என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான துருவ கரடிகள் வாழ்கின்றன.
    • கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே துருவ கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன.

    ஐஸ்லாந்து நாட்டில் 8 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடியை போலீசார் சுட்டு கொன்றனர்.

    பனிக்கரடியால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் சுட்டு கொன்றோம் என்று இதற்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.

    பனிக்கரடிகள் இஸ்லாந்தை பூர்வீகமாக கொண்டவை அல்ல. ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான பனிக்கரடிகள் வாழ்கின்றன. கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே பனிக்கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன.

    கடையாக 2016 ஆம் ஆண்டு தான் ஐஸ்லாந்தில் பனிக்கரடி காணப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து இப்போது வரை ஐஸ்லாந்தில் 600 பனிக்கரடிகள் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    • தைவான் வழங்கிய பேஜரில் 3 கிராம் வெடிபொருளை மொசாட் சேர்த்ததாக இஸ்புல்லா குற்றச்சாட்டு.
    • ஹிஸ்புல்லாவுக்கு பல்பேரியா நிறுவனம் தயாரித்த பேஜர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் இஸ்ரேலின் வடக்குப்பதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடியமர்த்தப்படுவதுதான் போரின் புதிய இலக்கு என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதனால் லெபானான் நாட்டின் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இஸ்ரேல் அறிவிப்புக்கு அடுத்த நாள் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பேஜர்களை தைவானை அடிப்படையாக கொண்ட நிறுவனம் தயாரித்ததாகவும், அந்த பேஜர்களை மாற்றம் செய்து அதில் 3 கிராம் வெடிப்பொருட்களை மொசட் இணைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    தற்போது பேஜர்கள் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பல்கேரிய விசாரணை அமைப்பு DANS தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    விசாரணையில் நோர்ட்டோ குளோபல் லிமிடெட் நிறுவனம் ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக சந்தேகம் எழுந்தது. இந்த நிறுவனம் குறித்து பல்கேரியா விசாரணை அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது 2022-ல் சோபியாவில் அந்த நிறுவனம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதன் உரிமையாளர் நார்வே நாட்டைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

    ரின்சன் ஜோஸ் கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறியவர். நார்வே குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.

    பின்னர், லெபனான் பயன்படுத்திய பேஜர்கள் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல. பல்கேரியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்படவில்லை. இறக்குமதியும் செய்யப்படவில்லை என விசாரணை முடிவில் DANS தெரிவித்துள்ளது.

    • இந்தியத் தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
    • இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் அலுவலக வளாகத்தில் கிடந்து உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, இந்தியத் தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக அனைத்து ஏஜென்சிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை. இந்த துயர நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன என்று தெரிவித்தது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது.
    • 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    சீனாவில் பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ,1.18 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    கைதான ஜாங் யாங், தனது தோற்றத்திற்காக "அழகான கவர்னர்" என்று செல்லப்பெயர் பெற்றார். கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) ஆளுநராகவும் துணை செயலாளராகவும் பணியாற்றினார். இந்நிலையில், அவர் உடன் பணிபுரியும் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    52 வயதான அவர் 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இறுதியில் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) துணை பதவிக்கு உயர்ந்தார். விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்ததால் பிரபலமாக அறியப்பட்டார். அதேபோல் உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு ஆதரவாக தனது சொந்த பணத்தை செலவழித்தார் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது. அதில் ஜாங் லஞ்சம் பெற்றதாகவும், தனது விருப்பமான நிறுவனங்களை தனது பதவியைப் பயன்படுத்தை லாபகரமான ஒப்பந்தங்களை பெற்றுத்தந்ததாகவும் கூறப்பட்டடது. மேலும் தன்னுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஒரு தொழிலதிபருக்கு உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

    மேலும், 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரால் பெற்ற பலன் காரணமாக சிலர் அவரது காதலராகத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது, மற்றவர்கள் அவருடைய அதிகாரத்திற்கு பயந்து தயக்கத்துடன் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    • ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது.
    • வீதியில் வந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று செல்போனே கதி என்று கிடக்கிறார்கள்.

    ஒரு காலத்தில் வீடுகளில் தொலைபேசி இருந்தாலே அவர்களை பெரிய பணக்காரர்களாக பார்ப்பார்கள். அந்த தொலைபேசி படிப்படியாக வளர்ந்து தற்போது செல்போன்களாக உருவெடுத்து விட்டன.

