என் மலர்
விளையாட்டு

க்ளீன் போல்டாகிய இந்திய வீராங்கனை
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா
112 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் “ரவுண்டு ராபின் “ முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 14 ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரே லியா 4 ஆட்டத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 6 புள்ளியும், இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 4 புள்ளியும், வங்காளதேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
15-வது லீக் ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் இன்று நடந்தது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது
இங்கிலாந்து வீராங்கனைகளின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 16.4 ஓவர்களில் 61 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. யாஷிகா பாட்டீல் 8 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும், தீப்தி சர்மா ரன் எதுவும் எடுக்காமலும், கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னிலும், ஸ்னேகா ரானா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.
நன்றாக ஆடி வந்த தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 35 ரன்னில் 6-வது ஆக வெளியேறினார். அவரும் கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து விக்கெட்டுகள் மேலும் சரிந்தன. இந்திய அணி 36.2 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. ரிச்சா கோஷ் 33 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜூலன் கோஸ்சுவாமி 20 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சார்லிடீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இங்கிலாந்து 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியது.
4 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனைகளால், அதன்பின் இங்கிலாந்தின் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் இங்கிலாந்து அணி 31.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இந்தியா இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
Next Story






