என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 2 முறை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
46 வயதான ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும். தற்போதுள்ள அணியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
20 ஓவர் போட்டியில் விளையாட கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்து கொள்வது கடினமானது. ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இல்லாததால் பந்து வீசவில்லை. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
தற்போது உள்ள 5 இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள். பிரித்வி ஷா, வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் எதிர்கால இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருப்பார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத காலத்தில் அவர்கள் முத்திரை பதிக்கலாம்.
வெங்கடேஷ் அய்யரின் சிறப்பான ஆட்டத்துக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் என்னை ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு அணுகி இருந்தது.
பயிற்சியாளர் பதவியில் 300 நாட்கள் வீரர்களுடன் செலவிட வேண்டும். அவ்வளவு நாட்கள் என்னால் இருக்க முடியாது என்பதால் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டேன்.
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. குடும்பத்தை தியாகம் செய்து பார்க்க வேண்டிய வேலை அதுவாகும். இதனால்தான் அவர் பொறுப்பேற்றது வியப்பை அளித்தது. அவரது குடும்ப விவரம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன்.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்:
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா- ராகுல் டிராவிட் கூட்டணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
ஜெய்ப்பூரில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர் மார்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), மார்க் சேப்மேன் 50 பந்தில் 63 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின், புவனேஸ்வர்குமார் தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்தியா 2 பந்து எஞ்சிய நிலையில் வெற்றிக்கான இலக்கை எடுத்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 விக்கெட்டும், சவுத்தி, சான்ட்னெர், மிச்சேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இதேபோல அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் கூட்டணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற வேண்டியது. ஒரு ஓவர் அல்லது அதற்கு முன்பே வெற்றிபெறவேண்டிய ஆட்டத்தில் கடைசிவரை சென்றுதான் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 3 பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில் ரிஷப்பண்ட் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்த வெற்றி எளிதாக கிடைக்கவில்லை என்பதை கேப்டன் ரோகித் சர்மா ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நிச்சயமாக இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்தது போல் எளிதாக அமையவில்லை. ஆனாலும் இந்த அனுபவத்தின் மூலம் வீரர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
அதாவது எதை செய்வது அவசியம் என்பதை தெரிந்திருப்பார்கள். எல்லா நேரத்திலும் அதிரடியான ஷாட்களை ஆட முடியாது போன்றவற்றை புரிந்து கொள்ள இயலும்.
ஒரு கேப்டனாக, அணியாக வீரர்கள் வெற்றி பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு இது சிறந்த போட்டியாக இருந்தது. சில முக்கியமான வீரர்கள் இல்லை. இதனால் மற்ற வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.
சூர்யகுமார் யாதவ் எங்களது மிடில் வரிசையில் மிகவும் முக்கியமான வீரர் ஆவார். சுழற்பந்தை அவர் எளிதாக கையாண்டார். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி நியூசிலாந்தை கட்டுப்படுத்தினார்கள்.
போல்ட் பந்தில் நான் ஆட்டம் இழந்தது என்பது என்னுடைய பலவீனத்தை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். அவருடைய பலம் எனக்கு தெரியும். மகிழ்ச்சியுடன் வெற்றி கிடைத்தது. முதல் வெற்றி எப்போதுமே சிறந்தது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருந்தது.
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.
பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பாக மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. இது அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும் போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.
சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது பல்வேறு விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.
பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.
2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் நடத்த முடியவில்லை.
சமீபத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவரானார் சவுரவ் கங்குலி
ஜெய்ப்பூர்:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 40 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்ற வகையில் நான் தயாராக இருக்கிறேன். நான் தொடக்கம் முதல் 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். இதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.
ஐ.பி.எல். போட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக நான் 3-வது வீரராக விளையாடி வருகிறேன். நான் ஏற்கனவே விளையாடியதைதான் செயல்படுத்தி உள்ளேன். புதிதாக ஒன்றும் செய்யவில்லை. 20 ஓவர் போட்டியில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.
பயிற்சியின்போது நான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். வெற்றிபெற்ற அணியில் நான் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






