என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டு பிளிஸ்சிஸ்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். 50 ஓவர் உலக கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் 1-3 எனத் தொடரை இழந்தது. டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவடைந்த டி20 தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 இழந்தது.

    இந்நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கான கேப்டன் பதவியை டு பிளிஸ்சிஸ் ராஜினாமா செய்துள்ளார். தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு குயிண்டன் டி காக் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து தொடரின்போது டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இதனால் டி காக் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட், இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ்படேல் இடம் பெற்றுள்ளனர்.
    வெலிங்டன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    20 ஓவர் தொடரைஇந்தியா 5-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் காயத்தால் ஆடவில்லை. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை.

    இதேபோல மற்றொரு வேகப்பந்து வீரர் கெய்ல் ஜேமிசன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் தான் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். தற்போது டெஸ்டில் அறிமுகமாகிறார்.

    சுழற்பந்து வீரர்களில் இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ்படேல் இடம் பெற்றுள்ளார். அவர் 7 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:-

    வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், ரோஸ் டெய்லர், வாக்னர், கிராண்ட்ஹோம், நிக்கோலஸ், வாட்லிங், புளுன்டெல், போல்ட், ஜேமிசன், அஜாஸ்படேல், டேரியல் மிச்செல், சவுத்தி.
    தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிவேகத்தில் அரை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை மோர்கன் மீண்டும் படைத்துள்ளார்.
    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.

    முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது.

    கிளாசன் 33 பந்தில் 66 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர் ), பவுமா 24 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் குயின்டன் டி காக் 24 பந்தில் 35 ரன்னும் (1 பவுண்டரி,4 சிக்சர்), மில்லர் 20 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி , 2 சிக்சர் ) அடித்தனர்.

    பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் தலா 2 விக்கெட்டும், ஆதில் ரஷீத், மார்க்வுட் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 5 பந்து எஞ்சியிருந்த நிலையில் 223 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) , கேப்டன் மார்கன் 22 பந்தில் 57 ரன்னும் ( 7 சிக்சர்), பட்லர் 29 பந்தில் 57 ரன்னும் ( 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    நிகிடி 2 விக்கெட்டும், பெகுல்வாயோ, ‌ஷம்சி, பிரிட்டோரியஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    கடைசி கட்டத்தில் மார்கனின் அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. பென் ஸ்டோக்ஸ் அவருக்கு உதவியாக (12 பந்தில் 22 ரன்) இருந்தார்.

    மார்கன் 21 பந்தில் அரை சதம் அடித்தார். ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 21 பந்தில் 50 ரன் எடுத்து இருந்தார். 20 ஓவரில் அதிவேகத்தில் அரை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை மார்கன் மீண்டும் படைத்தார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது அதிவேக அரைசதமாகும். கெய்ல் 17 மற்றும் 20 பந்திலும், வார்னர் 19 பந்திலும் அரை சதம் அடித்து இருந்தனர்.

    அதிரடி மூலம் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மார்கன் தட்டிச்சென்றார்.

    இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்றக் கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி 2-வது ஆட்டத்திலும் 2 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா முதல் போட்டியில் 1 ரன்னில் வென்றது.

    ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தனது 5-வது பெண் குழந்தைக்கு பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. 16 வயதில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அப்ரிடி ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் (351 சிக்சர்) என்ற சிறப்புக்குரியவர். 2017-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற அப்ரிடி தற்போது 20 ஓவர் மற்றும் 10 ஓவர் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 39 வயதான அப்ரிடிக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அவரது மனைவி நாடியா மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இரு தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது நலம் விரும்பிகளுடனும், ரசிகர்களுடனும் ‘டுவிட்டர்’ மூலம் பகிர்ந்துள்ள அப்ரிடி, ‘கடவுளின் எல்லையில்லா ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது. ஏற்கனவே எனக்கு 4 அற்புதமான மகள்கள் தந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு மகள் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    எனது மகள்களின் பெயர் அக்சா, அன்ஷா, அஜ்வா, அஸ்மரா. இந்த வரிசையில் புதிய வரவான 5-வது மகளுக்கும் ஆங்கில வரிசையில் ‘ஏ’ எழுத்தில் தொடங்கும் பெயரை சூட்ட விரும்புகிறேன். பொருத்தமான பெயரை தேர்வு செய்து நீங்கள் எனக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 223 ரன்கள் இலக்கை எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் பவுமா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 7.4 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது டி காக் 24 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். பவுமா 24 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த கிளாசன் 33 பந்தில் 66 ரன்களும், டேவிட் மில்லர் 20 பந்தில் 35 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

    பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. பட்லர் 29 பந்தில் 57 ரன்களும், பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்களும் குவித்தனர்.

    கேப்டன் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 7 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாச இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.
    டோனி தலைமையில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கலந்து கொண்டார். விழாவில் ஹர்பஜன் சிங் பேசியதாவது:-

    இந்தியாவில் பஞ்சாப் தவிர்த்து அதிக ரசிகர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. எனது 17-வது வயதில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். முதல் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தது எனது சாதனையாக இன்றும் உள்ளது.

    வாழ்வில் நாம் எண்ணிய லட்சியத்தை அடைய நாம் தொடர்ந்து கடின முயற்சியில் ஈடுபட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நாம் முயற்சியை கைவிடக் கூடாது. இருசக்கர வாகன ஓட்டுனரும் பின்னால் உட்கார்ந்து வருபவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் நாம் வாகனத்தை மது அருந்திவிட்டு ஓட்டக் கூடாது.

