என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
* தமிழகம், புதுவை காரைக்காலில் 28-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
* தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- கிளென் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்துள்ளார்.
- ஐந்து வீரர்கள் அதிகமுறை டக் அவுட் ஆகியுள்ளார்.
உலகளவில் பிரபலமான கிரிக்கெட் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை நடக்கும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பிரான்சைஸ் அணிகளுக்காக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் 2025 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கியது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காக மல்லுக்கட்டும் தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. மேலும், ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனை படைக்கப்பட்டு வருகிறது.
அப்படியாக நேற்று (மார்ச் 25) நடந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மோசமான சாதனை படைத்தார். நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-ஐ எதிர்கொண்ட பஞ்சாப் அணிக்கு கிளென் மேக்ஸ்வெல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். எனினும், இவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் முதலிடம் பிடித்தார். இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 19 முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்களின் டாப் 10 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்...
டக் அவுட் ஆனவர்கள் டாப் 10 பட்டியல்:
கிளென் மேக்ஸ்வெல் 19 முறை
ரோகித் சர்மா 18 முறை
தினேஷ் கார்த்திக் 18 முறை
பியூஷ் சாவ்ளா 15 முறை
சுனில் நரைன் 15 முறை
மந்தீப் சிங் 15 முறை
ரஷித் கான் 15 முறை
மணிஷ் பாண்டே 15 முறை
அம்பத்தி ராயுடு 14 முறை
ஹர்பஜன் சிங் 13 முறை
- 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
- இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
தமிழக கோவில்களில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-
திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 4 கோவில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது விபத்தின் காரணமாக அல்ல. உடல்நலக்குறைவின் காரணமாக நடைபெற்ற சம்பவம் ஆகும்.
தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான்கோவில்களில் அதிகமாக கூட்டம் கூடுகின்ற கோவில்களுக்கு மருத்துவ வசதி தேவை என்ற நிலையிலே இரண்டே இரண்டு கோவில்களில் இருந்த மருத்துவ வசதியை 17 கோவில்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம்.
கடந்த 2023-ம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று ஒரு நீதிபதி நோய்வாய் பட்டு மயங்கிய சூழ்நிலையில் அன்றைக்கு அந்த நீதிபதி உயிரை காப்பாற்றியது அங்கு மருத்துவ முகாமில் இருந்த மருத்துவர்கள் தான்.
இந்த 17 மருத்துவமனைகளில் இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.
வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்து, 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது, இதற்கெல்லாம் முதலமைச்சர் எடுத்த பெரும் முயற்சிகள் தான் காரணம். சுமார் ரூ. 1711 கோடி மதிப்பில் பெருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம்.
- ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
சென்னை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்று கூறினார்.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி அமைய பல்வேறு நிபந்தனைகளை இ.பி.எஸ். விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* தமிழகத்தில் 2026 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
* தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அ.தி.மு.க.தான் எடுக்கும்.
* ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது.
* அண்ணாமலையை பா.ஜ.க. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
- பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற அந்த மகா கலைஞனின் கம்பீர குரல் இன்று தனது ஒரே மகனான மனோஜ் மறைவு அவரை நொறுங்க செய்து விட்டது.
மனோஜ் மறைவு குறித்து தகவல் அறிந்ததும் சேரன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, நாஞ் சில் பிசி அன்பழகன் உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த மனோஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
சென்னையில் 8-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்த கொள்ளையன் நேற்று நள்ளிரவு தரமணி ரெயில் நிலையம் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்நிலையில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்து காலை 6 மணி முதல் 7 வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
* தாம்பரத்தில் இதேபோன்று நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் உடனடியாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தது.
* கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் ஏறுபவர்கள் குறித்து கண்காணிக்குமாறு முன்பே ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கூறி இருந்தோம்.
* அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை. அதுவும் ஒரு ஆதாரமானது.
* ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த கொள்ளையர்களை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
* செயின் பறிப்பு கொள்ளையர்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.
* நேற்று பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது மும்பையில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* ஒருவன் முந்தைய நாள் இரவும், மற்ற இருவரும் அடுத்த நாள் அதிகாலையும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
* ஒருவன் முன்னதாக வந்து பைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்த பின்னர் மற்ற இருவர் அடுத்த நாள் வந்து கைவரிசை.
* கடந்தாண்டு சென்னையில் நடந்த 34 செயின் பறிப்பு சம்பவங்களில் 33-ல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளன.
* நேற்று நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் இரானி கொள்ளையர்கள். இவர்கள் இதற்கு முன்பு சென்னையில் கொள்ளைகளை அரங்கேற்றினரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* சென்னையில் கொள்ளையன் சாலையில் பைக் ஓட்டிய வேகத்தை பார்க்கும்போது இதற்கு முன்பே வந்ததுபோல் தான் உள்ளது.
* கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
* அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்தார் 2 படத்தின் டப்பிங் தொடங்கியதாக அறிவித்து இருந்தது.
- அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது.
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.
அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்களில் சர்தார் 2 படத்திற்கான டப்பிங் பூஜையுடன் தொடங்கியதாக அறிவித்து இருந்தது.
இதைத் தொடர்ந்து சர்தார் 2 படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்தார் 2 படத்தின் டீசர் உருவாகிவிட்டதாகவும், இதற்கு சென்சார் பெறும் பணிகளும் முழுமை பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி விரைவில் 2.54 நிமிடங்கள் ஓடும் டீசர் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக சர்தார் 2 பட்த்திற்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கினார். இதனால் காயமுற்ற நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான்.
- எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும்.
சென்னை:
டெல்லியில் அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக சட்டசபையில் பேசும்பொருளாக மாறி உள்ளது. சட்டசபையில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,
அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம் என்று பேசினார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது நீங்கள் (அதிமுக) தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பதில் அளிக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும் என்று சினிமா படபாணியில் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
- சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களை கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களின் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கடி நடப்பதால் விமான பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடு பாதையின் மீது பறவை கூட்டம் வட்டமிட்டபடியே இருப்பதால் அடிக்கடி இந்த சம்பவம் நடக்கிறது.
நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களில் பறவைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், திருனந்தபுரம் விமான நிலையத்திற்கு அருகில் பறவைகளின் அடர்த்தி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக விமானிகள் கூறுகின்றனர். பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று விமான நிலைய ஆணையம் பல முறை எச்சரித்துள்ளது.
பறவைகள் விமானங்களின் மீது மோதுவதை தடுக்க பறவைகளை துரத்துபவர்களை விமானநிலையம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துகிறது. அவர்கள் விமானம் வரும் போது பறவைகளை பயமுறுத்துவதற்கு உரத்த ஒலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த ஒலிகளுக்கு பறவைகள் பழகிவிட்டதால் அவை அஞ்சுவதில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பறவைகள் அதிகளவில் வருவதற்கு காரணம் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் குப்பை குவியல் இருப்பதே காரணம் என்றும், அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் அரசுக்கு ஏறுகனவே கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.
விமான நிலைய சுற்றுச்சுவர்களுக்கு அருகில் திறந்தவெளிகள் மற்றும் அதன் அருகில் செயல்படும் இறைச்சி கடை கழிவுகள் கொட்டப்படும் கிடங்குகள் ஆகியவையே பறவைகள் இந்த பகுதிக்கு அதிகமாக வருவதற்கு காரணமாக இருக்கின்றன.
கழுகு, காகம், கொக்கு, புறா, ஆந்தை உள்ளிட்ட பறவைகள் இறைச்சி கழிவுகளை உண்பதற்காக விமான நிலைய பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு பறவைகள் அதிகளவில் வருவது விமானங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குகிறது.
விமான போக்குவரத்து விதிமுறைகளின் படி ஒவ்வொரு பத்தாயிரம் விமானங்களுக்கும் ஒரு பறவை மோதல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 பறவை மோதல் சம்பவங்கள்நடக்கின்றன.
இது பல நிலை விசாரணையை தூண்டுவதால், அதனை தவிர்க்க விமானிகள் பெரும்பாலும் பறவை மோதல்களை அதிகாரபூர்வமாக புகாரளிக்க முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விமானத்தின் மீது பறவை மோதல் என்பது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக விபத்து எதுவும் நடந்தால் பேரழிவுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் குழு கூட்டத்தில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகள் மோதினால் விமானத்தின் இயந்திரம் செயலிழந்து தீவிபத்து ஏற்படலாம்.
மேலும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகளை சேதப்படுத்தும் என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். பறவைகள் மோதுவது பயணிகளுக்கு மட்டுமல்ல விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும் ஆபத்தானது. ஆகவே இந்த பிரச்சனையை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
- நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அலகாபாத் நீதிபதி வழங்கிய சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறியதாவது:-
போதிய sensitivity இல்லாமல் எழுதப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது.
சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது. அலகாபாத் நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துகிறோம் என்று கூறினர்.
- அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ‘சக்தித் திருமகன்’.
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் 'சுக்ரன்' படம் மூலமாக இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். அதன்பின் வரிசையாக பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.
இதற்கிடையே 'நான்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ரோமியோ', 'மழைபிடிக்காத மனிதன்', 'ஹிட்லர்' போன்ற படங்கள் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'ககன மார்கன்' படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே, அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் 'சக்தித் திருமகன்'. இந்தப் படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்க உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதை அடுத்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'ஜென்டில்வுமன்' பட இயக்குநர் ஜோசுவா சேதுராமனுடன் விஜய் ஆண்டனி இணைந்து பணியாற்ற உள்ளார். விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தினேன்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப்போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து (மொழிக்கொள்கை) அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
* தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன்.
* பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.






