என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பும்ரா பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
    • நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் 30 வயதான டிராவிஸ் ஹெட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெர்த் டெஸ்டில் 89 ரன்கள் விளாசிய அவர் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளில் தொடரின் முதல் டெஸ்டில் தோற்று, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி தொடரை வென்ற அணிகள் நிறைய உள்ளன. கடந்த ஆண்டில் நாங்கள் சில சவாலான டெஸ்ட் போட்டி மற்றும் தொடர்களை எதிர்கொண்டு விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு வாரம் சரியில்லாமல் போய் விட்டது. அது பரவாயில்லை. மேலும் 4 வாய்ப்புகள் உள்ளன. முந்தைய ஆண்டுகளில் செய்தது போல் கடினமான சூழலில் இருந்து மிக வேகமாக மீண்டெழுந்து வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கிரிக்கெட் வரலாற்றில் அனேகமாக தலைச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். அவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும். மிகுந்த சவால் அளிக்கக்கூடிய அவரை இன்னும் சில முறை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

    முதலாவது டெஸ்டில் தடுமாறிய எங்களது பேட்ஸ்மேன்கள் என்னிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்பார்களா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் அதற்காக என்னை அணுகமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணியில் ஆடக்கூடியவர்கள். இனி 2-வது டெஸ்டுக்கு தயாராவது குறித்து அடுத்த 3-4 நாட்கள் நாங்கள் விவாதிப்போம். உண்மையிலேயே பும்ரா மற்ற பந்து வீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமானவர். அவரை திறம்பட சமாளிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்.

    2020-ம் ஆண்டு இதே அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் இந்தியாவை 36 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றோம். அதில் எல்லாமே சீக்கிரம் முடிந்து விட்டது. அந்த வெற்றியை ரொம்ப உற்சாகமாக கொண்டாடினோம். அது போன்று மீண்டும் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்குமா? என்பது தெரியாது.

    இவ்வாறு ஹெட் கூறினார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
    • ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஷாண்டோ இடம் பெறவில்லை. அதனால் மெஹதி ஹசன் மிராஸ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்காளதேச அணி விவரம்; மெஹதி ஹசன் மிராஸ் (கேப்டன்), லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), தன்சித் ஹசன் தமிம், சவுமியா சர்கார், பர்வேஸ் ஹொசைன் எமான், மஹ்மதுல்லா, ஜேக்கர் அலி அனிக், ஆபிப் ஹொசைன் துருபோ, ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சகிப், நஹித் ராணா.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.
    • 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஷார்ஜா:

    8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 340 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஜப்பான் அணியினர், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 211 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சேத்தன் சர்மா, ஹார்டிக் ராஜ், கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 4ம் தேதி யு.ஏ.இ அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தோல்வி கண்டால் யு.ஏ.இ அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    • ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
    • அமீபா பௌலிங் மையத்தில் ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.

    பெங்களூரில் உள்ள அமீபா பௌலிங் மையத்தில் நடந்து முடிந்த ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவின் ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    தனது ஏழாவது தொடர் இறுதிப் போட்டியில், கர்நாடகாவின் ஆகாஷ் டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீதை (425- 353) இரண்டு கேம் டைட்டில் மோதலில் எளிதாக வென்று 3வது பட்டத்தை வென்றார்.

    ஸ்டெப்லேடர் சுற்று ஆட்டங்களில், 2 கேம்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில், டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீத், டெல்லியின் துருவ் சர்தாவை (433-335) 98 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    முதல் போட்டியில், டெல்லியின் துருவ் சர்தா, தமிழகத்தின் ஷபீர் தன்கோட்டை (412-372) வீழ்த்தினார்.

    தமிழ்நாடு அணியின் ஷபீர் தன்கோட், கணேஷ் என்டி மற்றும் மஹிபால் சிங் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 7வது இடத்தைப் பிடித்தனர்.

     

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆந்திராவின் சுமதி நல்லபந்து, கர்நாடகாவின் பிரீமல் ஜேவை (342–286) தோற்கடித்தார். இது சுமதியின் 4வது தேசிய கிரீடம்.

    முன்னதாக, சுமதி (ஆந்திரப் பிரதேசம்) அனுராதா சர்தாவை (டெல்லி) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் (356-272) மற்றும் ஆட்டம் 1 இல், சுமதி காஷ்மீர் குடாலேவை (மகாராஷ்டிரா) தோற்கடித்தார் (424-309)

    விருதுகள் வழங்கப்பட்ட வீரர்கள் பின்வருமாறு.

    சிறப்பு விருதுகள்:

    1) மிகவும் நம்பிக்கைக்குரிய வீரர் - தனுஷ் ரெட்டி (கர்நாடகா)

    2) 225க்கு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால்(ஆண்கள்) – ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (11)

    3) 200 ககு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால் (பெண்கள்) - ஷபீனா கஸ்மானி (மகாராஷ்டிரா) (4)

    4) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (ஆண்கள்) - ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (1359 பின்கள்)

    5) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (பெண்கள்) - அனுராதா சாரதா(டெல்லி) (1081 பின்பால்)

    6) பெர்ஃபெக்ட் கேம்- ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி)

    • 1978-ம் ஆண்டு பிறகு குறைந்த எக்னாமி வைத்த பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் இருந்தார்.
    • 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக உமேஷ் யாதவ் 21 ஓவர்களில் 16 மெய்டன், 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

    வங்காளதேசம் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 30-ந் தேதி கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் நாளில் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது.

