search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கொச்சியில் ருசிகரம்: அர்ஜென்டினா, பிரான்ஸ் ஜெர்சி அணிந்து கேரள ஜோடி திருமணம்
    X

    கொச்சியில் ருசிகரம்: அர்ஜென்டினா, பிரான்ஸ் ஜெர்சி அணிந்து கேரள ஜோடி திருமணம்

    • கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர்.
    • கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

    கொச்சி:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    உலக கோப்பை போட்டியையொட்டி உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் கடந்த ஒரு மாதமாக பரவி இருந்தது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் உலக கோப்பை போட்டியை ரசித்தனர். தங்களுக்கு விருப்பமான அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தியாவை பொறுத்தவரை அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா வெற்றியை வெகுவாக கொண்டாடினார்கள்.

    கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பிரமாண்ட திரையில் உலக கால்பந்து போட்டியை பார்த்தனர்.

    இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்த தினத்தில் கேரள ஜோடி ஒன்று அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

    கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சச்சின் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர். அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ஆதரவாளர். இதனால் இருவரும் திருமணத்துக்கான புதிய ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து மணம் புரிந்து கொண்டனர்.

    அவர்களது திருமண தேதி டிசம்பர் 18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர்.

    மெஸ்சிக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால் 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என்று திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் முதலில் வந்த ஆயிரம் பேருக்கு பிரியாணியை இலவசமாக வழங்கினார்.

    *** மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்வே (பிரான்ஸ்) ஜெர்சியுடன் திருமணம் செய்த கேரள ஜோடியை படத்தில் காணலாம்.

    Next Story
    ×