என் மலர்
உலகம்
- கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மோசமான வானிலை காற்று காரணமாக கப்பலை தேடும் பணியில் தொய்வு.
துருக்கியில் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளது.
இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு துருக்கியின் சோங்குல்டாக் மாகாணத்தில் உள்ள எரெக்லியில் கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததாக துருக்கி கொடியிடப்பட்ட காஃப்கமெட்லர் கப்பலின் கேப்டன் தெரிவித்ததாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதி நேற்று சக்திவாய்ந்த புயல்களால் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை, காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும். வானிலை சற்று தெளிவான பிறகு மீட்பு நடவடிக்கை தொடங்க குழுக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
- போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதிக்க வேண்டும் என பல உலக நாடுகள் கூறி வருகின்றன
- போர் நிறுத்தம் பயங்கரவாதம் தொடர வழி செய்து விடும் என்றார் பைடன்
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழியாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஏமன், லெபனான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.
போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக போரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு பல உலக நாடுகளும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இஸ்ரேல் அக்கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல "தி வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடைநிறுத்தம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
போர் நிறுத்தம் வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத சித்தாந்தத்தை கடைபிடித்து வருவதை நிறுத்தாத வரையில் போர் இடைநிறுத்தம் என்பது அமைதிக்கான வழியாக இருக்காது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஒவ்வொரு போர் இடைநிறுத்த காலமும் தங்கள் ராணுவ தளவாடங்களையும், பயங்கரவாத திட்டங்களுக்கான ஆயுதங்களையும் சேகரித்து வைத்து கொள்ளும் காலமாக உள்ளது. தங்கள் அமைப்பின் பயங்கரவாதிகளை பலம் பெற செய்து மீண்டும் அப்பாவிகளை கொல்ல தொடங்குவார்கள். தற்காலிகமாக போரை நிறுத்துவது நமது நோக்கமாக இருக்க கூடாது; நிரந்தரமாக பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நோக்கமாக இருக்க வேண்டும்; தொடர்ந்து நடைபெறும் வன்முறைக்கு ஒரு முடிவு வர வேண்டும். அத்துடன் வரலாற்று தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இஸ்ரேலும் மனிதாபிமான சட்டங்களை மதித்து, பொதுமக்களின் உயிரிழப்பை குறைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மனதில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பதிலடி கொடுக்க வேண்டிய கோபத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி தவறுகள் நடக்காமல் இஸ்ரேல் பார்த்து கொள்ள வேண்டும். போர் நிறைவடைந்ததும், பாலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவதுதான் இந்த சிக்கலுக்கு தீர்வு.
இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.
- பெட்ரோல் வாகன விற்பனை சீரடைந்தாலும் மின்சார வாகன விற்பனை குறைந்துள்ளது
- வாகன விலையை குறைப்பதை தீவிரமாக உற்பத்தியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்
சுற்றுச்சூழல் மாசுபடுதலை முழுவதுமாக குறைக்க, படிம எரிபொருளுக்கு பதிலாக மின்சக்தியை பயன்படுத்தும் வாகனங்களை தயாரிப்பதில் உலகெங்கும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் தீவிரமாக முனைந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் மின்சார கார்கள் உற்பத்தி அதிகரித்து வந்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்திக்கான இலக்கை குறைத்துள்ளது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பெரும் முதலீட்டு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் மெல்ல சரிவிலிருந்து மீண்டு வருகிறது. படிம எரிபொருள் வாகன விற்பனை சீரடைந்துள்ள நிலையில், மின்சார வாகன விற்பனை மட்டும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.
புதுப்புது வாகனங்கள் சந்தையில் வந்தாலும், ஒரு முறை "சார்ஜ்" செய்தால் மின்சார கார்கள் பயணிக்கும் தூரமான "ரேஞ்ச்", எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை.
அமெரிக்கா முழுவதும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் உற்பத்தியாளர்களால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. இது மின்சார வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பரப்பளவில் பெரிய நாடான அமெரிக்காவில் பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு.
