என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக ஏலம் போகாத சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு இவரது ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது.

    2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சில வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறினர். அதற்கு மாற்று வீரராகக்கூட ரெய்னாவை தேர்வு செய்யவில்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் சிறந்த வர்ணனையாளரும் கூட. 2017-ம் ஆண்டுக்குப்பின் வர்ணனை செய்யாமல் உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி பின்னர், சில அணிகள் அவரை பயிற்சியாளராக நியமிக்க விரும்பியது. ஆனால், ரவி சாஸ்திரி பிடி கொடுக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் ரெய்னா மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் வர்ணனை செயல்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இந்தியில் வர்ணனை செய்ய இருக்கிறார்கள்.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2022 சீசன் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    இதனால் 10 அணி வீரர்களும் மும்பைக்கு படையெடுத்துள்ளனர். ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

    வீரர்களை ஒட்டலில் இருந்து விளையாடும் இடத்திற்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு அணியின் சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கான பேருந்து மும்பையில் உள்ள ஓட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் அணியுடன் இணைந்துள்ளனர். டெல்லி அணி கொலாபாவில் உள்ள தாஜ் மஹால் பேலஸில் தங்கும். மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அணியின் பயோ-பபுளில் வீரர்கள் இணைவார்கள்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் ஷேன் வாட்சனையும் உதவி பயிற்சியாளராக நியமித்துள்ளது. அவர் விரைவில் அணியுடன் இணைய இருக்கிறார்.

    மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்றுள்ள ரோகித் சர்மா, இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா மூன்று வடிவிலான அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மூன்று அணிக்கான கேப்டன் பதவியை ரோகித் சர்மா பெற்ற பிறகு, அவர் தலைமையில் இந்திய அணி 14 போட்டிகளில் விளையாடியுள்ளது. 14 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. சில தினங்களுக்கு முன் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்த நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவால் சிறந்த டெஸ்ட் கேப்டனாக முடியும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவால் விராட் கோலியை விட சிறந்த டெஸ்ட் அணி கேப்டனாக முடியும். அவர் எத்தனை போட்டியில் கேப்டனாக பணியாற்றுவார் என்பது தெரியாது. அவர் ஒவ்வொரு தொடரையும் எப்படி ஒயிட் வாஷ் செய்கிறார் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறொம். அந்த வகையில் அவர் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்வார் என நினைக்கிறேன். கேப்டன் பதவி சரியான கேப்டன் கைக்கு வந்ததாக உணர்கிறேன்’’ என்றார்.

    விராட் கோலி தலைமையில் இந்திய அணி 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த மாதம் ரோகித் சர்மா 35 வயதை எட்டுகிறார். அவரால் விராட் கோலி போன்று 68 போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க முடியுமா? எனத் தெரியவில்லை. ஆனால், ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதிக்க வாய்ப்புள்ளது.

    மார்க் வுட் காயம் காரணமாக இடம் பிடிக்காததால், சகிப் முகமது இங்கிலாந்து அணியில் அறிமுகம் ஆக இருக்கிறார்.
    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டி இன்று பார்படோஸில் தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயத்தால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சகிப் மெஹ்மூத் அணியில் அறிமுகம் ஆகிறார்.

    முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. காயத்தை கருத்தில் கொண்டு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலெக்ஸ் லீஸ், 2. ஜாக் கிராவ்லி, 3. ஜோ ரூட், 4. டேனியல் லாரன்ஸ், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஜானி பேர்ஸ்டோவ், 7. பென் போக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9. கிரேக் ஓவர்டன், 10. ஜேக் லீச், 11. சகிப் முகமது.

    இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீராங்கனை டேமி பியூமோன்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி சாதனைப் படைத்துள்ளார்.
    நியூசிலாந்தில் பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று தனது 4-வது லீக்கில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா 134 ரன்னில் சுருண்டது. பின்னர் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

    இந்தியா தோல்வியடைந்தாலும் அனுபவ வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி ஒருநாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டேமி பியூமோன்ட் விக்கெட்டை வீழ்த்தி 250-ஐ தொட்டார்.

    கோஸ்வாமிக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலியாவின் பிட்ஸ்பாட்ரிக், வெஸ்ட் இண்டீஸின் அனிசா முகமது ஆகியோர் தலா 180 விக்கெட்டுகள் வீழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர்.

    கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த போட்டியில் கோஸ்வாமி 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதன்மூலம் உலக கோப்பையில் 40 விக்கெட்டுகளை கைப்பற்றி, உலக கோப்பையில் இதற்கு முன் 39 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்த லின் புல்ஸ்டோன் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா தனது விருப்பத்தை தெரிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலியிடம் பேசுவேன் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
    இந்தியா- பாகிஸ்தான் இடையே 2012-13-க்கு பிறகு நேரடி போட்டிகள் நடத்தப்படவில்லை. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.

    இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பரிந்துரை செய்திருந்தார்.

    இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த போட்டிக்கு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.

    இதற்கிடையே ரமீஷ் ராஜாவின் பரிந்துரையை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையேயான போட்டியை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக கூறி இருந்தது.

    இந்த நிலையில் 4 நாடுகள் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலியிடம் பேசுவேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் கங்குலியிடம் 4 நாடுகள் போட்டி குறித்து நான் பேசுவேன். நாங்கள் இருவரும் முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள்.

