என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
    • அயர்லாந்து ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டி சாதனைப் படைத்தது.

    பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசியது. கேப்டன் பாபர் அசாம் (57), சாய்ம் ஆயூப் (45) இப்திகார் அகமது (37) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆண்டி பால்பிரைன் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார். மறுபக்கம் விக்கெட்டுகள் விக்கெட்டுக்கள் சரிந்தது. பால்பிரைன் 55 பந்தில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் அயர்லாந்து 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பற்றது. ஹாரி டெக்டர் 36 ரன்களும், ஜார்ஜ் டக்ரெல் 24 ரன்களும் எடுத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது.

    • நீரஜ் சோப்ரா 88.36 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
    • செக் குடியரசு வீரர் 88.38 மீட்டர் தூரம் எறிந்து முதுல் இடம் பிடித்தார்.

    கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் நடைபெற்று வருகிறது. தடகள போட்டியில் ஒன்றான ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நீரஜ் சோப்ராவுக்கும், செக்குடியரசு வீரர் ஜாக்கப் வாட்லெஜ்-க்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. ஜாக்கப் வாட்லெஜ் 88.38 மீட்டர் தூரம் வீசி முன்னிலை வகித்தார்.

    நீரஜ் சோப்ரா 4-வது முயற்சியில் 86.18 மீட்டர் வீசியிருந்தார். ஆனால் ஐந்தாவது முயற்சியில் 82.28 மீட்டர் தூரமே சென்றது.

    6-வது மற்றும் கடைசி முயற்சியில் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வீசினார். இதனால் ஈட்டி சீறிப்பாய்ந்து முன்னோக்கி சென்றது. ஆனால் 88.36 மீட்டர்தான் சென்றது.

    2 சென்டி மீட்டர் குறைந்ததால் முதல் இடம் வாய்ப்பை இழந்தார். இதனால 2-வது இடம் பிடித்தார். கிஷோர் ஜெனா 76.31 மீட்டர் எறிந்தார். கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர் 85.75 மீ்ட்டர் தூரம் வீசி 3-வது இடம் பிடித்தார். தோகா டைமண்ட் லீக் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது.

    • ஒரு டெஸ்ட், 57 ஒருநாள், 65 இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 3 ரன்கள் அடித்துள்ளார்.
    • டி20 கிரிக்கெட்டில் 47 பந்தில் சதம் விளாசியுள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி இடக்கை பேட்ஸ்மேனான கொலின் முன்ரோவுக்கு, அடுத்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2012-ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

    கடைசியாக அவர் 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.

    37 வயதான முன்ரோ ஒரு டெஸ்ட், 57 ஒருநாள், 65 இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 3 ரன்கள் அடித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் 428 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 5 சதம் உள்பட 10,961 ரன்கள் குவித்துள்ளார்.

    2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து வேகமாக அரைசதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்ற முன்ரோ, 2018-ம் ஆண்டு 47 பந்துகளில் சதம் அடித்தது (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) அந்த சமயத்தில் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரரின் அதிவேக சதமாக பதிவானது. நியூசிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று முன்ரோ தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடியது என்னுடைய விளையாட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என கொலின் முன்ரோ தெரிவித்துள்ளார்.

    2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி, 2019 50 ஓவர் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை, டெல்லி, லக்னோ தலா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
    • குஜராத் அணி ஐந்து வெற்றிகள் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    சன்ரைசர்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வெற்றி பெற்றிருந்தால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்திருக்கும். தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. லக்னோ 6-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் தலா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி 7-வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன. ஆர்சிபி டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு அணியிடம் பிளேஆஃப் சுற்றை வாய்ப்பை இழந்து விடும். குஜராத் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுடன் மோத உள்ளது. இதற்கும் அதே நிலைதான். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

    சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் வாய்ப்பில் நீடிக்க முடியும். டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே போட்டி உள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்கும். இந்த மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    • குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்தது.
    • சிஎஸ்கே 196 ரன்கள் அடித்து 35 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத்தை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் முதலில் விளையாடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்து விட்டது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது, நாங்கள் கூடுதலாக 10-15 ரன்களை கொடுத்தோம். திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் அவர்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர். பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி, சிறப்பாக நிலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.

    இது மிகவும் விரைவானது (சென்னையில் நடைபெறும் போட்டி குறித்து). நாங்கள் விரைவாக சென்னைக்கு செல்ல வேண்டும். சென்னையில் எங்களுக்கு ஒரு கடினமான ஆட்டம் உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் மாற வேண்டும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    நாளை சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் போட்டி இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பல கேட்ச்களை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக வீரரான சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 59-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்ஜே கேப்டன் ருதுராஜ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது.

    சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த நிலையில் இந்த போட்டியில் இந்த ஜோடி இணைந்து 148 ரன்கள் எடுத்திருந்த போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எடுத்து சாதனை படைத்தது.

    இதற்கு முன்னதாக இந்த ஜோடி கடந்த ஆண்டு 147 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவர்களில் குஜராத் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுப்மன் கில் 49 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4-வது சதம் அடித்து சாதனை படைத்தார்.

    இதன் மூலமாக ஒரு இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் கில் 6 சதங்கள் அடித்து 6-வது பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போது குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 200 ரன்கள் குவித்தது. இதே போன்று தமிழக வீரரான சாய் சுதர்சன் 50 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

    இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலமாக ஒரு அணியில் 2 வீரர்கள் சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனில் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2016 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் RCB vs GL, SRH vs RCB, அணிகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 3-வது ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். முதல் இரண்டு இடங்களில் டிவில்லியர்ஸ் விராட் கோலி உள்ளனர். 4-வது இடத்தில் டி காக்- கேஎல் ராகுல் உள்ளனர்.

    ஆனால், சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த சீசனில் விக்கெட் இழப்பின்றி முதல் முறையாக 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

    • டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர்.
    • குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார். உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.

    டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.

    இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
    • ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்று ஜெயிஷா அறிவித்துள்ள நிலையில் புதிய கேப்டன் யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்திருக்கிறது. தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகிவிட்டதால் அவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாது.

    இன்னும் சொல்லப்போனால் 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தான் அவருக்கு கேப்டனாக கடைசி தொடராக இருக்கலாம். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஹர்திக் பாண்ட்யா கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஹர்திக் பாண்ட்யா, குஜராத் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அதன் பிறகு அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. எனினும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தான் துணை கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் அடுத்த கேப்டன் பதவி வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபிப்பதோடு இனி உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

    என்று ஜெய்ஷா கூறினார்.

    • சென்னை அணிக்கு எதிராக சாய் சுதர்சன் சதம் விளாசினார்.
    • சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர்.

    தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் அதிவேக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் சச்சின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். சுதர்சன் வெறும் 25 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சின் 31 இன்னிங்ஸ் 1000 ரன்களை கடந்தார். இதற்கு முன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் 31 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்களின் சிறந்த சாதனையாக இருந்தது.

    மிகக் குறைந்த போட்டிகளில் 1000 ஐபிஎல் ரன்கள் விளாசிய வீரர்கள்:-

    21 - ஷான் மார்ஷ்

    23 - லெண்டல் சிம்மன்ஸ்

    25 - மேத்யூ ஹைடன்

    25 - சாய் சுதர்சன்*

    26 - ஜானி பேர்ஸ்டோவ்

    • சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
    • சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர்.

    சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம்.
    • பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது.

    டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பல விவாதங்களுக்கு பின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் அவரை உலகக் கோப்பையில் துவக்க வீரராக பயன்படுத்துவது அவசியம். அவர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். அதற்கு அவருடைய கடைசி சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் தான் சாட்சியாகும். டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம். பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் அடிக்கடி 240 - 250 ரன்கள் அடிப்பதை பார்க்க முடிகிறது.

    அதற்கு காரணம் பேட்டிங் பிட்ச்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்கள். இம்பேக்ட் வீரர் விதிமுறையால் அனைத்து அணிகளும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுவதால் புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. அங்கே அசத்துவதற்கு நீங்கள் மிகுந்த திறமையுடன் இருக்க வேண்டும். பும்ரா, அக்சர், குல்தீப் ஆகியோர் அதே சூழ்நிலைகளில் அசத்துகின்றனர்.

    இவ்வாறு கங்குலி கூறினார். 

    • சிஎஸ்கே 11 போட்டியில் 6 வெற்றியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    • குஜராத் 11 போட்டியில் 4 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 59-வது லீக் ஆட்டம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். "இது நல்ல விக்கெட்டாக தெரிகிறது. சேஸிங் மைதானம். அதனால் நாங்கள் சேஸிங்கை எதிர்பார்க்கிறோம்" என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ராகுல் டெவாட்டியா, நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி, ரஷித் கான்.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்: அபிநவ் மனோகர், சந்தீப் வாரியர், பிஆர் சரத், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    ருதராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ஜடேஜா, டோனி, சான்ட்னெர், ஷர்துல் தாகூர், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்: ரகானே, சாய்க் ரஷீத், அவானிஷ், சமீர் ரிஸ்வி, முகேஷ் சவுத்ரி

    ×