என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமது, ஏற்கனவே மனதளவில் பதவியை இழக்க தயாராக இருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமது. இவர் அந்த அணியின் கேப்டனாக திகழ்ந்தார். 2017 ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியாவை இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    அப்போது பாகிஸ்தான் ரசிகர்களாலும், அந்நாட்டு கிரிக்கெட் போர்டாலும் பாராட்டப்பட்டார். ஆனால் இங்கிலாந்தில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இறுதியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில், கேப்டன் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். அதற்காக தனது மனநிலையை தயார்படுத்திக் கொண்டேன் என சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘உண்மையாகவே, கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறோம். அதற்கான மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.

    சீனியர் வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும்படி ஆலோசனை வழங்கினார்கள். சில நேரங்களில் ஓய்வு என்பது அவசியம். ஏனென்றால், நான் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மிகவும் நெருக்கடியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்.

    தற்போது என்னுடைய முழுக்கவனம், உள்ளூர் கிரிக்கெட்டை பற்றிதான். பாகிஸ்தான் தேசிய அணிக்கு திரும்புவதை பற்றி யோசிக்கவில்லை. என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எப்போது என்னை அழைக்கிறார்களோ, அப்போது என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
    விராட் கோலியுடன் தொடக்க வீரராக யார் களம் இறங்க விரும்புவீர்கள்? என்று ரசிகர்களிடம் ஆர்சிபி கேள்வி கேட்டதற்கு பார்தீவ் பட்டேல் நறுக்கென பதில் அளித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.

    2019 சீசனில் அவருடன் பார்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்கினார். ஆனால் விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகா வீரர் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடி வருகிறார்.

    அவரை ஆர்சிபி தக்க வைத்துள்ளது. அடுத்த சீசனில் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி அணியில் முக்கிய பங்காற்றுவார் எனத் தெரிகிறது.

    இந்நிலையில், ‘‘நமக்கு 240 சேஸிங் என்றால், எதிர்முனையில் விராட் கோலி இருந்தால், மற்றொரு முனையில் நீங்கள் தேவ்தத் படிக்கல் அல்லது பார்தீவ் பட்டேல் ஆகியோரில் யாரை தேர்வு செய்வீர்கள்’’ என ரசிகர்களிடம் ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டிருந்தது.

    இதனை வைத்து பார்க்கும்போது பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர் வரிசையில் இருந்து இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘நாங்கள் 239 ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் ஏன் விரும்புகிறீர்கள்?’’ என பதில் அளித்துள்ளார்.
    கர்நாடகா அணிக்காக விளையாடி வரும் 19 வயதே ஆன இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி-யில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
    கர்நாடகா அணிக்காக விளையாடி வருபவர் இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல். 19 வயதே ஆன இவர் கடந்த ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதேபோல் ஆர்சிபி அணியும் அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட களம் இறக்கவில்லை.

    இந்நிலையில்தான் விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11 போட்டிகளில் விளையாடி 609 ரன்கள் குவித்தார். சராசரி 67.66. ஸ்டிரைக் ரேட் 80.09 ஆகும். அவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், இரண்டு சதங்கள் அடங்கும்.

    அதேபோல் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 11 ஆட்டங்களில் 548 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 68.50. ஸ்டிரைக் ரேட் 178.50. இவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், ஒரு சதம் அடங்கும்.

    இவரது ஆட்டத்தை பார்த்த இந்திய அணி கேப்டனும், ஆர்சிபி கேப்டனுமான விராட் கோலி அணியில் உள்ள பயிற்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் 12 வீரர்களை வெளியேற்றிய நிலையில், தேவ்தத்தை தக்கவைத்துள்ளது.

    2020 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடும் லெவன் அணியில் தேவ்தத்திற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.
    அடிலெய்டு டெஸ்டில் வார்னர் 335 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால் லாரா சாதனையை முறியடிக்க முடியாமல் போனது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி முச்சதம் அடித்தார்.

    அவர் 335 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கூடுதலாக ஒரு மணி நேரம் டிக்ளேர் செய்யாமல் இருந்திருந்தால் டேவிட் வார்னர் 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இந்நிலையில் லாரா சாதனையை முறியடிக்க ஹிட்மேனால்தான் முடியும் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘ஒருநாள் லாராவின் சாதனையை முறியடிக்கும் நபர் யார் என்று நான் கூற விரும்பினால், அவர் ரோகித் சர்மாவாகத்தான் இருப்பார்’’ என்றார்.
    ஹாமில்டன் டெஸ்டில் ஜோ ரூட், ரோரி பேர்ன்ஸ் சதமடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் சேர்த்துள்ளது.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து டாம் லாதமின் சதத்தால் 375 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கட் இழப்பிற்கு 39 ரன்கள் சேர்த்திருந்தது. ரோரி பேர்ன்ஸ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோரி பேர்ன்ஸ், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த விக்கெட்டை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதாக பிரிக்க முடியவில்லை.

