என் மலர்tooltip icon

    உலகம்

    • தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    சியோல்:

    வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்தியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதற்கிடையே உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ராணுவ தலைமையகமான பென்டகன், கடற்படை தளம் ஆகியவற்றை படம் பிடித்ததாக வடகொரியா தெரிவித்தது.

    மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்த நிலையில் தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தென்கொரியா செய்துள்ள ஒப்பந்தத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்களிப்பவர்களுக்கு பொது அறிவு இருப்பதை சோதிக்க வேண்டும் என்கிறார் விவேக்
    • வாக்களிக்கும் உரிமையை கல்வியறிவுடன் கலப்பதை விமர்சகர்கள் எதிர்க்கின்றனர்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் வரப்போகும் தீர்ப்பினை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் நிலை உள்ளது.

    இதனால் குடியரசு கட்சி வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    பல்வேறு நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசி வரும் விவேக் ராமசாமி, முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.

    ஆனால், விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாற்று திட்டத்தின்படி, 18 வயதை எட்டியவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவிற்கான ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் அல்லது 6 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது முதல்நிலை அவசர சேவை பணியாளர்களாக சில காலங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.

    தனது இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள விவேக், வாக்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அடிப்படை பொது அறிவு அவசியம் என கூறுகிறார். தான் வென்றால் இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதல்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    விவேக்கின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இது கருப்பினத்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் பல்வேறு பயனற்ற மற்றும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதிலளிக்க முடியாததால், வாக்குரிமை இழக்கும் அபாயம் தோன்றும் என கருத்து தெரிவிக்கும் கருப்பின பிரதிநிதிகள், கல்வியையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றுடன் ஒன்று கலக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதலை கொண்டு வர அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்ட வேண்டியது அவசியம் என்றும், 4ல் 3 மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அதனால் இது நிறைவேறுவது கடினம் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாறுதல்கள் அதிபர் தேர்தலில் அவருக்கும் அவரது குடியரசு கட்சிக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    • புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
    • கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இம்ரான்கான் அறிவித்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவராக உள்ளார். அவர் 2018 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் கட்சி தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. பதவி விலகிய அவர்மீது இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பிரதமராக இருந்தபோது பரிசுப்பொருள் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


    இதற்கிடையே, இம்ரான் கான் கட்சியின் சின்னமான 'கிரிக்கெட் மட்டை' சின்னத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள 20 நாளுக்குள் புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சித் தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது.

    கடந்த திங்களன்று நடைபெற்ற கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் உள்கட்சித் தேர்தல் நடத்த அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு பதிலாக அவருக்கு மிகவும் நெருக்கமானவரான பாரிஸ்டர் கோஹர் கான் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    • கி.பி. 1109லிருந்து கி.பி. 1119க்கு இடைப்பட்ட காலத்தில் இரட்டை கோபுரங்கள் உருவாக்கப்பட்டன
    • கோபுரத்தை சுற்றி நகர நிர்வாக அமைப்பு உயரமான உலோக தடுப்பு அமைக்க உள்ளது

    வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண கட்டுரைகளிலும் இந்த இரு கோபுரங்களுக்குமே சிறப்பான இடம் உண்டு.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரங்களில் சற்று உயரமானது "அசினெல்லி" (Asinelli); உயரம் குறைவானது "கரிசெண்டா" (Garisenda). கி.பி. 1109-ஆம் வருடத்தில் இருந்து கி.பி. 1119-ஆம் வருட காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த இரு உயரமான கோபுரங்கள், இவற்றை உருவாக்கிய குடும்பங்களின் பெயர்களாலேயே வழங்கப்படுகின்றன.

    இதில் சிறிய கோபுரமான கரிசெண்டா, 157 அடி உயரம் உடையது. இதை விட உயரமாக, (சுமார் 200 அடி) இருந்த இந்த கோபுரம் 14-வது நூற்றாண்டில் சரியும் அபாயத்தில் இருந்ததால், அதனை தடுக்க செய்யப்பட்ட கட்டிட பணிகளின் காரணமாக தற்போது உள்ள உயரத்தை அடைந்திருக்கிறது. 


    இந்நிலையில், தற்போது 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ள கரிசெண்டா, சாய்ந்து கொண்டே வருவது அதிகரித்துள்ளதால், இடிந்து விழ கூடிய அபாயத்தை எட்டியுள்ளதாக கட்டிட வல்லுனர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனை நகர செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    2019லிருந்தே கரிசெண்டா கோபுர கட்டித்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அறிவியல் வல்லுனர் குழு, இதன் வீழ்ச்சிக்கான அபாயம் குறித்து முன்னரே எச்சரித்திருந்தது.

    கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட துல்லிய சென்சார் பதிவுகளின்படி, முன்னெப்போதும் இல்லாத அழுத்தம் அதன் தரைப்பகுதிக்கு தரப்படுவதாகவும், அதன் காரணமாக அடித்தளத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கற்களில் தோன்றியுள்ள விரிசல்கள், மெதுவாக மேலே செங்கற்களுக்கும் பரவும் என இக்குழு தெரிவித்தது.

    இத்தகவலையடுத்து, பாதுகாப்பிற்காக கரிசெண்டா கோபுரத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட பகுதி வரை உயரமான உலோக தடுப்பு அமைத்து மக்கள் நடமாட்டம் தடை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கரிசெண்டா திடீரென விழுந்தாலும், அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களுக்கு சேதாரம் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    இரு கோபுரங்களையும் இணைக்கும் அனைத்து சாலை போக்குவரத்தையும் நகர நிர்வாக அமைப்பு, மூடி விட்டது. 