    இதனால் எங்களுக்கு கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமே ஆகும். அது அரசியல் அல்ல. இந்த போட்டியில் இந்தியா பங்கேற்காதபட்சத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 நாடுகள் போட்டியை ஆண்டுதோறும் பாகிஸ்தானில் நடத்த முயற்சிப்போம்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

    112 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் “ரவுண்டு ராபின் “ முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 14 ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரே லியா 4 ஆட்டத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 6 புள்ளியும், இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 4 புள்ளியும், வங்காளதேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    15-வது லீக் ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் இன்று நடந்தது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

    இங்கிலாந்து வீராங்கனைகளின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 16.4 ஓவர்களில் 61 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. யாஷிகா பாட்டீல் 8 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும், தீப்தி சர்மா ரன் எதுவும் எடுக்காமலும், கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னிலும், ஸ்னேகா ரானா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

    நன்றாக ஆடி வந்த தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 35 ரன்னில் 6-வது ஆக வெளியேறினார். அவரும் கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து இருந்தார்.

    அதைத்தொடர்ந்து விக்கெட்டுகள் மேலும் சரிந்தன. இந்திய அணி 36.2 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. ரிச்சா கோஷ் 33 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜூலன் கோஸ்சுவாமி 20 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சார்லிடீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியது.

    4 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனைகளால், அதன்பின் இங்கிலாந்தின் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் இங்கிலாந்து அணி 31.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

    இந்தியா இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
    இன்று நடைபெறும் 2வது அரையிறுதி சுற்றில் மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    கோவா:

    கோவாவில் நடைபெற்று வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த தொடரில், புள்ளிகளின் அடிப்படையில், ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் , ஏ.டி.கே.மோகன் பகான் , கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரை இறுதி போட்டிகளில் விளையாட தகுதி பெற்றிருந்தன.

    இதில் ஒவ்வொரு அணியும் இரண்டுமுறை அரையிறுதி போட்டிகளில் எதிர் அணியுடன் மோத வேண்டும். இதன் முடிவில் வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    அதன்படி முதலாவது அரையிறுதி சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி  1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. 

    நேற்று மீண்டும் இரு அணிகளும் 2வது அரையிறுதி சுற்றில் மோதின. இந்த ஆட்டத்தை கேரளா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

    போட்டி தொடங்கிய 18-வது  நிமிடத்தில் கேரளா வீரர் லூனா முதல் கோல் அடித்தார். 50-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் ஹால்டேர் ஒரு கோல் அடித்தார். 

    அதன் பிறகு ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தால் போட்டி சமனில் முடிந்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த கேரள அணி 2வது போட்டியை சமன் செய்ததால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று நடைபெறும் இரண்டாவது  அரையிறுதி சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு வழிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
    சென்னை:

    பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. 

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     
    2022 சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

    நடந்துகொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்த நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால், தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது. 

    சரியாக 10 நாட்களுக்குள், ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முதலமைச்சர் அலுவலகத்தை அணுகிய சில மணிநேரங்களில் அனைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு உடனே வழங்கியது.

    44வது செஸ் ஒலிம்பியாட் 2022க்கான ஏலத்தை வென்றதில் தமிழ்நாடு அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்போட்டிகளில்200 நாடுகளைச் சேர்ந்த 2000 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

    மேலும் இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும். 

    தமிழக அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் எனப் பல்வேறு வழிகளில்
    சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

    இதுபோன்ற ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கல் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர். 

    இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கல் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

    செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை சென்னையில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது

    இந்நிலையில், முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  செஸ் ஒலிம்பியாட்  போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர் ,வீராங்கனைகளை தமிழ்நாடு வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    மாநில அளவில் 11 விளையாட்டு மையங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும்  தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    விளையாட்டு வளர்ச்சிக்கான தேசியத் திட்டத்தின் கீழ் இமயமலைப் பகுதி உட்பட நாடு முழுவதும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் பங்கேற்பதை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக இமயமலைப் பகுதியில் ரூ.506.23 கோடி மதிப்பீட்டில்  77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.மேலும், 24 விளையாட்டுக் கல்வி கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட அளவில் 199 விளையாட்டுக்களுக்கும், மாநில அளவில் 11விளையாட்டு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் விளையாட்டு வசதி விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ.273.85 கோடி மதிப்பீட்டில் 30 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படாத இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார்.
    ஐ.பி.எல். தொடரின் 2022 சீசன் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏலத்தில் இந்தியாவின் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. அவர்களில் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விளையாடும் ஹனுமா விஹாரி.

    இவர் நேற்றுடன் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெறும் டாக்கா பிரிமீயர் லீக் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறார். இவருடம் மேலும் பல இந்திய வீரர்கள் விளையாட இருக்கிறார்கள்.

    நேற்றுதான் சர்வதேச போட்டியில் விளையாடி முடித்துள்ள ஹனுமா விஹாரி ஒன்றிரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தபின், டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுவார்.

    ஹனுமா விஹாரியுடன் பெங்கால் அணி கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபராஜித், அசோக் மெனாரியா, சிராக் ஜானி, குரிந்தர் சிங் போன்றோரும் விளையாட இருக்கிறார்கள்.

    டெல்லி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் இடபெறவில்லை.
    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இதனையடுத்து 27-ந் தேதி மும்பை அணி முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் இடபெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது அவரது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் முதல் போட்டியில் விளையாடவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைய 10 முதல் 12 நாட்கள் ஆகும் என தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது.

    ×