என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். தொடரில் ஏலம் முறை நடைமுறையில் இருப்பதுபோல், பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் ஏலம் முறை கொண்டு வரப்படும் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
    உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் லீக்காக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) உள்ளது. ஐ.பி.எல். தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக் பாஷ், கரீபியன் பிரிமீயர் லீக் போன்றவைகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

    இருந்தாலும், ஐ.பி.எல். தொடருக்கு இணையாக ஜொலிக்க முடியவில்லை. ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு வீரர்களும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒரு தொடரில் விளையாடினாலே கோடீஸ்வரர் என்ற நிலைக்கு வீரர்கள் உயர்ந்து விடுகிறார்கள்.

    இதனால் ஐ.பி.எல். தொடர் நடைபெறும்போது சர்வதேச தொடர்களை கூட புறக்கணிக்க வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஏராளமான வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    தற்போது ஐ.பி.எல் பெரிய தொடரா? பாகிஸ்தான் சூப்பர் லீக் பெரிய தொடரா? என்ற விவாதம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஆனால் ஐ.பி.எல். தொடரில் வீரர்கள் ஏலம் விடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இந்த நிலையில், அடுத்த வருடத்தில் இருந்து ஏலம் முறை அறிமுகப்படுத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறுகையில ‘‘நிதி தொடர்பாக தனியாக செயல்பட புதிய வருவாயை உருவாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக், ஐ.சி.சி. நிதியைத் தவிர எங்களிடம் தற்போது ஏதுமில்லை. அடுத்த வருடத்தில் இருந்து ஏலம் மூலம் வீரர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வர விரும்புகிறேன். அதற்கான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், அணி உரிமையாளர்களுடன் இதுகுறித்து பேச வேண்டியுள்ளது.

    இது ஒரு பண விளையாட்டு. பாகிஸ்தானில் கிரிக்கெட் பொருளாதாரம் உயரும்போது, எங்களுடைய மரியாதையும் உயரும். நிதி பொருளாதாரத்தின் முக்கியமான காரணி பாகிஸ்தான் சூப்பர் லீக். நாங்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஏலம் முறையை கொண்டு வந்தால், நிதி அதிகரிக்கும்.  அதனை ஐ.பி.எல். மீது செலுத்துவோம். அதன்பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறந்தள்ளி யார் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்கள் என்று பார்ப்போம்.’’ என்றார்.

    ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் எதிர் பகுதிக்கு சென்று இருந்தாலும், செல்லாமல் இருந்தாலும் புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன்தான் பந்தை சந்திக்க வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சில பெரிய மாற்றங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யதுள்ளது.

    நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.) வாய்ப்பு ஒவ்வொரு இன்னிங்சிலும் ஒன்றில் இருந்து 2-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒரு அணி களம் இறங்க முடியாவிட்டால் அந்த ஆட்டம் மறு தேதியில் வைக்க முயற்சிக்கப்படும். அதுவும் முடியாவிட்டால் ஐ.பி.எல். தொழில்நுட்ப குழுவுக்கு முடிவெடுக்க அனுப்பி வைக்கப்படும். இதில் தொழில்நுட்ப குழுவின் முடிவே இறுதியானது.

    இதற்கு முன்பு தள்ளி வைக்கப்பட்ட போட்டி மறு தேதியிலும் நடத்த முடியவில்லை என்றால் களம் இறங்காத அணி தோற்றதாக கருதப்பட்டு எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

    ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் எதிர் பகுதிக்கு சென்று இருந்தாலும், செல்லாமல் இருந்தாலும் புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன்தான் பந்தை சந்திக்க வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

    பிளேஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டம் டையில் முடிந்து, சூப்பர் ஓவர் நடத்த முடியவில்லை என்றால் லீக் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.
    வெலிங்டன்:

    12-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 45.5 ஓவரில் 131 ரன்னுக்கு சுருண்டது.