    இதனால் இருவரும் சதம் அடித்தனர். இங்கிலாந்தின் ஸ்கோர் 201 ரன்னாக இருக்கும்போது ரோரி பேர்ன்ஸ் 101 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

    அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 26 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 114 ரன்களுடனும், போப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இங்கிலாந்து 106 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஜோ ரூட் நாளை சிறப்பாக விளையாடி இங்கிலாந்து 100 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்தால் இந்த டெஸ்டில் வெற்றிக்காக போராடும்.
    மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
    மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டி (16 வயதுக்கு உட்பட் டோர்) சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி (திருமழிசை)- ஸ்ரீவெங்கடேஷ்வரா வித்யாலயா அணிகள் மோதின. முதலில் ஆடிய பப்ளிக் பள்ளி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தருண் 67 பந்தில் 93 ரன்னும், ஹேமநாத் 78 ரன்னும் குவித்தனர்.

    பின்னர் விளையாடிய ஸ்ரீவெங்கடேஷ்வரா 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்னேயே எடுத்தது. இதனால் சென்னை பப்ளிக் அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

    இறுதி போட்டியில் சிறந்த வீரர்களாக ஹேமநாத், தருண், கி‌ஷன் (சென்னை பப்ளிக் பள்ளி), பிரஞ்சன், நித்தீஷ், விக்னேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியின்போது தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேனீர் அளித்ததாக முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் என்ஜினீயர் விமர்சனம் செய்திருந்தார்.

    எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவில் சரன்தீப் சிங், ஜதின் பராஞ்பே, ககன் கோடா, தேவன் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யார் அனுஷ்கா சர்மாவுக்கு தேனீர் கொண்டு வந்து கொடுத்தனர் என்பதை பரூக் என்ஜினீயர் தெரிவிக்கவில்லை.

    81 வயதான பரூக் என்ஜினீயரின் இந்த விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    பரூக் என்ஜினீயரின் அற்பதனமான கருத்தின் மூலம் தேர்வு குழுவினரையும், விராட் கோலி மனைவியையும் சிறுமைப்படுத்தி உள்ளார் என்று அவர் சாடி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து பரூக் என்ஜினீயர் விராட் கோலியின் மனைவியிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதோடு, தான் நகைச்சுவையாக தெரிவித்ததை பெரிதுபடுத்திவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

    பரூக் என்ஜினீயர் தனது மனைவி அனுஷ்கா சர்மா குறித்து விமர்சனம் செய்ததற்கு விராட் கோலி இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அவர் மவுனம் கலைந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை போட்டியின்போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தைப் பார்க்க அனுஷ்கா வந்திருந்தார். அவர் குடும்பத்தினர் அமரும் பாக்சில் உட்கார்ந்து போட்டியை ரசித்தார். அவருடன் 2 நண்பர்கள் வந்திருந்தனர். ஆனால் தேர்வாளர்கள் அமர்ந்திருந்த பாக்ஸ் முற்றிலும் வேறுபட்டது.

    அனுஷ்கா சர்மா பிரபலமானவர் என்பதால் அவரது பெயரை வேண்டும் என்றே தேவை இல்லாமல் இதில் இழுத்துள்ளார்கள்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவாக அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் முதல் முறையாக ‘டிரிபிள் செஞ்சூரி‘ அடித்தார். அவர் 335 ரன் (அவுட் இல்லை) குவித்து பிராட்மேன், மார்க் டெய்லர் சாதனையை முறியடித்தார். மார்னஸ் லாபஸ்சாக்னே 162 ரன் குவித்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முதல் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. பாபர் அசாம் 43 ரன்னுடனும், யாசிர் ஷா 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.  இதனால் பாகிஸ்தான் பாலோ-ஆனை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சதத்தை நோக்கிச் சென்ற பாபர் அசாம் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பிரிஸ்பேனில் டெஸ்டில் பாபர் அசாம் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிட்செல் ஸ்டார்க்

