என் மலர்
விளையாட்டு
- இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன
கராச்சி:
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. இந்த இலக்கை இங்கிலாந்து எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றும்.
- இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.
- அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.
உலகக் கோப்பை கால்பந்து 2022-ல் அர்ஜென்டினா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பதிவுகளால் சமூக ஊடகத் தளங்கள் நிரம்பி வழிகின்றன. மகிழ்ச்சியில் திளைத்த லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடிவருகின்றனர். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.
அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.
அந்த வகையில், கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் குழு கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை உருவாக்கி புதுமையான முறையில் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
முகமது ஸ்வாதிக் என்ற இந்த ரசிகர், 'உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் மெஸ்சியின் கட்அவுட்டை கடலில் 100 அடி ஆழத்தில் வைப்பேன் என்று முன்பே கூறியிருந்தார். அதேபோல், செவ்வாய்கிழமை குரோஷியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, முகமது ஸ்வாதிக் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
- கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன்.
- இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி காபா மைதானத்தில் துவங்கிய வேளையில் போட்டியின் இரண்டாம் நாளே ஆட்டம் முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது.பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் ஆல் அவட்டானதால் ஆஸ்திரேலிய அணி தங்களது கடைசி இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி துவங்கி ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு போட்டி முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்த மைதானம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானமும் டெஸ்ட் போட்டியை நடத்த ஏதுவான மைதானம் கிடையாது என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் ஏல்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்துகள் கூட இங்கு நன்றாக பவுன்ஸ் ஆகி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும். ஒன்றரை நாட்களிலேயே 34 விக்கெட்டுகள் விழுந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. போட்டி ஆரம்பித்த உடனே முடிந்து விட்டது. இந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது? என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது மாதிரியான ஆடுகளத்தை நான் பார்த்ததே கிடையாது.
என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார்.
- 2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார்.
வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு 2- 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
அதனால் முதல் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4வது இடத்திலிருந்த இந்தியா தென்னாப்பிரிக்காவை முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீழ்த்திய உதவியுடன் நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன் காரணமாக இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் களமிறங்கவில்லை.
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார். இருப்பினும் அவரது காயம் லேசாக இருந்த காரணத்தால் 2-வது போட்டிக்கு முன்பாக குணமடைந்து வந்து விடுவார் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்தன.
இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் 2வது போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகுவதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிய வருகிறது.
- அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்சி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்சி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்சிக்கு இந்த உலகக்கோப்பையில் சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மெஸ்சியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியிருந்தது. இதே போன்ற சூழல் தான் இன்று மெஸ்சிக்கும் நிறைவேறியுள்ளது.
இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, இன்று அர்ஜெண்டினாவின் 36 ஆண்டு கால கனவு லியோனல் மெஸ்சிக்காக நிறைவேறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
உலக கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸ் தோற்றதால் அந்நாட்டில் சோகம் நிலவியது. தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
அதே நேரத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.
- உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன்.
- கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.
தோகா:
உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி ஆட்டம், அதோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மெஸ்சி அறிவித்து இருந்தார்.
குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் பெற்ற வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் இதை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உலக கோப்பையை வென்று கனவு நனவானதால் மெஸ்சி தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன். கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.
உலக கோப்பைக்காக நான் மிகவும் ஏங்கினேன். கடவுள் இந்த பரிசை அளிப்பார் என்று முன்பே சொன்னேன். இந்த நேரத்தில் அது நடக்கும் என்பதை உணர்ந்தேன். இதற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியில் எங்களால் அதை வெல்ல முடிந்தது. உலக கோப்பை அழகானது.
இவ்வாறு அவர் கூறினார்.
35 வயதான லியோனல் மெஸ்சி 2005-ல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அர்ஜென்டினா அணிக்காக 172 போட்டியில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார்.
- கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.
- மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் போதெல்லாம் கேரளாவில் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகளின் ரசிகர்கள் குழுவாக பிரிந்து தங்கள் ஆதரவு அணிகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் அமைப்பது என கேரளாவையே களைகட்ட வைப்பார்கள்.
