என் மலர்tooltip icon

    உலகம்

    • காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
    • இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

    ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.

    இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • உலகெங்கும் பலர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்கை வன்மையாக கண்டித்துள்ளது

    அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 40 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்" என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

    எலான் மஸ்கின் (Elon Musk) கருத்தை அமெரிக்க அரசாங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

    இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் (Andrew Bates) பேசியதாவது:

    இது யூத இனத்திற்கு எதிராக மறைமுகமாக வெறுப்பை தூண்டும் கண்டனத்திற்குரிய பதிவு மட்டுமல்ல; அமெரிக்கர்களின் அடிப்படை சித்தாந்தத்திற்கே எதிரானது. இரண்டாம் உலக போர் காலகட்டத்தில், யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை கொடுமைகளுக்கு பிறகு அதற்கு நிகராக அக்டோபர் 7 அன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யூதர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ள வேளையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் வைப்பது சற்றும் ஏற்க முடியாதது.

    இவ்வாறு ஆண்ட்ரூ பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2018ல், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு தலத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு "வெள்ளையர்கள் அல்லாதவர்கள்" அதிகளவில் புலம் பெயர்வதை யூதர்கள் ஊக்கப்படுத்தி, இதன் மூலம் வெள்ளையர்களை அழிக்க முயல்வதால், இந்த சம்பவத்தை நடத்தியதாக அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர் தெரிவித்தார்.

    தற்போது மஸ்க் ஆதரித்துள்ள எக்ஸ் பதிவு, இக்கருத்தை மேலும் வலுப்படுத்துவது போல் ஆகி விடும் என்பதால், அமெரிக்காவில் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

    அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்தபடி ஓடினர். அவர்கள் அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். அவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிமர்ஜித்சிங் நங்கபாலுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • சிமர்ஜித்சிங் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு மேற்கில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால் (வயது 17).

    இந்தநிலையில் சிமர்ஜித்சிங் நங்கபாலுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட இந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டது.

    இதில் சிமர்ஜித்சிங்கை அக்கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிமர்ஜித்சிங் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். சிமர்ஜித்சிங் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
    • 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை கெல்சி ஹேட்சர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

    • படங்களை தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.
    • 12 ஹால்மார்க் கிறிஸ்துமஸ் திரைப்படங்களை பார்த்து போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் பல வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் அங்குள்ள புளூம்ஸிபாக்ஸ் நிறுவனம் 12 ஹால்மார்க் விடுமுறை திரைப்படங்களை பார்த்து தரவரிசை படுத்துவோருக்கு 2 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.66 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த போட்டியில் கிறிஸ்துமஸ் கெட் அவே (2017), ராயல் கிறிஸ்துமஸ் (2014), நார்த் போல் (2014), கிறிஸ்துமஸ் ரெயில் (2017), கிறிஸ்துமஸ் மகுடம் (2015), 3 புத்திசாலிகள் மற்றும் ஒரு குழந்தை (2022) உள்ளிட்ட 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த படங்களை தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக விழா காரணி, முன்கணிப்பு அளவு, வேதியியல் சோதனை மற்றும் கண்ணீரை தூண்டும் சோதனை, மறுபதிப்பு மதிப்பு உள்ளிட்ட அளவுகோள்களின்படி போட்டியாளர்கள் தரவரிசைப்படுத்த வேண்டும். அந்த வகையில் 12 ஹால்மார்க் கிறிஸ்துமஸ் திரைப்படங்களை பார்த்து போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • டைம் இதழ் ஆண்டுதோறும் உலக அளவில் புகழ்பெற்ற பணக்காரர்கள், ஆளுமைமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • காலநிலையில் தாக்கத்தை உண்டாக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள 100 வணிக பிரபலங்களை தொகுத்து ‘டைம் 100 கிளைமேட்’ என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது.

    நியூயார்க்:

    டைம் இதழ் ஆண்டுதோறும் உலக அளவில் புகழ்பெற்ற பணக்காரர்கள், ஆளுமைமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்த ஆண்டு, வரும் 30-ந்தேதி காலநிலை மாநாடு நடைபெற உள்ள நிலையில் காலநிலையில் தாக்கத்தை உண்டாக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள 100 வணிக பிரபலங்களை தொகுத்து 'டைம் 100 கிளைமேட்' என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது. அதில் 8 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர்களும் இடம் பெற்று உள்ளனர்.

