என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி, டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடியை சந்தித்தது.

    இதில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

    அரையிறுதியில் இந்திய ஜோடி ஜப்பானின் ஹிரோயுகி எண்டோ-யுடா வடானபே ஜோடியை எதிர்கொள்கிறது.
    பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை சந்தித்தார்.

    இதில் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் 21-16, 24-26, 21-17 என பி.வி.சிந்துவை போராடி வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது. 
    இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணிக்கு மூத்த வீரர் லியாண்டர் பயஸ் திரும்புகிறார்.
    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அடுத்த மாதம் 29, 30-ந்தேதிகளில் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் கோரிக்கையை உலக டென்னிஸ் சங்கம் நிராகரித்து விட்டது. பாதுகாப்பு அச்சம் காரணமாக ரோகன் போபண்ணா, ராம்குமார், சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டனர். மற்றொரு முன்னணி வீரர் சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு நவம்பர் 29-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதால் அவரால் விளையாட இயலாது.

    களம் இறங்காமல் வெளியில் இருந்து அணியை வழிநடத்தும் கேப்டன் மகேஷ் பூபதியும் பாகிஸ்தானுக்கு செல்வது சவுகரியமாக இருக்காது என்று கூறி பின்வாங்கி விட்டார். இதனால் 2-ம் தர இந்திய அணியையே பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணிக்கு மூத்த வீரர் லியாண்டர் பயஸ் திரும்புகிறார். இது குறித்து இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீ கூறுகையில், ‘விசா பெறுவதற்கான நடைமுறைகளை தொடங்கும்படி உலக டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டது. இதனால் நாங்கள் லியாண்டர் பயஸ் உள்பட சில வீரர்களின் பெயர்களை அனுப்பியுள்ளோம். இந்த போட்டி புல்தரை ஆடுகளத்தில் நடக்கிறது. புல்தரை ஆடுகளத்தில் விளையாடுவதில் பயஸ் கில்லாடி. அணியை நாங்கள் விரைவில் தேர்வு செய்வோம். லியாண்டர் பயஸ் அணியில் நிச்சயம் விளையாடாத கேப்டனாக இருக்கமாட்டார். ஏனெனில் அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து விளையாடி வருகிறார். முதலில் நாங்கள் அணியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தேர்வு கமிட்டி கேப்டனை முடிவு செய்யும்’ என்றார்.

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமைக்குரிய 46 வயதான லியாண்டர் பயஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் ஆடியிருந்தார்.

    சகெத் மைனெனி, அர்ஜூன் காதே, விஜய் சுந்தர் பிரசாந்த், ஸ்ரீராம் பாலாஜி, சித்தார்த் ரவத், மனிஷ் சுரேஷ் குமார் போன்ற இளம் வீரர்களும், பயிற்சியாளர் ஜீஷன் அலியும் பாகிஸ்தானில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளார் டேவிட் வார்னர்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஓராண்டு தடைக்குப்பின் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

    சமீபத்தில் முடிவடைந்த ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்து டெஸ்ட் போட்டியிலும் அவரது சராசரி 9.50 ஆகும். இதனால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வார்னருக்கு இடம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    ஆனால் நம்பிக்கையுடன் இருக்கும் வார்னர், நான் ஃபார்ம் அவுட் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நான் ஃபார்ம் அவுட் இல்லை, ஜஸ்ட் அவுட் ஆஃப் ரன்ஸ்தான். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டால் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆஷஸ் தொடருக்குப்பின் கப்பாவில் சதம் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்த வரைக்கும் களம் இறங்கி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    என்னுடைய நம்பிக்கை எப்போதுமே உயர்வானதாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக நெருக்கடிக்கு ஆளாகி ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியுள்ளேன். நாங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பிய பின்னர், சில போட்டிகளில் ரன்கள் அடித்துள்ளேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலிய பிரெசிடென்ட் லெவன் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பிரதமர் ஸ்காட் மோரிசன் வாட்டர் பாய்-ஆக மாறினார்.
    இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் 27-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கு முன்னதாக இலங்கை அணி ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

    ஆஸ்திரேலிய பிரெசிடென்ட் லெவன் அணியில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசனும் ஒருவர். இவர் நேற்று வீரர்களுடன் அமர்ந்திருந்தார். ஆஸ்திரேலிய பிரெசிடென்ட் லெவன் அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது தேனீர் இடைவேளையின்போது மோரிசன் வாட்டர் பாய்-ஆக மாறி கூல்டிரிங்ஸ் சுமந்து கொண்டு மைதானதிற்குச் சென்றார்.

    ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

    இந்த காட்சி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. டுவிட்டர்வாசிகள் அவரது எளிமையை பாராட்டி வருகிறார்கள்.
    நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம் என சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக சாம் பில்லிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தோள்பட்டை காயத்தால் கடந்த ஐந்து மாதங்களுக்கு அணியில் இடம் பெறாமல் இருந்து பில்லிங்ஸ் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம் என பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.

