search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வடிகட்டிய பொய்: மஸ்கை கண்டித்த வெள்ளை மாளிகை
    X

    "வடிகட்டிய பொய்": மஸ்கை கண்டித்த வெள்ளை மாளிகை

    • உலகெங்கும் பலர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்கை வன்மையாக கண்டித்துள்ளது

    அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 40 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்" என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

    எலான் மஸ்கின் (Elon Musk) கருத்தை அமெரிக்க அரசாங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

    இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் (Andrew Bates) பேசியதாவது:

    இது யூத இனத்திற்கு எதிராக மறைமுகமாக வெறுப்பை தூண்டும் கண்டனத்திற்குரிய பதிவு மட்டுமல்ல; அமெரிக்கர்களின் அடிப்படை சித்தாந்தத்திற்கே எதிரானது. இரண்டாம் உலக போர் காலகட்டத்தில், யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை கொடுமைகளுக்கு பிறகு அதற்கு நிகராக அக்டோபர் 7 அன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யூதர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ள வேளையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் வைப்பது சற்றும் ஏற்க முடியாதது.

    இவ்வாறு ஆண்ட்ரூ பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2018ல், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு தலத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு "வெள்ளையர்கள் அல்லாதவர்கள்" அதிகளவில் புலம் பெயர்வதை யூதர்கள் ஊக்கப்படுத்தி, இதன் மூலம் வெள்ளையர்களை அழிக்க முயல்வதால், இந்த சம்பவத்தை நடத்தியதாக அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர் தெரிவித்தார்.

    தற்போது மஸ்க் ஆதரித்துள்ள எக்ஸ் பதிவு, இக்கருத்தை மேலும் வலுப்படுத்துவது போல் ஆகி விடும் என்பதால், அமெரிக்காவில் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×