என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான பி.வி.சிந்து (இந்தியா) 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் யோ ஜியா மின்னை (சிங்கப்பூர்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. சிந்து அடுத்து ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) சந்திக்க வேண்டி வரலாம்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நேவால் 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லினே ஹோஜ்மார்க்கை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான இந்தோனேஷியாவின் முகமது ஆசன்-ஹென்ட்ரா செடியவான் இணைக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதியை உறுதி செய்தது.
    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி மும்பை அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
    கோவா:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவாவின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. 

    ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் மும்பை அணியின் அமைன் செர்மிடி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
    இதையடுத்து, ஆட்டத்தின் இறுதிவரை கேரளா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், மும்பை சிட்டி எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
    தியோதர் டிராபிக்கான இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’ அணிகளுக்கு கேப்டன்களாக முறையே ஹனுமா விஹாரி, பார்தீப் பட்டேல், ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி அக்டோபர் 31-ந்தேதி முதல் நவம்பர் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான மூன்று அணிகளும் அறிவிக்கப்பட்டது.

    இந்தியா ‘ஏ’ அணிக்கு ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஹனுமா விஹாரி (கேப்டன்), 2. தேவ்தத் படிக்கல், 3. ஏ.ஆர். ஈஸ்வரன், 4. விஷ்னு வினோத், 5. அமன்தீப் கார், 6. அபிஷேக் ராமன், 7. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 8. ஷாபாஸ் அகமது, 9. ரவி பிஷ்னோய், 10. ரவிச்சந்திரன் அஸ்வின், 11. ஜெய்தேவ் உனத்கட், 12. சந்தீப் வாரியர், 13. சித்தார்த் கவுல், 14. பர்கவ் மேராய்

    இந்தியா ‘பி’ அணிக்கு பார்தீவ் பட்டேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ‘பி’ அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பார்தீவ் பட்டேல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 2. பிரியாங்க் பன்சல், 3. யா்ஷஸ்வி, 4. பாபா அபரிஜித், 5. கேதர் ஜாதவ், 6. ருத்து்ராஜ் கெய்க்வாட், 7. ஷாபாஸ் நதீம், 8. அனுகுல் ராய், 9. கே. கவுதம், 10. விஜய் ஷங்கர், 11. முகமது சிராஜ், 12. ருஷ் கலாரியா, 13. யார்ரா பிரித்விராஜ், 14. நிதிஷ் ராணா.

    இந்தியா ‘சி’ அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ‘சி’ அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷுப்மான் கில், 2. மயங்க் அகர்வால், 3. அன்மோல்ப்ரீத் சிங், 4. சூர்யகுமார் யாதவ், 5. பிரியாம் கார்க், 6. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 7. அக்சார் பட்டேல், 8. மயங்க் மார்கண்டே, 9. ஜலாஜ் சக்சேனா, 10. அவேஷ் கான், 11. தவால் குல்கர்னி, 12. இஷான் பொரோல், 13. டி.ஜி. பாதியானா, 14. விராட் சிங்.
    டோனியின் விஷயத்தை நாங்கள் கடந்து விட்டோம், தற்போது ரிஷப் பந்த் மீதுதான் முழுக்கவனம் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ராணுவத்தில் சேவை புரிய இருப்பதாக கூறி இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்று சென்றார்.

    அதில் இருந்து தற்போது வரை அவர் இந்திய அணிக்கு திரும்பவில்லை. அடுத்த வருடம் ஜனவரி மாதம் அணிக்கு திரும்பலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த்-ஐ மூன்று வகை கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக உருவாக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் ரிஷப் பந்த் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறுகிறார். இதனால் டோனியின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.

    எம்எஸ் டோனி, எம்எஸ்கே பிரசாத்

    இந்நிலையில் இன்று வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பந்துதான் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அணியின் அறிவிப்புக்குப்பின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் டோனியின் நிலை குறித்து கேள்வி கேட்டனர். அப்போது நாங்கள் அதில் இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது ரிஷப் பந்த் மீதுதான் முழுக்கவனம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நாங்கள் டோனி விஷயத்தில் இருந்து கடந்து விட்டோம். இதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப்பின் நாங்கள் தெளிவுப்படுத்திக் கொண்டோம்.

    நாங்கள் ரிஷப் பந்துக்கு ஆதரவாக இருக்க தொடங்கியுள்ளோம். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை பார்க்க விரும்பினோம். அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், எங்களுடைய கவனம் எல்லாம் ரிஷப் பந்த் மீதுதான் உள்ளது.

    எம்எஸ் டோனி, எம்எஸ்கே பிரசாத்

    உலகக்கோப்பைக்குப் பிறகு இளம் வீரர்கள் மீது நாங்கள் பார்வை செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எங்களுடைய நடவடிக்கையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாங்கள் உண்மையிலேயே டோனியுடன் விவாதித்தோம்.  இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எங்களது பார்வையை அவர் வரவேற்றார்’’ என்றார்.

