என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நாடு முழுவதிலும் இருந்து 700 வீரர்கள்- வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழகத்தின் பவானி தேவி, வினோத் தங்கப் பதக்கம் வென்றனர்.
    32-வது தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் பல்கலைக் கழகத்தில் கடந்த 3 தினங்களாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சென்னையை சேர்ந்த சர்வதேச வீராங்கனை பவானி தேவி சேபர் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்கள் பாயில் தனிநபர் பிரிவில் வினோத் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.
    நியூசிலாந்து நிர்ணயித்த 229 ரன் வெற்றி இலக்கை 49.3 ஓவரில் அடைந்து தோல்வியடையாத அணியாக வளம் வருகிறது தென்ஆப்பிரிக்கா.
    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    நேற்றுடன் 15 ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரேலியா 4 ஆட்டத்தில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 6 புள்ளியும், இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 4 புள்ளியும், இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளியும் பெற்றுள்ளன. பாகிஸ்தான் தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    இந்த நிலையில் 16-வது லீக் ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடந்தது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து கேப்டன் ஷோபி டெவினும், சுசி பேட்சும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். சுசி பேட்ஸ் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து அமேலியாகெர் களம் இறங்கினார். இந்த ஜோடி அபாரமாக ஆடியது. குறிப்பாக ஷோபி டெவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அமேலியாகெர் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்.

    ஒருமுனையில் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் இருந்து ஷோபி டெவின் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். 101 பந்தில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஷோபி டெவின் ஆட்டம் இழந்தபோது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்னாக இருந்தது.

    அதன்பின் தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. இதனால் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 47.5 ஓவர்களில் 228 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் ‌ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா கஹா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர், 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி  பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனை லிசில் லீ 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தஸ்மின் பிரிட்ஸ் 18 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லாரா வால்வார்த் உடன் கேப்டன் சுனே லுயுஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    லாரா 94 பந்தில் 67 ரன்கள் எடுத்தும், சுனே லுயுஸ் 73 பந்தில் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

    இருவரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

    புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் லக்னோ அணிக்கு சென்றதுடனும், அணியின் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

    இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளது. அனுபவ வீரரான ஷிகர் தவான் டெல்லி அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு மாறியுள்ளார். மயங்க் அகர்வாலுக்கு கீழ் விளையாட இருக்கும் தவான், தன்னுடைய ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘பஞ்சாப் அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது எனக்கு 2-வது வீடு போன்றது. நான் ஒரு சரியான பஞ்சாபி நபர், அது என் ரத்தத்தில் உள்ளது. நான் மிகவும் இந்த தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் சிறந்த அணியை பெற்றுள்ளோம். நாங்கள் வெற்றியை பதிவு செய்து இந்தத் தொடரை முடிப்போம் என்பதை என்றால் உறுதியாக கூற இயலும்.

    மயங்க் அகர்வால் சிறந்த வீரர். அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய ஆதரவை வழங்குவேன். அவர் முதிர்ச்சியடைந்த வீரர். சீனியர் வீரர். அவருடைய கம்பெனியுடன் மகிழ்ச்சியாக விளையாடுவேன். நாங்கள் நன்றாக பழகுவோம்’’ என்றார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடி சதம் விளாசிய பாபர் அசாம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
    பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் கடந்த 12-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது. இந்த டெஸ்டில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 2-வது இன்னிங்சில் சதம் அடிக்க, போட்டி டிராவில் முடிந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 97 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மொத்தமாக ஆஸ்திரேலியா 505 ரன்கள் முன்னிலை பெற்றதால் பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்படியும் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எண்ணினர்.

    பாகிஸ்தான் அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு அப்துல்லா ஷஃபிக் உடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. குறிப்பாக பாபர் அசாம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.

    இதனால் பாகிஸ்தான் 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், ஷஃபிக் 71 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி நாளில் பாகிஸ்தான் அணிக்கு 314 ரன்கள் தேவைப்பட்டது. பாபர் அசாம் களத்தில் இருந்ததால் எப்படியும் இலக்கை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

    4-வது நாளில் தலைசிறந்த அணியின் பந்து வீச்சை எதிர்த்து சதம் விளாசி பாபர் அசாமின் ஆட்டத்தை அனைவரும் பாராட்டினர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்,  பாபர் அசாமை  கைத்தட்டி பாராட்டுவது போன்ற எமோஜியை வெளியிட்டு, நாளை ஒரு அற்புதமான முடிவாக இருக்கும் எனத் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

    இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பரம எதிரியாக இருந்தாலும் அஸ்வின் பாராட்டு தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

    ஐந்தாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை டிரா செய்தது. 171.4 ஓவர்கள் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 425 பந்துகளில் 196 ரன்கள் குவித்தார்.