    அதிகபட்சமாச கேப்டன் டெய்லர் 50 ரன் எடுத்தார். கேம்பெல்லே 20 ரன்னும், டாட்டின் 16 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலியா தரப்பில் எலீசே பெர்ரி, கார்ட்னர் தலா 3 விக்கெட்டும், ஜோனாசென் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 7 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.தொடக்க வீரர் ஹீலி 3 ரன்னிலும், கேப்டன் லானிங் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அடுத்து களம் வந்த பெர்ரி 10 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் மற்றொரு தொடக்க வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் - பேத் மூனி ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. ஆஸ்திரேலியா அணி 30.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹெய்ன்ஸ் 83 ரன்னுடனும், மூனி 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்றது. இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

    இதுவரை அந்த அணி தோல்வியை சந்திக்கவில்லை. புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட் கைப்பற்றினார்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடி 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 93 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் பஹீம் அஷ்ரப், சஜித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அசத்தலாகப் பந்து வீசினர்.
    இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் பாபர் அசாம் 36 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட், வெப்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 7 ரன்னில் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 35 ரன்னுடனும், லபுஸ்சனே 37 ரன்னுடனும் களத்தில் உள்ளன. ஆஸ்திரேலியா இதுவரை 489 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.
    துபாய்:

    இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

    அதன்படி 77 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. 66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி  3-வது  இடத்திலும் உள்ளது.

    இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலம் இந்த பட்டியலில் 58 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 50 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது. 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து  அணி 6-வது  இடத்தில் உள்ளது.

    கடந்த காலத்தில் செய்த சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பெங்களூரு:

    பெங்களூரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

    பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளேன், சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். 

    மேலும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். பெங்களூரில் உள்ள கடினமான ஆடுகளத்தில் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதுடன் விளையாடுவது கடினமாக இருந்தது. எனவே விரைவாக ரன்களை அடிக்க நினைத்தேன். 

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறதோ அதை நான் செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கபடிப் போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் தனிப்பட்ட முறையில் அவர் புகழ் பெற்று வந்தார்.
    ஜலந்தர்:

    சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அந்த கபடிப் போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் அவர் தனிப்பட்ட முறையில் புகழ் பெற்று வந்தார். மேலும் கபடி கூட்டமைப்பை ஒன்றையும் சந்தீப் நிர்வகித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள மாலியன் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது சந்தீப் நங்கல் மீது  அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

    தொலைவில் இருந்து அடுத்தடுத்து துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதால் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்கள்  தலைதெறிக்க ஓடினர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

    சந்தீப் நங்கல்  தலை மற்றும் மார்பு பகுதியில் சுமார் 20 ரவுண்டுகள் சுடப்பட்டதாக ஜலந்தர் துணைக் கண்காணிப்பாளர் லக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

    கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நீண்ட நேரம் களத்தில் நின்ற கேப்டன் கருணாரத்ன 107 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.
    பெங்களூரு:

    இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் இந்தியா முதல் நாளில் இருந்தே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. முதல்  இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    பும்ரா பந்தில் கிளீன் போல்டான இலங்கை அணி கேப்டன் கருணாரத்ன

    அதேசமயம் நங்கூரம் போன்று நீண்ட நேரம் களத்தில் நின்ற கேப்டன் கருணாரத்ன 107 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். ஆனால் அவரது சதம் வீணானது. மறுமுனையில், குஷால் மெண்டிஸ் (54) தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனவே, இலங்கை அணி 208 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. 

    இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். பும்ரா 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர். 
    அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் எடுத்தது, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
    துபாய்:

    வேகமாக வளர்ந்து வரும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

    கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது ஸ்ரேயாஸ் அய்யரின் அபாரமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் விருத்தியா அரவிந்த், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார் அய்யர்.

    வலதுகை பேட்ஸமேனான ஸ்ரேயாஸ் அய்யர், அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்தது, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் அசத்தி வருகிறார். 3 போட்டிகளில் 204 ரன்கள் குவித்த அய்யர், 174.36 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

    பெண்கள் பிரிவில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் அமெலியா கெர், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 21 வயதான கெர், இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்ததால், சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஹேமில்டன்:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது.