    இருப்பினும், கோபுரம் கீழே விழ போகும் நாள் அல்லது மாதம் குறித்து இதுவரை காலவரையறை ஏதும் நிபுணர்களால் குறிப்பிடப்படவில்லை. வல்லுனர்கள், இந்த கோபுரம் 3 மாதத்திலிருந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளதாக மட்டுமே எச்சரித்துள்ளனர்.

    சுமார் 1000 வருடங்களாக அந்நகர மக்கள் பெருமைப்படும் ஒரு வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலை வடிவமாகவும் விளங்கி வந்த கோபுரம் விரைவில் இடியும் எனும் செய்தி அந்நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தியதில் 14,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டாகின. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவாார்த்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் நிறுத்தம் 7 நாட்கள் நீடித்தது. இதில் 83 இஸ்ரேல் பிணைக் கைதிகள், 24 வெளிநாட்டினரை ஹமாஸ் விடுத்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

    போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கத்தார் நாடு முயற்சித்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தனது போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. தெற்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

    அதே போல காசாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வீச்சால் பல இடங்களில் கடும் புகை எழும்பின. காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் நாள் தாக்குதலில் 180 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, நேற்று காலை இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 180-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 589 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா மக்கள் உயிரை கையில் பிடித்தப்படி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் 126 இஸ்ரேலியர்கள், தாய்லாந்தை சேர்ந்த 8 பேர், நோபளம், தான்சானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 137 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    • ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவித்தது.

    ரஷிய ராணுவத்தில் தற்போது 13 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே படைவீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷிய அரசு முடிவு செய்தது.

    இந்த நிலையில் ரஷிய ஆயுதப்படைகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார் என்று கிரெம்ளின் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது சிறப்பு ராணுவ நடவடிக்கை மற்றும் நேட்டோவின் தற்போதைய விரிவாக்கம் ஆகியவற்றால் நாட்டிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
    • உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது.

    சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

    நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மார்கோ ரூபியோ தலைமையிலான குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோபைனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வருவதால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பயணத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

    கொரோனா தொற்றின்போது உண்மையை சீனா மறைத்தது. உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும் நமது பொருளாதாரத்தையும், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
    • ஹமாஸ் அமைப்பு உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்றார் அமெரிக்க மந்திரி.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.

    ஆனால், ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது எனக்கூறி, இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், இடைநிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் பொதுமக்களுக்கு தெளிவான பாதுகாப்பை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதை தெளிவு படுத்தினேன். போர் நிறுத்தம் ஏன் முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஹமாசால் அது முடிவுக்கு வந்தது. ஹமாஸ் அமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே அது ஜெருசலேமில் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தி 3 பேரைக் கொன்றது. அமெரிக்கர்கள் உட்பட மற்றவர்களைக் காயப்படுத்தியது. போர் நிறுத்தம் முடிவதற்குள் அது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. சில பிணைக்கைதிகளை விடுவிப்பதில் அது செய்த கடமைகளை மறுத்தது என தெரிவித்தார்.

    • உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் எச்.ஐ.வி-யுடன் வாழ்கின்றனர்.
    • ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNAIDS,'சமூகங்களை வழிநடத்தட்டும்' என்ற கருப்பொருளை வழங்கியுள்ளது.

    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம். எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம். ஆனால், உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனை சொல்ல முடியாதது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் குறைவாக இருப்பதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதேசமயம், எய்ட்ஸ் நோய் என்னென்ன காரணங்களால் பரவுகிறது என்கிற புரிதல் இல்லாமல் அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய நிலையும் சமூகத்தில் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், சமூகம் மாற வேண்டும். 

    உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், எச்.ஐ.வி நோயால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் வகையிலும் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஒரு தினமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு, எய்ட்ஸ் நோய் மீதான விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைக்காக ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNAIDS,'சமூகங்களை வழிநடத்தட்டும்' என்ற கருப்பொருளை வழங்கியுள்ளது. இதற்கான ஒரு சிறப்பு வலைப்பக்கத்தில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை ஐநா அமைப்பு விளக்கியுள்ளது.

    உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் எச்.ஐ.வி-யுடன் வாழ்கின்றனர். அவர்களில் 20.8 மில்லியன் பேர் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர் மற்றும் 6.5 மில்லியன் பேர் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ளனர். 

    உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில், 92 லட்சம் மக்கள் அவர்களுக்குத் தேவையான எச்.ஐ.வி. சிகிச்சை பெறாமல் உள்ளனர் என்றும் பலருக்கு தங்களின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் எச்.ஐ.வி. தொடர்பான பாதிப்புகளால் ஒவ்வொரு நாளும் 1,700 உயிர்கள் பறிபோகின்றன என்றும் 3,500 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

    2030க்குள் பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய எய்ட்ஸ் நோயை வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை 2015 ஆம் ஆண்டு ஐநா முதன்முதலில் நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைவதற்கு, நம்முன் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா உள்பட சர்வதேச உலக அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார்.
    • மேலும், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    துபாய்:

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இதற்கிடையே, உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்ஸ்வாழ் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
    • மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    துபாய்:

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும், ஹோட்டலுக்கு வெளியேயும், பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்சில் வாழும் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது.

    இன்று சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான சமநிலைக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணத்தை உலகின் முன் வைத்துள்ளது.

    உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் இந்தியா இருந்தாலும், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் அதன் பங்களிப்பு 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.

    புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். உண்மையில், காலக்கெடுவுக்கு 9 ஆண்டுக்கு முன்பே எங்களின் புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்தோம் என தெரிவித்துள்ளார்.

    • சிரியா தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 2 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அகமதாபாத் 8-வது இடத்தையும், சென்னை 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஈரான் நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும், லிபியாவின் திரிபோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    ×