    சாம் பில்லிங்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘இது போன்ற அங்கீகாரம் மிகப்பெரிய கவுரவம். ஒரு தலைவராக பெயர் எடுக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு. கடந்த குளிர்கால சீசனில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். என்னுடைய கவுன்ட்டி அணியான லயன்ஸில் கேப்டனாக உள்ளேன்’’ என்றார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டால் அறிமுகம் செய்யப்பட உள்ள 100 பந்து கிரிக்கெட் உலகளவில் பிரபலமடையும் என சங்ககரா கணித்துள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 100 பந்து கிரிக்கெட் லீக்கை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்தத் தொடர் அடுத்த வருடம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    தற்போது உலகளவில் டி20 கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது. 100 பந்து போட்டியை சரியான வகையில் கொண்டு சேர்த்தால் உலகளவில் பிரபலமான தொடராக மாறும் என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானும், எம்சிசி-யின் தலைவருமான குமார் சங்ககரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், அது காலகாலமாக இருந்து வருகிறது. அதிக அளவிலான அணிகளை ஊக்குவிக்க டி20 கிரிக்கெட் சிறந்ததாக இருக்கிறது.

    அதேநேரத்தில், இங்கிலாந்தில் அடுத்த வருடம் 100 பந்து கிரிக்கெட் தொடங்கப்பட இருக்கிறது. சிறப்பாக வேலை செய்து, அதை சிறந்த வகையில் கொண்டு சென்றால், உலகளவில் கொண்டு செல்வதற்கான கிரிக்கெட்டாக மாறும்’’ என்றார்.
    விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் தமிழக அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கர்நாடகா.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    கர்நாடகா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் மிதுன் பந்தில் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின்  8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு அபிநவ் முகுந்த் உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபிநவ் முகுந்த் 85 ரன்களும், பாபா அபரஜித் 66 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த விஜய் சங்கர் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் தமிழ்நாடு 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 எடுத்திருந்து. தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான் சொதப்பியதால் தமிழ்நாடு 49.5 ஓவரில் 252 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    கர்நாடகா பந்து வீச்சாளர் மிதுன் கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். மிதுன் 9.5 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணியின் கேஎல் ராகுல், படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். படிக்கல் 14 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கேஎல் ராகுல் உடன் மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். கர்நாடகாவின் ஸ்கோர் 23 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.

    மழை கனமழையாக மாறியதால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. வி.ஜே.டி. முறைப்படி 23 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தாலே போதுமானது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விஜய் ஹசாரே சாம்பியன் பட்டத்தை வென்றது.
    லக்னோவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்கானிஸ்தான் இந்தியாவை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இந்தத் தொடர்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள எகனா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு வகையான ஆப்கானிஸ்தான் அணிக்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்கர் ஆப்கன், முகமது நபி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். புதுமுக வீரர் பரீத் அகமது மாலிக் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பராக இக்ராம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 6, 9 மற்றும் 11-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 14, 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 27-ந்தேதியில் டிசம்பர் 1-ந்தேதி வரை நடக்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்கு இடமில்லை.
    இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை.

    வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ‘‘கேன் வில்லியம்சனின் காயத்தை கண்காணித்து வருகிறோம். வங்காளதேசத்திற்கு எதிராக மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது எந்த வகையான காயத்தால் அவதிப்பட்டாரோ, தற்போதும் அதே காயத்தால் அவதிப்படுகிறார்’’ என பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
    பிசிசிஐ தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சவுரவ் கங்குலி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினார்.
    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார். அதேபோல் மற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்று்க் கொண்டனர்.

    அப்போது கங்குலி கூறும்போது, கேப்டன் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் முக்கிய நபராக இருக்கிறார். அவருக்கு உதவுவதற்காகதான் நான் இருக்கிறேன் என்றார்.

    இந்த நிலையில் வங்காளதேச தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்ய நேற்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் ஆலோசித்தனர். இதில் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்றனர்.

    வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகளுடன் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மேலும் டோனியின் எதிர்காலம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறும்போது, கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கேப்டன் கோலியையும், துணை கேப்டன் ரோகிர் சர்மாவையும் சந்திக்க விரும்பினர்.

    இதில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்த கருத்துகள் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது என்றார்.

    கங்குலியுடனான சந்திப்பில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பங்கேற்கவில்லை.
    பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான பி.வி.சிந்து (இந்தியா) 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் யோ ஜியா மின்னை (சிங்கப்பூர்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. சிந்து அடுத்து ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) சந்திக்க வேண்டி வரலாம்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நேவால் 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லினே ஹோஜ்மார்க்கை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான இந்தோனேஷியாவின் முகமது ஆசன்-ஹென்ட்ரா செடியவான் இணைக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதியை உறுதி செய்தது.
    ×