என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
    • இதனால் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் 3-0 என பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா 56.25 சதவீதத்துடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியா 54.16 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 50 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், வங்காளதேசம் 50 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • சமீபத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.
    • திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிபெறும் அணியாக இந்தியா திகழ்கிறது என்றார்.

    புதுடெல்லி:

    தனியார் விளையாட்டு சேனல் நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா பயணம் திட்டமிட்டபடி அமையவில்லை. இந்திய அணி முதல் டெஸ்டில் அதிக வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை அந்த அணி இழந்தது. ஏராளமான திறமைகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா திகழ்கிறது. சமீபத்திய காலங்களில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் அதிகம் வெற்றி பெறவில்லை. அவர்கள் மேலே வர தவறுகிறார்கள். திறமைகள் மற்றும் திறன்கள் அனைத்தையும் கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக சாதித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    வாகனின் இந்தக் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    சர்வதேச கிரிக்கெட்டில், குறிப்பாக டெஸ்ட் வடிவத்தில் இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்து சிரிக்க வைக்கிறது.

    ஆம், நாங்கள் பல ஆண்டுகளாக ஐ.சி.சி. கோப்பையை வென்றதில்லை. விளையாட்டின் பவர் ஹவுஸ் என்று இந்தியாவை குறிப்பிடுகிறோம். இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நாங்கள் பல சிறந்த முடிவுகளைப் பார்த்திருக்கிறோம்.

    விளையாட்டின் நீண்ட வடிவத்தில் வெளிநாடுகளில் இந்திய அணி வியக்கத்தக்க வகையில் செயல்பட்டுள்ளது. நல்ல மன உறுதியும், மனத்திறனும் கொண்ட ஒரு நல்ல கிரிக்கெட் அணி எங்கிருந்தும் மீண்டும் களமிறங்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் இரு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோற்றோம். நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் ஒரு டெஸ்ட் தொடரின்போது மீண்டும் திரும்புவது எப்போதும் சாத்தியமாகும் என தெரிவித்தார்.

    • ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
    • இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணி விவரம் வருமாறு:

    இப்ராகிம் ஜட்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப், ரஷித் கான்.

    • டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்.
    • டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 11-ம் தேதி துவங்க இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்து இருந்தனர்.

     


    2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வந்தனர்.

    இவர்களுக்கு மாற்றாக தேர்வுக்குழு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளித்தது. 

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வியடைந்தது.
    • கேப்டவுன் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ராகுல் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

    2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதற்கு கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில் இந்திய அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பு முதல்தர பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    வெளிநாட்டு பயணங்களில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி திட்டமிடல் செய்வது அவசியமாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி மிகவும் மோசமானது. பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் நேரடியாக டெஸ்டில் விளையாடியதால் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தயார்ப்படுத்திக் கொள்ள முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • 112 டெஸ்டில் விளையாடி 8786 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.59 ஆகும்.
    • அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன் ஆகும்.

    உலகின் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னியில் நடந்த போட்டி அவரது கடைசி டெஸ்டாகும். தனது கடைசி இன்னிங்சில் அவர் 57 ரன்கள் எடுத்தார். 75 பந்தில் 7 பவுண்டயுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

    37 வயதான வார்னர் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனார். அவர் 112 டெஸ்டில் விளையாடி 8786 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.59 ஆகும். 26 சதமும், 37 அரை சதமும் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன் ஆகும். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் இந்த ரன்னை குவித்தார்.

    வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதை அவர் சமீபத்தில்தான் அறிவித்தார். 20 ஓவர் போட்டியில் மட்டுமே அவர் விளையாடுவார்.

    • முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
    • 2-வது இன்னிங்சில் 115 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தது. பின்னர் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை 299 ரன்னில் சுருட்டியது. ஜமால் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் 14 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் சொதப்பியது. ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. முகமது ரிஸ்வான் 6 ரன்களுடனும், ஜமால் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 28 ரன்னிலும், ஜமால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது. ஹேசில்வுட் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

    லபுசேன்- டேவிட் வார்னர்

    130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது அவரின் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும்.

    லபுசேன் 62 ரன்களும, ஸ்மித் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஆமிர் ஜாமல் ஆட்டநாயகன் விருதும், பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போப் லிட்ச்பீல்ட் 49 ரன்னும், எல்லீஸ் பெரி 37 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 4 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்.

    தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஸ்மிருதி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்களை எடுத்து வென்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஷபாலி வர்மா 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது.
    • ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

    • டெஸ்ட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    துபாய்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 117 ரேட்டிங் உடன் 2-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்னும், ஆமிர் ஜமால் 82 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. லபுசேன் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து வெளியேறினர். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர்.

    பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 6 விக்கெட்டும், அகா சல்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    14 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். அயூப் 33 ரன்னும், பாபர் அசாம் 23 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • முதல் பந்தில் இருந்து சீம் என்றால்... ஓகே.
    • அதேநேரம் முதல் பந்தில் இருந்து டர்னிங் என்றால், அவர்கள் அதை விரும்புவது இல்லை.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 55 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 153 ரன்னில் சுருண்டது.

    முதல் நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 2-வது நாளுடன் போட்டி முடிவடைந்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்துகள் வீசப்பட்ட நிலையில் முடிவடைந்த டெஸ்ட் போட்டி இதுதான். ஐந்து செசன்களை கூட தாண்டவில்லை.

    ஆடுகளம் ஸ்விங், பவுன்ஸ், கேரி, எக்ஸ்ட்ரா பவுன்ஸ் என அமர்க்களப் படுத்தியது. பேட்ஸ்மேன்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பந்து எப்படி வரும் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்திய வீரர்கள் ஆடுகளம் குறித்து புகார் அளிக்கவில்லை.

    இந்தியா SENA என அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சென்று விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் சற்று திணறத்தான் செய்வார்கள். இந்த நான்கு நாடுகளிலும் அவர்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்வார்கள்.

    ஆனால், இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும்போது வெளிநாட்டு வீரர்கள் ஆடுகளம் முதல் நாளில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் திரும்புகிறது புகார் அளிப்பார்கள். போட்டி நடுவர்களும் ஆடுகளம் குறித்து புகார் அளித்து ஐசிசி மதிப்பீடு செய்யும்.

    இந்த நிலையில்தான் போட்டி முடிந்த பிறகு, ஆடுகளத்தை நேரடியாக குறை கூறாத ரோகித் சர்மா, ஐசிசி நடுவர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    நீங்கள் இங்கே (தென்ஆப்பிரிக்கா) டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வரும்போது, டெஸ்ட் கிரிக்கெட்தான் உச்சக்கட்டமானது, அற்புதமானது என்று பேசுகிறீர்கள். அப்படி பேசுபவர்கள் அது நிலையில் இருக்க வேண்டும்.

    அதுபோன்ற ஒரு சவால் வரும்போது நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் முதல் நாளில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் திரும்பும் வகையில் செயல்படும்போது புழுதி கிளம்புகிறது, புழுதி கிளம்புகிறது என பேசுகிறார்கள். ஆடுகளத்தில் ஏராளமான வெடிப்புகள் (Crack) உள்ளது என்கிறார்கள்.

    நீங்கள் எங்கே சென்றாலும் அதே நடுநிலையுடன் செல்ல வேண்டும். சில போட்டி நடுவர்கள், ஆடுகளத்தை முறையாக ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும்.

    உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளம், சராசரிக்கு கீழ் என கணக்கிடப்பட்டுள்ளது. அதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் சதம் அடித்துள்ளார். அப்படியிருக்கும்போது எப்படி மோசமான ஆடுகளம் ஆகும்?.

    ஆகவே, ஐசிசி மற்றும் நடுவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆடுகளத்தை போட்டி நடத்தும் நாட்டை பார்க்காமல், நீங்கள் எதை பார்க்கிறீர்கள் அதைவைத்து மதிப்பிடுங்கள். அவர்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு அந்த அம்சங்களைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவதில் பெருமை கொள்கிறோம், நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.

    ஆடுகளம் எப்படி மத்திப்பிடப்படுகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். மும்பை, பெங்களூரு, கேப் டவுன், செஞ்சூரியன் உள்ளிட்ட அனைத்து ஆடுகளங்களும் வித்தியாசமானவை. ஆடுகளங்கள் விரைவாக மோசமடையும். சூழ்நிலைகள் மாறுபட்டவை.

    முதல் பந்தில் இருந்து பந்து சீம் என்றால்... ஓகே. அதேநேரம் முதல் பந்தில் இருந்து டர்னிங் என்றால், அவர்கள் அதை விரும்புவது இல்லை. பந்து சீம் ஆனால் ஓகே. டர்ன் (சுழற்பந்து வீச்சு திரும்பினால்) ஆனால் ஓகே இல்லை என்றால், அது தவறானது.

    போட்டி நடுவர்கள் இந்த மதிப்பீடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை நான் போதுமான அளவு பார்த்திருக்கிறேன், அவர்கள் எப்படி கவனிக்க விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    ×