என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஷ்ரேயாஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஷ்ரேயாஸ் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று என்சிஏ மருத்துவர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷ்ரேயாஸ் மோசமான ஆட்டம் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த வாய்ப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, விதர்பா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச அணிகள் முன்னேறி இருந்தன. மேலும் மும்பை அணி காலிறுதிப்போட்டியில் பரோடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஷ்ரேயாஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் இஷான் கிஷன் உள்பட பல முன்னணி வீரர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது.

    அதிலும் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளில் இடம்பிடித்திருந்த வீரர்கள் இவ்வாறு செய்து வருவது வருத்தமளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சில காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது சர்ச்சையான நிலையில், அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.

    அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஷ்ரேயாஸ் காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனால் ஷ்ரேயாஸ் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகும் என கருதப்படுகிறது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு மிட்செல் மார்ஷ் அனைவராலும் பாராட்ட கூடிய ஒரு செயலை செய்துள்ளார். அது என்னவென்றால் ஆட்ட நாயகன் விருதை போட்டியை காண வந்த ஆஸ்திரேலிய ரசிகருக்கு மிட்செல் மார்ஷ் வழங்கி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ரசிகர் மகிழ்ச்சியில் திகைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்னர் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாங்கிய ஆட்ட நாயகன் விருதை சிறுவனுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணி 1937-38 மற்றும் 1986-87 பதிப்புகளில் ரஞ்சி கோப்பையை வென்றது.
    • மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது.

    ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ரஞ்சி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசும், பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

    மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர் தலா அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

    ஐதராபாத் அணியின் வெற்றிக்கு மாநில கிரிக்கெட் சங்கம் வெகுமதிகளை அறிவித்தது. பிளேட் குரூப் சாம்பியன்களுக்கு ரூ. 10 லட்சமும், சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ. 50,000 பரிசும் வழங்குவதாக உறுதியளித்தது. இதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் BMW கார் வழங்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜெகன் மோகன் ராவ் அர்சினப்பள்ளி உறுதியளித்துள்ளார்.

    மேலும் ஒட்டுமொத்த அணிக்கும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத் அணி 1937-38 மற்றும் 1986-87 பதிப்புகளில் ரஞ்சி கோப்பையை வென்றது. ஆனால் கடந்த பதிப்பில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்த ஐதராபாத் அணி ஏழு லீக் ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தபோது பிளேட் பிரிவுக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதியில் ரிபாகினா விலகியதால் பவ்லினி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. 2வது காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியும் மோதுவதாக இருந்தது.

    இந்நிலையில், உடல்நலக் குறைவால் ரிபாகினா விலகினார். இதையடுத்து பவுலினி அரையிறுதிக்கு முன்னேறியதாக

    அறிவிக்கப்பட்டார்.

    • முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகிறது.
    • இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகி உள்ளது.

    இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியது. 

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2-ம் கட்ட அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகிறது. இதனை தொடர்ந்து சென்னை அணி மார்ச் 26-ந் தேதி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த 2 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சென்னை அணி மார்ச் 31-ந் தேதி டெல்லியுடனும் ஏப்ரல் 5-ந் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது.

    ஒரு அணி தலா 4 அணியுடன் மோதும் என்ற கணக்கில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

     

    • இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.
    • அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவி சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (NADA) உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதற்கு முன் அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்கால் காயம் குணமடையாத காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.

     

    இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாடல் அழகி தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதி வைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை.

    அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    அதேவேளையில் அபிஷேக் சர்மா, தன்யா சிங்கின் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்தி வைத்திருந்ததாகவும், அவருடைய மெசேஜ்-க்கு பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்டு நேரம் திறக்கப்படாத நிலையில், அவரது தந்தை சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பேஷன் டிசைனரான அவருக்கு, குறிப்பிடத்தகுந்த ரசிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கடைசி பகுதியான அமன் சேதுவுக்கு அருகில் ராணுவ வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கலந்துரையாடினார்.

    குல்மார்க்:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகும் ரசிகர்களின் அன்பும், பாசமும் மாறாமல் அப்படியே உள்ளது. அவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிடுவதுடன் அவருடன் புகைப்படம் எடுத்தும், கிரிக்கெட் விளையாடியும் மகிழ்கின்றனர்.

    இந்நிலையில், சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்ற அவர், உள்ளூர் ரசிகர்கள், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார். 

    அவ்வகையில், குல்மார்க் பகுதிக்கு சென்றபோது உள்ளூர் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடினார். சச்சினுக்கு ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசினார். முதல் 5 பந்துகளையும் சச்சின் சரியாக அடித்தார். பின்னர் மட்டையை தலைகீழாக பிடித்த சச்சின், கடைசி பந்தில் என்னை அவுட் ஆக்குங்கள் பார்க்கலாம், என சவால் விட்டார். ஆனால் இந்த முறையும் அவரை பந்துவீச்சாளரால் அவுட் ஆக்க முடியவில்லை. கடைசி பந்தை மட்டையின் கைப்பிடியால் துல்லியமாக தடுத்தார் சச்சின். பின்னர் உள்ளூர் ரசிகர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

    இந்த மகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோவை சச்சின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 'கிரிக்கெட் மற்றும் காஷ்மீர்: சொர்க்கத்தில் ஒரு போட்டி!' என அந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    நேற்று ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கடைசி பகுதியான அமன் சேது பாலத்தை சச்சின் பார்வையிட்டார். அமன் சேதுவுக்கு அருகில் உள்ள கமான் முகாமில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

    ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சுர்சூ என்ற இடத்திற்கு சென்ற சச்சின், கிரிக்கெட் மட்டை தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
    • 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ராஞ்சி:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

     

    இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரேகன் அகமதுக்கு பதில் பஷிர் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ராபின்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன்:-

    பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி

    • நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியானது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் பாலிவுட் திரை நட்சித்திரம் ஷாருக் கான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

    நாளை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

     


    ஷாருக் கான் மட்டுமின்றி ஷாஹித் கபூர், கார்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்களும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • இதுவரை எவ்வித தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.
    • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும்.

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், 2024 ஐ.பி.எல். தொடர் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். தலைவர் அருன் துமால் 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    மேலும் மார்ச் 22-ம் தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் துவங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஐ.பி.எல். 2024 தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    தொடரின் மீதமுள்ள போட்டிகள் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து திட்டமிடப்பட இருக்கிறது. 2024 ஐ.பி.எல். போட்டிக்காண அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், கடந்த ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதலாம் என்றும் கூறப்படுகிறது. 

    ×