என் மலர்
விளையாட்டு



மும்பை:
இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவரது இந்த முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தேர்வு குழுவினர் கூறும்போது, இந்திய டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்வதற்கான காலம் இன்னும் இருக்கிறது என்று தெரிவித்தனர். முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப்பண்டை கேப்டனாக நியமிக்கலாம் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது இருந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தேன். எல்லோரும் டோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தனர். குறுகிய காலத்துக்காக நாங்கள் கும்ப்ளேவை தேர்வு செய்தோம். அவரும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.
அதே மாதிரி தற்போது ரோகித் சர்மா அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒரு வரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம்.
கேப்டன் பதவியால் விராட் கோலியின் பேட்டிங் திறமை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை நான் ஏற்கவில்லை. கேப்டன் ஷிப்பால் அவரது பேட்டிங் பாதிக்கவில்லை. இதற்கான புள்ளி விவரங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தென் ஆப்பிரிக்க தொடரில் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் விளையாடினார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சதம் அடிக்காதது உண்மைதான். ஆனால் அவர் சிறப்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தி வந்தார்.
இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
முதல் போட்டி 30-ந் தேதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ந் தேதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ந் தேதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ந் தேதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை இன்று தெரிவித்தன.
இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 11-ந் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த 20 ஓவர் தொடரும் ஒத்தி வைக்கப்படுமா? என்பது பின்னர் தெரியவரும்.






