search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Women's Tennis"

    உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிஆட்டத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுயான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார்.

    1 மணி 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் கோன்டாவெய்ட்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

    வாகை சூடிய முகுருஜா மொத்தம் ரூ.11½ கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த கோன்டாவெய்டுக்கு ரூ.5½ கோடி கிடைத்தது. வெற்றிக்கு பிறகு 28 வயதான முகுருஜா கூறுகையில் ‘என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்’ என்றார்.

    வெற்றியின் மூலம் முகுருஜா தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், சபலென்கா (பெலாரஸ்) 2-வது இடத்திலும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். கோன்டாவெய்ட் ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இதன் இரட்டையர் பிரிவு இறுதிசுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-காத்ரினா சினியகோவா இணை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சூ வெய்ஸ் சீக் (சீன தைபே)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் காயம் அடைந்த சிட்சிபாசுக்கு (கிரீஸ்) பதிலாக இடம் பெற்ற இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி 6-1, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டிடம் தோல்வி அடைந்தார்.

    ‘ரெட்’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஹர்காக்சை (போலந்தை) வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்து அரைஇறுதியை உறுதி செய்தார். அவர் அரை இறுதியில் ‘நம்பர்ஒன்’ வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார்.
    உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் கோன்டாவெய்ட் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தார்.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 8 வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    இதன் 3-வது நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) தனது 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கோன்டாவெய்ட் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தார். சர்வதேச போட்டியில் தொடர்ந்து 12 வெற்றிகளை குவித்துள்ள கோன்டாவெய்டுக்கு, பிளிஸ்கோவாவுடன் 4-வது முறையாக மோதியதில் அதில் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். 2 மணி 10 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் முகுருஜா சரிவை சமாளித்து 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவாவை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கினார். கிரெஜ்சிகோவாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.
    ‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் இன்று முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

    மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் இருந்து உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகி விட்டார். அவர் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாகவும் இந்த முடிவை மேற்கொண்டார். இதேபோல் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபிர் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு வசதியாக ஒதுங்கினார். அவர்களுக்கு பதிலாக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 10-வது இடத்தில் உள்ள பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு மெக்சிகோ நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் ‘சீச்சன் இட்சா’ பிரிவில் சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும், ‘தியோதி அகான்’ பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    தொடக்க நாளில் நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிரெஜ்சிகோவா-கோன்டாவெய்ட், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருகா ஆகியோர் மோதுகிறார்கள்.

    பெண்கள் இரட்டையர் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. இதில் ஷூகோ அயமா-எனா ஷிபஹரா (ஜப்பான்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)-ஜாங் ஷூய் (சீனா) உள்பட 8 இணைகள் கலந்து கொள்கிறது.
    ×