    பாபர் அசாம் அவுட்டாகும்போது பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. யாசிர் ஷா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 302 ரன்னில் சுருண்டது. ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியாவை விட 287 ரன்கள் பின்தங்கி பாலோ-ஆன் ஆனது. ஆஸ்திரேலியா பாலோ-ஆன் கொடுக்க பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    பிராட்மேனின் அதிகபட்ச ஸ்கோரை வார்னர் கடந்ததும் டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அறிவித்தார். இதனால் நெட்டிசன்கள் டிம் பெய்னை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
    வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா 2004-ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆட்டம் இழக்காமல் 400 ரன்கள் குவித்ததே இந்த நாள் வரைக்கும் டெஸ்ட் இன்னிங்சில் ஒரு வீரரின் அதிகபட்சமாக உள்ளது.

    அடிலெய்டு டெஸ்டில் வார்னர் 300 ரன்களை எட்டியதும் அவரது அடுத்த இலக்கு லாராவின் சாதனையை தகர்ப்பதாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. ஆனால் பிராட்மேனின் அதிகபட்ச ஸ்கோரை வார்னர் தாண்டியதும் டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் நெட்டிசன்கள் டிம் பெய்னை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். ‘இன்னும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதி அளித்து இருந்தால் வார்னர் 400 ரன்களை கடந்திருப்பார். பெய்ன் தவறான முடிவை எடுத்து விட்டார், அதனால் லாராவின் சாதனை தப்பி விட்டது’ என்று சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், ‘3 நாள் எஞ்சியிருப்பதால் ஆஸ்திரேலியாவினால் வெற்றி பெற முடியும். அதனால் வார்னரை உலக சாதனைக்காக ஆட விட்டிருக்கலாம். அவர் விளையாடிய விதத்தை பார்க்கும்போது, மேலும் 1 மணி நேரமே தேவைப்பட்டிருக்கும்’ என்றார்.

    அதே நேரத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவின் டிக்ளேர் முடிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியர்கள் எப்போதும் தனிநபர் சாதனையை விட அணியின் நலனுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ‌ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும், இணைச் செயலாளராக ஜெயே‌‌ஷ் ஜார்ஜூம், துணைத்தலைவராக மஹிம் வர்மாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றனர்.

    இந்த நிலையில் புதிய தலைவர் கங்குலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில் பல்வேறு வி‌‌ஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்யும் விதமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி லோதா கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இவற்றில் ஒன்று, ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது பி.சி.சி.ஐ.-யிலோ தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் 3 ஆண்டு இடைவெளி விட வேண்டும் என்பதாகும். இந்த விதியை மாற்றம் செய்ய புதிய நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அதாவது இந்த பதவி காலத்தை இரண்டையும் சேர்த்து கணக்கிடக்கூடாது. மாநில சங்கத்தில் பதவியில் இருந்தாலும் கிரிக்கெட் வாரியத்திலேயே தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வகையில் விதிமுறையை திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு 4-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதலும் அவசியமாகும்.

    இதை நிறைவேற்றினால் தற்போதைய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ‌ஷா ஆகியோர் 2024-ம் ஆண்டு வரை பொறுப்பில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுக்கு மேல் பதவி வகித்து விட்ட சவுரவ் கங்குலி ஜூலை மாதத்திற்கு பிறகு பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை துறக்க வேண்டி இருக்கும் என்பது நினைவு கூரத்தக்கது.

    கிரிக்கெட் வாரிய செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, போட்டித் தொடருக்கான கமிட்டி, பெண்கள் அணியின் தேர்வு கமிட்டி, கிரிக்கெட் திறமை கமிட்டி, மண்டல கமிட்டி, நடுவர்கள் கமிட்டி ஆகியவற்றுக்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 38வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் சூசைராஜ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில்
    கொல்கத்தா 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் 62வது நிமிடத்தில் பிரதிக் சவுதான் ஒரு கோலும், 93வது நிமிடத்தில் செஜ் கெவின் ஒரு கோலும் அடித்தனர்.

    இதனால் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஆட்டத்தின் கடைசியில் 96வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    கொல்கத்தா அணி விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி, 2 சமன் என 11 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
    நூர் சுல்தான்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று தொடங்கியது.
     
    இதில் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை பந்தாடினார்.

    மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் (இந்தியா), பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்தித்தது. இதில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வென்றது.

    மாற்று ஒற்றையர் ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் பாகிஸ்தானின் யூசுப் கலீல் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற கணக்கில் சுமித் நாகல் அபார வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகத் தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
    ×