    இதனால் எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா? என்பது கேள்வி குறியாகத்தான் உள்ளது.
    உலகக்கோப்பைக்கான குவாலிபையரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தை டிரா செய்ததால் இந்தியா பிபா தரவரிசையில் சறுக்கியுள்ளது.
    பிபா உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இந்தியா வங்காளதேச அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததால் பிபாவின் உலகத்தர வரிசையில் இந்தியா 104-வது இடத்தில் இருந்து 106-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

    அதேவேளையில் 187-வது இடத்தில் இருந்து வங்காளதேசம் 184-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. உருகுவே, குரோசியா, அர்ஜென்டினா அணிகள் ஒரு இடங்கள் முன்னேறியுள்ளன.
    பார்சிலோனா கேப்டன் மெஸ்சி தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. இவர் பார்சிலோனா கிளப்பிற்காக விளையாடி வருகிறார். யூரோ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என பார்சிலோனா வெற்றி பெற்றது.

    ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே மெஸ்சி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்தது கிடையாது.
    வங்காள தேசம் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
    வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், ஷிபம் டுபே, ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. சஞ்சு சாம்சன், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. குருணால் பாண்டியா, 10. சாஹல், 11. ராகுல் சாஹர், 12. தீபக் சாஹர், 13. கலீல் அகமது, 14. ஷிவம் டுபே, 15. ஷர்துல் தாகூர்.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது.
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தி வருகிறது. அடுத்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் தென்ஆப்பிரிக்காவில் ஜனவரி 17-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘சி’ பிரிவில் பாகிஸ்தான் வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கனடா அணிகள் இடம் பிடித்துள்ளன.
    டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என்ற எனது நம்பிக்கை இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். ஆஃப்-ஸ்பின்னரான இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் கொடிகட்டி பறந்தார்.

    ஆனால், 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘என்னை சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக நான் கருதுகிறேன். 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளேன். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளேன். வயது ஒரு காரணமாக இருக்கும் என கருதவில்லை.

    இம்ரான் தாஹிர் 40 வயது வரை விளையாடினார். நான் விதவிதமான முறையில் பந்து வீசுகிறேன். என்னிடம் அனுபவமும் உள்ளது. என்னுடைய நம்பிக்கை இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது’’ என்றார்.
    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் T10 கிரிக்கெட் லீக்கில் மராதா அரேபியா அணிக்காக விளையாடுகிறார்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.

    என்றாலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதற்கு பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. இதனையடுத்து அவர் கனடாவில் நடைபெற்ற டி20 லீக்கில் விளையாடினார்.

    அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை அபு தாபியில் T10 கிரிக்கெட் லீக் நடைபெறுகிறது. இதில் விளையாடும் மராதா அரேபியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் இந்தத் தொடரின் இந்தியாவின் ஐகான் வீரர் ஆவார்.

    மராதா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ உள்ளார். தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லசித் மலிங்கா, கிறிஸ் லின் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்து்ளளனர்.
    சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்புவதற்காக ஜார்க்கண்ட் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் எம்எஸ் டோனி.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் ஓய்வில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச தொடர்களில் அவர் இடம் பெறவில்லை. சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றினார்.

    ஓய்வில் இருப்பதால் எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ தலைவராக பதவி ஏற்ற கங்குலி ‘‘ஜாம்பவான்கள் உடனடியாக ஓய்வு பெற்று விடமாட்டார்கள்’’ என்றார்.

    இதனால் டோனி மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் U-19 அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஜார்க்கண்ட் சீனியர் அணியுடன் இணைந்துதான் பயிற்சி மேற்கொள்ள இருந்தார். ஆனால், சீனியர் அணி இந்தியாவின் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக சூரத் செல்கிறது. இதனால் U-23 அணியுடன் பயிற்சி மேற்கொண்டார்.
    ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
    தாகா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் ஊதிய விகிதம், பெண் வீராங்கனைகளுக்கான சம ஊதியம், இதர சலுகைகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டிற்கு திரும்பமாட்டோம் என கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உள்பட சீனியர் வீரர்கள் பத்திரிகைகளுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. வீரர்கள் போராட்டத்தால் இந்தத் தொடர் பாதிக்கும் நிலை இருந்தது.

    ‘‘இந்தியத் தொடர் நெருங்கும் நேரத்தில் வீரர்களின் எதிர்பாராத இந்த போராட்டம், நாட்டின் கிரிக்கெட்டிற்கு எதிரான சதியாக பார்க்கப்படுகிறது. இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிப்போம்’’ என வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் நஸ்முல் ஹசன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தை கைவிட்டு, இந்திய சுற்றுப்பயணத்திற்கு தயார் ஆகி வருவதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கிரிக்கெட் வீரர்களுடன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஊதியம், சலுகைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வீரரகள் அனைவரும் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று விளையாட ஒப்புதல் அளித்துள்ளனர். போராட்டத்தையும் வாபஸ் பெற்றுள்ளனர். 

    பேச்சுவார்த்தையில் வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர்களான ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×