    இன்றைய விஞ்ஞான உலகில் அனைத்தும் கையில் அடக்கம் என்பது போல செல்போன்கள் உள்ளன. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் இன்று வளர்ச்சி அடைந்து, பொழுதுபோக்கு, அறிவியல் அறிவு, விளையாட்டு, தொழில் என அனைத்து தகவல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

    செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பெல்லாம் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலாவை காண்பித்து சோறு ஊட்டுவார்கள். விளையாட்டு காண்பித்தும், கதைகளை கூறியும் உணவு அளித்தார்கள். ஆனால் இன்றோ தலைகீழாக மாறி விட்டது. குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகள் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கும் பெற்றோர், செல்போனை கொடுப்பதால், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றன. பின்னர் செல்போன் கொடுக்காவிட்டால் அடம்பிடிக்கின்றன.

    குழந்தைகள் நிலைமை இவ்வாறு என்றால் இளம்பெண்கள், இளைஞர்களின் நிலைமை ரீல்ஸ்மோகம். அதுமட்டுமின்றி செல்பி மோகமும் அதிகரித்து விட்டது. இதனால் சமீபகாலமாக செல்போன்களால் பலரும் பாதிப்படைந்து வருகிறார்கள். செல்போன்களால் நன்மைகள் இருந்தாலும், அதில் தீமைகளும் அதிகமாகதான் இருக்கின்றன. பள்ளி மாணவ-மாணவிகள் செல்போனை நீண்ட நேரம் பார்ப்பதால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்தால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

    முதலில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக நேரம் செல்போன்களை பார்ப்பதால், குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் விளைவு மோசமாகி விடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வீதியில் வந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகள் குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்க ஆலோசித்து வருகின்றன. இதில் தற்போது சுவீடனில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோருக்கு சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதை பெற்றோர் தான் நடைமுறை படுத்த வேண்டும்.

    இதேபோல ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "சமூக ஊடகங்கள் சிறுவர்களின் சமூக சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் உண்மையான நண்பர்களிடம் இருந்தும், உணர்வுபூர்வமான அனுபவங்களில் இருந்தும் விலகி விடுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்வதற்கான சட்டபூர்வ வழிகளை ஆராய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்றை ஆஸ்திரேலியா அரசு அமைத்துள்ளது. இந்த சமூக ஊடகங்களை சிறுவர்கள் செல்போன்கள் மூலமாக தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அந்த இளைஞர்கள் தற்போதைய குழந்தைகள். தற்போதே குழந்தைகள் செல்போன்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்று சுவீடன், ஆஸ்திரேலியா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதே போன்று நம்நாட்டிலும் செல்போன்களை பயன்படுத்த குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம். அவ்வாறு விதிக்கப்படும் போது அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். இது போன்ற நடவடிக்கை சமூக நலன்களுக்கும் வழிவகுக்கும். குற்றச்சம்பவங்களும் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

    எனவே நமது நாட்டில் குழந்தைகள், மாணவ பருவத்தினர் படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதை நடைமுறை படுத்துவது பெற்றோர் கையில்தான் உள்ளது. எது எப்படியோ எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என்பார்கள். அதை ஸ்மார்ட் போன்கள் விழுங்கி விடக்கூடாது என்பது பலரது எண்ணம். இந்த எண்ணம் நிறைவேறுமா?

    • 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
    • தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை விட்டு விலகி நாட்டை விட்டே ஓடினார்.

    அதன் பிறகு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியதால் இலங்கை மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது.

    அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 58 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா களம் இறங்கி உள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் களத்தில் உள்ளனர்.

    இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கே, அனுர குமார திச நாயகே, சஜித் பிரேமதாசா ஆகிய 3 பேர் இடையேதான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    • இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது.
    • மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன்.

    இலங்கையில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அதிபர் ரனில் விக்கிரமசிங்கே 'தந்தி' டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயாரா?

    பதில்:- கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் எப்படி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடன் பேச மாட்டீர்களோ, அதே மாதிரிதான் நாங்களும்.

    கேள்வி:- கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வாய்ப்பே இல்லையா?

    பதில்:- நாம இரண்டு பேரும் ஒரே கொள்கையை தானே வைத்திருக்கோம். நம்ம நாட்டு எல்லைகளை பற்றி மற்றவர்களோடு பேசுவதில்லை. நீங்க காஷ்மீர் பற்றி பேச மாட்டீர்கள். நான் கச்சத்தீவை பற்றி பேசமாட்டேன்.

    கேள்வி:- இந்திய அரசு, கச்சத்தீவை ஒரு முடிந்து போன பிரச்சனையாக நினைக்கவில்லையே?

    பதில்:- இந்தியா அதை முடிந்து போன பிரச்சனையாகத்தான் பார்க்கிறது. அது எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அது அவங்களுக்கு தெரியும். இந்திரா காந்தியும், பண்டாரநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஊடகங்கள்தான் அப்படி பார்ப்பதில்லை.

    கேள்வி:- சமீபத்தில் இந்தியா இதுபற்றி உங்களிடம் பேசவில்லையா?

