என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தையை சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்த்ரா ஷர்மா உடன் மோதினார்.

    இதில் மரியா சக்காரியா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மரியா சக்காரி ரஷியாவின் வெரோனிகா உடன் மோத உள்ளார்.

    • இந்த தொடரின் புள்ளிபட்டியலில் சிஎஸ்கே 3-வது இடத்திலும் ஐதராபாத் 7-வது இடத்திலும் உள்ளது.
    • ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியிடம் 14 முறை ஐதராபாத் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த தொடரின் புள்ளிபட்டியலில் சிஎஸ்கே 3-வது இடத்திலும் ஐதராபாத் 7-வது இடத்திலும் உள்ளது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், ஐதராபாத் அணி 5 தடவையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
    • சூர்யகுமார் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திருப்பதி:

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து 17 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதன் முடிவில் கொல்கத்தா முதல் இடத்திலும் ராஜஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளது. 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை, லக்னோ, பஞ்சாப் அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை.

    அவர் காயம் காரணமாக என்சிஏ-வில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். முதல் கட்ட சோதனை அவர் உடல் தகுதியுடன் இல்லை என என்சிஏ அறிவித்தது. இதனால் அவர் முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ தெரிவித்தது. இந்நிலையில் சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார். அவர் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான்.
    • உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒரு கேப்டனாக இருந்தாலும் அல்லது ஒரு வீரராக இருந்தாலும், எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். எங்கள் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், அது மிகவும் நல்லது.

    ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான். அத்துடன் எதிரணியின் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் மகேந்திர சிங் டோனியை போன்ற ஒருவரை என்னால் தந்திரமாக மிஞ்ச முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    அதனால் அவரை புத்திசாலித்தனமாக முந்த முயற்சி எதுவும் பண்ண மாட்டேன். டோனி ஒரு மகத்தான வீரர். எனவே உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே முழுமையாக வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    என்று கூறியிருக்கிறார்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
    • ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின்சார வசதி வழங்கப்படும் என ஆர்ஆர் அறிவித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடத்தையும் டெல்லி, மும்பை அணிகள் கடைசி இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்நிலையில் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு அறிவிப்பை ராஜஸ்தான் அணி அறிவித்தது.

    அதன்படி இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய தகட்டின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.

    • முதல் செட்டை 6-7(5-7) என்ற புள்ளிக்கணக்கில் அசரென்கா இழந்தார்.
    • அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அசரென்கா கைப்பற்றினார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தையை சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-7(5-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்த அசரென்கா ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அசரென்கா அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார்.

    • ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார்.
    • அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 70 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் ஷசாங்சிங். அஷுதோஸ் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஷசாங் சிங் 29 பந்தில் 61 ரன்ம், அஷுதோஸ் 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.

    வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    இது ஒரு அற்புதமான ஆட்டம்.மிக மிக நெருக்கமாக இருந்தது.வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க திட்டமிட்டோம். ஆனால் நான் சீக்கிரமே அவுட் ஆனேன் சில விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்தோம்.

    அதன்பின் ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார். பெரிய இலக்கை துரத்தும்போது நீங்கள் உத்வேகத்தை தொடர வேண்டும். ஷசாங் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

    அவர் பந்தை மிக நேர்த்தியாக விளையாடினார். அவர் பதற்றம் அடையாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் 7-வது வரிசையில் இருந்து ஆரம்பித்து தற்போது தனது நேர்மறை மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார். இரண்டு இளம் வீரர்களும் அமைதி காத்து, அழுத்தத்தை குறைத்தனர். இவ்வாறு தவான் கூறினார்.

    குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறும்போது, நாங்கள் சில கேட்சுகளை தவற விட்டோம். ரன் சேசிங்கில் கேட்சுகளை தவற விடும் போது வெற்றி கடினமாகி விடும். 15-வது ஓவர் வரை ஆட்டத்தில் இருந்தோம். ஆனால் கேட்சுகளை கைவிடும் போது நீங்கள் சிக்கலில் இருப்பீர்கள். நாங்கள் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.

    • மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

     


    இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், 2025 ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் அணியில் இணைவதற்காக அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ரோகித் சர்மாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் கேப்டனாக செயல்படுவார் என்றும், அதற்கான ஒப்பந்த தொகையை அவரே தெரிவிக்க ஏதுவாக ரோகித் சர்மாவுக்கு பிளாங்க் செக் (blank cheque) வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எனினும், ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகுவது பற்றியோ, அவர் அடுத்த சீசனில் இருந்து மற்ற அணியில் விளையாடுவார் என்றோ இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சேஸிங் செய்துள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் ஆறு முறை சேஸிங் செய்து முதலிடம்.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 200 ரன்கள் வெற்றி இலக்காக பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    200 மற்றும் அதற்கு மேல் உள்ள இலக்கை வெற்றிகரமாக துரத்தியதில் பஞ்சாப் அணி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சேஸிங் செய்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி நேற்றைய சேஸிங் உடன் இதுவரை ஆறு முறை 200 ரன்ககளுக்கு மேலான இலக்கை எட்டி முதலிடம் பிடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை இலக்கை எட்டி 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை 200 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 இலக்கை எட்டி இருந்தது. இதுதான் அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தற்போது பஞ்சாப் அணி 200 இலக்க எட்டியுள்ளது.

    கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்னையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவர் நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 171 ரன்னையும் எட்டி இருந்தது அதிகபட்ச சேஸிங் ஆகும்.

    • கேட்ச் தவற விட்டது தோல்விக்கு முக்கிய காரணம்.
    • புதுப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 199 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணி 200 இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சொந்த மைதானத்தில் குஜராத் அணியின் முதல் தோல்வி இது ஆகும். இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-

    இரண்டு கேட்சகளை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்ச்களை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல. பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலைகளை சிறப்பாக செய்தனர். பந்து பேட்டிற்கு நன்றாக வரும்போது, எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம். ரன்கள் குறைவானது என்று நான் சொல்ல மாட்டேன்.

    புது பந்து பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருந்தது. 200 என்ற இலக்கு நிர்ணயிப்பு போதுமானதுதான். 15 ஓவர் வரை நாங்கள் சரியான வழியில்தான் இருந்தோம். கேட்ச்கள் தவறவிட்டது நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

    நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஐபிஎல் போட்டியின் அழகே இதுதான்.

    கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வகையில் கடைசி ஓவரில் ஏழு ரன்கள் என்ற நிலை இருந்தபோது தர்ஷன் நல்கண்டே எங்களுக்கு சிறந்த ஆப்சனாக இருந்தார்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் ஏலத்தில் இது பெயர் கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்ததாக பஞ்சாப் அணி தெரிவித்தது.
    • பின்னர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துக் கொண்டது.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

    ஐபிஎல் ஏலத்தின்போது நாங்கள் இதே பெயரை கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்தோம். ஆனால் இந்த ஷஷாங்க் சிங்கை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு எடுத்து விட்டோம் என ப்ரீத்தி ஜிந்தா ஏலம் விடுபவரிடம் தெரிவித்தார். ஆனால் ஒரு வீரர் எடுக்கப்பட்டதாக அறிவித்த பின்னர், அவரை திரும்ப பெற முடியாது என ஏலம் விடுபவர் தெரிவித்தார்.

    இதனால் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணியில் தவறுதலாக எடுக்கப்பட்டு இடம் பிடித்தார். ஆனால் நேற்று கதாநாயகனாக மாறி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இனிமேல் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இவர் பெயர் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

    • அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
    • குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.

    பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

    அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×