அமெரிக்கர்கள், தங்கள் அன்றாட அலுவல்களுக்கும், விடுமுறை நாள் பயணங்களுக்கும், நீண்டதூர பயணத்திற்கும் கார்களையே அதிகம் நம்பி உள்ளனர். ஆனால், பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை போல் மின்சக்தியை ரீசார்ஜ் செய்யும் வசதிக்கான கட்டமைப்பு அமெரிக்காவில் அதிகம் இல்லாததை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளதால் மின்சார கார்களுக்கு மாற தயங்குகின்றனர்.
இதனால், தங்களிடம் ஏற்கெனவே அதிகமாக குவிந்திருக்கும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை முதலில் விற்று விடுவதில் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வாகனங்களுக்கான விலையை குறைக்க டெஸ்லா, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல மின்சார கார் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்தியாவில், மின்சார வாகனங்களில் கார்களை விட இரு சக்கர வாகனங்களே அதிகளவில் விற்பனையாவதாலும், இங்கும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காததால், அமெரிக்காவில் தோன்றியுள்ள சிக்கல் இங்கும் வர கூடும் என வாகனத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- விமானங்களை நிர்வகிக்க சுமார் 70 இந்திய வீரர்கள் உள்ளனர்.
- மாலத்தீவு அதிபராக உள்ள முகமது முய்சு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
மாலே:
மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். அவர் மாலத்தீவின் 8-வது அதிபராக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார். அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் அதிபர் முகமது முய்சு முறைப்படி கேட்டுக் கொண்டார்.
இதை அவர் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மாலத்தீவில் இருந்து தனது ராணுவத்தை இந்தியா திரும்ப பெறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டது என்று தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை நிர்வகிக்க சுமார் 70 இந்திய வீரர்கள் உள்ளனர். மேலும் மாலத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திலும் இந்திய போர்க் கப்பல்கள் ரோந்து பணிகளை மேற்கொள்கிறது.
மாலத்தீவு அதிபராக உள்ள முகமது முய்சு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது.
- விண்கலம் ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் நாங்கள் தரவை இழந்தோம்.
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கிது. அந்த நிறுவனம் இதுவரை உருாக்கியதிலேயே மிகப் பெரிய ராக்கெட் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஏவப்பட்ட நான்கு நிமிடங்க ளில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது.
இந்நிலையில் ஸ்டார் ஷிப்பின் சோதனை 2-வது முறையாக நேற்று நடந்தது. டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
சுமார் 400 அடி உயரம் கொண்ட விண்கலத்தில் சூப்பர் ஹெவி எனப்படும் முதல் பகுதியில் பூஸ்டர் இருந்தது. மற்றொரு பகுதியில் 165 அடி உயர ஸ்டார் ஷிப் விண்கலம் பொருத்தப்பட்டது.
ஏவப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் வெற்றிகரமாக ஸ்டார் ஷிப்பில் இருந்து பிரிக்கப்பட்டது. பூஸ்டரை தரையிறக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்டார்ஷிப்பில் இருந்து பிரிந்த பூஸ்டர் வெடித்து சிதறியது.
இது தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறும்போது, விண்கலம் ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் நாங்கள் தரவை இழந்தோம்.
எங்கள் ஸ்டார்ஷிப் விண்கலம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சோதனை மூலம் நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி வருகிறது. இன்றைய சோதனை ஸ்டார்ஷிப்பின் நம்பகத் தன்மையை மேம்படுத்த உதவும்.
இந்த ராக்கெட் ஏவுதல் ஸ்பேஸ் எக்ஸ் என்ஜினீயர்களால் நம்ப முடியாத அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்று தெரிவித்தது.
- ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
- அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.
போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.
சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.
"ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
- ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.
காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.
இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஆஸ்பத்திரியில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆஸ்பத்திரியின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.
அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
- பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
- பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.
சான்சால்வடார்:
72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்திய சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று இந்திய நேரப்படி இன்று காலை எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது. இதில் டாப் 20 பேரில் இந்திய அழகி இடம் பெற்றார். ஆனால் இறுதி 5 பேரில் இந்திய அழகி தேர்வாகவில்லை.
நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகள் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட பிறகு பட்டத்துக்காக இறுதிச் சுற்றுக்கு நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா அழகிகள் நுழைந்தனர். இறுதிச் சுற்றில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதன் பின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.
இறுதிச் சுற்றில் ஷெய்னிஸிடம் நீங்கள் மற்றொரு பெண்ணாக ஒரு வருடம் வாழ முடிந்தால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் 18-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து தத்துவாஞானியும் பெண்ணியவாதியுமான மேரி வோல்ஸ் போன்கிராப்டாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். அவர் எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று பெண்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று ஷெய்னிஸ் கூறினார்.
2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள 23 வயதான ஷெய்னிஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் ஆவார். இப்போட்டியில் இந்திய அழகி ஸ்வேதா ஷர்தா ஏமாற்றம் அளித்தார்.
- இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
- கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.
பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.
இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.
1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.
நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தொழிலதிபரும், கோல்ப் வீரருமான எலிதா பீட்சே தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- புதரில் இருந்து வெளிவரும் ராட்சத நாகப்பாம்பு மைதானத்தில் படமெடுத்து ஆடுவதையும், அங்கிருந்த பெண் வீரர்கள் டீ பாக்சை குறிவைப்பதையும் காட்டுகிறது.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பயனர்களை அதிகம் கவரும். குறிப்பாக பாம்புகள் பற்றிய வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் கோல்ப் மைதானத்தில் ஒரு ராட்சத நாகப்பாம்பு படமெடுத்து ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரும், கோல்ப் வீரருமான எலிதா பீட்சே தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், புதரில் இருந்து வெளிவரும் ராட்சத நாகப்பாம்பு மைதானத்தில் படமெடுத்து ஆடுவதையும், அங்கிருந்த பெண் வீரர்கள் டீ பாக்சை குறிவைப்பதையும் காட்டுகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தெற்கு காசாவில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
- காசாவுக்குள் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப இஸ்ரேல் மறுத்தது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்தாலும், குழந்தைகள், பெண்கள் உள்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபடி முன்னேறியது. அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் வடக்கு காசா மற்றும் காசா சிட்டி பகுதியை தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது.
இந்தநிலையில் வடக்கு காசாவை தொடர்ந்து தெற்கு காசா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. வடக்கு காசாவில் இருந்து சுமார் 11 லட்சம் பேரை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியது. இதையடுத்து பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு சென்றனர்.
ஏற்கனவே தெற்கு காசாவில் யூனுஸ்கான், ரபா ஆகிய இடங்களில் வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேலின், தரைப்படை தனது நடவடிக்கையை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது.
தெற்கு பகுதியில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபடுவார்கள்.
இதனால் தெற்கு காசாவில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது.
ஆஸ்பத்திரியை சுற்றி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆஸ்பத்திரியில் எரிபொருள் தீர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஏற்கனவே குறை பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் இறந்த நிலையில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
30-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் இறந்துள்ளனர். அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காசாவுக்குள் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப இஸ்ரேல் மறுத்தது. இதனால் மருத்துவ சேவைகள் முடங்கின. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்குள் எரிபொருளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.
இதை ஏற்று காசாவுக்கு எரிபொருளை அனுப்ப இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை 1.40 லட்சம் லிட்டர் எரிபொருளை அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட 19 வயதான இஸ்ரேல் ராணுவ வீராங்கனை நோவா மார்சியனோ, பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவரது உடல் அல்-ஷிபா ஆஸ்பத்திரி அருகே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
- இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.
இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






