என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது.
    கொல்கத்தா:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

    இதற்கான டாஸ்  சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்.  துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர்.

    இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளது. அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர். எனவே, இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
    டென்னிஸ் வீராங்கனை மாயமானது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டது.
    பீஜிங்:

    சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் (வயது 35),  சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி பற்றி சமூக ஊடகத்தில் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை பெங் சூவாய் வெளியிட்ட நாள் முதல் அவர் மாயமானார். பொது வெளியில் அவர் தோன்றவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியாமல் இருந்தது. அவரை மகளிர் டென்னிஸ் சங்கம் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.

    சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டது. 

    இந்நிலையில் காணாமல் போன பெங் சூவாய் தோன்றும் இரண்டு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பீஜிங்கில் நடைபெறும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியின்போது பெங் சூவாய் பங்கேற்றுள்ளார். பெங்க் சூவாய் வீடியோவில் சிரித்தபடி நிற்கிறார். அத்துடன் அவர் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அத்துடன் குழந்தைகளுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை:

    பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

    இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இலங்கை கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அவரும், நிஷாங்காவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இருவரும் மிகவும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க ஜோடியை பிரிக்கும் வகையில் பந்துவீச்சு முறையை மேற்கொண்டது. ஆனால் உணவு இடைவேளை வரை இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    கொல்கத்தா:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.

    டி20 உலக கோப்பை தொடர் நடந்த சில தினங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணித்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் 164 ரன்களும், இரண்டாவது போட்டியில் 153 ரன்களும் சேர்த்தது. பந்து வீச்சிலும் அந்த அணி வீரர்கள் எந்த நேரத்திலும் சவால் அளிக்கும் வகையில் துல்லியமாக வீசுகின்றனர்.

    இன்றைய ஆட்டத்தில் தோற்காமல் ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் போராடுவார்கள். 

    இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. பந்துவீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர்.

    எனவே, இந்த போட்டியில் வென்று டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகன் கதம் 56 பந்தில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    புதுடெல்லி:

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ஐதராபாத், விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் தமிழ்நாடு, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    தமிழக அணி சார்பில் சரவணன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முருகன் அஷ்வின், முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 34 ரன், விஜய் சங்கர் 43 ரன் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இதன்மூலம் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இதேபோல், விதர்பா, கர்நாடகம் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதியில் கர்நாடகம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.

    அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
    சென்னை:

    14வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியதாவது:-

    சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதற்கான தருணம் வெகு தொலைவில் இல்லை. ஐபிஎல் 15வது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும். புதிய அணிகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஒரு மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது.

    பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கான பெருமை அணியின் உரிமையாளர் சீனிவாசனையே சேரும். இக்கட்டான காலங்களில் அணிக்கு ஆதரவாக நின்றார். இதேபோல் காசி விஸ்வநாதன் அணியை ஒன்றிணைக்கும் பசை போன்றவர். ஒவ்வொரு சீசனிலும் அவர் அணியை வழிநடத்தினார்.

    டோனி போன்ற கேப்டன் இருக்கும்போது, சென்னை சூப்பர் கிங்சை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? அணியின் இதயத்துடிப்பு மற்றும் முதுகெலும்பு டோனி. இந்தியா இதுவரையில் உருவாக்கிய மிக வெற்றிகரமான கேப்டன். அவர் ஏற்படுத்திய பிணைப்பு, அவர் உருவாக்கிய மரபு நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வந்து சேர்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீரர்களை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். தூதரகத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு இன்று மதிய விருந்து வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறிய அவர், வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், திறமையுடனும் செயல்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

    2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை மத்திய திரும்பப் பெற்றதுடன்  மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவை அறிவித்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.  காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஆனால், பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில், பாகிஸ்தானுடன் உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம் என சீனிவாசன் தெரிவித்தார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் பேசியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம். டோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    தற்போதுள்ள எந்த வீரரையும் இழக்க சென்னை அணி விரும்பவில்லை. சென்னை அணியில் டோனி தொடர்ந்து நீடிப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, டோனி  சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்றும்,  இன்னும் பல போட்டிகளுக்கு அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
    தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் டோனி குறிப்பிட்டார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை அணியின் கேப்டன் டோனி, வெற்றிக் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

    விழாவில் டோனி பேசுகையில், தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் குறிப்பிட்டார்.

    டோனி

    சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அளப்பரியது என்று கூறிய டோனி,  சென்னை அணியின் ரசிகர்கள் பலம் தமிழ்நாட்டைக் கடந்தது என்றார். 5 ஆணடுகள் கடந்தாலும்கூட நான் விளையாடும் கடைசி போட்டி சென்னையில்தான் என்றும் டோனி தெரிவித்தார்.
    தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, டோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது  குடும்பமே டோனியின் ரசிகர்தான். எனது தந்தை, மகன்,பேரன் என அனைவருமே டோனியின் ரசிகர்கள்தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் நான்.

    டோனி சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர்.  தங்களில் ஒருவராக டோனியை தமிழர்கள் கருதுகிறார்கள். எந்த நெருக்கடியிலும் ‘கூல்’ ஆக இருப்பவர்கள் கருணாநிதியும், டோனியும். டோனியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
     சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்  சீனிவாசன், கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக எம்பி கலாநிதி வீராசாமி மற்றும் அணி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் கலந்து கொள்கின்றன.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் கலந்து கொள்கின்றன.

    இந்த விழாவிற்கு ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் டோனி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

    ×