என் மலர்
விளையாட்டு
- டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
- இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது.
- தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது. கவாஜா 30 ரன்னிலும் க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமானர். வேகப்பந்து வீச்சாளரான இவர் அறிமுக போட்டியில் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் 85 ஆண்டு கால சாதனையை ஷமர் ஜோசப் சமன் செய்துள்ளார்.
இதற்கு முன்பு டைரல் ஜான்சனுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை ஜோசப் படைத்துள்ளார். 1939-ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஜான்சன் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, ஆண்கள் டெஸ்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 23-வது பந்து வீச்சாளர் ஜோசப் ஆவார்.
கயானாவில் உள்ள சிறிய கிராமமான பராசராவைச் சேர்ந்தவர், 24 வயதான அவர் முன்னதாக பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் கெமர் ரோச்சுடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்கள் எடுக்க இந்த ஜோடி உதவியது. இறுதியில் ஜோசப் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
- இந்த 3 போட்டிகளிலும் பாபர் அசாம் அரை சதம் விளாசி உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பின் ஆலன் 5 பவுண்டரி 16 சிக்சருடன் 137 (62) ரன்கள் விளாசினார்.
அதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் களமிறங்கிய வீரர்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். வெற்றிக்காக போராடிய பாபர் அசாம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகள் முறையே பாபர் அசாம் 66, 57, 58 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் தோல்வியை சந்தித்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சோகமான சாதனையையும் பாபர் அசாம் படைத்துள்ளார்.
மேலும் ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 அரை சதங்கள் அடித்துள்ளார். அதுபோல பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிராக 8 அரை சதங்கள் விளாசியுள்ளார்.
இதை தவிர அயல்நாட்டு மண்ணில் 23 அரைசதங்கள் விளாசிய ரோகித், விராட் கோலி சாதனையை பாபர் அசாம் முறியடித்தார். அவர் 24 அரை சதம் விளாசியுள்ளார்.
- முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
- பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது.
டுனிடின்:
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 137 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடங்கும்.
16 சிக்சர்கள் விளாசியதன் மூலம் பின்ஆலன் புதிய சாதனை புரிந்தார். அவர் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசரத்துல்லாவை சமன் செய்தார். ஹசரத்துல்லா 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக டேராடூன் மைதானத்தில் 16 சிக்சர்கள் அடித்து இருந்தார். தற்போது இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.
மேலும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் பின்ஆலன் படைத்தார். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரராக மெக்கல்லம் திகழ்ந்தார். அவர் 2012-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக பல்லேகலேவில் 123 ரன் எடுத்து இருந்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 4-வது 20 ஒவர் போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
- கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள கோகோ கவூப் (அமெரிக்கா) சக நாட்டை சேர்ந்த கரோலின் டோனி ஹைடை எதிர்கொண்டார்.
இதில் கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டத்தில் மினாவூர், ஹண்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
6-வது வரிசையில் இருக்கும் ஒனஸ் ஜபேர் (துனிசியா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா வோஸ்னியாக்கியும் (டென்மார்க்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஜெஸ்பர் டி ஜாங்கை எதிர்கொண்டார். இதில் சின்னர் 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கிர்க் மெக்கன்சி அதிக பட்சமாக 50 ரன் எடுத்தார்.
- கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலியா 'டாஸ்' வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. கிர்க் மெக்கன்சி அதிக பட்சமாக 50 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 45 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரராக ஆடிய ஸ்டீவ் சுமித் 12 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். லபுஷேன் 10 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது. கவாஜா 30 ரன்னிலும் க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
- "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
- 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்
"லிட்டில் மாஸ்டர்."
கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).
1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.
பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.

பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.
1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.
பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.
டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.

1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.
2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
- சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது
- விரைவில் திரைப்படம் குறித்து நல்ல செய்தி அளிப்பேன் என்றார் யுவ்ராஜ்
இந்தியர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டிலும், சாதனை படைக்கும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் அதிக ஆர்வம் உண்டு.
கிரிக்கெட்டில் சாதனை புரிந்த பல முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெறுகிறது.
கபில் தேவ், மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவானது.
இந்திய கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரராக உலக அளவில் சாதனை புரிந்தவர் முன்னாள் வீரர், யுவ்ராஜ் சிங் (Yuvraj Singh). கிரிக்கெட்டில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்றவர் அவர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பேசிய அவரிடம், "தற்போது உள்ள கதாநாயகர்களில் உங்கள் வேடத்தில் எவர் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?" என யுவ்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்ததாவது:
சமீபத்தில் நான் "அனிமல்" திரைப்படம் பார்த்தேன். அதில் ரன்பீர் சிங் நடிப்பை கண்டதிலிருந்து எனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால், திரையில் என்னை பிரதிபலிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் எனும் முடிவில் உள்ளேன். ஆனால், அது இயக்குனரின் முடிவை பொறுத்தது. இது சம்பந்தமான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து நல்ல செய்தி அளிப்பேன்.
இவ்வாறு யுவ்ராஜ் சிங் கூறினார்.

