என் மலர்
விளையாட்டு
ராஞ்சி:
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 154 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பிலிப்ஸ் 21 பந்தில் 34 ரன்னும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), கப்தில் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), மிச்சேல் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர்.
ஹர்சல் படேல் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், அக்ஷர் படேல், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய இந்தியா 16 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லோகேஷ் ராகுல் 49 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி , 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 36 பந்தில் 55 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 117 ரன் எடுத்தனர். ரிஷப் பண்ட் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். சவுத்தி 3 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 இந்த கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் கூட்டணி தங்களது முதல் தொடரிலேயே வென்று முத்திரை பதித்தது.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சி மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால் நாங்கள் எங்களை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.
நியூசிலாந்து அணியின் தரமான பேட்டிங் வரிசையால் நெருக்கடி இருந்தது. ஒரு விக்கெட் கைப்பற்றினால் பேட்டிங் வரிசையை உடைத்து விடலாம் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினேன்.
அஸ்வின், அக்ஷர் படேல் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்களின் தரம் எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான் எனக்கு முக்கியம்.
தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட அணி ஆடி வருகிறது. அவர்கள் நிறைய போட்டிகளில் ஆடவில்லை. ஹர்சல் படேல் பலமுறை முதல்தர போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். இதே மாதிரி இந்த போட்டியிலும் தனது திட்டத்தை செயல்படுத்தினார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் ஆவார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








