.
- எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் செயல்படாத நிலை.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 1,400 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய நேரத்தில் ஏவுகணைகள் மூலம் காசாவை தாக்கியது. இடைவிடாத வான்தாக்குதலுக்கு உள்ளான காசா உருக்குலைந்துள்ளது.
எங்கு பார்த்தாலும் கட்டட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இரண்டு முறை மட்டுமே மனிதாபிமான உதவிகள் காசா சென்றடைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பணிகளும் தொய்வடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உறிவினர்கள் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் இரும்பு கம்பிகளை கொண்டு இடிபாடுகளை நீக்கி வருகிறார்கள். பலர் எந்தவித உதவிப் பொருட்களும் இல்லாததால், கைகளால் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உடல்களை வெளியே எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து சில தினங்கள் ஆகியுள்ள இடங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படியாவது உறவினர்களின் உடல்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் பரிதவித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.
- காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்தனர்.
- காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவும் இல்லை.
கெய்ரோ:
இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்தனர்.
போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து தங்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களை பத்திரமாக மீட்டன.
இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 13-ந்தேதி காசா எல்லையை கடந்து எகிப்தின் கெய்ரோ சென்றடைந்தனர். தற்போது அங்கிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'காசாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன்' என தெரிவித்தார்.
காசா நிலவரம் குறித்து அவர் கூறும்போது, 'காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவும் இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. நாங்கள் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயம் அடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு' என பதறியடி கூறினார்.
தன்னை மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார்.
- தெற்கு காசா நகர வீதிகளில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது.
- வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் அங்கே வசித்து வந்த சுமார் 23 லட்சம் பேர் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்து இருந்தனர்.
காசா:
காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6-வது வாரத்தின் இறுதியை எட்டியிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.
வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் முக்கியமாக வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளை முற்றுகையிட்டு ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது.
இதில் அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனை அறைகளை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் இருப்பதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் ராணுவம், இந்த சோதனையில் அத்தகைய சந்தேகத்துக்கு இடமான எதையும் கண்டறியவில்லை. அதேநேரம் சில துப்பாக்கிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் சீருடைகள் என ஒருசில பொருட்களே அங்கே கிடைத்தன. அதைத்தவிர சுரங்க அறைகளோ, கட்டுப்பாட்டு மையங்களோ எதுவும் இல்லை.
இதனால் இஸ்ரேல் ராணுவத்தினரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது தெளிவாகி இருப்பதாக காசாவாசிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் ராணுவம் அடுத்தாக தெற்கை குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக தெற்கு காசா நகர வீதிகளில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது. அதில், பயங்கரவாதிகளின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் அல்லது அவர்களுடன் காணப்படும் மக்களின் உயிர் அபாயத்தில் தள்ளப்படும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக தெற்கு நோக்கிய பயணம் குறித்து இஸ்ரேலிய ராணுவ மந்திரியும் நேற்று முன்தினம் சூசகமாக தெரிவித்து இருந்தார். வடக்கு, தெற்கு என ஹமாஸ் அமைப்பினர் எங்கே இருந்தாலும் அவர்கள் மீது தாக்குவோம் என அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் அங்கே வசித்து வந்த சுமார் 23 லட்சம் பேர் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்து இருந்தனர். தற்போது தெற்கிலும் ராணுவம் நுழையும் திட்டம் அவர்களுக்கு மேலும் பீதியை அளித்து இருக்கிறது.
தெற்கு காசாவில் இஸ்ரேல் ஏற்கனவே வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது தரைவழி தாக்குதலும் தொடங்கினால் அந்த மக்களின் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் நிலவி வருகிறது.
- இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு.
- குழந்தைகள், சிறுவர்கள் 4707 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3155 பெண்களும் பலியாகியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தொடக்கத்தில் வான்வழி தாக்குதலால் காசா பகுதியை சீர்குலைத்தது. ஏவுகணை தாக்குதலால், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்க முடியாத அவல நிலை உருவானது.
தற்போது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை காசாவில் குறைந்தது 11,470 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4,707 பேர் குழந்தைகள் மற்றும் மைனர்கள் ஆவார்கள். 3,155 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பெரும்பாலானோர் இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் இதுவரை உயிர்ச்தேசம் குறித்து அப்டேட் செய்து வந்தது. தற்போது இஸ்ரேல் அவர்களின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் உயிர்ச்சேதம் குறித்து அப்டேட் செய்யவில்லை.
அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனால் மருத்துவமனைக்குள் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை, ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அதேபோன்று மேற்கு கரையின் சில பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இருந்தபோதிலும் கல்வி, சுகாதார அமைச்சகம் ஆகியவை மற்றும் பாலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.
- அமெரிக்கா சென்றுள்ள ஜி ஜின்பிங், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- திபெத், ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து ஜோ பைடன் கவலை தெரிவித்தார்.
சீனாவுக்கும் அண்டை நாடுகளாக இந்தியா, திபெத், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அதிகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நிகழ்வு நடந்து வருகிறது. கல்வான் பகுதியில் ஊடுருவல் நடந்தபோது இரு ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
தைவான் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சீனாவுக்கும் அந்நாட்டிற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டிற்கு இடையே அமெரிக்க- சீனா தொழில் கவுன்சில் மற்றும் அமெரிக்கா- சீனா உறவுக்கான கமிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அருகில் உள்ள நாடுகளுடன் ஒரு பதற்றமான நிலை உருவாகி இருப்பது தொழில்துறைகளில் கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜி ஜின்பிங் பதில் அளிக்கையில் "சீனா மோதல் மற்றும் போரை தூண்டவில்லை. வெளிநாட்டு நிலத்தை சிங்கிள் இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை" என்றார்.
ஜோ பைடன்- ஜி ஜின்பிங் சந்திப்பின்போது ஜோ பைடன், திபெத் மற்றும் ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து தனது கவலையை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
- முதல் பயணமாக உக்ரைன் செல்ல விரும்பினேன் என்றார் கேமரூன்
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
இரு தரப்பிலும் உயிரிழப்புகளும், கட்டிட சேதங்களும் அதிகமாக இருந்தாலும், போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றார். ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் முதல்முறையாக அரசியல் பயணமாக உக்ரைன் சென்றார், கேமரூன். அங்கு சென்ற அவர், அந்நாட்டு தலைநகர் கீவ் (Kyiv) நகரில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
"எனது முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன்தான் செல்ல விரும்பினேன். இந்த வருடம், அடுத்த வருடம் என்று அல்ல, போர் எத்தனை வருடங்கள் நீடித்தாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் ஆதரவு தார்மீக ரீதியாக தொடரும். அரசியல் மற்றும் ராணுவ உதவிகளும் தடையில்லாமல் வழங்கப்படும். கடந்த 3 மாதங்களில் கருங்கடல் (Black Sea) பகுதியில் ரஷிய படைகளுக்கு உக்ரைன் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி கடல்வழி கப்பல் போக்குவரத்திற்கும் உலக உணவு போக்குவரத்திற்கும் மீண்டும் உக்ரைன் வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது" என டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் டேவிட் கேமரூனுக்கு வாழ்த்தும், உக்ரைனை ஆதரிப்பதற்கு இங்கிலாந்திற்கு உக்ரைன் மக்களின் நன்றியையும் தெரிவித்தார்.
- ஆரோனிடம் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன
- 100-வருட பென்சில் ஒன்றும் ஆரோனின் சேகரிப்பில் அடங்கும்
அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநில ஜாஸ்பர் கவுன்டி (Jasper County) பகுதியில் உள்ளது கோல்ஃபாக்ஸ் நகரம் (Colfax). இந்நகரத்தில் வசிப்பவர், ஆரோன் பார்த்தலோமி (Aaron Bartholomey).
சிறு வயதில் தனது தாத்தாவுடன் கடைகளுக்கு செல்லும் போது ஆரோனுக்கு பென்சில்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த வயது முதலே சேகரிக்க தொடங்கினார். இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பொழுதுபோக்காக மாறியது. இவரிடம் பல நிறங்களில் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன.

உலகெங்கும் நடைபெறும் அரிதான சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனம், கின்னஸ் உலக சாதனை பதிவகம் (Guinness World Records). இந்நிறுவன பதிவுகளின்படி அதிக பென்சில் சேகரித்த சாதனை எண்ணிக்கை 24,000 என இருந்தது.
இதை கேள்விப்பட்ட ஆரோன் தனது சேகரிப்பை பார்க்க வருமாறு அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்திற்கு (American Pencil Collectors Society) அழைப்பு விடுத்தார்.
கடந்த ஜூலை மாதம், அவர்கள் கணக்கெடுப்பை துவங்கினர். அவர்களிடம் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்திற்கு ஆரோன் தனது சேகரிப்பு குறித்த விபரங்களை அனுப்பினார். அந்நிறுவனத்தினர் மீண்டும் ஒரு ஆய்வை நடத்தினர்.