    இதனால் வங்காளதேச அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி இந்த போட்டி தொடரில் முதல் வெற்றியை பிடித்தது. பாகிஸ்தான் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது.

    13-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 236 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

    கபில்தேவ்வும் 29 டெஸ்டுகளில் 8 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். இதன்மூலம் அவரது சாதனையை பும்ரா சமன் செய்தார்.
    பெங்களூர்:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவாக பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 109 ரன்னில் சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டும், அஸ்வின், முகமது ‌ஷமி தலா 2 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.

    143 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 447 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    முதல் இன்னிங்சில் 92 ரன் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 2-வது இன்னிங்சில் 67 ரன் எடுத்தார். ரி‌ஷப் பண்ட் அதிரடியாக ஆடி 31 பந்தில் 50 ரன் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ஜெயவிக்ரமா 4 விக்கெட்டும் , எமுல்டெனியா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    447 ரன் இலக்குடன் ஆடிய இலங்கை நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்து இருந்தது. திரிமானே ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் அவுட் ஆனார். கேப்டன் கருணாரத்னே 10 ரன்னிலும், குஷால் மெண்டீஸ் 16 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இலங்கை வெற்றிக்கு மேலும் 419 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட் இருக்கிறது.

    இந்த டெஸ்டிலும் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றுகிறது.

    நேற்றைய போட்டியில் ரி‌ஷப்பண்ட்டும், பும்ராவும் புதிய சாதனை படைத்தனர்.

    ரி‌ஷப்பண்ட் 28 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். இதன்முலம் கபில்தேவ்வின் 40 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார். 1982-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கபில் தேவ் 30 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார்.

    இந்திய வீரர்களில் அதி வேகத்தில் டெஸ்டில் அரை சதம் அடித்து இருந்த அவரது சாதனையை ரி‌ஷப் பண்ட் முறியடித்து உள்ளார்.

    பும்ரா இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டை எடுத்தார். 29-வது டெஸ்டில் அவர் 8-வது முறையாக 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.

    வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, இந்தியாவில் ஒருமுறையும் அவர் 5 விக்கெட்டை எடுத்துள்ளார்.

    கபில்தேவ்வும் 29 டெஸ்டுகளில் 8 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். இதன்மூலம் அவரது சாதனையை பும்ரா சமன் செய்தார்.

    நேற்றைய போட்டிக்கு பிறகு பும்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரி‌ஷப் பண்ட் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி உள்ளார். அவர் இயற்கையாகவே ஆக்ரோ‌ஷமாக பேட்டிங் செய்யக் கூடியவர். ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக ஆடும் திட்டம் உண்டு.

    அவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு பும்ரா கூறினார்.

    2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா 0-6, 4-6 என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீராங்கனை வெரோனிகா குடர்மெட்டோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
    இண்டியன்வெல்ஸ்:

    பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமும், 2018-ம் ஆண்டு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 0-6, 4-6 என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீராங்கனை வெரோனிகா குடர்மெட்டோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி பிழைத்தார். நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடால், 21 வயதான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) சந்தித்தார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றி நிலையில் 3-வது செட்டில் கோர்டா 5-2 என்ற கணக்கில் முன்னிலையுடன் வெற்றியின் விளிம்புக்கு நகர்ந்தார். அதன் பிறகு சுதாரித்து மீண்ட நடால் ஒரு வழியாக ‘டைபிரேக்கர்’ வரை போராடி வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 29 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான ஆட்டத்தில் நடால் 6-2, 1-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கோர்டாவை தோற்கடித்தார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத நடால் தொடர்ச்சியாக பெற்ற 15-வது வெற்றி இதுவாகும். அடுத்து டேனியல் இவான்சுடன் (இங்கிலாந்து) மோதுகிறார்.
    ×