அந்த வகையில் இப்போது நடந்த உலக கோப்பை போட்டிக்காக கோட்டயம், திருவனந்தபுரம் பகுதிகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் கட் அவுட்வைத்து அசத்தினர். இதற்கு போட்டியாக பிரேசில் வீரர் நெய்மருக்கும் ஆள் உயர கட்-அவுட் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இதனை கேரளாவில் உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஒரு கட்டத்தில் இந்த உற்சாகம் வன்முறையாக வெடித்தது.நள்ளிரவு 12.30 மணி அளவில் கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.
இதில் கால்பந்து ரசிகர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
- மம்முட்டி, மோகன்லால் புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
- உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.messi, world cup football, மெஸ்சி, உலக கோப்பை கால்பந்து
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்தார்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.
அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.
35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு கோபா அமெரிக்க கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தற்போது உலக கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். மரடோனாவை போலவே மெஸ்சியும் அர்ஜென்டினாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.
இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.
மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்துள்ளார். எந்த ஒரு வீரரும் உலக கோப்பையில் அனைத்து நிலைகளிலும் கோல் அடித்தது இல்லை.
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்சிக்கு கிடைத்தது. அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்று இருந்தார். அந்த உலக கோப்பையில் அர்ஜென்டினா இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது.
உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.
மெஸ்சி ஒட்டு மொத்த உலக கோப்பைகளிலும் சேர்த்து 13 கோல்கள் அடித்துள்ளார். 26 ஆட்டத்தில் அவர் இந்த கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.
குளூஸ் (ஜெர்மனி) 16 கோல்களுடன் முதல் இடத்திலும், ரொனால்டோ (பிரேசில்) 15 கோல்களுடன் 2-வது இடத்திலும், ஜெரார்டு முல்லா (மேற்கு ஜெர்மன்) 14 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரான்சை சேர்ந்த பாண்டைனுடன் இணைந்து மெஸ்சி 4-வது இடத்தில் உள்ளார். இருவரும் தலா 13 கோல்கள் அடித்துள்ளனர்.
உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்தார். அவர் 26 ஆட்டத்தில் ஆடி லோத்தர் மேத்யூசை (ஜெர்மனி) முந்தினார். மேத்யூஸ் 25 ஆட்டங்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது.
உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்சி படைத்தார். அவர் மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் ஆடியதே சாதனையாக இருந்தது. மெஸ்சி தற்போது அவரை முந்தியுள்ளார்.
உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சி கால்பந்தில் அனைத்து காலக்கட்டத்திலும் தான் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் கோப்பையை கைப்பற்றி சரியான பதிலடி கொடுத்து விட்டார்.
- அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கிறது.
- 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை நடைபெறவில்லை.
கத்தாரில் நேற்று முடிவடைந்த 22-வது உலக கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தியது.
அடுத்த உலக கோப்பை போட்டியை வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா , மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதல் தடவையாக 3 நாடுகள் போட்டியை நடத்த உள்ளது. 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .
இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கூடுதலாக 16 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். எஞ்சிய 45 அணிகளும் தகுதி போட்டிகள் மூலம் தகுதி பெறும்.
மொத்தம் உள்ள 48 நாடுகளும் 16 பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெறும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் நாக் அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு முன்னேறும். 32 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து 3-வது சுற்று, கால்இறுதி , அரை இறுதி, இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் 80 ஆட்டங்கள் 16 நகரங்களில் நடத்தப்படுகிறது. ஆனாலும் இந்த போட்டி முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மெக்சிகோவில் 3-வது முறையாக உலக கோப்பை நடக்கிறது. இதற்கு முன்பு 1970, 1986-ல் நடந்தது. இதன் மூலம் உலக கோப்பையை 3-வது தடவையாக நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெறுகிறது. அமெரிக்காவில் இதற்கு முன்பு 1994-ல் நடந்தது. கனடாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
1954 முதல் 1978 வரை 16 நாடுகள் பங்கேற்றன. 1982-ல் 24 நாடுகளாக உயர்த்தப்பட்டன. 1998-ல் நாடுகள் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கப்பட்டது. இனி வரும் உலக கோப்பை போட்டியில் நாடுகள் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
- என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.
கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ, ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