    அதில் உலக வங்கி தலைவரான அஜய் பங்கா, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், ராக்பெல்லர் அறக்கட்டளையின் தலைவர் ராஜீவ் ஜே ஷா; பாஸ்டன் காமன் அசெட் மேனேஜ்மென்ட்டின் நிறுவனர் கீதா ஐயர், அமெரிக்க எரிசக்தி கடன் திட்டங்கள் அலுவலகத்தின் இயக்குனர் ஜிகர் ஷா, ஹஸ்க் பவர் சிஸ்டம்ஸின் இணை நிறுவனர் மனோஜ் சின்ஹா, கெய்சர் பெர்மனேட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பாளர் சீமா வாத்வா மற்றும் மகேந்திரா லைப்ஸ்பேஸஸ் நிர்வாக இயக்குனர் அமித் குமார் சின்ஹா ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

    • இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் சுமார் 240 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர்.
    • பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

    ரபா:

    இஸ்ரேல் தொடுத்துள்ள போரால் நிலைகுலைந்து காணப்படும் காசாவில் எங்கு நோக்கினும் கட்டிட இடிபாடுகளாகவே காட்சியளிக்கின்றன. அங்கு வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வரும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    கடைசி ஹமாஸ் போராளியையும் அழித்தொழிக்கும் நோக்கில் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி வருகிறது.

    காசாவின் மிகப்பெரிய அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இஸ்ரேல் ராணுவம் புகுந்தது சர்வதேச எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. அங்கே ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக கூறி நுழைந்த ராணுவம், அத்தகைய சந்தேகத்துக்கு இடமான பகுதி எதையும் அங்கே கண்டுபிடிக்கவில்லை.

    அங்கு நின்றிருந்த வாகனம் ஒன்றில் சில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஹமாஸ் அமைப்பினரின் ஒரு சில தளவாடங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு பொய்யாகி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

    இவ்வாறு வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்தும் நடவடிக்கையை நீடித்து வரும் இஸ்ரேல் ராணுவம், அடுத்ததாக தெற்கை நோக்கி நகரும் முடிவில் உள்ளது.

    வடக்கில் இருந்து லட்சக்கணக்கில் தெற்கில் அகதிகளாக தங்கியிருக்கும் மக்கள் இதனால் பெரும் துயரை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அண்டை நாடான எகிப்தும் காசா அகதிகளை ஏற்க மறுத்து விட்டது.

    எனவே மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மவாசி நகருக்கு இடம்பெயருமாறு காசா மக்களை இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் சில சதுர கி.மீ. மட்டுமே பரப்பளவு கொண்ட அந்த பகுதியில் பெருமளவிலான இந்த மக்கள் தஞ்சம் அடைய முடியாது என்பதால் இஸ்ரேலின் அறிவிப்பை ஐ.நா. மனிதாபிமான நிறுவனங்கள் நிராகரித்து விட்டன.

    இதனால் காசாவாசிகளின் துயரம் விவரிக்க முடியாத நிலைக்கு மாறி இருக்கிறது.

    இதற்கிடையே போர் உக்கிரம் அடைந்துள்ள காசாவில் ஐ.நா. மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு இந்த பணிகளை மோசமாக பாதித்து இருக்கின்றன.

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு தகவல் தொடர்பு சேவை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதனால் நேற்று 2-வது நாளாக நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.

    உதவி வினியோகத்தை ஒருங்கிணைப்பதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிப்பதால், தேவைப்படும் இடங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

    போர் தொடங்கியதுமே காசாவுக்கு எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து விட்டது. இதனால் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளும் அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள முடியவில்லை.

    காசாவின் தினசரி உணவு தேவையில் வெறும் 10 சதவீதமே தற்போது வினியோகிக்கப்படுவதாகவும் இதனால் விரைவில் அங்கு பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரிக்கும் என ஐ.நா.வின் உணவு திட்ட செய்தி தொடர்பாளர் அபீர் எடேபா அச்சம் வெளியிட்டு உள்ளார்.

    கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த போரில் இதுவரை 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதில் காசாவில் மட்டுமே 11,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

    இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் சுமார் 240 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர். அவர்களில் 4 பேர் இதுவரை கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. 4 பேர் விடுவிக்கப்பட்டதுடன், ஒருவரை ராணுவம் அதிரடியாக மீட்டு உள்ளது.

    இந்த போர் தொடங்கியது முதல் காசாவில் 2,700 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான பிணங்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    அவற்றை மீட்பதற்கு ஆளில்லாமல் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சில இடங்களில் அவர்களின் உறவினர்களே வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை அகற்றி தங்கள் உறவுகளை தேடி வரும் துயரம் நிலவுகிறது.

    இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தற்போது காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அரசு அனுமதித்து உள்ளது.

    • மாலத்தீவு அதிபர் தேர்தலில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வென்றார்.
    • பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.

    மாலே:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் யாருக்கும் கிடைக்கவில்லை.

    இதனால் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எதிர்த்துப் போட்டியிட்ட சோலிஹ் 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.

    இதற்கிடையே, நவம்பர் 17-ம் தேதி மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், மாலத்தீவின் 8-வது அதிபராக முகமது மூயிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற்றுக் கொண்டார்.

    அப்போது பேசிய அதிபர் முகமது மூயிஸ், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மாலத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்பட தெற்காசிய தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.

    • பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

    நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    • ‘ஷியான் யாங் ஹாங் - 03’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.
    • அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

    சீன கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே தமிழக கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்துக்குள் இருக்கும் இந்திய படைகள் ஆகியவற்றை பற்றி முழுமையான தகவல்களை கண்காணித்து அறிந்து கொள்ளும் பணிகளில் ஈடுபடுவதாகவும், தென் மாநிலங்களை உளவு பார்ப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. சீன உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே அவை இலங்கைக்கு வர இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    சீனாவின் உளவு கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசால் சீன கப்பலை தடுக்க முடியவில்லை. காரணம், இலங்கை அரசு சீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் பொருளாதார உதவியை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சீனாவின் உளவு கப்பலான 'ஷின் யான் - 6' கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருக்கிறது. ஆனால் அந்த கப்பல் சீனாவுக்கு எப்போது திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் இலங்கைக்கு வருகிறது. 'ஷியான் யாங் ஹாங் - 03' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இது பல்நோக்கு கப்பல் ஆகும். இந்த கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்த நாட்டிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.

    இந்த கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்ந்து இலங்கைக்கு உதவுவதற்காகவே இந்த கப்பல் அனுப்பி வைக்கப்படுவதாக மீண்டும் காரணம் சொல்லப்படுகிறது.

    'ஷியான் யாங் ஹாங் - 03' அதிநவீன கப்பல் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சீனா தரப்பில் கூறப்படுகிறது. இந்த கப்பல் 99.06 மீட்டர் நீளம் கொண்ட பல்நோக்கு கப்பல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கைக்கு இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசு என்ன முடிவு எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    • இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கட்டடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன.
    • எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் செயல்படாத நிலை.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 1,400 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய நேரத்தில் ஏவுகணைகள் மூலம் காசாவை தாக்கியது. இடைவிடாத வான்தாக்குதலுக்கு உள்ளான காசா உருக்குலைந்துள்ளது.

    எங்கு பார்த்தாலும் கட்டட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இரண்டு முறை மட்டுமே மனிதாபிமான உதவிகள் காசா சென்றடைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பணிகளும் தொய்வடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உறிவினர்கள் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலானோர் இரும்பு கம்பிகளை கொண்டு இடிபாடுகளை நீக்கி வருகிறார்கள். பலர் எந்தவித உதவிப் பொருட்களும் இல்லாததால், கைகளால் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உடல்களை வெளியே எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து சில தினங்கள் ஆகியுள்ள இடங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படியாவது உறவினர்களின் உடல்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் பரிதவித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.

    ×