2011ல் யுவ்ராஜ் சிங்கிற்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று, குணமடைந்து, நாடு திரும்பி மீண்டும் சில மாதங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.
- பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று அதானி கூறியுள்ளார்.
பிரக்யானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி இந்தியாவின் நம்பர் 1 ஆனார்.
கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்யானந்தா முதன்முறையாக மூத்த சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி இந்தியாவின் முதல் தரவரிசையில் உள்ள ஆடவர் சதுரங்க வீரர் என்ற இடத்தை பிடித்தார். இதையடுத்து டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த பிரக்யானந்தா இந்தியாவின் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்து சாதனையை படைத்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, செஸ் வீரரான பிரக்யானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதானி கூறியதாவது, "பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் நிச்சயமாக அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உதாரணம். தேசத்தை பெருமைப்படுத்துவதிலும், உயர்ந்த இடங்களில் பாராட்டுகளை வெல்வதையும் விட உன்னதமானது எதுவுமில்லை. மேலும் விளையாட்டு வீரர்களின் பயணத்தில் துணையாய் நிற்பதில் அதானி குழுமம் அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.
இந்த பதிவுக்கு பிரக்யானந்தா, உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நான் விளையாடும் போதெல்லாம், நாட்டுக்காக அதிக பதக்கங்களை வெல்வதே எனது ஒரே குறிக்கோள். எனது திறமைகளை நம்பியதற்காக அதானி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
- இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
- விராட் கோலி 14 மாத இடைவெளிக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை விராட் கோலி படைக்கவிருக்கிறார். 6 ரன் சேர்த்தால் அவர் அந்த மாபெரும் சாதனையை எட்டுவார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலி அவரைப் போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால், டி20 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அதிகம் ஆடாத நிலையில், கிரிக்கெட்டின் நவீன வடிவமான டி20யில் சச்சினுக்கு அடுத்த தலைமுறை வீரரான விராட் கோலி தன் முத்திரையை பதித்து இருக்கிறார்.
அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட பிற உள்ளூர் டி20 போட்டிகளை சேர்த்து ஒட்டு மொத்த டி20 போட்டிகளில் விராட் கோலி இதுவரை 11994 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 6 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 12000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும், உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்யும் நான்காவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெறுவார். உலக அளவில் இதுவரை கிறிஸ் கெயில் (14562 ரன்கள்), சோயப் மாலிக் (12993 ரன்கள்), பொல்லார்ட் (12430 ரன்கள்) அடித்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி 12000 டி20 ரன்கள் குவித்து நான்காம் இடத்தை பெறுவார். இந்த நால்வரில் விராட் கோலி தான் அதிக டி20 பேட்டிங் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 14 மாத இடைவெளிக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
- கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.
- சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.
கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும்.
மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா சிறந்த வீராங்கனையாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
- சச்சின் அணியில் இர்பான் பதான், அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
- யுவராஜ் தலைமையிலான அணியில் யூசுப் பதான், முரளிதரன், மகாயா நீட்னி, சமிந்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பெங்களூரு:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதிலிருந்து எப்போதாவது சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது உண்டு.கொரோனா காலகட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கிரிக்கெட் போட்டியில் சச்சின் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சச்சின் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். பெங்களூருவில் வரும் 18-ம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் பணம் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையிலான மற்றொரு அணியும் விளையாட உள்ளது. சச்சின் அணியில் நமன் ஒஜா, பத்ரிநாத், இர்ஃபான் பத்தான், அசோக் டின்டா, அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
யுவராஜ் சிங் தலைமையிலான அணியில் பார்த்திவ் பட்டேல், முகமது கைஃப், யூசுப் பத்தான், ஜேசன் கிரிசா, முரளிதரன், மகாயா நீட்னி சமீன்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்த போட்டிக்காக சச்சின் டெண்டுல்கர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