3 மாதங்களுக்கு பிறகு கின்னஸ் நிறுவனத்தால் ஆரோனுக்கு உலகிலேயே அதிக பென்சில்கள் சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆரோனிடம் 69,255 பென்சில்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100-வருட பென்சில் ஒன்றும் அடங்கும்.

"எண்ணிக்கையின்படி பழைய சாதனையான 24 ஆயிரத்தை விட எனது சேகரிப்புகள் அதிகம் என அறிந்திருந்தேன். ஆனால், அதை துல்லியமாக எண்ண நீண்ட காலமும், பொறுமையும் தேவைப்பட்டது. நீண்ட பணிக்கு பிறகு இது நடைபெற்றது. கின்னஸ் நிறுவனத்தினர் கடுமையான விதிமுறைகளை பின்பற்றினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், இறுதியில் அனைத்தும் நல்லபடியாக முடிந்தது" என ஆரோன் தனது சாதனை குறித்து அறிவித்துள்ளார்.
- 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் அறிவிப்பு மூலம் வந்துள்ளது.
- மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன்.
நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்பார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் நகரை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஆன்லைன் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. அதுவும் அவர் தனக்கு வந்த இ-மெயிலை மோசடி என நிராகரித்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு தான் பரிசு விழுந்ததை அவர் நம்பி உள்ளார். அங்குள்ள கலமாசு கவுண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் கேமின் செயல்பாடுகள் மூலம் மிக்சிகன் லாட்டரியில் விளையாடி உள்ளார். அதில் 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் அறிவிப்பு மூலம் வந்துள்ளது.
அவர் முதலில் அதை ஒரு மோசடி என்று நிராகரித்தார். பின்னர் அந்த இ-மெயிலின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காக மிக்சிகன் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அவருக்கு லாட்டரியில் சுமார் 4 லட்சம் டாலர் பரிசுத்தொகை வென்றதை அறிந்து உற்சாகத்தில் மூழ்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆன்லைனில் நிறைய கேம்களை விளையாடுகிறேன். ஆனால் சில கேம்கள் விளையாடும் போது 2-வது வாய்ப்புக்கான உள்ளீடுகளை பெறுவது பற்றி எனக்கு தெரியாது.
இந்நிலையில் மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன். முதலில் அதை மோசடி என நினைத்தேன். பின்னர் மிக்சிகன் லாட்டரியை அழைத்த போது பரிசு வென்றதை உறுதி செய்தேன். இந்த பணத்தை எனது குடும்பத்தினருக்காக செலவு செய்யவும், சேமிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்த ஆபெல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.
அதன்பின் கலிபோர்னியா சென்ற அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் இரு நாட்டு ராணுவ உறவு, ரஷியா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.
- பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 10 மாதங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 386 பேர் பலியாகி விட்டனர். இதனால் பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கைபர் பக்துன்குவா மாகாணம் டேங்க் மாவட்டத்தில் உள்ள கிரி மசான் சேல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
- ஐந்து மாடி கட்டடத்தின், 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
- தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள மாவட்டம் லிஷி. இந்த மாவட்டத்தில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்கம் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வடக்கு காசாவில் உள்ள ஷிபா மருத்துவமனை அருகே கடந்த சில நாட்களாக சண்டை நடைபெற்றது.
- மருத்துவமனையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு பயந்து தெற்கு பகுதிக்கு சென்றனர்.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஏறக்குறைய வடக்கு காசாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளனர் எனத் தேடிவருகின்றனர். தொடக்கத்தில் இருந்தே அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், மருத்துவ நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மருத்துவமனையின் வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் நுழைந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனை கட்டடத்திற்குள் சென்றுள்ளனர். அவசரப்பிரிவு, ஆபரேசன் நடைபெறும் இடங்கள், திவிர சிசிக்சை பிரிவுகள் என எல்லா இடங்களில் சென்று ஹமாஸ் அமைப்பினர் செயல்பாடு உள்ளதா? என ஆராய்ந்துள்ளனர். இந்த தகவலை அல் ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் முகமது தெரிவித்துள்ளார்.
ஹமாஸை முறியடிக்கும் வகையில் தெற்கு காசாவில் தங்களது பிரசாரத்தை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஷிபா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிர் பிழைப்பதற்காக போராடி வருகிறார்கள்.