    பதில்:- இல்லை. அவர்கள் மீனவர் பிரச்சனை பற்றி மட்டும்தான் பேசினார்கள். நாங்களும் மீனவர் பிரச்சனையை அவர்களிடம் எழுப்பினோம்.

    கேள்வி:- கச்சத்தீவை பற்றி உங்களிடம் பேசவே இல்லையா?

    பதில்:- அது ஒரு பிரச்சனையே இல்லையே...

    கேள்வி:- வரலாற்று குறிப்புகளின்படி, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்றுதான் இந்தியாவில் பலர் நினைக்கிறார்களே...

    பதில்:- வரலாற்று குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது. எங்களுக்கு இந்தியாவுடன் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட பெரும்பாலான மக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் மட்டும்தான் எழுப்புவார்கள். அதுவும் ஒரு அரசியல் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்.

    கேள்வி:- இது வெறும் தமிழ்நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா?

    பதில்:- தமிழ்நாட்டிலும் ஒரு சின்ன பகுதியில்தான் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவையிலோ இந்த பிரச்சனை இல்லையே. நாங்கள் இந்தியா முழுவதும் செல்கிறோம். இது ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு தெரியும்.

    கேள்வி:- இந்திய வெளியுறவு மந்திரி கச்சத்தீவு இந்தியாவுடையது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?

    பதில்:- அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தில்தான் அவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

    இவ்வாறு இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே பதில் அளித்தார்.

    மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

    மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன். முதலில், யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பங்கை வேறு மீனவர்கள் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும். நீங்களும் (தமிழகம்) அதை மனிதாபிமானத்தோடு அணுகுவீர்கள் என்று நினைக்கிறேன். இது இலங்கையின் கடல் பகுதி. உட்கார்ந்து பேசினால் உங்களுக்குள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    பாண்டாக்களின் பூமியாக கருதப்படுகிறது சீனா. ஆனால் அங்கு நிஜ பாண்டாக்களுக்குப் பதிலாக நாய்களுக்கு வர்ணம் பூசி கரடியாக்கி காட்சிக்கு வைத்த வினோதம் நிகழ்ந்துள்ளது.

    ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்வைக்கு விடப்பட்டிருந்த பாண்டாக்களில் ஒன்று நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு மூச்சிரைக்கும் காட்சியும், திடீரென நாய்போல குரைக்கத் தொடங்கியதும் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    அப்போதுதான் அது வர்ணம் பூசப்பட்ட நாய் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த கூண்டில் இருந்த நாய்க் கரடிகளை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வைரலாக்கினார்கள். அது உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது. அதன்பிறகு பூங்கா நிர்வாகம் நாய்களுக்கு பெயிண்ட் பூசிய உண்மையை ஒப்புக்கொண்டது. சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    • இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம்.
    • இது முழுமையான போர் பிரகடனம் என ஹிஸ்புல்லா தெரிவித்தது.

    ஜெருசலேம்:

    லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள்மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    1983-ம் ஆண்டு பெய்ரூட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான இப்ராகிம் அகில் குறித்த தகவலுக்கு 7 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர்
    • சுமார் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே லெபனானில் ஹிஸ்புல்லா தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலும் நடத்தியதால் பதற்றம் அதிகரித்திருந்தது.

    இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சுமார் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

    • கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவாக உள்ளனர்
    • ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் இஸ்ரேல் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருகிறது

    நவம்பர் 5 ஆம் தேதி அமரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரச்சாரங்களில் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப் உலக அரசியலில் அமெரிக்கா பின் தங்கியுள்ளதாகக் கூறி வருகிறார்.

    இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் நேற்றய தினம் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம்.

    ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் கமலா யூதர்களை  வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான் என்று தெரிவித்த அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.

    மேலும் சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது.

    • இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

    பெய்ரூட்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    ஹமாசுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரும் துணையாக இருந்து வருகின்றனர். லெபனானில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    தெற்கு லெபனான் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடமாகவும், வீடுகளில் சுரங்க பாதைகள் அமைத்தும், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது.

    இதனால் பாதுகாப்பு கருதி ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    தங்களது இருப்பிடம் பற்றி வெளியில் தெரியாது என்பதற்காக அவர்கள் இதை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த புது விதமான தாக்குதல் லெபனான் நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டி தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. தொலை தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்புகளையும் இஸ்ரேல் மீறி விட்டதாகவும், இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்தார் . இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர் இதுவரை காணாத தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரும் அதிரடி தாக்குதலில் இறங்கினார்கள்.

    தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினார்கள். போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.

    இந்த குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இதில் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நேற்று இரவு இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் லெபனானில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சைரன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்டர் தெரிவித்துள்ளார். போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    காசா போர் தொடங்கிய பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே முழுமையாக போர் நடக்கும் என எதிர்பார்க்கபடுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

    ×