    தொடர்ந்து கிரிக்கெட்டில் பயணம் செய்த நான் இப்போது முதல் முறையாக படத்தில் நடிக்கிறேன். அதுவும் தமிழில் எனது முதல் படம் என்பது பெருமையாக உள்ளது. கிரிக்கெட்டில் கொடுத்த ஆதரவை எனது திரையுலக பயணத்திலும் நீங்கள் அளிக்க வேண்டும்.

    இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டோனி விளையாடுவார். கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை உள்ளது. மஞ்சள் ஜெர்சி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணிக்கு அனைவரும் ஆதரவு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மற்றும் உலக கோப்பையை வென்ற தருணங்களை மறக்க முடியாது என மாணவர்களின் கேள்வி களுக்கும் பதிலளித்தார்.
    ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி அட்டவணையை டுவிட்டரில் வெளியிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கிண்டல் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நேற்று ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியானதாக செய்திகள் உலா வந்தன. பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் போட்டிகளுக்கான தேதி வெளியானது. ஆர்சிபி அணி பெங்களூருவில் நடைபெறும் ஏழு போட்டிகளின் தேதியை வெளியிட்டிருந்தது. அத்துடன் ஒவ்வொரு அணிகளுடன் மோதும் தேதி, நேரத்தையும் டுவிட்டரில் வெளியிட்டிருந்தது.

    இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏன் இந்த அவசரம்? என்று கேட்பதுபோல் பதில் அளித்துள்ளது. ஆர்சிபி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சின்னசாமி, நாங்கள் இங்கே வருகிறோம். காலண்டரில் தேதிகளை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தது.

    அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ‘‘நாங்கள் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். ஆனால் சில அணிகள் முன்னதாகவே வெளியிட்டுள்ளன. இது எங்களுடைய லோகோ...’’ என பதிவிட்டுள்ளது.
    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார்.
    உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் முதன்மையாக விளங்குவது இந்தியன் பிரிமீயர் லீக். ஐசிசி இதற்கு ஏற்றபடி சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை தயாரிப்பதால் வெளிநாட்டு வீரர்கள் எளிதாக இந்தத் தொடரில் விளையாட முடிகிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவின் லார்சன் கூறுகையில் ‘‘எங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்க இருக்கும் என்றால், ஐபிஎல் விண்டோ எங்கள் வீரர்களுக்காக இருக்க வேண்டும். இதுதான் எங்களது முக்கிய நோக்கம். வீரர்களை அணிகள் எடுக்கும்போது அவர்களுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். சில வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    அடுத்தடுத்து இரண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருவதால், ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர்களின் ஆட்டத்தை நாங்கள் உன்னிப்பாக கவனிப்போம்’’ என்றார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட இருக்கும் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், பாகிஸ்தானில் விளையாட இருப்பது சூப்பர் உற்சாகம் எனத் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றுள்ள இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். டி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் பிடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ற வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தானில் வரும் 20-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை நடக்க இருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாட இருக்கிறார் டேல் ஸ்டெயின்.

    முதல் முறையாக இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் விளையாட இருப்பது சூப்பர் உற்சாகம் என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவருக்கும் வணக்கம். இங்கு நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்லப் போகிறேன். அது, பாகிஸ்தான் வந்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இணைய இருப்பது எனக்கு சூப்பர் உற்சாகம் என்பதுதான்.

    ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து எங்களது போட்டியை காண வேண்டும். இதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். போட்டியின்போது உங்களை பார்க்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும், எந்த மைதானம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா கடந்த சில வருடங்களாக ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. ஆனால் இந்தியா கடந்த முறை ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது.

    அதன்பின் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்ற சவுரவ் கங்குலி ‘டே-நைட்’ டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் பயனாக இந்தியா முதல் முறையாக வங்காளதேசம் அணிக்கெதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடியது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எங்களுக்கு எதிராகவும் இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டி20 உலக கோப்பைக்குப்பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் இந்திய அணி ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஆம்.... இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆனால் அடிலெய்டு மைதானமா? பெர்த் மைதானமா? என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.
    கடந்த உலக கோப்பையில் எங்களை தோற்கடித்த ஆஸ்திரேலியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா முகமது தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா போட்டியை நடத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அந்த அணியின் பார்ட்டியை சிதறடிப்போம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சு வீராங்கனை அனிசா முகமது தெரிவித்துள்ளார்.

    டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அனிசா ‘‘நாங்கள் இங்கு உலக கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் இருந்து அதனுடன்தான் செல்வோம். இது ஆஸ்திரேலியாவின் பார்ட்டியை சிதறடிக்க சிறப்பானதாக இருக்கும். அவர்கள் எங்கள் பார்ட்டியை 2018-ல் சிதறடித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க இது சரியானதாக இருக்கும்.

    ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த முத்தரப்பு தொடரில் கோப்பையை கைப்பற்றினர். இருந்தாலும் நாங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா அணி நம் மண்ணில் விளையாடும்போது ஸ்மித், வார்னருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இந்தத் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் டேவிட் வார்னர், ஸ்மித் விளையாட இருக்கிறார்கள். போட்டியின்போது இருவரையும் ரசிகர்கள் கிண்டல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    2018 கேப் டவுன் டெஸ்டின் போது வார்னரின் மனைவியை கிண்டல் செய்ததுதான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
    ×