    இதில் வங்காளதேசம் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 71.5 ஓவர்களில் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்ட நேர முடிவில் 37 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

    முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் கடந்த 46 ஆண்டுகளில் மிக குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அவர் முதல் இன்னிங்ஸில் 15.5 ஓவர்கள் பந்து வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 0.30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார்.

    1978-ம் ஆண்டு பிறகு குறைந்த எக்னாமி வைத்த பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் இருந்தார். அவர் 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 21 ஓவர்களில் 16 மெய்டன், 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 0.42 என்ற எக்னாமியில் பந்து வீசினார். தற்போது இந்த சாதனையை ஜெய்டன் முறியடித்துள்ளார்.

    ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பானு நட்கர்னி முதல் இடத்தில் உள்ளார். அவர் 1964-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார். 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்ட்ன் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    • இந்திய அணி 4 (ஆஸ்திரேலியா) போட்டிகளில் 2 வெற்றி பெற வேண்டும்.
    • தென் ஆப்பிரிக்கா அணி 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

    புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணிக்கு இன்னும் 4 (ஆஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

    ஆஸ்திரேலியாவுக்கு 6(4 இந்தியா 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும் இலங்கைக்கு ( 1 தென் ஆப்பிரிக்கா 2 ஆஸ்திரேலியா)3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

    • இந்திய கேப்டன் அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
    • ஜப்பான் தரப்பில் அதிகபட்சமாக கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    ஷார்ஜா:

    8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் விளையாடி வருகிறது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மத்ரே களமிறங்கினர். சூர்யவன்ஷி 23 ரன்களிலும், ஆயுஷ் மத்ரே 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் தனது பங்குக்கு 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    மிடில் ஓவர்களில் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது அமான்- கார்த்திகேயா ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கார்த்திகேயா 57 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. ஜப்பான் தரப்பில் கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜப்பான் பேட்டிங் செய்து வருகிறது. 

    • ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.
    • அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது.

    அணியின் கேப்டனாக செயல்பட்ட பும்ரா ஐந்து விக்கெட்டுகள் எடுத்த நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்கு பின்னர் 2-வது இன்னிங்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

    இந்நிலையில் ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள் என்று இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா அறிவுரை வழங்கியதாக சிராஜ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் பும்ரா பாய் உடன் பேசிக்கொண்டே இருப்பேன். முதல் போட்டிக்கு முன்பே நான் என்னுடைய அனுபவத்தை கூறினேன். அப்போது அவர் என்னிடம் விக்கெட்டுக்காக ஓட வேண்டாம். ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.

    அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள். அதற்குப் பிறகு நான் நன்றாக பந்து வீசினேன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். ஆஸ்திரேலியா எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். ஏனென்றால் இந்த ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் என ஒரு வேகப்பந்து வீச்சாளர் விரும்பும் அனைத்தையும் ரசிக்கலாம். எனவே உங்கள் பந்துவீச்சை ரசிப்பதற்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை கிடைக்கும்.

    என்று கூறினார்.

    • பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை.
    • நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 1 - 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ந் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவரை பார்க்கும் போது நகைச்சுவையானர் போல தெரிகிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை. என்று கூறினார்.

    இந்தியாவின் வெற்றி குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது:-

    பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இப்படி சுத்தியால் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெர்த் பொதுவாக விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடமாகும். இம்முறை அப்போட்டி வாகா மைதானத்தில் நடைபெறவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஆப்டஸ் மைதானத்தைப் பற்றியும் எனக்கு தெரியும்.

    வரலாற்றில் அங்கே ஆஸ்திரேலியா இப்படி நிறைய தோல்விகளை சந்திக்க மாட்டார்கள். அதையும் தாண்டி வென்ற இந்திய மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். எனக் கூறினார். 

    • ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது.
    • நாங்கள் இங்கு விளையாடிய போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்காத நேரங்கள் இருந்ததில்லை.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.

    இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோதும் 2 நாள் பகல்-இரவு பயிற்சி ஆட்டம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது மற்றும் கடைசி நாளான நேற்று 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 43.2 ஓவர்களில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. கோன்ஸ்டாஸ் (107 ரன்) சதம் அடித்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய இந்தியா 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியா வெற்றி பெற்றது.

    பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இப்போட்டியில் இருந்து கிடைத்த வெற்றி அற்புதமாக இருந்தது. அணியாக நாங்கள் விரும்பியது எங்களுக்கு கிடைத்தது. முழுமையான போட்டி நடைபெறாதது கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் கிடைத்த நேரத்தை நாங்கள் முடிந்தளவுக்கு அதிகமாக பயன்படுத்தினோம். அதில் எங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்தன.

    ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. நாங்கள் இங்கு விளையாடிய போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்காத நேரங்கள் இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வங்காளதேசம் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் நாளில் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது.

    இதில் வங்காளதேசம் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 71.5 ஓவர்களில் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 37 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெய்ட் 33 ரன்னுடனும், கார்டி 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

    • 6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
    • முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.

    முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது,6-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளது. குகேஷ்-டிங் லிரென் மோதும் 7-வது சுற்று போட்டி நாளை நடக்கிறது.

    பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ×