search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    மனைவி அனுஷ்கா குறித்து விமர்சனத்திற்கு விராட் கோலி பதிலடி

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியின்போது தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேனீர் அளித்ததாக முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் என்ஜினீயர் விமர்சனம் செய்திருந்தார்.

    எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவில் சரன்தீப் சிங், ஜதின் பராஞ்பே, ககன் கோடா, தேவன் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யார் அனுஷ்கா சர்மாவுக்கு தேனீர் கொண்டு வந்து கொடுத்தனர் என்பதை பரூக் என்ஜினீயர் தெரிவிக்கவில்லை.

    81 வயதான பரூக் என்ஜினீயரின் இந்த விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    பரூக் என்ஜினீயரின் அற்பதனமான கருத்தின் மூலம் தேர்வு குழுவினரையும், விராட் கோலி மனைவியையும் சிறுமைப்படுத்தி உள்ளார் என்று அவர் சாடி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து பரூக் என்ஜினீயர் விராட் கோலியின் மனைவியிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதோடு, தான் நகைச்சுவையாக தெரிவித்ததை பெரிதுபடுத்திவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

    பரூக் என்ஜினீயர் தனது மனைவி அனுஷ்கா சர்மா குறித்து விமர்சனம் செய்ததற்கு விராட் கோலி இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அவர் மவுனம் கலைந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை போட்டியின்போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தைப் பார்க்க அனுஷ்கா வந்திருந்தார். அவர் குடும்பத்தினர் அமரும் பாக்சில் உட்கார்ந்து போட்டியை ரசித்தார். அவருடன் 2 நண்பர்கள் வந்திருந்தனர். ஆனால் தேர்வாளர்கள் அமர்ந்திருந்த பாக்ஸ் முற்றிலும் வேறுபட்டது.

    அனுஷ்கா சர்மா பிரபலமானவர் என்பதால் அவரது பெயரை வேண்டும் என்றே தேவை இல்லாமல் இதில் இழுத்துள்ளார்கள்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
    Next Story
    ×