என் மலர்
விளையாட்டு
- பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை.
- கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும் போது பாபர் அசாம் கேப்டனாக பெரிய பூஜ்ஜியம் என்றும், முக்கியமாக அவருக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கேப்டன் பதவியால் எனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அழுத்தமான நேரங்களில் பேட்டிங் செய்வதை நான் அணுபவித்து விளையாடுவேன். கேப்டன் பொறுப்பு என்பது ஒரு மரியாதை. நான் எப்பொழுதும் எனது நாட்டுக்காக எனது சிறந்த செயல்பாட்டை அளிக்க நினைக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை முதலில் பாகிஸ்தான் தான், அதன் பின்னர் தான் மற்றவை. தோல்வி அடைந்தால் எனது அணி வீரர்களை நான் காப்பேன், நான் தோல்வி அடைந்ததற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன். எனது அணியினருக்கு முன் நான் இருப்பேன்.
டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கும் நான் பொறுப்பேற்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை. டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இளைஞர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் இப்போது ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கும் கட்டத்தில் இருக்கிறோம். இது தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆறு அறிமுக வீரர்களுக்குக் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
- பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மற்றும் பெத் மூனி (766 ரேட்டிங் புள்ளி) இடம் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 6-வது இடத்திலும், ஜெமிமா 10-வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களில் சுருண்டது.
மும்பை:
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. கார்ட்னர் 32 பந்தில் 66 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து அசத்தியது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தீப்தி ஷர்மா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 53 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரஹாம் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது அஷீக் கார்ட்னருக்கு வழங்கப்பட்டது.
- வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பியூனஸ் அயர்ஸ்:
கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பிரான்சை வீழ்த்தியது.
அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்ல கேப்டனும், நட்சத்திர வீரரு மான லியோனல் மெஸ்சி முக்கிய பங்கு வகித்தார். அவர் 7 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அதோடு 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்து உள்ளார்.
உலக கோப்பையை வென்றதன் மூலம் 35 வயதான மெஸ்சியின் கனவு நனவாகியுள்ளது. 5-வது உலக கோப்பையில் தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இதற்கு முன்பு 2014-ல் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி யுடன் தோற்று கோப்பையை இழந்தார். தற்போது இறுதி போட்டியில் பிரான்சை தோற்கடித்து மெஸ்சி தனது உலக கோப்பை கனவை நனவாக்கி கொண்டார்.
அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப் பையை வென்றது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டு களில் அந்த அணி சாம்பி யன் பட்டம் பெற்று இருந்தது. மரடோனா வழி யில் மெஸ்சி தன்னை இணைத்துக் கொண்டார். உலக கோப்பையை வென்ற தன் மூலம் கால்பந்தின் அனைத்துக் கால கட்டத் துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை மெஸ்சி நிரூபித்து விட்டார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தலைநகர் பியுனஸ் அயர்சில் ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் நாட்டு கால்பந்து அணியின் வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
அங்குள்ள மைய சதுக்கத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் தலைகள் தெரியும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர். தங்கள் நாட்டுக்குரிய பாடலை பாடியவாறு உற்சாகம் அடைந்தனர். மெஸ்சி, மெஸ்சி என்று கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணி தனது நாட்டுக்கு திரும்பியது. பாரீஸ் நகரில் கால்பந்து வீரர்களை அந்நாட்டு ரசி கர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கும், அதிக கோல்களை (8) அடித்து தங்க ஷூ வென்ற வருமான எம்பாப்வேயை வாழ்த்தி ரசிகர்கள் கோஷ மிட்டனர்.
- மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்துள்ளார்.
- அதில் 15 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான இந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அனைத்து மாநில அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி தொடரில் பல்வேறு இந்திய வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வரும் வேளையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தான் இடம் பிடித்து விளையாட ஆசைப்படுவதால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கூட பாராமல் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் என தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் தனது அதிரடியான ரன் குவிப்பை இன்றும் அவர் மும்பை அணிக்காக வழங்கினார். ரகானே தலைமையிலான மும்பை அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஷ்வால் மற்றும் ரகானே ஆகியோரது ஜோடி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கூறியவேளையில் தற்போது ரஞ்சி போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரின் டெஸ்ட் வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார் என்றே தோன்றுகிறது.
- ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
- துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய யூசப் பதானும் ஓய்வு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர்கள் இருவரும் துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
- இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் போட்டியில் காயம் அடைந்த எபாடட் ஹொசைன் இந்தப்போட்டியில் இடம் பெறவில்லை.
டாக்கா:
வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப்போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் காயம் அடைந்த எபாடட் ஹொசைன் இந்தப்போட்டியில் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் இடம் பெறாத சுழற்பந்துவீச்சாளர் நசும் அகமது இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்:-
மக்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், எஊருல் ஹசன், மெகதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது, கலீத் அகமது, ஜாகீர் ஹசன், ரெஜாவூர் ரஹ்மான் ராஜா, நசும் அகமது.
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
- அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.
16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.
இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.
எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர்.
- கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
கொச்சி:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.
உலக கோப்பை போட்டியையொட்டி உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் கடந்த ஒரு மாதமாக பரவி இருந்தது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் உலக கோப்பை போட்டியை ரசித்தனர். தங்களுக்கு விருப்பமான அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா வெற்றியை வெகுவாக கொண்டாடினார்கள்.
கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பிரமாண்ட திரையில் உலக கால்பந்து போட்டியை பார்த்தனர்.
இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்த தினத்தில் கேரள ஜோடி ஒன்று அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.
கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சச்சின் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர். அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ஆதரவாளர். இதனால் இருவரும் திருமணத்துக்கான புதிய ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து மணம் புரிந்து கொண்டனர்.
அவர்களது திருமண தேதி டிசம்பர் 18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர்.
மெஸ்சிக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால் 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என்று திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் முதலில் வந்த ஆயிரம் பேருக்கு பிரியாணியை இலவசமாக வழங்கினார்.
*** மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்வே (பிரான்ஸ்) ஜெர்சியுடன் திருமணம் செய்த கேரள ஜோடியை படத்தில் காணலாம்.
- இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் ரிக்கி பாண்டிங்கை விட டோனி முன்னிலை பெறுகிறார்.
- 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் டோனி படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 உலகக் கோப்பை வென்று அசத்தியது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் அவரையும் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தி 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார்.
2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரங்களில் தைரியமான முடிவெடுத்த எம்எஸ் டோனி இந்தியாவுக்கு முதல் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
மேலும் சச்சின் முதல் லக்ஷ்மன் வரை அனைத்து மூத்த வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் 2010-ல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மற்றுமொரு தாகத்தை தணித்தார்.
அதை விட 2013-ல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் களத்திற்கு வெளியே வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் நடந்த அரசியல்களை ரிக்கி பாண்டிங்கை விட டோனி மிகச் சிறந்ததாக கையாண்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பாராட்டியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
ரிக்கி பாண்டிங்கிடம் அற்புதமான அணி இருந்தது. டோனியும் சிறந்த அணியை பெற்றிருந்தார். என்னைப் பொறுத்த வரை இருவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல கேப்டன்ஷிப் சாதனைகளை படைத்துள்ளார்கள். அவர்களை நாம் பிரிக்க முடியாது. இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி நிறைய அரசியல் ரீதியான நிகழ்வுகளை கொண்டிருந்தார். அது தான் ரிக்கி பாண்டிங்கை விட டோனியை முன்னிலைப்படுத்தும் அம்சமாகும். ரிக்கி பாண்டிங்கின் மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நிறைய அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள்.
உண்மையில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி அசத்த வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள். அதனால் விளையாட்டின் சில அம்சங்களை மட்டுமே பாண்டிங் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தலைமையில் பெரும்பாலான வீரர்கள் அணுகுமுறைகள், ஒழுக்கம், என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் டோனி தலைமையில் அப்படி ஒரு அணியில்லை. அது கடினமான ஒன்று. அத்துடன் இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் அவரை விட டோனி முன்னிலை பெறுகிறார். சாரி ரிக்கி.
இவ்வாறு பிராட் ஹாக் கூறினார்.
- அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.
சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். பாரீஸ், பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரான கரீம் பென்ஜிமா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.
35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் அணியின் இருந்து விலகினார்.
2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான பென்ஜிமா 97 போட்டிகளில் ஆடி 37 கோல்கள் அடித்துள்ளார். அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3-வது டெஸ்ட் போட்டியையும் வென்றது இங்கிலாந்து.
கராச்சி:
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 28.1 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
முன்னதாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.