    இந்த நிலையில், பாபர் அசாமை பாராட்டிய அஸ்வினை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் லத்தீப் புகழ்ந்தார்.

    பாபர் அசாம்

    அஸ்வின் அவரது மனதில் உள்ளவை அப்படியே வெளிப்படுத்துவார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரணியை பாராட்டும்போது அஸ்வின் முன்னணியில் இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இன்சமாம் உல் ஹக் உடன் பேட்டி அல்லது பாபர் அசாமை பாராட்டியதில் அஸ்வின் முன்னணியில் இருக்கிறார். அஜய் ஜடேஜா உடன் நாங்கள் சிறந்த நட்புணர்வை பகிர்ந்துள்ளோம். அதுபோன்ற சிறந்த உரையாடல் தற்போது இல்லை’’ என்றார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்றால், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க யோ-யோ டெஸ்ட் வைக்கப்படுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் திறமையுடன் யோ-யோ டெஸ்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். வீரர்கள் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், அடிக்கடி காயம் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த டெஸ்ட் வைக்கப்படுகிறது. ஒரு வீரர் காயம் ஏற்பட்டு விளையாடாமல் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பும்போது அல்லது ஐ.பி.எல். போட்டியில் விளையாடும்போது இதுபோன்று யோ-யோ டெஸ்ட் வைக்கப்படும்.

    யோ-யோ டெஸ்டில் 16.5 புள்ளிகள் பெற்றால் தேர்ச்சி என கணக்கிடப்படும். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

    இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ-யோ டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் 15 மதிப்பெண்ணிற்கும் குறைவாக பெற்றுள்ளார்.

    இது வெறும் பிட்னஸ் அப்டேட்தான். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இது பிரித்வி ஷா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடுவதை தடுத்து நிறுத்தாது. பிட்னஸ்க்கான வரையறைதான் தவிர, முடிவு அல்ல என்ற முக்கியமான நபர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிரித்வி ஷா அடுத்தடுத்து மூன்று ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். மூன்று போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய பின்னர், சோர்வு யோ-யோ டெஸ்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

    தொடக்க ஜோடி ஏமாற்றம் அளித்தாலும் கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி சதம் விளாச, இங்கிலாந்து முதல் நாளில் 244 ரன்கள் சேர்த்தது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது.  2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ் டவுனில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த தொடக்க வீரர் கிராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரர் அலெக்ஸ் லீஸ் 30 ரன்னில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட்- டான் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 199 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 116-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது 25-வது செஞ்சூரியாகும். ஜோ ரூட் முதல் டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தார்.

    ஜோ ரூட், லாரன்ஸ்

    ஆட்டம் முடியும் தருவாயில் லாரன்ஸ் ஆட்டம் இழந்தார். அவர் சதம் அடிக்க முடியாமல் போனது ஏமாற்றமே. லாரன்ஸ் 91 ரன்னில் ஹோல்டர் பந்தில் பெவிலியன் திரும்பினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்து இருந்தது. ஜோ ரூட் 119 ரன்னுடன் களத்தில் உள்ளார். 

    இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நான்காவது இன்னிங்சில் 141 ரன்கள் எடுத்து 8-வது இடத்தில் உள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடந்தது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 196 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் நான்காவது இன்னிங்சில்அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

    ஏற்கனவே, 1995-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் 185 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சதமடித்தனர்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடி 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 93 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் பஹீம் அஷ்ரப், சஜித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அசத்தலாகப் பந்து வீசினர்.
    இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் பாபர் அசாம் 36 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட், வெப்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 7 ரன்னில் அவுட்டானார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 35 ரன்னுடனும், லபுஸ்சனே 37 ரன்னுடனும் களத்தில் உள்ளன. ஆஸ்திரேலியா இதுவரை 489 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 506 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் களமிறங்கியது. இமாம் உல் ஹக் 1 ரன், அசார் அலி 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக்குடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தது. இதனால் பாகிஸ்தான் ரன் குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக ஆடிய பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.

    நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், அப்துல்லா ஷபிக் 71 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றிபெற 314 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷபிக் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 228 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய வாவத் ஆலம் 9 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் 150 ரன்களை கடந்தார். இவருடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபர் அசாம் 196 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    ஒருமுனையில் விக்கெட் சரிய போட்டி மிகுந்த பரபரப்பாக சென்றது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 3 விக்கெட் தேவைப்பட்ட நிலையில் ரிஸ்வான் தூணாக நின்றார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் சதமடித்தார். 
    இறுதியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்தபோது போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது.

     இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
    ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் என 2 இந்தியர்கள் மட்டுமே இதுவரை மகுடம் சூடியிருக்கிறார்கள்.
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் ரவுண்டில் 17-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் ஷியியை எதிர்கொண்டார். இதில் 21-18, 21- 13 என நேர் செட்களில் வென்றார். இந்த வெற்றியை 42 நிமிடத்தில் பிவி சிந்து பெற்றார்.

    இதேபோல், சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்பெயினின் பெட்ரிஸ் காரெல்சுடன் மோதினார். இதில் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பல ஆண்டுகளாக முதல் 5 இடங்களுக்குள் இருந்த விராட் கோலி தற்போது 9வது இடத்தில் உள்ளார்.
    துபாய்:

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

    பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 9-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்  பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் தென்னாபிரிக்காவின் ரபாடா உள்ளார். இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதல் இடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    விருந்தோம்பலுக்கும், பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற தமிழர்களுடைய பெருமையை உலகறியச் செய்வதற்கான ஒரு நிகழ்வாக செஸ் ஒலிம்பியாட் போட்டி அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி மாஸ்கோவில் நடத்தப்பட இருந்தது, ஆனால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் பதற்றமான சூழ்நிலையில், ரஷியாவில் போட்டி நடத்தப்படவில்லை. போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடக்க இருப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

    நான் இப்போது தமிழ்நாடு உலக அரங்கில் ஒரு மைல்கல்லாய் நிலைத்திருக்கப் போகின்ற ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  அந்தச் செய்தி என்னவென்றால், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்ற வாய்ப்பை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம். 

    விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஆற்றல், திறமை, அழகு என நிறைய இருக்கும். அதிலும் செஸ் விளையாட்டுப் போட்டி என்றால், விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், பார்க்கின்றவர்கள் படபடப்போடும் பங்கேற்கும் ஒரு அற்புதமான விளையாட்டு. இப்படிப்பட்ட அற்புதமான செஸ் விளையாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும்  நிறைய தொடர்பு இருக்கிறது. உலகில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி இன்றைக்கு பிரக்யானந்தா வரையில் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது தமிழ்நாடு. 

    இந்த நிலையில், சுமார் 150-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பங்குபெற இருக்கும் செஸ் விளையாட்டுப் போட்டி, இதுவரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்துவித பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் மிகப் பெரியதாக அமைய உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய பன்னாட்டு செஸ் அமைப்பிற்கும், இந்திய செஸ் அமைப்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

    விருந்தோம்பலுக்கும், பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற தமிழர்களுடைய பெருமையை உலகறியச் செய்வதற்கான ஒரு நிகழ்வாக இது நிச்சயம் அமையும். உலக செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக நடத்துவோம். உலக விளையாட்டு வீரர்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம். 
    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    இந்திய அணிக்காக விளையாடும்போது காயம் அடைந்த ருதுராஜ், அதில் இருந்து மீண்டும் உடற்தகுதியை நிரூபித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டிக்கு தயாராகும் வகையில் வலைப்பயிற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைந்து, அணிக்கு தயாராகும் வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். காயம் குணமடைவதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டார்.

    இந்த நிலையில், காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றார். தகுதி பெற்றதும் சூரத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சென்று இணைந்துள்ளார்.

    ஏற்கனவே டு பிளிஸ்சிஸ் அணியில் இருந்து சென்ற நிலையில், ருதுராஜ் காயம் சி.எஸ்.கே. அணியை கவலை அடையச் செய்தது. தற்போது அணியில் இணைந்துள்ளது சி.எஸ்.கே. ஆறுதலை கொடுத்துள்ளது.

    ×